கார்ஸ்
பைக்ஸ்
Published:Updated:

காது கேட்காம இருந்தா என்ன... பைக்கில் இமயமலை போக முடியாதா?

குங்கும சீனிவாசன்
பிரீமியம் ஸ்டோரி
News
குங்கும சீனிவாசன்

- ஜாவா பைக்... 24 நாட்கள்... 10,000 கி.மீ... பனிச்சரிவு... உலக சாதனை!

வாசகர் பயண அனுபவம்: கன்னியாகுமரி to லடாக்

செவித்திறன் குறைந்தவர்களால், பைக்கே ஒழுங்காக ஓட்ட முடியாது என்றொரு வாதம் இருக்கிறது. ஆனால், மதுரையைச் சேர்ந்த குங்கும சீனிவாசன், குமரியில் இருந்து இமயம் வரை 10,000 கிமீ பைக் ரைடு போய், ஓர் உலக சாதனையையே செய்திருக்கிறார் அசால்ட்டாக.

ஜாவாவில் தனி நபராகப் பயணித்து, இயற்கை இடர்பாடுகளை, உடல் உபாதைகளை எதிர்கொண்டு 24 நாட்களில் லடாக்கிலுள்ள உம்லிங் லா சிகரத்தைத் தொட்டு உலக சாதனை செய்துள்ளார். செவித்திறன் குறைபாடுடையவர் இதுபோன்ற ஆபத்தான சாதனைப் பயணத்தை மேற்கொண்டது உலகில் இதுவே முதல் முறை.

குங்கும சீனிவாசனிடம் சாதனைப் பயணம் குறித்துக் கேட்டேன். ``என் பெற்றோருக்கு இரண்டு பிள்ளைகளில் நான் மூத்தவன். சிறு வயதில் காது கேட்பதில் குறைபாடு இருப்பதை அம்மா கண்டுபிடித்தார். அப்புறம்தான் நானும் உணர்ந்தேன். பல டாக்டர்களிடம் காட்டியும் எந்தப் பயனும் இல்லை. பள்ளி நாட்களில் மோசமான அனுபவங்களை அதிகம் அனுபவித்தேன்.

காது கேட்காம இருந்தா என்ன... பைக்கில் இமயமலை போக முடியாதா?

அப்புறம், கர்நாடகாவில் அரிசிக்கரே பள்ளியில் சேர்த்தார்கள். அங்கேயும் கேலி கிண்டல் தொடர்ந்தது. பிறகு மைசூரு கௌடில்யா பள்ளியில் சேர்ந்த பிறகுதான் வேறொரு உலகத்தைப் பார்த்தேன். அவ்வளவு அன்பான ஆசிரியர்கள், மாணவர்கள் என்னை ஒவ்வொரு விஷயத்திலும் உற்சாகப்படுத்தினார்கள். விளையாட்டு, டான்ஸ், நடிப்பு என திறமைகளை வெளியே கொண்டு வந்தார்கள். டிகிரி வரை அந்த இன்ஸ்டிடியூஷன்லயே படித்தேன்.

காது கேளாதோர் பிரச்சனைகள் பற்றி மக்களிடம் கொண்டு சேர்க்கணும் விழிப்புணர்வை ஏற்படுத்தணும்னுதான் கன்னியாகுமரி to காஷ்மீர் வரை ரைடு போகத் திட்டமிட்டேன். கூகுள் சர்ச் பண்ணிப் பார்த்ததில் உலக அளவில் காது கேட்காதவர் யாரும் ரிஸ்க்கான ரைடு போனதில்லை என்பதை உறுதி செய்தேன். அதோடு, அருண் போன்ற எக்ஸ்பீரியன்ஸ் ரைடர்கிட்டே ஆலோசனை கேட்டேன். அவர், எனக்குப் பயிற்சி அளித்து கைடு பண்ணினார். வீட்டில் முதலில் ஒப்புக் கொள்ளவில்லை. பின்பு அவர்களை கன்வின்ஸ் செய்து பயணத்தை தொடங்கினேன்.

