Published:Updated:

மோட்டார் கிளினிக்

மோட்டார் கிளினிக்
பிரீமியம் ஸ்டோரி
News
மோட்டார் கிளினிக்

கேள்வி-பதில்

நான் ஆறு அடி உயரத்திலும், 107 கிலோ எடையிலும் உள்ளேன். கடந்த இரு வருடங்களாக, பஜாஜ் ப்ளாட்டினா 100 பைக்கை, புறநகரில் பயணிப்பதற்காகப் பயன்படுத்தி வருகிறேன். பணிநிமித்தமாக, ஒரு நாளைக்குச் சராசரியாக 60 கிலோமீட்டர் செல்ல வேண்டியிருக்கும். இதனால் முதுகு வலிக்கிறது. எனவே நல்ல சஸ்பென்ஷன் கொண்ட வாகனத்துக்கு மாறலாம் என முடிவு செய்துள்ளேன். எனக்கு இருக்கும் சாய்ஸ் என்ன?

- ஷா.காதர் கனி, சென்னை.

மோட்டார் கிளினிக்

100சிசி ப்ளாட்டினாவில், போட்டியாளர்களிடம் இல்லாத டிஸ்க் பிரேக்கைப் புதிதாகச் சேர்த்துள்ளது பஜாஜ். இதில் 110சிசி ப்ளாட்டினாவில் இருக்கக்கூடிய Nitrox ட்வின் கேஸ் ஷாக் அப்சார்பர் & நீளமான சீட் பொருத்தப்பட்டுள்ளது. இதனுடன் Long Travel டெலிஸ்கோபிக் ஃபோர்க் & ரப்பர் ஃபுட் பெக்ஸ் சேரும்போது, போட்டியாளர்களைவிடச் சொகுசான ஓட்டுதல் அனுபவம் கிடைக்கிறது. கூடுதலாக டேங்க் பேடு & Knuckle Guard ஆகியவையும் உள்ளன. கொஞ்சம் அதிக பவர் வேண்டும் என்றால், 110சிசி பிளாட்டினா H-Gear பைக்கைப் பரிசீலிக்கலாம். இதில் அனலாக் - டிஜிட்டல் மீட்டர் & 5-வது கியர் இடம்பெற்றிருப்பதால், 100சிசி பிளாட்டினாவைவிட இதன் விலை கொஞ்சம் அதிகம். உங்கள் பட்ஜெட்டை அதிகப்படுத்தி 125சிசி பைக் வாங்க முடியும் என்றால், கிளாமர் அல்லது பல்ஸர் 125 பார்க்கலாம். ஆனால் பல்ஸரின் எடை, கிளாமரைவிட 19 கிலோ அதிகம்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

எனக்கு எலெக்ட்ரிக் கார் வாங்க வேண்டும் என நீண்ட நாள்களாக ஆசை. டாடா மற்றும் மஹிந்திரா ஆகிய நிறுவனங்களின் தயாரிப்புகளில், எது எனக்குப் பொருத்தமானதாக இருக்கும்? இதனை சார்ஜ் செய்வதற்கான தொகை மற்றும் சர்வீஸ் எப்படி இருக்கும்?

- கே.வள்ளிநாதன், மடிப்பாக்கம்.

மோட்டார் கிளினிக்

இந்தியாவைப் பொறுத்தவரை, எலெக்ட்ரிக் கார்களின் தயாரிப்பில் முதலில் ஈடுபட்டது மஹிந்திராதான். இவர்கள் விற்பனை செய்யும் e2O ப்ளஸ் & eவெரிட்டோ ஆகியவை, மிகவும் பழைய மாடல்களாக உள்ளன. இதனுடன் ஒப்பிடும்போது, டாடாவின் டிகோர் EV & நெக்ஸான் EV ஆகியவை மேம்பட்ட தயாரிப்புகளாக இருக்கின்றன. 15 லட்ச ரூபாய் பட்ஜெட்டில் கிடைக்கும் இவை, தினசரி நகர்ப்புறப் பயன்பாட்டுக்கு ஏற்புடைய வகையிலான ரேஞ்ச்சையும் பெர்ஃபாமன்ஸையும் கொண்டுள்ளன.

