Published:Updated:

க்ளாஸிக் புல்லட்டில் இவ்வளவு மாறிடுச்சா!

ராயல் என்ஃபீல்டு க்ளாஸிக் 350
பிரீமியம் ஸ்டோரி
ராயல் என்ஃபீல்டு க்ளாஸிக் 350

லாங் ரைடு: ராயல் என்ஃபீல்டு க்ளாஸிக் 350

க்ளாஸிக் புல்லட்டில் இவ்வளவு மாறிடுச்சா!

லாங் ரைடு: ராயல் என்ஃபீல்டு க்ளாஸிக் 350

Published:Updated:
ராயல் என்ஃபீல்டு க்ளாஸிக் 350
பிரீமியம் ஸ்டோரி
ராயல் என்ஃபீல்டு க்ளாஸிக் 350

கடந்த வருடம் ராயல் என்ஃபீல்டு க்ளாஸிக் 350 வாங்காலம் என முடிவு செய்திருந்தவர்கள், அந்த முடிவை ஒரு வருட காலத்துக்குத் தள்ளிப் போட்டிருப்பார்கள். காரணம், மார்க்கெட்டில் ஹிட்டடித்த மீட்டியாரின் ஸ்மூத்தான இன்ஜின் க்ளாஸிக்குடன் இணையவிருக்கிறது என்ற தகவல்தான். மீட்டியாரின் இன்ஜினை மட்டும்தான் க்ளாஸிக்கில் ராயல் என்ஃபீல்டு பயன்படுத்தப் போகிறது என என்ஃபீல்டு ரசிகர்கள் காத்திருக்க, தொடர்ந்து க்ளாஸிக்கில் பல்வேறு மாற்றங்களையும் ராயல் என்ஃபீல்டு செய்கிறது எனத் தகவல்களும் ஸ்பை படங்களும் அனல் பறந்து கொண்டிருக்கின்றன. தன் ஸ்டைலில் ‘டுப் டுப்’ அப்டேட்களுக்கு மத்தியில் கூலாகக் களம் இறங்கியிருக்கிறது ‘புதிய ராயல் என்ஃபீல்டு க்ளாஸிக் 350’.


புதிய க்ளாஸிக் 350-ன் க்ரோம் ரெட் கலர் வேரியன்ட் நமக்கு டெஸ்ட் டிரைவுக்குக் கிடைத்திருந்தது. புதிய ராயல் என்ஃபீல்டு க்ளாஸிக்கின் அப்டேட்டைப் பற்றி எளிமையாகச் சொல்ல வேண்டும் என்றால், மீட்டியாரின் சிறந்த அம்சங்களை எடுத்து, பழைய க்ளாஸிக் 350-யுடன் சேர்த்துச் செதுக்கினால், அதுதான் புதிய ராயல் என்ஃபீல்டு க்ளாஸிக் 350. ஆம், மீட்டியாரில் இருக்கும் பல சிறப்பான அம்சங்களை புதிய க்ளாஸிக்கில் இணைத்திருக்கிறார்கள். ‘J’ ப்ளாட்ஃபார்மில் தயாரான மீட்டியாரில் பயன்படுத்தப்பட்ட அதே இன்ஜினை எந்த மாற்றமும் இன்றி புதிய க்ளாஸிக்கிலும் பயன்படுத்தியிருக்கிறது ராயல் என்ஃபீல்டு. பழைய க்ளாஸிக் இன்ஜினைவிட புதிய இன்ஜின் கொஞ்சம் பெரியது என்பதால், இன்ஜினுக்குக் கொடுக்கப்பட்ட மொத்த இடத்தையும் ஆக்கிரமித்து ஏற்கனவே பல்க்காக இருக்கும் பைக்கை இன்னும் பல்க்காகக் காண்பிக்கிறது.

க்ளாஸிக்கில் சீட்டிக்கு அடியில் இரண்டு ஸ்பிரிங்கைக் கொடுத்திருப்பார்கள். புதிய க்ளாஸிக்கில் அது இல்லை. ஆனால், ஆப்ஷனலாக வேண்டும் என்றால் அதனைச் சேர்த்துக் கொள்ளலாம். அந்த ஸ்ப்ரிங்குகள் இல்லாமல் க்ளாஸிக்கைப் பார்க்கும்போது கொஞ்சம் புல்லட்டைப் பார்ப்பதைப் போன்ற ஃபீல் வருகிறது. சீட்டின் உயரம் பழைய க்ளாஸிக்கை விட 5 மிமீ அதிகரித்து 805 மிமீட்டராக இருக்கிறது. ஃப்யூல் டேங்க் 13.5 லிட்டரில் இருந்து 13 லிட்டராகக் குறைந்திருக்கிறது. புதிய க்ளாஸிக் புதிய டெய்ல் லேம்ப்பைப் பெற்றிருக்கிறது. முகப்பு விளக்குகள் எல்இடி இல்லை ஹாலோஜன்தான். பக்கத்தில் இருக்கும் டிஆர்எல் டிசைன், மாடர்ன் க்ளாஸிக்.