காது கேட்காம இருந்தா என்ன... பைக்கில் இமயமலை போக முடியாதா?

அதிகாரிகள் சைடில் அனைத்து அனுமதிகளும் வாங்கினேன். ஆனால், கிளம்பும் அன்று ஒரு பதற்றம் ஏற்பட்டது. பின்பு மனம் சகஜ நிலைக்கு வந்து உற்சாகம் ஏற்பட்டது. ஜூலை 3-ம் தேதி கன்னியாகுமரியிலிருந்து மேற்குக் கடற்கரைச் சாலை வழியாகப் பயணத்தைத் திட்டமிட்டேன். பைக்கிலேயே டென்ட், மெடிக்கல் கிட் எல்லாம் வச்சிருந்தேன். ஹெல்மெட், ரைடிங் ஜாக்கெட் எல்லாம் பக்காவா போட்டுத்தான் கிளம்பினேன். முதல் நாள் மண்டைக்காட்டுல ஸ்டே பண்ணிட்டு கேரளா பார்டர்ல நுழையும்போது அங்குள்ள போலீஸ், ரைடைப் பற்றி விசாரிச்சுட்டு, `கடும் மழையாக இருக்கு, இந்த ரூட்டுல போக வேண்டாம் வேற வழியை சூஸ் பண்ணுங்க'ன்னு சொன்னாங்க. பிளானை மாற்றக் கூடாதுன்னு வெஸ்ட் கோஸ்ட் ரோட்டுலயே போனேன். ஆனால், என் நேரம் - கடுமையான மழை. அங்கே ரோடும் ரொம்ப சிறியது. திருவனந்தபுரம், கொச்சி கோழிக்கோடு வரை ரொம்ப கஷ்டப்படுத்திடுச்சு.

அங்கிருந்து கர்நாடகா பார்டர்ல போர்வையைப் பார்த்ததும் ஹேப்பியாயிடுச்சு. மங்களூரூல ஸ்டே பண்ணிட்டு அங்கிருந்து மும்பை போகணும்ங்கிறதுதான் பிளான். ஆனால், விடாத மழையால் கோகர்னாவில் ஒரு பீச் ஹோட்டலில் 300 ரூபாய்க்குத் தங்க அனுமதித்தார்கள். அங்கு நடந்த ஈவென்ட்டில் என்னை பெருமைப்படுத்தினார்கள்.

காது கேட்காம இருந்தா என்ன... பைக்கில் இமயமலை போக முடியாதா?

நாக்பூர் போறப்போ சரியான மழை. ஹியரிங் மெஷின் மாட்டி அதன் மேல் ஹெல்மெட் போட்டிருந்தேன். தண்ணீர் பட்டால் ஹியரிங் மெஷின் செயல்படாது. ஆல்டர்நேடிவ் மெஷின் இல்லை. இந்தச் சூழலில் புனேயில் இரவு தங்கி, காலையில் நாசிக் வழியாக குஜராத்திலுள்ள தரம்பூர் போயிட்டேன். அங்கு ரெட் அலெர்ட் அறிவித்திருந்தார்கள். ஸ்டாஜ் ஆப் யூனிட்டி வந்தேன். அங்கு அனுமதிக்கவில்லை. காது கேளாதோர் சமமாக மதிக்கப்பட வேண்டும் என்ற என்னோட ரைடின் நோக்கத்தை விளக்கிச் சொன்னவுடன், என்னை மட்டும் அன்று அனுமதித்தார்கள்.

ராஜஸ்தான் உதய்ப்பூருக்கு இரவு சென்று தங்கறதுக்கு ஹாஸ்டல் வாசல்ல நின்று ஹெல்மெட் கழட்டும்போது மயங்கி விழுந்துட்டேன். மயக்கம் தெளியும் போதுதான் பைக் பம்பரில் விழுந்ததால் தலையில வலி வந்தது தெரிந்தது. எழ முடியாமல் அந்த ஹாஸ்டல் நிர்வாகிக்கு போன் பண்ணித் தகவல் சொன்னேன். உடனே அவர் வந்து முதலுதவி செய்து ஹாஸ்டலுக்குக் கூட்டிட்டு போனார். சத்தான உணவு எடுத்துக்கொள்ளாததால் மயக்கம் வந்தது தெரிந்தது.

