Published:Updated:

ஒரு ராயல் என்ஃபீல்டு ரசிகனின் ஹோண்டா அனுபவம்!

CB 350 RS
பிரீமியம் ஸ்டோரி
CB 350 RS

ரீடர்ஸ் ரிவ்யூ: ஹோண்டா CB 350 RS!

ஒரு ராயல் என்ஃபீல்டு ரசிகனின் ஹோண்டா அனுபவம்!

ரீடர்ஸ் ரிவ்யூ: ஹோண்டா CB 350 RS!

Published:Updated:
CB 350 RS
பிரீமியம் ஸ்டோரி
CB 350 RS

சரியாக ஓர் ஆண்டுக்கு முன்னால்தான் ஹைனெஸ் CB350 மற்றும் CB350 RS என இரண்டு மாடல்களை வெளியிட்டது ஹோண்டா. ராயல் என்ஃபீல்டு க்ளாஸிக்குக்குப் போட்டியாக இந்த பைக்குகளைக் களமிறக்கியிருந்தது ஹோண்டா. ரெட்ரோ ஸ்டைலில் இருக்கும் என்ஃபீல்டுக்குப் போட்டியாக ரெட்ரோ ஸ்டைலிலேயே CB350 RS-ஐ கொண்டு வந்தது ஹோண்டா. தலைமுறை தலைமுறையாக ராயல் என்ஃபீல்டு பைக்கின் ரசிகர்களாக இருக்கும் ஒருவர், இந்த CB350 RS -ஐ ஆசையாக வாங்கி ஓட்டி வருகிறார். அவர், ஷங்கர். அவரே சொல்கிறார்.

“ஹாய்.. நான் ஷங்கர். பெங்களூரில் ஒரு ஐடி நிறுவனத்தில் வேலை செய்கிறேன். ராயல் என்ஃபீல்டுக்கும் எனக்குமான உறவைப் பற்றிக் கூற வேண்டும் என்றால், எங்கள் குடும்பத்தில் இருக்கும் அனைவருமே ராயல் என்ஃபீல்டு ரசிகர்கள். 1960-ல் என்னுடைய தாத்தா மினி புல்லட் ஒன்றை வைத்திருந்தார். அதனைத் தொடர்ந்து, இப்போது வரை எங்கள் வீட்டின் கராஜை ராயல் என்ஃபீல்டு பெயர் பொறித்த பைக்குகள் தான் அலங்கரிக்கின்றன. 1990-களில் என்னுடைய அப்பா ஒரு பெட்ரோல் புல்லட், ஒரு டீசல் புல்லட், ஒரு எலெக்ட்ரா, மற்றொரு டீசல் புல்லட் என எல்லாமே ராயல் என்ஃபீல்டு பைக்குகள்தான். அதன் பிறகு 2001-ல் என்ஃபீல்டின் கேம்பஸ் மாடல் பைக்கைத் தான் நான் முதன் முதலில் வாங்கினேன். பிறகு 2011-ல் தான் க்ளாஸிக் 350-க்கு மாறினேன். கிட்டத்தட்ட 5 வருடங்கள், என்னுடைய க்ளாஸிக்கில் 63,000 கிமீ வரை பயணம் செய்திருக்கிறேன்.

பல ஆண்டுகள் என்ஃபீல்டையே பயன்படுத்தி வந்ததால், புதிதாக ஒரு பைக்கை முயற்சி செய்து பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் எழுந்தது. ஆனால், அதே நேரம் நான் வாங்கக்கூடிய பைக்கானது ராயல் என்ஃபீல்டு அனுபவத்துக்கு இணையாக இருக்க வேண்டும் என்று தோன்றியது. தற்போது ராயல் என்ஃபீல்டுக்குப் போட்டியாகச் சந்தையில் இருப்பது பஜாஜின் டொமினார் மற்றும் ஹோண்டாவின் CB350 RSதான். இரண்டையுமே முயற்சி செய்து பார்க்கலாமே என்று தோன்றியது. எனவே, க்ளாஸிக்குக்குப் பிறகு டொமினார் வாங்கினேன். அதனைத் தொடர்ந்துதான் இந்த CB350 RS-ஐ வாங்கினேன்.

