
நம்ம ஊரு மெக்கானிக்: அறந்தாங்கி அடைக்கன்
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி செக்போஸ்ட்டில் இருக்கிறது ஆசை ஆட்டோ ஒர்க்ஸ். வேக வேகமாக கைகளைத் தரையில் ஊன்றி தவழ்ந்தவாறே, சுற்றிச் சுழன்று ஒவ்வொரு வாகனங்களாக சர்வீஸ் செய்து கொண்டிருக்கிறார் மாற்றுத்திறனாளி அடைக்கன். போலியோவால் இரண்டு கால்களும் முடங்கிப்போன அடைக்கன், இன்று அறந்தாங்கி ஏரியாவின் மெக்கானிக்குகளில் அரக்கன். அந்தளவு பைக் சர்வீஸில் சர்வீஸ் அதிகம்! அறந்தாங்கி ஏரியாவில், அடைக்கன்னின் கடைக்கண் தங்கள் பைக் மீது பட்டு விடாதா என்று ஏங்குகிறவர்கள் பலராம். ஏதோ ஒரு 4 ஸ்ட்ரோக் பைக்கின் கார்புரேட்டரைப் பிரித்தவாறே நம்மிடம் பேச ஆரம்பித்தார் அடைக்கன்.
‘‘அரிமளம் செம்பட்டாவயல்தான் எனக்குச் சொந்த ஊரு. ரெண்டு அக்கா, ஒரு தம்பி. சின்ன வயசுலயே போலியாவால் என்னோட ரெண்டு கால்களும் செயலிழந்து போச்சு. இடுப்புக்குக் கூழே இருக்க உறுப்பு ஏதும் செயல்படாது. அப்பா ரொம்ப வருஷத்துக்கு முன்னாலயே தவறிட்டாரு. அம்மா கூலி வேலை செஞ்சுதான் எங்களை எல்லாம் காப்பாத்துச்சு. கஷ்டத்தோட கஷ்டமா அக்காக்களுக்கு எல்லாம் கல்யாணம் செஞ்சு கொடுத்தாச்சு. இப்போ கொஞ்ச வருஷமா அம்மாவுக்கும் உடம்புக்கு முடியாமப் போய், சாப்பாட்டுக்கே கஷ்டப்படுகிற நிலை வந்திருச்சு. வழியில்லாம, பெட்டிக்கடை ஆரம்பிச்சேன். அப்புறம் ஒரு சைக்கிள் கடையில் வேலை. பைக் க்ளீனிங், பஞ்சர் ஒட்டுறதுன்னு எல்லா வேலையும் செய்யுவேன். ஆரம்பத்துல இந்த வேலைகளைச் செய்றதுக்கு ரொம்பவே கஷ்டப்பட்டேன். ஆனா, கடை ஓனர் சுப்பு, எல்லாவிதத்திலும் எனக்கு ஒத்தாசையா இருந்தாரு.

அவருகிட்ட இருந்துதான் டூவிலர் மெக்கானிக் வேலையைக் கத்துக்கிட்டேன். அவரே எனக்குச் சில மெக்கானிக் ஷெட்களை அறிமுகப்படுத்தினாரு. அரிமளம், எரிச்சியில உள்ள மெக்கானிக் ஷாப்ல கொஞ்ச வருஷம் வேலை பார்த்திட்டு, இப்போ அறந்தாங்கி ஆசை ஒர்க் ஷாப்ல வேலை பார்த்துக்கிட்டு இருக்கேன். இதற்கிடையே செம்பட்டாவயல்ல வீட்டுக்கிட்டேயே சின்னதா ஒரு மெக்கானிக் ஷெட்டும் போட்டுட்டேன். இப்போ ஒண்ணு ரெண்டு வேலையும் வந்துக்கிட்டு இருக்கு. அறந்தாங்கியில், வேலையை முடிச்சிட்டு வந்து அந்த வேலைகளையும் செஞ்சு கொடுத்திடுவேன்.
