Published:Updated:

கான்டினென்ட்டல் இனி ரோடு பைக் இல்லை; ட்ராக் பைக்!

கான்டினென்ட்டல் ஜிடி கப்
பிரீமியம் ஸ்டோரி
கான்டினென்ட்டல் ஜிடி கப்

ராயல் என்பீல்டு கான்டினென்ட்டல் ஜிடி கப் 2021

கான்டினென்ட்டல் இனி ரோடு பைக் இல்லை; ட்ராக் பைக்!

ராயல் என்பீல்டு கான்டினென்ட்டல் ஜிடி கப் 2021

Published:Updated:
கான்டினென்ட்டல் ஜிடி கப்
பிரீமியம் ஸ்டோரி
கான்டினென்ட்டல் ஜிடி கப்

ஆட்டோமொபைல் இண்டஸ்ட்ரியில், டூ–வீலர் செக்மென்ட்டில் ராயல் என்ஃபீல்டுதான் செம சீனியர். இன்ஜின் தோன்றி, டயர் தோன்றாக் காலத்தில் இருந்தே பைக்குகளைத் தயாரித்து வரும் ராயல் என்ஃபீல்டு, செஞ்சுரி அடித்தே சில ஆண்டுகள் ஆகிவிட்டன. சுமார் நூறு வருடங்களுக்கு முன்பே ரெட்ரோ பைக் மாடல்களைக் கண்டுபிடித்த ‘வசீகரன் ரஜினிகாந்த்’ என்றால், அது RE தான். ராயல் என்ஃபீல்டு பைக்குகள் என்றாலே ‘டபுடுபு’ என்ற எக்ஸாஸ்ட் பீட் அதிர 80 கிமீ வேகம் செல்வதற்கு… அழகாக ஒரு வீக் எண்ட் ரைடு போய்விட்டு வருவதற்கு.. அட இவ்வளவு ஏன்… நானே ராயல் என்ஃபீல்டில் இமயமலை வரை ட்ரிப் அடித்திருக்கிறேன். இப்படித்தான் ராயல் என்ஃபீல்டு புல்லட்கள் நமக்குப் பரிச்சயம்.

ஆனால், திடீரென்று ஒரு நாள் ஓர் இன்பச் செய்தி, தேன்போல் என் காதில் வந்து பாய்ந்தது. அது மாதிரியொரு செய்தியைக் கேட்டால், என் போன்ற பைக் ரைடர்களுக்குக் கையும் காலும் ஓடாது! ஆம், ‘ஒரு ரேஸிங் சாம்பியன்ஷிப் நடத்தப் போகிறோம்; வர்றீங்களா’ என்று ஒரு வீக்எண்ட், மோ.வி–க்கு மெயில் அனுப்பியிருந்தது ராயல் என்ஃபீல்டு. என்னது, ராயல் என்ஃபீல்டு பைக்கில் ரேஸா!

பெரும்பாலும் 4 ஸ்ட்ரோக் இன்ஜின்கள் கொண்ட பைக்குகளும், எடை குறைவாக இருக்கும் பைக்குகளுமே ‘வ்வ்ர்ர்ரூம்’ என ரேஸ் ட்ராக்கில் பறப்பதைப் பார்த்திருக்கிறேன். ஸாரி.. .பார்த்திருக்கிறோம்! ட்வின் சிலிண்டர் இன்ஜின் மற்றும் அதிகப்படியான எடையுடன் ஹேண்ட்லிங்கில் கொஞ்சம் டஃப் கொடுக்கும் ஜிடி பைக்குகளை ரேஸ் ட்ராக்கில் பறக்க விடத் தேர்ந்தெடுத்திருந்தது ராயல் என்ஃபீல்டு.