ரீடர்ஸ் ரிவ்யூ
ரீடர்ஸ் ரிவ்யூ

க்ளாஸிக்கில் இருப்பது போலவே அதே இன்ஜின்; கிட்டத்தட்ட அதே பவர்தான் RS-லும் இருக்கிறது. ஆனால், க்ளாஸிக்கை விடக் கூடுதலாக டூயல் சேனல் ஏபிஎஸ், ட்ராக்ஷன் கன்ட்ரோல், ஸ்லிப்பர் கிளட்ச் மற்றும் எல்இடி லைட்டுகள் ஆகியவை இருக்கின்றன. டொமினாரும் ஒரு சிறப்பான அனுபவத்தையே எனக்குக் கொடுத்தது. இருந்தாலும், என்ஃபீல்டின் ரெட்ரோ ஸ்டைலை, என்ஃபீல்டின் ரைடிங் பொசிஷனை நிறையவே மிஸ் செய்தேன். எனவேதான் அடுத்த சாய்ஸாக இருந்த CB350 RS பைக்கை வாங்கினேன். பவரைத் தவிர டொமினாரில் இருக்கும் அதே அம்சங்கள் RS-லும் இருந்தது. கூடவே எனக்கு பிடித்த ரெட்ரோ லுக்கும். பயன்படுத்திய பிறகு RS என்னை வெகுவாகக் கவர்ந்தது என்றே சொல்ல வேண்டும்.

ராயல் என்ஃபீல்டில் எனக்குப் பிடித்த முதல் விஷயம் - அதன் லுக்தான். ரெட்ரோ லுக்கில் இருக்கும் அதன் மேல் அமர்ந்தாலே ஒரு தனி கர்வம் இருக்கும். RE-யின் ஸ்ப்ளிட் சீட் அதன் ட்ரேட்மார்க். நான் வாங்கிய போது RE-ன் பயன்பாடே மிகவும் குறைவாகத்தான் இருக்கும். எனவே, நான் எங்கே சென்றாலும் தனித்துத் தெரிவேன். அதுதான் RE-யின் அப்போதைய ஸ்பெஷலும் கூட. பல பைக்குகளில் டிஸ்க் பிரேக் என்ற ஒன்று அறிமுகப்படுத்தப்படாத போதே RE அதனை அறிமுகப்படுத்திவிட்டது. நான் கூறுவது 10 வருடங்களுக்கு முன்பு. எனவே, RE ஒரு சிறப்பான பைக் என்பதில் மாற்றுக் கருத்தே இருக்க முடியாது.

டொமினாரில் பிடித்தென்றால்.. அது கொஞ்சமே கொஞ்சம் ஸ்போர்ட்டி ஸ்டான்ஸோடு இருக்கும். அதன் பவரைக் குறிப்பிட்டே ஆக வேண்டும். 40bhp பவர், யாருக்குத்தான் பிடிக்காமல் போகும். அதோடு அதன் ஸ்லிப்பர் கிளட்ச் நன்றாக இருக்கும். இதையெல்லாம் கொடுத்தும் விலையைும் பஜாஜ் கட்டுக்குள்ளே வைத்திருந்ததுதான் எனக்கு மிகவும் பிடித்த ஒரு அம்சம். சர்வீஸ் இன்டர்வெல் அதிகம், அடிக்கடி சர்வீஸ் செய்ய வேண்டும் என்ற தேவை இல்லை. சர்வீஸ் விலை குறைவு, மெயின்டனன்ஸ் விலை குறைவு, டொமினார் ஸ்பேர் பார்ட்ஸ்களின் விலை குறைவு, டொமினாருக்கு நான் நிறைய செலவு செய்ததே கிடையாது. காஸ்ட் வைஸ் டொமினார் மிகவும் சிறப்பான ஒரு சாய்ஸ்.

