
ஆன்லைன் வொர்க்ஷாப்கள்
கார் டிசைனிங் வொர்க்ஷாப்பின் போதே, பலரும் ‘பைக் டிசைனிங் பற்றியும் வொர்க்ஷாப் வேண்டும்’ என்று தொடர்ந்து கேட்டு வந்தார்கள். இவர்களது விருப்பத்தை டிவிஎஸ் மோட்டார்ஸிடம் தெரிவித்த அதே வேகத்தில். ஸ்கூட்டர் டிசைன் பிரிவின் தலைவர் அமித் ராஜவாதே மற்றும் மனிதவள மேம்பாட்டுத் துறையின் துணைத் தலைவர் கார்திக் ஆகிய இருவரும் ‘நாங்க ரெடி’ என்று முன்வந்தார்கள்.
நாம் சாலையில் பார்க்கும், அல்லது நாமே ஓட்டும் பல டிவிஎஸ் இருசக்கர வாகனங்களை டிசைன் செய்த ஒரு பெரிய பட்டாளத்தை வழிநடத்துகிறவர்தான் அமீத் ராஜவாதே!
கான்செப்ட் டிசைனிங், க்ளே டிசைனிங், டிஜிட்டல் டிசைனிங், கிராஃபிக் டிசைனிங், மெர்ச்சென்ட்டைசிங் டிசைனிங்,UX மற்றும் UI டிசைனிங் என்று டிசைனிங் பற்றி 360 டிகிரி டூர் அடித்துவிட்ட வந்த மகிழ்ச்சி பயிலரங்கத்தில் கலந்து கொண்ட பலரின் முகத்திலும் தெரிந்தது. வருங்காலத்தில் என்ன மாதிரியான பரிமாணங்களை டிசைனிங் எடுக்கும் என்பதை அவர்கள் தங்கள் கணினி திரையில் பார்த்தபோது, பலரும் கைதட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.
கற்பனைத் திறன், நாம் உருவாக்க நினைக்கும் ஒரு பொருளை முப்பரிமாணத் தோற்றத்தில் மனக்கண்முன் கொண்டு வந்து பார்க்கக் கூடிய ஆற்றல், கற்பனையில் பிறந்ததை காகிதத்திலோ அல்லது கம்ப்யூட்டரிலோ கடத்த தேவையான திறன், புதிய விஷயங்களைக் கற்கக்கூடிய ஆர்வம், நாலு பேரோடு சேர்ந்து வேலை செய்யும் அளவுக்குப் பக்குவம்... எல்லாவற்றுக்கும் மேலாக ஆர்வம்.... இதெல்லாம் பைக் டிசைனர் ஆவதற்கு அவசியம் என்பதை பயிலரங்கில் கலந்து கொண்டவர்கள் தெரிந்து கொண்டார்கள்.

ஆட்டோமொபைல் துறையில் இருக்கும் வேலைவாய்ப்புகள் பற்றி கார்த்திக் கொடுத்த பவர் பாய்ன்ட் பிரசென்டேஷன் அசத்தல் ரகம். OEM எனப்படும் கார் மற்றும் பைக் தொழிற்சாலைகளைத்தாண்டி, இவர்களுக்கு உதிரிபாகங்களை சப்ளை செய்ய பல்வேறு படிநிலைகளில் இருக்கும் சிறு மற்றும் குறு தொழிற்சாலைகள், சேல்ஸ் ஷோரூம்ஸ், சர்வீஸ் சென்டர்ஸ் என்று எங்கு எங்கெல்லாம் வேலை வாய்ப்புகள் உள்ளன; என்ன மாதிரி வேலை வாய்ப்புகள் உள்ளன என்பதையும் இந்தப் பயிலரங்கத்தில் பலரும் கற்றுக்கொண்டார்கள்.
‘அறிமுகப் பயிலரங்கம் சரி... அடுத்த கட்டப் பயிலரங்கம் எப்போது?’ என்ற கேள்வியை நம்முன் வைத்துவிட்டுத்தான் இதில் பங்க்கெடுத்தவர்கள் லாக்-அவுட் செய்தார்கள்.