இதுவரை போலோ ஜிடி கப்தான் கேள்விப்பட்டிருக்கிறோம்; இப்போ ராயல் என்ஃபீல்டு கான்டினென்ட்டல் ஜிடி கப்! ‘செமையா இருக்கும்ல’ என்று ‘மாநாடு’ எஸ்ஜே.சூர்யா போல் பல்லிளித்துக் கொண்டே என் படையுடன் கிளம்பினேன். JK டயர் நேஷனல் ரேஸிங் சாம்பியன்ஷிப் கப்புடன் இணைந்து ராயல் என்ஃபீல்டு இந்தப் போட்டியை நடத்தத் திட்டமிட்டிருந்தது. கோயம்புத்தூரில் இருக்கும் கரி மோட்டார் ரேஸ் ட்ராக்கில் முதல் ஆளாக ஆஜரானதும், நமது ஆர்வத்தைப் புரிந்து கொண்டுவிட்டிருக்க வேண்டும் ராயல் என்ஃபீல்டு. ‘‘பொறுங்க… நீங்களும் ஜிடி பைக் ஓட்டப் போறீங்க!’’ என்று என் மைண்ட் வாய்ஸை கேட்ச் செய்து கொண்டு விட்டது. அசடு வழிந்து கொண்டே ஜிடியை ஸ்டார்ட் செய்தேன்.

நம்மை மட்டுமல்ல; இந்த ரேஸில் கலந்து கொள்ள, இந்தியாவில் இருக்கும் அனைத்து ரேஸர்களையும் அழைத்திருந்தது ராயல் என்ஃபீல்டு. சுமார் 500–க்கும் மேற்பட்ட ரேஸர்கள், கான்டினென்ட்டல் ஜிடியை ரேஸ் ட்ராக்கில் விரட்டக் காத்திருந்தார்கள். ஒரு நேர்முகத் தேர்வில் கலந்து கொண்ட எல்லோருக்குமேவா வேலை கிடைக்கும்! 500 பேருக்கும் குட்டியாக ஒரு பரீட்சை வைத்து, அதில் சிறந்த 100 பேரைத் தேர்வு செய்தார்கள். மீண்டும் அதிலிருந்து அதிவேகத்தில் செல்லும் 18 ரேஸர்களைப் பட்டியலிட்டது ராயல் என்ஃபீல்டு. கரி மோட்டார் ஸ்பீடு வேயில் முதல் சீஸனுக்கான அனைத்து ரேஸ்களும் நடந்து முடிந்தன.

சாதாரணமாகவே கான்டினென்ட்டல் ஜிடி பைக், ஒரு ராலி பைக் மாதிரியே அட்டகாசமாக இருக்கும். அதில் அதிகப்படியான மாற்றங்கள் எதுவும் செய்யாமல், குட்டிக் குட்டியாய் சில மாடிஃபிகேஷன்கள் மட்டும் செய்து, ரேஸிங் செய்வதற்கு ஏற்றாற்போல் ஒரு ரேஸ் பைக்காக்கி இருந்தார்கள். ரெட்ரோ ஃபேரிங், ட்ராக்கில் பறந்தாலும் ஜம்மென்று இருக்கும் ஸ்டிஃப்பான சஸ்பென்ஷன் செட்அப், ரேஸ் ஓட்டுவதற்கெனக் குனிந்து ஓட்ட வசதியாக போஸர், ஸ்டீல் எக்ஸாஸ்ட்கள், பிரத்யேக ஜேகே டயர்கள் என ஒரு ரேஸ் பைக்காகவே அவதாரம் எடுத்திருந்தது கான்டினென்ட்டல் ஜிடி 650. மற்றபடி பைக்கின் சிசியிலோ இன்ஜின் பெர்பாஃமன்ஸிலோ எந்த மாற்றமும் இல்லை. ஸ்டாக் பைக்கில் இருக்கும் அதே பவர் டெலிவரிதான்.

கான்டினென்ட்டல் 
இனி ரோடு பைக் இல்லை; 
ட்ராக் பைக்!
கான்டினென்ட்டல் 
இனி ரோடு பைக் இல்லை; 
ட்ராக் பைக்!
கான்டினென்ட்டல் 
இனி ரோடு பைக் இல்லை; 
ட்ராக் பைக்!