ஆசை மெக்கானிக் ஷாப்பைப் பொறுத்தவரை அங்கு, ஆஸ்தான மெக்கானிக்காக இருக்கேன். பிளக் மாத்துறதுலயிருந்து இன்ஜின் வேலை வரைக்கும் எல்லா வேலையும் பார்த்திடுவேன். கிளட்ச் மாத்துறது, டிஸ்க் ஆயில் மாத்துறது உள்ளிட்ட ஹேண்டில் சம்பந்தமா வேலை பார்க்கிறதுதான் கொஞ்சம் சிரமம். அப்படியும் விடமாட்டேன். பெஞ்ச் போட்டு ஏறி உட்கார்ந்து அந்த வேலையும் பார்த்துக் கொடுத்திடுவேன். ஓனரு, எனக்குன்னு ஒரு உதவியாளர் கொடுத்திடுவாரு.
என்னோட வேலை பிடிச்சுப் போய் ஆசை மெக்கானிக் ஷாப்புக்கு ரெகுலர் கஷ்டமர்ஸ் பலரும் வர்றாங்க. அதனாலயே ஓனருக்கு என்னை விட மனுசு இல்லை. தவழ்ந்துக்கிட்டே வண்டிகளை சர்வீஸ் பண்றதுல சிரமம் இருக்கத்தான் செய்யுது. தொழில் பிடிச்சுப் போய் செய்யிறதால வலி ஏதும் தெரியலை. அன்னைக்கு வயித்துப் பிழைப்புக்காகத்தான் இந்த வேலைக்கு வந்தேன். ஆனா, இன்னைக்கு வண்டிகளோட சத்தம் கேட்காம ஒரு நாள்கூட என்னால இருக்க முடியலை!" என்று தவழ்ந்தபடியே அடைக்கன் சொன்னபோது, யாருக்கும் பெருமிதத்தில் கண் கலங்கும்!
அடைக்கன் சொல்லும் டிப்ஸ்!
காலையில பைக்கை ஸ்டார்ட் செய்யும்போது மட்டும், ரெண்டு மூணு தடவை கிக்கர அடிச்சிட்டு, அதற்கப்புறம் செல்ஃப் ஸ்டார்ட் பண்ணுவது இன்ஜினுக்கு நல்லது.
பிரேக்கில் கால் வச்சிக்கிட்டே, பிரேக் லீவரைப் பிடிச்சிக்கிட்டே சிலர் வண்டி ஓட்டுவாங்க. அப்படி ஓட்டக்கூடாது. இதனால ரொம்ப சீக்கிரமா பிரேக் பேட் தேய்றதோட, டிரம்மும் தேய்ஞ்சிடும்.
முன்பக்க ஃபோர்க் சஸ்பென்ஷன் எண்ணெய் கசிய ஆரம்பிக்கும். அப்படி வந்திருச்சுன்னா, உடனே, அதனை மெக்கானிக்கிட்ட கொண்டு போய் சரி செய்யச் சொல்லிடனும். இல்லைன்னா, ஃபோர்க் வளைஞ்சு போயிடும்.
செயின் ஸ்பிராக்கெட்டை, ரொம்ப இறுக்கமாகவும்… அதேநேரத்துல ரொம்பத் தளர்வாகவும் இல்லாம, சரியான இறுக்கத்துல வச்சிருக்கணும். ஒருவேளை தளர்வா இருக்கும்போது ஒரு சத்தம் வரும். அப்போ, ஆயில் மாத்திடணும். இல்லைன்னா தேயாத செயின் ஸ்பிராக்கெட்டும் நமக்குப் பெரிய செலவு வச்சிடும்.
பைக்கைப் பொறுத்தவரைக்கும் இன்ஜின் சீஸ் ஆகிடுச்சிங்கிற கம்ப்ளெய்ன்ட்டே வரக் கூடாதுங்கிறதுல தெளிவா இருப்பேன். சிலர் இன்ஜின் ஆயிலை கரெக்டா மெயின்டெயின் பண்ணமாட்டாங்க. என்னோட கஸ்டமர் எல்லாரையும் அதிகபட்சம் 2,500 - 3000 கிமீ தாண்டிட்டாலே கண்டிப்பா ஆயில் மாத்த வச்சிருவேன்.