க்ளாஸிக்கை விடக் கூடுதலாக இதில் ஸ்லிப்பர் க்ளட்ச், டூயல் சேனல் ஏபிஎஸ்.. அடடா
க்ளாஸிக்கை விடக் கூடுதலாக இதில் ஸ்லிப்பர் க்ளட்ச், டூயல் சேனல் ஏபிஎஸ்.. அடடா

கண்ணை மூடிக் கொண்டு சொல்வேன், RS-ன் சிறப்பே இதன் இன்ஜின்தான் என்று. மிகவும் ஸ்மூத்தான ஒரு இன்ஜினை RS-க்குக் கொடுத்திருக்கிறது ஹோண்டா. வைப்ரேஷன் சுத்தமாகக் கிடையாது. ஓட்டுவதற்கு அவ்வளவு சிறப்பாக இருக்கிறது. சூடான வெண்ணெயில் கத்தி இறங்குவதைப்போல் இருக்கும் RS-ன் கிளட்ச். க்ளாஸிக் மற்றும் டொமினார் இரண்டுமே கிட்டத்தட்ட ஒரே அளவு எடைதான், 190+ இருக்கும். பேப்பரில் RS-ன் எடை அவற்றைவிட 8 முதல் 10 கிலோ மட்டுமே குறைவு. ஆனால், எனக்கு பயன்படுத்தும்போது மிகவும் லேசாக இருப்பது போலவே ஒரு உணர்வு இருக்கிறது. நீண்ட நாட்கள் கழித்து எடை குறைவான பைக்கை ஓட்டுவதுபோல இருப்பதால், இந்த RS எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. இனி இந்த பைக்கையே தொடர்ந்து பயன்படுத்தலாம் என முடிவெடுத்திருக்கிறேன்!” என்று தன் அனுபவத்தைக் கூறி முடித்தார்.

ஒரு காலத்தில் ராய்ல என்ஃபீல்டுக்குப் போட்டி ராயல் என்ஃபீல்டுதான் என்ற நிலை இருந்தது. ஆனால், இன்றைய தேதியில் அதற்குப் போட்டிகள் நிறைய வந்துவிட்டது, நமக்கும் தேர்ந்தெடுப்பதற்கு நிறைய ஆப்ஷன்கள் இருக்கின்றன. என்ஃபீல்டு, பஜாஜ் மற்றும் ஹோண்டாவுடன் தற்போது யெஸ்டியும் கோதாவில் குதித்திருக்கிறது.

ராயல் என்ஃபீல்டுக்கு நிகரான இன்ஜின் பெர்ஃபாமன்ஸ்.. பவர்.. ஹோண்டா CB 350 RS-ன் ஸ்மூத்னெஸ் அருமை
ராயல் என்ஃபீல்டுக்கு நிகரான இன்ஜின் பெர்ஃபாமன்ஸ்.. பவர்.. ஹோண்டா CB 350 RS-ன் ஸ்மூத்னெஸ் அருமை

நம்முடைய வாசகர் ஷங்கர் பைக் வாங்கும்போது, யெஸ்டி மார்க்கெட்டில் இல்லை. இருந்திருந்தால் அதனையும் பரிசீலனையில் எடுத்திருக்கலாம். எப்படியோ, 350 சிசி செக்மென்ட் இப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாகச் சூடு பிடிக்கிறது. இந்த செக்மென்ட்டில் இறுதியில் கோலோச்சப் போவது காலம் காலமாக அரியணையில் அமர்ந்திருக்கும் என்ஃபீல்டா, இடையில் புகுந்து களமாடிக் கொண்டிருக்கும் ஹோண்டாவா அல்லது மார்க்கெட்டில் புதிய வரவுகளுடன் ரீஎண்ட்ரி கொடுத்திருக்கும் யெஸ்டியா...பொறுத்திருந்து பார்ப்போம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism