கார்ஸ்
ஆசிரியர் பக்கம்
பைக்ஸ்
Published:Updated:

220 பல்ஸரைவிட ஸ்பீடா போகுது!

பஜாஜ் பல்ஸர் RS200
பிரீமியம் ஸ்டோரி
News
பஜாஜ் பல்ஸர் RS200

ரீடர்ஸ் ரிவ்யூ: பஜாஜ் பல்ஸர் RS200

விதவிதமாக எத்தனை பைக்குகள் வந்தாலும், பல்ஸர் மீதான மவுசு மட்டும் குறைவதே இல்லை (குறிப்பாக 90'S கிட்ஸுக்கு). இளைஞர்கள், நடுத்தர வயதினர் என அனைவருக்கும் சொகுசான இரும்புக் குதிரையாக, பஜாஜின் பைக்குகள் இருக்கின்றன. கோவையைச் சேர்ந்த சுவாமிநாதன், நமக்கு தனது பல்ஸர் RS200 பைக்கோடு செல்ஃபி எடுத்து அனுப்பி இருந்தார். ``என் பைக்கைப் பத்திச் சொல்லணும்னு ஆசை!” எனப் பின்குறிப்பு இருந்தது.
220 பல்ஸரைவிட ஸ்பீடா போகுது!

நமது ‘ரீடர்ஸ் ரெவ்யூ’ பகுதிக்காக, சுவாமிநாதன் தனது ரைடிங் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள ஆரம்பம் முதலேயே ஆர்வம் காட்டினார். மழைத் தூறல்களுக்கு மத்தியில், ரேஸ் கோர்ஸ் சாலையில் வைத்து சுவாமிநாதனைச் சந்தித்தோம். சிவப்பு வெள்ளை நிறத்தில் சீறிப்பாயும் தனது பல்ஸரை, அவ்வபோது தொட்டுப் பார்த்தபடி அவர் நறுக்கெனப் பேசினார். (இது லாக்டெளன் காலத்தில் எடுக்கப்பட்டது).

பைக் வாங்கிய அனுபவம்

பூ மார்க்கெட் பகுதியில், சொந்தமாக ஹார்டுவேர் கடை நடத்தி வருகிறேன். சிறிய வயதில் இருந்தே, எனக்கு பைக்குகள் மீது அதீத ஆர்வம். அதனாலேயே, மோட்டார் விகடனின் முதல் இதழில் இருந்தே அதன் தீவிர வாசகராக இருந்து வருகிறேன். என்னுடைய வேலையைப் பொறுத்தவரை, மார்க்கெட்டிங் பார்ட்தான் அதிகம். எனவே அது தொடர்பாகப் பயணிக்க, காரைவிட பைக்தான் சரியாக இருக்கும். கிட்டத்தட்ட அனைத்து டாப் எண்ட் பைக்குகளையும் ஓட்டியிருந்தாலும், பராமரிப்பது ஈஸி என்பதால், தொடக்கத்தில் இருந்தே பஜாஜ் பைக்குகளைதான் வாங்கி வருகிறேன். ஏற்கெனவே பல்ஸர் 150 மற்றும் 220 ஆகியவற்றைப் பயன்படுத்தி இருக்கிறேன். மற்றபடி RS200-ன் இன்ஜின், வசதிகள் ஆகியவை, அதை நோக்கி என்னை இழுத்தன. கடந்தாண்டு சாய்பாபா கோயில் பகுதியில் இருக்கும் ஜெய்கிருஷ்ணா பஜாஜ் ஷோரூமில், இந்த பைக்கைப் புதிதாக வாங்கினேன். அப்போது இதன் ஆன்ரோடு விலை 1.65 லட்ச ரூபாய் (BS-4).

பைக்கின் ரைடிங் & மைலேஜ்

இந்த பல்ஸரின் ஸ்போர்ட்டி டிஸைன், எனக்கு ரொம்பவும் பிடித்துள்ளது. அதேநேரத்தில் அன்றாடப் பயன்பாட்டுக்கும் இது வசதியாக இருக்கிறது. இது ஃபுல் ஃபேரிங் கொண்ட பெர்ஃபாமன்ஸ் பைக் என்றாலும், லிட்டருக்குச் சராசரியாக 35 கி.மீ வரை மைலேஜ் கிடைக்கிறது. அதிகபட்சமாக 145 கிமீ வேகத்தை இதில் டச் செய்திருக்கிறேன். அந்த வேகத்திலும், பைக் நல்ல கன்ட்ரோலுடன் ஸ்மூத்தாகவே இருந்தது. நான் தினசரி 150 - 200 கி.மீ தூரம் பைக்கை ஓட்டுவேன். அவை பெரும்பாலும் டிராஃபிக் நிறைந்த - குறுகலான சாலைகளுமாகத்தான் இருக்கும். அந்த ரைடிங்குக்கு இந்த பைக் மிகவும் சொகுசாக இருக்கிறது. இதன் எடை அதிகம்தான் என்றாலும், மற்ற பைக்குகளைப்போல அது கஷ்டமாகத் தெரியாமல் இருப்பது பெரிய ப்ளஸ். இதுவரை 30,000 கி.மீ ஓட்டிவிட்டேன். இதன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் எனக்கு ஓகேதான்.