பழைய க்ளாஸிக்கில் சைலன்சர் பைக்கின் நீளத்தைத் தாண்டி வெளியே கொஞ்சம் நீட்டிக் கொண்டிருக்கும். புதிய க்ளாஸிக்கில் அந்த நீட்டம் குறைக்கப்பட்டு நீட்டாக இருக்கிறது. இது வரை க்ளாஸிக்கில் சைட் லாக்கை சைடிலேயே கொடுத்து வந்திருந்தது ராயல் என்ஃபீல்டு. புதிய க்ளாஸிக்கில் சைட் லாக் மற்ற பைக்குகளில் இருப்பதுபோன்றே இக்னிஷன் லாக்குடன் சேர்த்தே வந்துவிடுகிறது. நீண்ட காலமாக க்ளாஸிக் ரசிகர்கள் கேட்டு வந்தது ‘ஃப்யூல் கேஜ் குடுங்கப்பா’ என்பதுதான். புதிய க்ளாஸிக்கில் குட்டி டிஜிட்டல் ஸ்கிரீனில் டிஜிட்டல் ஃப்யூல் கேஜைக் கொடுத்திருக்கிறது ராயல் என்ஃபீல்டு. அந்த டிஜிட்டல் ஸ்கிரீனுக்குப் பக்கத்திலேயே குட்டியாக ட்ரிப்பர் நேவிகேஷன் பாடையும் கொடுத்திருக்கிறது ராயல் என்ஃபீல்டு. மீட்டியார் உபயம்தான். மொபைலில் ராயல் என்ஃபீல்டு செயலியுடன் இணைத்து விட்டால் Turn-by-Turn நேவிகேஷன் வசதியையும் பயன்படுத்திக் கொள்ளலாம். பழைய க்ளாஸிக்கில் அனலாக்காக இருந்த ட்ரிப் மீட்டர், புதிய க்ளாஸிக்கில் ஸ்பீடு டயலில் இருந்து கீழிறங்கி டிஜிட்டல் ஸ்கிரீனுக்கு வந்திருக்கிறது.

க்ளாஸிக்கில் ஃப்யூல் கேஜ் டிஜிட்டல் மீட்டர். இக்னிஷனிலேயே சைடு லாக் வசதி.
க்ளாஸிக்கில் ஃப்யூல் கேஜ் டிஜிட்டல் மீட்டர். இக்னிஷனிலேயே சைடு லாக் வசதி.
மீட்டியாரில் இருக்கும் அதே இன்ஜின். இப்போது அதிர்வுகள் அவ்வளவாக இல்லை.
மீட்டியாரில் இருக்கும் அதே இன்ஜின். இப்போது அதிர்வுகள் அவ்வளவாக இல்லை.
சிங்கிள் சேனல், டூயல் சேனல் ஏபிஎஸ் என இரண்டுமே உண்டு.
சிங்கிள் சேனல், டூயல் சேனல் ஏபிஎஸ் என இரண்டுமே உண்டு.
டெயில் லைட் அசெம்பிளி, நீட்.
டெயில் லைட் அசெம்பிளி, நீட்.


பெர்ஃபாமன்ஸைப் பொறுத்தவரை ஒரே இன்ஜின்தான் என்பதால் மீட்டியாரின் பெர்ஃபாமன்ஸ்தான் இதற்கும் இருக்கிறது. பழைய க்ளாஸிக்கை ஓட்டும்போது, 80 கிமீ வேகத்தைக் கடந்தாலே நம் உடம்பும் சேர்த்து வைப்ரேட் ஆகத் தொடங்கிவிடும். புதிய க்ளாஸிக்கை ஓட்டிக் கொண்டிருக்கும் போது எதேச்சையாகத்தான் ஸ்பீடோமீட்டைரைப் பார்த்தேன். 100 கிமீ வேகத்தைக் கடந்து ஓட்டிக் கொண்டிருக்கிறேன் என அப்போதுதான் உறைத்தது. அந்த அளவுக்கு இன்ஜின் ஸ்மூத்தாக இருக்கிறது. இன்ஜின் மட்டுமல்ல; பிரேக், கியர்ஷிஃப்ட்டிங் என அனைத்துமே ஸ்மூத்தாகவே இருக்கிறது.

Classic 350 Bullet
Classic 350 Bullet


இன்ஜின் ஸ்மூத்தாகி விட்டதே, அப்போ அந்த க்ளாஸிக்கின் `டுப் டுப்’ சத்தம் இருக்காதா?.. பதற வேண்டாம், பழைய க்ளாஸிக்கில் நாம் எதை எல்லாம் ரசித்தோமோ, அதனை மாற்றாமல்தான் அப்டேட்களைச் செய்திருக்கிறது ராயல் என்ஃபீல்டு. ஆக்ஸிலரேஷனை உயர்த்தும்போது அந்தப் பழைய க்ளாஸிக்கின் தம்ப்பை உணர முடிகிறது. இன்ஜின் ஸ்மூத்தாகி இருப்பதால், அந்தச் சத்தமும் கொஞ்சம்... கொஞ்சம் ஸ்மூத்தாகி இருக்கிறது, அவ்வளவு தான்.

சிங்கிள் சேனல் ஏபிஎஸ் வசதியுடன் இரண்டு கலர் வேரியன்ட்கள்; டூயல் சேனல் ஏபிஎஸ் வசதியில் 9 கலர் வேரியன்ட்கள் கிடைக்கின்றன. புதிய கலர்களுடன் க்ளாஸிக்கின் டாப் எண்ட் வேரியன்ட்டில் இன்டர்செப்டரில் பயன்படுத்திய ராயல் என்ஃபீல்டு பெயருக்கு மேல் கிரீடத்துடன் இருப்பது போன்ற லோகோவைப் பயன்படுத்தி க்ளாஸிக் 350-யை, மெஜஸ்டிக் க்ளாஸிக்காக மாற்றியிருக்கிறது ராயல் என்ஃபீல்டு. புதிய க்ளாஸிக், 2 லட்சம் மேல்தான் விலை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

க்ளாஸிக் பிரியர்களைக் கண்டிப்பாக ஏமாற்றாது இந்தப் புதிய க்ளாஸிக் 350.

க்ளாஸிக் புல்லட்டில் இவ்வளவு மாறிடுச்சா!