Published:Updated:

ரீடர்ஸ் கிரேட் எஸ்கேப் / கோவை - காந்தன்பாரா : இவ்விட மூங்கில் அருவி த்ரில்லிங் ஆயிட்டுண்டு!

யமஹா FZ-S
பிரீமியம் ஸ்டோரி
யமஹா FZ-S

ரீடர்ஸ் கிரேட் எஸ்கேப் - க்ளாஸிக் 350, யமஹா FZ-S

ரீடர்ஸ் கிரேட் எஸ்கேப் / கோவை - காந்தன்பாரா : இவ்விட மூங்கில் அருவி த்ரில்லிங் ஆயிட்டுண்டு!

ரீடர்ஸ் கிரேட் எஸ்கேப் - க்ளாஸிக் 350, யமஹா FZ-S

Published:Updated:
யமஹா FZ-S
பிரீமியம் ஸ்டோரி
யமஹா FZ-S

காரைவிட பைக்கில் பயணம் சென்றால் அது வேறு ஒரு அனுபவமாக இருக்கும். காருக்குள் கண்ணாடியை ஏற்றிவிட்டு, ஏ.சி காற்றில் செல்வதைவிட, மண் வாசனையை முகத்தில் வாங்கியபடி ரைடிங் போவது நிச்சயம் போதையேற்றும். ‘‘வாங்களேன். புது க்ளாஸிக்கும், யமஹா FZ-S பைக்கும் வாங்கியிருக்கோம். இந்த தடவை ஒரு பைக் டூர் அடிக்கலாம்’’ என்று தனது கணவர் பிரேம்குமாருடன் அப்ளிகேஷன் போட்டார் பள்ளி ஆசிரியையான சாந்தி ஜான்ஸிபாய். ‘‘யமஹா என்னோட பொறுப்பு’’ என்று தானாக ஆஜரானார், நண்பர் ஜெயக்குமார். ‘‘ஃபிகோவும் வெச்சிருக்கேன். லக்கேஜ், போட்டோகிராபரை ஃபோர்டு பார்த்துக்கும்’’ என்றார் பிரேம்.

கேரள மாநிலம் வயநாட்டில் உள்ள நீலிமலா அல்லது மீன்முட்டி அருவி அல்லது காந்தன்பாரா அருவி மூன்று இடங்கள் நமது ஆப்ஷன். ‘‘நீலிமலாவும் மீன்முட்டியும் க்ளோஸ் ஆயிடுச்சு’’ என்று மலையாள நண்பர் ஒருவர் மூலம் தகவல் கிடைக்க... இரண்டு பைக்குகள், ஒரு கார் என்று கல்பேட்டாவில் உள்ள காந்தன்பாரா அருவிக்கு, செம வெறித்தனமாக பயணம் தயாரானது.

 • கோவையில் இருந்து கல்பேட்டாவுக்கு ஜிபிஎஸ் செட் செய்தால்... பாலக்காடு வழி, மன்னார்காடு வழி, சாம்ராஜ் நகர் வழி என்று மூன்று பாதைகள் சொல்லிக் குழப்பியடித்தது. ‘‘செம ஜாலியான ரூட் என்கிட்ட இருக்கு’’ என்றார் பிரேம்குமார். மேட்டுப்பாளையம், ஊட்டி, கூடலூர், நடுகானி, வடுவாஞ்சல் என்று ஓர் அற்புதமான பாதையைச் சொல்லி விட்டு, அமெரிக்காவைக் கண்டுபிடித்த கொலம்பஸ்போல் ஃபீல் செய்தார்.

 • பொறுமையாகக் கிளம்புவதுதானே நம்ம ஸ்டைல். கெட்டதிலும் நல்லது மாதிரி - தாமதமாகக் கிளம்பியதுதான், ஊட்டி மலைச்சாலையில் முள்ளம்பன்றி, பீவர், காட்டுமாடுகள் போன்ற விலங்குகளின் தரிசனம் கிடைக்கக் காரணமாக அமைந்து மனதைச் சாந்தப்படுத்தியது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
 • ‘ஈவ்னிங் ஆயிடுச்சு.. கூடலூரில் கறுஞ்சிறுத்தைகள் நடமாட்டம் அதிகம்’’ என்று எச்சரித்தார்கள். ‘‘ஈவ்னிங் ஆனாலும் இங்க மனுஷங்க நடமாட்டம் அதிகமாயிடுச்சுல்ல’ என்ற கறுஞ்சிறுத்தைகளும் பேசியிருக்கலாம்.

 ரீடர்ஸ் கிரேட் எஸ்கேப் / கோவை - காந்தன்பாரா : இவ்விட மூங்கில் அருவி த்ரில்லிங் ஆயிட்டுண்டு!
 • 19.8 குதிரை சக்தியும், 13.2 குதிரை சக்தியும் கொண்ட புல்லட்டும் யமஹாவும் நிதானமாக மலையேறின. புல்லட் சத்தம் கேட்டு, ‘பாகுபலி’ படத்தில் வந்த மாட்டுக்கு ஒண்ணுவிட்ட பிரதர்போல் இருந்த ஒரு காட்டுமாடு, ‘மேயாத மாடு’ ஆகி மிரண்டபடி போஸ் கொடுத்தது செம அழகு!

 • குன்னூரில் மதிய உணவை முடித்தபோது, தூறல் - மழையாக ட்ரான்ஸ்ஃபர்மேஷன் ஆகியிருந்தது. மலையில் பைக் பயணம் செல்பவர்கள், ரெயின் ஜாக்கெட், ஹெல்மெட், க்ளோவ்ஸ், ஷூ என்று பக்காவாகச் செல்வது நல்லது.

 • விட்டு விட்டுத் தூறிய மழையில் மலையில் பைக் பயணம், ஏதோ ஒரு பரவச அனுபவத்தைத் தந்தது. மழைக்கு நடுநடுவே போட்டோ ஷூட். கூடலூர் தாண்டி தேவாலை எனும் இடத்தில்தான் தங்கச் சுரங்கம் இருப்பதாகச் சொன்னார்கள்.

 • கேரளா பார்டரைத் தொட்டு வடுவாஞ்சல் தாண்டியதும் இருட்டி விட்டிருந்தது. வயநாடுக்கு வருபவர்களுக்கு கல்பேட்டாதான் சென்டர் பாயின்ட். ஆனால், கல்பேட்டா வரை போக வேண்டியதில்லை. செல்லங்கோடு எனும் இடத்தில் செக்போஸ்ட் வந்தது.

 • ‘‘இவ்விட ஓர் அற்புதமான ரெஸார்ட்டுண்டு’’ என்று ஒரு ரெஸார்ட்டை ரெக்கமண்ட் செய்தார் செக்போஸ்ட் ஊழியர். ‘சந்திரகிரி பங்களா’ எனும் ரெஸார்ட், ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டதாம். பெரிய இரும்பு மணி, கலைநயமிக்க பொருட்கள், வராண்டா டைனிங் என்று காட்டுக்கு நடுவே ஆங்கில வாசம் மாறாமல் வைத்திருந்தார்கள்.

 • வாடகைதான் அதிகம். ஆளுக்கு 900 முதல் 1,200 வரை வசூலிக்கிறார்கள். வயநாடு வருபவர்கள், தங்குவதற்குப் பயப்படவே தேவையில்லை. ரெஸார்ட்டுகள் இல்லாத பட்சத்தில், ரூம்களும் உண்டு. 18 கி.மீ தாண்டி கல்பேட்டாவில் ரூம்களுக்கு எப்போதுமே கேரன்ட்டி.

 ரீடர்ஸ் கிரேட் எஸ்கேப் / கோவை - காந்தன்பாரா : இவ்விட மூங்கில் அருவி த்ரில்லிங் ஆயிட்டுண்டு!
 • காட்டுக்கு நடுவே ரெஸார்ட் என்று மைண்ட் ஃபிக்ஸ் ஆனதால், கனவில் ஏதேதோ விலங்குகள் சத்தம் கேட்டபடி இருந்தது. காலையில் விழித்துப் பார்த்தால், அது கனவில்லை; நிஜம் என்றார்கள்.

 • நாம் தங்கிய இடம், மீன்முட்டி அருவிக்குப் பக்கத்தில் என்பதால், மறுநாள் மீன்முட்டி அருவி பார்க்கலாம் என்றார்கள். ஆனால், கீழே போய்க் குளிக்க முடியாது.

 • கொஞ்சம் த்ரில்லிங் பார்ட்டிகளுக்கு இங்கே ‘மீன்முட்டி ஹைட்ஸ்’ என்றொரு ரெஸார்ட் நல்ல ஆப்ஷன். மலைக்கு மேலே உள்ள மர வீட்டில் தங்கி, இரவில் விலங்குகள் மேய்வதைப் பார்த்தால், ஏதோ ஒரு சாபல்யம் கிடைக்கும்.

 • ‘பெருமாள் அண்ணா உங்ககூட வருவார்’ என்று ஒரு கைடைக் கைகாட்டினார்கள் ரெஸார்ட் ஊழியர்கள். மீன்முட்டி அருவிக்குப் பின்னால், ஒரு சின்ன ட்ரெக்கிங் கூட்டிப் போனார் பெருமாள். விலங்குகளின் கால் தடம், மனிதர்களுக்குக் கால் வழுக்கும் இடம் என்று பார்த்துப் பார்த்து நம்மை அழைத்துப் போனார்.

 • ‘அதோ, அதுதான் மீன்முட்டி’ என்று பைனாகுலர் வைத்துப் பார்த்தால் மட்டுமே தெரியும் தூரத்தில் ஓர் அருவியைக் காட்டினார். 100 அடி உயரத்தில் இருந்து விழும் அருவியாம். தூரத்தில் பார்க்கும்போதே டெரராக இருந்தது மீன்முட்டி. மீன்கள் முட்டி முட்டி விழுவதால் மீன்முட்டி என்று பெயர்க் காரணம் சொன்னார் பெருமாள். ‘குளிக்க முடியாதா’ என்று ஜெயக்குமார் ‘உச்’ கொட்டியபோது, ‘அதுக்கும் ஆப்ஷன் இருக்கு. வாங்க தமிழ்நாட்டுக்குப் போலாம்’ என்று கேரள வயநாட்டில் இருந்து ஒரு தமிழ்நாட்டு அருவிக்குக் கூட்டிப் போனார் பெருமாள்.

 • வந்த வழியே வலது பக்கம், முழுக்க முழுக்க மூங்கில் மரங்களுக்கு நடுவே குனிந்து நெளிந்து நிமிர்ந்து ஒரு ட்ரெக்கிங் நடந்தது. இதற்குப் பெயர் ‘பாம்பூ ஐலேண்ட்’. அதாவது, மூங்கில் தீவு. ஃப்ரெஷ்ஷான யானைச் சாணங்களுக்கு நடுவே ட்ரெக்கிங் போனபோதே அதன் வீரியம் புரிந்தது. ‘போன வாரம் ஃபுல்லா ஒரு யானை, குட்டியோட இங்கதான் குடும்பம் நடத்திட்டு இருந்துச்சு’ என்று கிலியேற்றினார் பெருமாள் அண்ணா. நாட்பட்ட யானைச் சாணங்கள் சிலவற்றில் காளான்களோ, ஏதோ பெயர் தெரியாத செடிகளோ முளைத்து துளிர்விட்டுக் கொண்டிருந்தது, கவிதைப் பக்கத்துக்கான விஷுவல்.

 ரீடர்ஸ் கிரேட் எஸ்கேப் / கோவை - காந்தன்பாரா : இவ்விட மூங்கில் அருவி த்ரில்லிங் ஆயிட்டுண்டு!
 • ஆளே இல்லாத தீவில், ‘டாம்ப் ரெய்டர்’ பட ஹீரோயின் அலிஸியா மாதிரி, மூங்கில் மரங்களுக்கும் குட்டிக் குட்டி அருவிகளுக்கும் நடுவே ஜம்பிங் ட்ரெக்கிங் பண்ணிக் கொண்டிருந்தார் ஜான்ஸி.

 • ‘அட்ட்டா...க்’ என்று கமாண்டரிடம் இருந்து ஆர்டரை எதிர்பார்க்கும் ராணுவ வீரர்போல், ‘இங்கே தைரியமா குளிங்க’ என்று பெருமாள் அண்ணனிடம் இருந்து ஆர்டர் வந்த அடுத்த நொடி, தடாலென அருவியில் அதகளம் செய்ய ஆரம்பித்து விட்டார் வாசகர் ஜெயக்குமார். கிட்டத்தட்ட 10 அடி உயரம்கூட இருக்காது. ஆனால், 10 அருவிகள் ஒன்று சேர்ந்து விழுவதுபோல் இருந்தது பாம்பூ ஐலேண்ட் நீர்வீழ்ச்சி. பகல் நேரமே அருவிச்சத்தம் அமானுஷ்யமாக இருந்தது. ஆனால், ஆழ்ந்து அனுபவித்தால் ஏதோ ஒரு ஜென்நிலை கிடைக்கிறது.

 • பாம்பூ ஐலேண்டுக்கு 500 மீட்டர் தள்ளி, கேரளா. ஆனால், அருவி விழுவது தமிழ்நாட்டில். இங்கே வருவதற்கு அனுமதி தேவையில்லை என்றார்கள். யார் வேண்டுமானாலும் பாம்பூ ஐலேண்ட் அருவிக்கு வரலாம். அதேநேரம், `மீன்முட்டி ஹைட்ஸ் ரெஸார்ட்டில்' தகவல் கேட்டுவிட்டு, கைடு மூலமாகத்தான் இங்கே வந்து குளிக்க வேண்டும். காரணம், ‘கரணம் தப்பினால் மரணம்’ என்பதான வியூ பாயின்ட்கள் இங்கே உண்டு என்பதால் இந்த ஏற்பாடு. இதற்குக் கட்டணம் எதுவுமில்லை. கைடுகளுக்கு நாமாகப் பார்த்து ‘வேள்பாரி’யாக ஏதாவது செய்யலாம்.

 • அடுத்து, காந்தன்பாரா அருவி. சுல்தான்பத்தேரி போகும் வழியில் வடுவாஞ்சல் சாலையில், மேப்பாடியில் இருந்து 8 கி.மீ தள்ளிப்போனால்... காந்தன்பாரா போகும் வழி. காரை பார்க்கிங் பண்ணும்போதே அருவிச் சத்தம் காதில் இனித்தது. 40 ரூபாய் டிக்கெட். போகும் வழியில் அருவிக்கு மேலேயே குளிப்பதற்கென்று குளம்போலுள்ள அருவி நீரில் கயிறு கட்டி ஓர் ஏரியா பிரித்திருக்கிறார்கள். அதைத் தாண்டிப் போகக் கூடாது.

 ரீடர்ஸ் கிரேட் எஸ்கேப் / கோவை - காந்தன்பாரா : இவ்விட மூங்கில் அருவி த்ரில்லிங் ஆயிட்டுண்டு!
 • கீழே கால் கி.மீ இறங்கி நடக்க நடக்க... அருவிச்சாரல் மனதையும் உடலையும் நனைக்கிறது. 30 மீட்டர் உயரத்திலிருந்து காந்தன்பாரா அருவி விழும் அழகை, டிஸ்கவரி சேனலில் இருந்தெல்லாம் வந்து காத்திருந்து புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார்கள். இதற்கு சீஸன் ஜனவரி முதல் ஜூலை என்றார்கள்.

 • அருவியைப் பிரிய யாருக்குமே மனமே இல்லை. இப்போது எங்கள் போன்களின் மெமரிகார்டில், காந்தன்பாரா செல்ஃபிகளுக்கு அளவே இல்லை.

FZ-S, புல்லட் க்ளாஸிக் 350... எப்படி?

புல்லட்டைவிட FZ-S பைக்கின் பவர் மிகவும் குறைவு. மலையேற்றங்களில் ஃபர்ஸ்ட் கியரில்தான் ஏற முடிந்தது. இத்தனைக்கும் FZ-S-ல் இருப்பது Fi இன்ஜின். FZ-S பைக்கின் பிரேக்ஸில் இப்போது நல்ல முன்னேற்றம். ‘தட் தட்’ புல்லட், மலையேற்றங்களில் புகுந்து விளையாடியது. பிரேக்ஸும் ஓகே! ஏபிஎஸ் மாடல்கள் இன்னும் பட்டையைக் கிளப்பும். கொஞ்சம் விலை அதிகம்.

 ரீடர்ஸ் கிரேட் எஸ்கேப் / கோவை - காந்தன்பாரா : இவ்விட மூங்கில் அருவி த்ரில்லிங் ஆயிட்டுண்டு!

இரவில் ஹெட்லைட் பவர், ராயல் என்ஃபீல்டைவிட யமஹாவில் சூப்பர். Fi இன்ஜின் என்பதால், மைலேஜும் நன்று. சுமார் 42 தந்தது. புல்லட் - ஆவரேஜாக 36 கி.மீ கொடுத்தது. பொதுவாக மலையேற்றங்களில் ட்யூப்லெஸ் டயர்கள் இருந்தால் பயப்படவே தேவையில்லை. ராயல் என்ஃபீல்டில் ஸ்போக்ஸ் வீல்களுடன் ட்யூப் டயர்கள்தான் என்பதால், பஞ்சர் பயம் இருந்து கொண்டேதான் இருந்தது.

பார்க்க வேண்டிய இடங்கள்

(கல்பேட்டாவில் இருந்து...)

 • மீன்முட்டி அருவி (29 கி.மீ): மீன்கள் முட்டி முட்டி விழுவதால், இதற்கு இந்தப் பெயர். 300 மீட்டர் உயரத்தில் இருந்து விழும் இந்த அருவிக்கு சீஸன் ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை.

 • சூச்சிப்பாரா அருவி (22 கி.மீ): 200 மீட்டர் உயரத்தில் இருந்து விழும் பெரிய அருவிகளில் ஒன்று. சென்டினெல் ராக் அருவி என்று இன்னொரு பெயரும் உண்டு.