பின்பு ஜெய்ப்பூர்லருந்து பஞ்சாப் அம்ரிஸ்டர் செல்லும்போது, பல கிலோ மீட்டர் தூரத்துக்கு முகத்தில் பூச்சி அடிக்க ஆரம்பித்தது. அடுத்து வாகா பார்டருக்குச் சென்று அங்குள்ள ராணுவ அதிகாரியிடம் விவரத்தை சொன்னேன். அங்கிருந்த தமிழ் அதிகாரிகள் மகிழ்ச்சியாகி என்னோட ரைடைப் பாராட்டி மொமென்ட்டம் வழங்கினார்கள்.

காது கேட்காம இருந்தா என்ன... பைக்கில் இமயமலை போக முடியாதா?

அங்கிருந்து ஜம்மு காஷ்மீருக்குள் நுழைந்து பட்னிடாப் போக நினைத்தபோது, அங்கேயும் கடுமையான மழை. டிராவல் செய்வது ஆபத்து என்றார்கள். அதோடு அங்கு ஒரு ஹோட்டலில் பணம் வாங்காமல் தங்க வைத்து உணவு வழங்கினார்கள். மறுநாள் ‘கல்லெல்லாம் உருண்டு வருது; பட்னிடாப் செல்வது ரிஸ்க்’ என்றார்கள்.

பட்னிடாப்பிலிருந்து கிஸ்துவார் செல்லும்போது, ரோடே தெரியவில்லை. அவ்வளவு பனிப்பொழிவு. போகும்போது, நாய் ஒன்றே குறுக்கே வந்ததால்,பைக்கில் கீழே விழுந்து காலில் அடி. அதனால், கிஸ்துவாரில் உள்ள ஹாஸ்பிடலில் டாக்டர் இல்லாத சூழலிலும் ஒரு நர்ஸ் நன்றாகக் கவனித்து உணவு கொடுத்து, தங்குவதற்கு தன் வீட்டில் இடமும் கொடுத்தார். மறுநாள் டாக்டரிடம் காட்டிய பிறகு பிராக்ச்சர் இல்லை. இரண்டு நாள் ரெஸ்ட் எடுத்துக் கொண்டு செல் என்றார். காலின் மேல்பகுதியில் காயம் என்பதால், காலின் பின்பக்கமாக கியர் போட ஆரம்பித்தேன்.

காது கேட்காம இருந்தா என்ன... பைக்கில் இமயமலை போக முடியாதா?

சென்சிட்டிவ்வான பகுதி என்பதால், அங்கிருந்து உடனே கிளம்பிவிடச் சொன்னார்கள். இப்போதுதான் என் ரைடின் முக்கியமான கட்டத்துக்கு வந்திருந்தேன். உலகின் ஆபத்தான வழியில் செல்ல ஆரம்பித்தேன். சாலையே கிடையாது. மலையின் மீது செங்குத்தாகப் பாதை செல்லும். கொஞ்சம் பிசகினாலும் பள்ளத்தில் விழுந்து விடுவோம். பாடியைக்கூட எடுக்க முடியாது. அந்தப் பாதையில்தான் பயணம்.

ஆபத்தான பாதையில் 150 கிமீ பயணித்து கிலார், கெலாங் வந்தேன். அங்கிருந்து சர்ச்சுன் சென்றேன். இது லடாக் செல்வதற்கான நுழைவுப்பகுதி. ஹிமாலயம் வந்துட்டோம் என்கிற மகிழ்ச்சியைச் சொல்ல முடியவில்லை. ஏதோ விண்வெளிக்கு வந்தது மாதிரி இருந்தது. அதேநேரம் எனக்கு ஆக்சிஜன் லெவல் குறையத் தொடங்கியதால், மூச்சு வாங்கியது. கொண்டு போன ஆக்சிஜன் காலியாயிடுச்சு. இருந்தாலும் அந்த இயற்கைக் காட்சிகள் என் வலிகளைப் போக வைத்தது.