மலைப்பாதைகளில் பைக்கை ஓட்ட, மிகவும் எளிதாக இருக்கிறது. கொண்டை ஊசி வளைவுகளில்கூட, எளிதாகத் திரும்ப முடிகிறது. இந்த பல்ஸரின் ரோடு கிரிப்பும் அருமை. நெடுஞ்சாலைகளில் போனால், ரேஸிங் அனுபவம் கிடைக்கிறது. இதே செக்மென்ட்டில் கேடிஎம் டியூக் 200, யமஹா R15 V3 ஆகியவை இருக்கின்றன. டியூக் ரொம்ப பவர்ஃபுல் என்பதுடன், அதை ட்ராக்கில்தான் விரட்டி ஓட்ட முடியும். ரோட்டில் அதை ஓட்டுவது சிரமம். R15-ன் ரைடிங் ஸ்டைல், நிறைய பேருக்குப் பிடிக்காது. காரணம், தோள்பட்டைகளைக் குறுக்கிக் கொஞ்சம் குனிந்துதான் பைக்கை ஓட்ட வேண்டும். மேலும் இதில் லாங் ரைடும், நிறைய பேருக்கு செட் ஆகாது. பல்ஸர் RS200-ல் இந்தப் பிரச்னைகள் ஏதும் இல்லை. எனக்கு நல்ல வாட்டமான சீட்டிங் பொசிஷன் கிடைக்கிறது. கூடவே செம ரைடிங் அனுபவமும் கிடைக்கிறது. அப்படியே பல்ஸர் 220 ஸ்டைலில்தான் பைக்கின் எர்கனாமிக்ஸ் இருக்கிறது.

சுவாமிநாதன்
சுவாமிநாதன்

பைக்கில் பிடித்தது

இதன் ஸ்டைலான டிசைன்தான், எனக்கு முதலில் பிடித்த விஷயம். ஸ்போர்ட்டியான LED இண்டிகேட்டர்கள் மற்றும் பவர்ஃபுல் டூயல் ப்ரொஜெக்டர் ஹெட்லைட்ஸ் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. இரவில் பயணிக்க இது மிகவும் உதவிகரமாக இருக்கிறது. சிங்கிள் சேனல் ஏபிஎஸ்ஸின் பிரேக்கிங், பாதுகாப்பாகவே உள்ளது. அடுத்து இதன் இன்ஜின் பெர்ஃபாமன்ஸ். பவர் அண்ட் பிக் அப் சூப்பர். 220-ல் கூட அதிகபட்சமாக 130 கிமீ வேகத்தில்தான் போக முடிந்தது. இந்த பல்ஸர், ஜஸ்ட் லைக் தட் 140கிமீ வேகத்தைத் தாண்டிவிடுகிறது.

220 பல்ஸரைவிட ஸ்பீடா போகுது!

மோனோஷாக் சஸ்பென்ஷன், நல்ல ரைடிங் அனுபவத்தைத் தருகிறது. எத்தனை தூரம்/நேரம் ஓட்டினாலும் அலுப்போ, உடல் வலியோ இதுவரை ஏற்பட்டதில்லை. இதன் லிக்விட் கூல்டு இன்ஜின், கிட்டத்தட்ட காரின் இன்ஜின் போலத்தான் உள்ளது. எனவே காரில் இருப்பதைப் போல, அனைத்து இண்டிகேட்டர்களும் டிஸ்ப்ளேயில் தெரிகின்றன. பைக் கீழே விழுந்தால், இன்ஜின் ஆட்டோமேட்டிக்காக கட் ஆஃப் ஆகிவிடுகிறது. அதேபோல சைடு ஸ்டாண்ட் போட்டபடி, கியரைப் போட்டாலும் இன்ஜின் தானாக கட் ஆஃப் ஆகிவிடும்.

பைக்கில் பிடிக்காதது

பைக்கில் சில நெகட்டிவ் அம்சங்களும் இருக்கின்றன. ரியர்வியூ மிரரில், பின்னால் வரும் வாகனங்கள் தெளிவாகத் தெரிவதில்லை (பல்ஸர் 220 போல). அதேபோல, கியர் இண்டிகேட்டர் இல்லை. 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்ட பைக்கில் இதை பெரிய மைனஸாக நான் பார்க்கிறேன். கிக் லீவர் தவிர, சென்டர் ஸ்டாண்டும் பைக்கில் இல்லை என்பதால், பார்க்கிங் போது அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். அதேநேரத்தில், பின் பகுதியில் இருக்கும் LED டெய்ல் லைட்டுக்கு, வேறு மாதிரியான டிசைனைக் கொடுத்திருக்கலாம். இது எனக்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை.

என் தீர்ப்பு

நிச்சயமாக, இந்த செக்மென்ட்டில் இதுதான் கொடுக்கும் காசுக்கேற்ற தரமான பைக் என்பேன். இந்த சிசி ரேஞ்சில் உள்ள மற்ற பைக்குகளில், இவ்வளவு வசதிகள் கிடைக்காது. எனக்குத் தெரிந்து, குடும்பப் பயன்பாட்டுக்கு இந்த பைக் செட்டாகாது. மேலும் தினசரி 30 கிமீ மட்டும் ஓட்டுபவர்களுக்கும், இது சரிவராது. என்னைப் போல, அதிக தூரம் பைக் ஓட்டும் மார்க்கெட்டிங் பணியில் இருப்பவர்களுக்கு, இது நல்ல சாய்ஸ் என்பது எனது கருத்து.