 • முத்தங்கா சரணாலயம் (37 கி.மீ): கேரள அரசின் கட்டுப்பாட்டில் வரும் வனவிலங்குச் சரணாலயம். அற்புதமான ஜீப் சவாரியில், காட்டு விலங்குகளைத் தரிசிக்கலாம்.

 • நீலிமலா வியூபாயின்ட் (12 கி.மீ): கேரளாவின் மொத்த அழகைக் காட்டும் வியூ பாயின்ட். மீன்முட்டி அருவியின் அடிவாரத்திலிருந்து அடர்ந்த காட்டுக்குள் ட்ரெக்கிங்கும் போகலாம்.

 • பக்ஷிப்பத்தலம் பறவைகள் சரணாலயம் (52 கி.மீ): காட்டுக்குள் ட்ரெக்கிங் மூலம் இந்தச் சரணாலயம் போகலாம். வாட்ச் டவரில் ஏறி ஏகப்பட்ட பறவைகளை ரசிக்கலாம்.

 • தோல்பெட்டி வனவிலங்குச் சரணாலயம் (49 கி.மீ): முத்தங்கா போல காட்டுக்குள் த்ரில்லிங்கான ஜீப் சவாரியில் விலங்குகள் பார்க்கலாம்.

 • எடக்கல் குகை (25 கி.மீ): வரலாற்று விரும்பிகளுக்கு அற்புதமான ஸ்பாட். கற்காலத்துக்கே போனதுபோன்ற எஃபெக்ட் கிடைக்கும்.

 • பூக்கோட் ஏரி (22 கி.மீ): நன்னீர் ஏரியான இதில், எல்லா வகையான போட்டிங்குகளும் உண்டு.

 • சேத்தாலயம் அருவி (36 கி.மீ): ‘தோ’ கி.மீ ட்ரெக்கிங் போய்த்தான் இந்த அருவியில் குளிக்க முடியும். அடிக்கடி இந்த அருவிக்குத் தடை போட்டு விடுகிறார்கள். விசாரித்துவிட்டுக் கிளம்புவது நல்லது.

 • தூசரிகிரி அருவி (31 கி.மீ): சாழிப்புழா நதியில் இருந்து உருவாகும் இது - தென்பாரா, எரட்டுமுக்கு, மாழவில் சட்டம் என்று 3 அருவிகளாகப் பிரிந்து விழுகிறது.

 • குருவதீப் (33 கி.மீ): குருவா தீவு என்றும் இதைச் சொல்கிறார்கள். கபினி ஆற்றங்கரையோரம் இருக்கும் இந்தத் தீவில்... குளியல், ரேஃப்டிங், படகுச்சவாரி பிரசித்தம்.

மூங்கில் தீவுக்குப் போறீங்களா...

நோட் பண்ணுங்க!

கேரள மாநிலம் வயநாடு, பெரிய டூரிஸ்ட் ஸ்பாட். கல்பேட்டாதான் இதற்கான சென்டர் பாயின்ட். வயநாட்டில் கவனத்துக்கு வராத டூரிஸ்ட் ஸ்பாட்டுகள் எக்கச்சக்கம் உண்டு. அப்படியான ஒரு ஸ்பாட்தான், செல்லங்கோடுவில் உள்ள பாம்பூ ஐலேண்ட். அதாவது, மூங்கில் தீவு.

நீலிமலா வியூ பாயின்ட், மீன்முட்டி அருவியின் டாப் என்று இங்கே பார்ப்பதற்கு த்ரில்லிங்கான விஷயங்கள் உண்டு. இங்குள்ள மீன்முட்டி ஹைட்ஸ் எனும் ரெஸார்ட் வழிதான் இங்கே போக முடியும். மூங்கில் தீவுக்கு, யார் வேண்டுமானாலும் போகலாம். காரணம், இது தமிழக அரசாங்க வனத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இங்குள்ள ரெஸார்ட்டில் தகவல் தெரிவித்துவிட்டு, கைடு உதவியுடன்தான் செல்ல வேண்டும். இதற்கான சீஸன் - ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை. விலங்குகள் திரியும் இந்த மூங்கில் தீவில் அட்டைப் பூச்சிகள், நண்டுகள் அதிகம் என்பதைக் கவனத்தில் கொள்க!

வாசகர்களே! நீங்களும் மோ.வி. டீமுடன் பயணிக்க விருப்பமா? உங்கள் பெயர், ஊர், கார் பற்றி 044-66802926 தொலைபேசி எண்ணில் உங்கள் குரலில் பதிவு செய்யுங்கள்!