நம் நாட்டில் அதிகமாக விற்பனையாகும் எலெக்ட்ரிக் கார் என்ற அந்தஸ்த்தைக் குறுகிய காலத்திலேயே அடைந்திருக்கும் நெக்ஸான் EV, 3 வேரியன்ட்களில் கிடைக்கிறது. IP67 Compliant பேட்டரி & மோட்டார், CCS2 ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, இலவசமாகப் பொருத்தித் தரப்படும் Home Charger, 8 வருடம்/1.6 லட்சம் கிமீ வாரன்ட்டி கொண்ட பேட்டரி, 100கிமீ வேகத்தை வெறும் 9.9 விநாடிகளில் எட்டிப்பிடிக்கும் திறன், 5 ஸ்டார் ரேட்டிங் கொண்ட கட்டுமானம் ஆகியவை காரின் விலையை நியாயப்படுத்துகின்றன. வழக்கமான நெக்ஸானுடன் ஒப்பிடும்போது இதில் இன்ஜின் ஆயில், ஏர் ஃபில்டர், ஆயில் ஃபில்டர், ஃப்யூல் ஃபில்டர், ஸ்பார்க் ப்ளக், டைமிங் செயின் போன்ற பல பாகங்கள் கிடையாது என்பதால், எலெக்ட்ரிக் நெக்ஸானின் பராமரிப்புச் செலவும் குறைவு. மற்றபடி வழக்கமான நெக்ஸானில் இருக்கும் 44 பெட்ரோல் டேங்க்கை நிரப்புவதற்கு ஆகும் செலவில் சுமார் 10% தொகையிலேயே, எலெக்ட்ரிக் நெக்ஸானை ஃபுல் சார்ஜ் ஏற்றிவிடமுடியும் என்பது பெரிய ப்ளஸ். உத்தேசமாக இதில் 200-250 கிமீ தூரம் செல்ல முடியும்.

கடந்த சில ஆண்டுகளாக, சுஸூகி ஜிக்ஸர் SF பைக்கை ஓட்டி வருகிறேன். இதனைத் தவிர சுஸூகி ஆக்ஸஸும் என்னிடம் உள்ளது. ஆனால் 1.5-2 லட்ச ரூபாய் பட்ஜெட்டில், புதிதாக ஒரு பைக்கை வாங்கத் தீர்மானித்துள்ளேன். நல்ல பில்லியன் இடவசதி மற்றும் ஸ்மூத்தான ஓட்டுதல் தரம் அவசியம். ராயல் என்ஃபீல்டு Meteor, ஹோண்டா CB 350 ஆகியவற்றில் எதை வாங்கலாம்?

- எம்.அர்ஜூன், பாண்டிச்சேரி.

மோட்டார் கிளினிக்

2 வேரியன்ட்களில் வெளிவந்துள்ள CB 350 பைக் ஹோண்டாவின் வழக்கமான ஷோரூம்களில் கிடைக்காது, ப்ரீமியமான Big Wing ஷோரூம்களில் மட்டுமே அவை கிடைக்கும். தமிழகத்தைப் பொறுத்தவரை ஈரோடு, திருநெல்வேலி, கோவை ஆகிய இடங்களில் மட்டுமே இந்த ஷோரூம் இருக்கிறது. தற்போது இதன் எண்ணிக்கையை அதிகரிக்கும் முயற்சியில் இந்த நிறுவனம் இறங்கியிருந்தாலும், தமிழகம் முழுக்க CB 350 பரவலாகக் கிடைப்பதற்கு, இன்னும் சில காலம் ஆகும். Meteor-யைவிட 10 கிலோ குறைவான எடை, அதைவிடக் கொஞ்சம் அதிகமான பவர் & டார்க், ஸ்லிப்பர் க்ளட்ச் & டிராக்‌ஷன் கன்ட்ரோல் சிஸ்டம் எனக் கெத்தாக இந்த ரெட்ரோ பைக் அசத்துகிறது. இதனுடன் ஒப்பிடும்போது, இந்தியாவெங்கும் பரந்து விரிந்த டீலர் நெட்வொர்க்கைக் கொண்டுள்ள ராயல் என்ஃபீல்டு நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள Meteor, தண்டர்பேர்டு & தண்டர்பேர்டு X சீரிஸ் தயாரிப்புகளுக்கு மாற்றாகக் களமிறங்கியுள்ளது. 3 வேரியன்ட்களில் 1.99-2.15 லட்ச ரூபாய் சென்னை ஆன் ரோடு விலையில் வந்திருக்கும் இந்த க்ரூஸர் பைக், உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய தயாரிப்பாக இருக்கும். நீங்கள் வைத்திருக்கும் டூ-வீலர்களைவிட இதன் எடை அதிகம் என்பதால், டெஸ்ட் ரைடு செய்து பார்த்துவிட்டு முடிவெடுக்கவும். மேலும் இதில் பெரிய 350சிசி இன்ஜின் இருந்தாலும், அதில் அதிரடியான பெர்ஃபாமன்ஸை எதிர்பார்க்க வேண்டாம்.

நான் கடந்த 10 ஆண்டுகளாக, பல்ஸர் 150 பைக்கைப் பயன்படுத்தி வருகிறேன். தற்போது எலெக்ட்ரிக் டூ-வீலர் வாங்கலாம் என்ற எண்ணத்தில் உள்ளேன். 1.5 லட்ச ரூபாய் பட்ஜெட்டில் எந்த வாகனத்தை வாங்கலாம்? பல்வேறு ஆப்ஷன்கள் இருப்பதால், குழப்பமாக உள்ளது. எனக்கான தெளிவான பதிலை எதிர்பார்க்கிறேன்.

- மணிகண்டன், சென்னை.

மோட்டார் கிளினிக்

உண்மையைச் சொல்வதென்றால், பெட்ரோல் பங்க்குகளுக்கு இணையாக, எலெக்ட்ரிக் டூ-வீலர்களை சார்ஜ் ஏற்றக்கூடிய சார்ஜிங் ஸ்டேஷன்கள் நம் நாட்டில் இல்லை. மேலும் பெட்ரோலில் இயங்கும் டூ-வீலர்களுக்குச் சமமான பெர்ஃபாமன்ஸ் மற்றும் ரேஞ்ச் ஆகியவற்றைத் தரக்கூடிய எலெக்ட்ரிக் டூ-வீலர்களும் கிடைக்கவில்லை. எனவே எலெக்ட்ரிக் டூ-வீலர் வாங்குவதற்கு, நீங்கள் சில காலம் காத்திருப்பது நல்லது. ஆனால் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு, அடுத்த 3 வருடங்களுக்கு 100% சாலை வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படுவது வரவேற்கத்தக்க விஷயம். பெங்களூரில் விற்பனையாகும் பஜாஜ் சேட்டக், டிவிஎஸ் ஐ-க்யூப் ஆகியவை இன்னும் சென்னையில் அறிமுகப்படுத்தப்படவில்லை. ரிவோல்ட் RV400 நல்ல ஆப்ஷனாகத் தெரிந்தாலும், அதன் நீண்ட கால நம்பகத்தன்மை இன்னும் நிரூபிக்கப்படவில்லை. ஒகினாவா, ஆம்பியர், ஹீரோ ஆகியோரின் தயாரிப்புகளுக்கும் இது பொருந்தும். இவற்றுடன் ஒப்பிட்டால், ஒட்டுமொத்தத் தரத்திலும் - நகர்ப்புறப் பயன்பாட்டுக்கு ஏற்றபடியான பெர்ஃபாமன்ஸிலும் அசத்தும் ஏத்தர் 450X-க்கு, அதன் அதிகப்படியான விலை வில்லனாய் அமைந்துவிட்டது. ஏனெனில் இதே விலைக்கு, 200சிசி பைக்குகளை வாங்க முடியும்.

*****

உங்கள் கேள்விகள், சந்தேகங்கள் எதுவாக இருந்தாலும், எங்களுக்கு எழுதுங்கள்.

அனுப்ப வேண்டிய முகவரி: மோட்டார் கிளினிக், மோட்டார் விகடன்,

757, அண்ணா சாலை, சென்னை-2. இ-மெயில்: motor@vikatan.com