அன்றிரவு அங்கு தங்கிவிட்டு மறுநாள் காலை 13,000 அடியுள்ள நக்கிலா, அடுத்து 15,000 அடியுள்ள லட்சுமலா, அடுத்து 17,000 தங்லங்களா கடந்து லே நகரத்துக்கு வந்தேன். அங்கு இரண்டு நாள் ஓய்வு எடுத்து சத்தான உணவு எடுத்துக் கொண்டேன். லேயில் அனைத்து பைக்கர் குரூப்பும் மொத்தமாகச் சேர்ந்து விடுகிறார்கள். அடுத்து 18,000 அடி உயரத்திலுள்ள கார்துங்க்லாவை அடைந்தேன். கோல்ட் டெசர்ட் நுப்ரா வேலி பார்த்துட்டு, மைனஸ் 5 டிகிரி உள்ள பாங்கோங் லேக் பார்த்தேன். உயரமான அப்சர்வேட்டரி ஹான்லே செல்லும்போது ஒண்ணுமே தெரியாது. அந்தளவுக்குப் பனிப்புகை. வண்டி இன்ஜினுக்குச் செல்லும் ஆக்சிஜனும் குறைவாவதால் மெதுவாக ஓட்டிச் செல்லணும். பிரேக் டவுனானால் ஒன்றும் செய்ய முடியாது. 9 கிமீ தூரத்தை 2 மணி நேரமா கடந்தோம். இறுதியாக 40 கிமீ கடந்து 10,924 அடி உயர உம்லிங் லாவை அடைந்து உலகின் முதல் டெஃப் பைக்கர் என்ற சாதனையைப் பதிவு செய்தேன்.

அங்கிருந்து எவரெஸ்ட்டைப் பார்த்து ரசித்தது, என் வாழ்க்கையில் மகிழ்ச்சியான தருணம். என் சாதனையை முடித்து விடவில்லை. அங்கிருந்து புகவேலி, மணாலி, கோசல், சண்டிகர் வந்தேன். பெரும்பாலான பைக்கர்ஸ் பைக்கை லாரியில் அனுப்பிவிட்டு விமானத்தில் ஊருக்குச் செல்வார்கள். நானோ மீண்டும் ஆக்ரா, சாகர், நாக்பூர், ஹைதராபாத் வந்து அங்கிருந்து கிழக்குக் கடற்கரைச் சாலையைப் பிடித்து நெல்லூர், சென்னை, புதுச்சேரி வழியாக தனுஷ்கோடி வந்து பயணத்தை நிறைவு செய்தேன். என் பெற்றோர் அங்கு வந்து வரவேற்றார்கள். இதன் மூலம் செவித்திறன் குறைந்தவர்களும் சாதிக்கப் பிறந்தவர்களே என்று உலகுக்கு அறிவித்துள்ளேன்!'' என்று உணர்ச்சிகரமாகக் கூறினார்.

காது கேட்காம இருந்தா என்ன... பைக்கில் இமயமலை போக முடியாதா?

உலக சாதனைப் பட்டியலில் குங்கும சீனிவாசன்!

குங்கும சீனிவாசன் தன் சாதனையை முன்பே நோபெல் வேர்ல்டு ரெக்கார்டு நிறுவனத்திடம் பதிவு செய்து, ஒவ்வொரு லொகேஷனையும் அப்டேட் செய்து அனுப்பியதால், அதை க்ராஸ் செக் செய்து அவருடைய உலக சாதனையை அங்கீகரித்து சான்று வழங்கியுள்ளனர். அது மட்டுமில்லாமல், நோபெல் வேர்ல்டு ரெக்கார்ட்ஸின் இந்தியப் பிரதிநிதியகாவும் நியமித்துள்ளார்கள். இச்சாதனையை அறிந்து அமெரிக்காவில் ரைடு செல்ல அங்குள்ள செவித்திறன் குறைபாடுள்ள அமைப்பினர் அழைப்பு விடுத்துள்ளனர்.