ஒரு ரோடு பைக்கை, ட்ராக்கில் ஓட்டும்போது லேசான ஒரு தயக்கம் இருக்குமே… அது எனக்குள்ளும் வந்தது. என் தயக்கத்தை ஜிடி பைக் நன்றாகப் புரிந்து கொண்டு விட்டது. நான்கு கார்னர்களைக் கடந்தவுடன் பைக் என் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டது. ரேஸ் ட்ராக்கில் பறப்பதற்கு ஏதுவாக ஏபிஎஸ் ஸ்விட்ச் ஆஃப் செய்திருந்ததால், இதன் பிரேக்கிங் ஆற்றல் மற்றும் கார்னரிங் செய்யும்போது அதிகப்படியான இன்ஜின் ஆற்றலை உணர முடிந்தது. ஒரு ரெட்ரோ பைக்கை, ரேஸிங் பைக்காக மாற்றி ரேஸ் டிராக்கில் பறக்க விட்டது ஆனந்தமே! ஜிடியில் சுமார் 130 கிமீ–க்கு மேல் ஒரு ஸ்ட்ரெய்ட் ஸ்ட்ரெச்சில் பறந்தேன். கார்னரிங் அதைவிட உற்சாகம்! ரோட்டில் மட்டுமில்லை; ட்ராக்கிலும் அற்புதம் நிகழ்த்திக் காட்டி, என்னை முழுமையான ரேஸராக்கிச் சிரித்தது ராயல் என்ஃபீல்டு கான்டினென்ட்டல் ஜிடி.

என்னோடு சேர்ந்து, 18 ரெட்ரோ பைக்குகள், கார்னர்களிலும் ஸ்ட்ரெய்ட் லைன்களிலும் சீறிப் பாய்ந்த காட்சி இன்னும் கண்ணுக்குள் நின்று கொண்டிருக்கிறது. ரேஸில் பங்கேற்ற 18 ரேஸர்களும் அவர்களது திறமையை முழுமையாக வெளிப்படுத்தினார்கள். இருப்பினும் 2021–க்கான நேஷனல் கப் சாம்பியனாக, 27 வயதான அனிஷ் தாமோதர் ஷெட்டி பட்டத்தைத் தட்டி சென்றார். முதல் ரவுண்டில் இருந்தே முன்னிலையில் இருந்த அனீஸ் அதிகப்படியான புள்ளிகளைப் பெற்று முன்னிலையிலே தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது. 64 புள்ளிகளுடன் அனீஸ் இருக்க, 61 புள்ளிகளுடன் 24 வயதான ஆல்வின் சேவியர் கடுமையான போட்டியாளராக கடைசி ரவுண்ட் வரை வந்தார். 21 வயதான அன்பால் மூன்றாவது இடத்தைத் தட்டிச் சென்றார். வயது வாரியாக சாம்பியன்ஷிப் பட்டத்தை அடித்தது டாக் ஆஃப் தி ட்ராக்காக இருந்தது.

ஆரம்பித்த முதல் வருடமே ஜிடி கப் வெற்றிகரமாக முடிந்தது. இன்னும் அடுத்த வருடம் சிறப்புமிக்க ரேஸ்களைக் கொண்டுவர ராயல் என்ஃபீல்டு காத்துக் கொண்டிருக்கிறதாகச் சொன்னது. இதன் தொடர்ச்சியாக ரேஸிங் கற்றுக்கொள்ள ஸ்கூல் ஒன்றையும் ஆரம்பிக்க இருக்கிறதாம் ராயல் என்ஃபீல்டு. இளம் வயத்தில் இருந்தே ரேஸில் ஆர்வம் இருப்பவர்கள், சாம்பியன் ஆகணும் என்று ஆசை இருப்பவர்கள், சட்டுபுட்டு ராயல் என்ஃபீல்டு ரேஸ் ஸ்கூல்ல சேர்ந்து பயணத்தை ஆரம்பிங்க!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism