ஆன்லைனில் ‘Helmets for India’ என்று டைப் செய்தால்… ஒருவேளை ராயல் என்ஃபீல்டு வலைதளத்துக்குத்தான் போய்விட்டோமோ என்று சந்தேகம் வரக்கூடும். ஆம், ஒருவகையில் ராயல் என்ஃபீல்டின் பாதுகாப்பு உணர்வும் இதில் அடங்கியிருக்கிறது.
நீங்கள் ராயல் என்ஃபீல்டு ஷோரூமுக்குப் போய் புல்லட் மட்டுமில்லை; அசத்தலான ஹெல்மெட்டும் பர்ச்சேஸ் செய்யலாம். ‘Helmets for India’ வுடன் கைகோர்த்து, ‘மேட் இன் இந்தியா’ ஹெல்மெட்களை விற்பனை செய்து வருவது மட்டுமல்லாமல், பாதுகாப்பு விழிப்புஉணர்விலும் ஈடுபட்டு வருகிறது ராயல் என்ஃபீல்டு.

‘நெய்ல்ஸ் பீட்டர் ஜென்சன்’ என்பவர், ஒரு உலகப்புகழ்பெற்ற ஒரு மவுன்ட்டெய்ன் பைக்கர். உலகத்தில் அவர் பைக்கில் ஏறாத மலைகளே இல்லை. 2018–ல் இந்தியாவுக்கு வந்த நெய்ல்ஸ், இந்தியாவின் அழகுக்கு அடிமையானார். அதேநேரத்தில் இந்தியா முழுக்க ஹெல்மெட் இல்லாமல் பைக் ரைடு செல்பவர்களைக் கண்டு வருத்தப்பட்டு, இந்த ‘ஹெல்மெட்ஸ் ஃபார் இந்தியா’வுடன் அவரும் கைகோர்த்து, ஹெல்மெட் போட்டுத்தான் பைக் ரைடு போக வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிறார்.
‘‘இந்தியாவில் ஹெல்மெட் போடாமல், சாலை விபத்துகளில் அதிகம் உயிரிழப்புகள் ஏற்படுவதாக அறிகிறேன். இது வருத்தமாக இருக்கிறது. என்னால் முடிந்த அளவுக்குப் பாதுகாப்பு விழிப்புஉணர்வை ஏற்படுத்துகிறேன். கூடவே, இதற்காக உலகப் புகழ்பெற்ற ராயல் என்ஃபீல்டு மற்றும் ஹெல்மெட்ஸ் ஃபார் இந்தியா போன்றவற்றுடன் பார்ட்னர்ஷிப் வைப்பதில் எனக்குப் பெருமகிழ்ச்சி!’’ என்கிறார் நெய்ல்ஸ் பீட்டர் ஜென்சன்.

நிறுவனம் தொடங்கப்பட்டதில் இருந்து பல ரைடுகளையும், விழிப்புஉணர்வு நிகழ்ச்சிகளையும் பாதுகாப்பு சம்பந்தமாக நடத்தி வருகிறது ஹெல்மெட்ஸ் ஃபார் இந்தியா. இது Not-For-Profit நிறுவனம் என்று சொல்லப்படுவது உண்மைதான். ஒரு தடவை மும்பை – கோவா வரை விழிப்புஉணர்வு ரைடு போகும்போது, ஹெல்மெட் இல்லாமல் பைக் ஓட்டிய 300 ரைடர்களுக்கு இலவசமாக ஹெல்மெட் கொடுத்திருக்கிறது ஹெல்மெட்ஸ் ஃபார் இந்தியா. இதில் குழந்தைகளும் அடக்கமாம்.
அடுத்து, கோவாவில் உள்ள Royal Enfield Garage Cafe–ல் இருந்து கன்னியாகுமரி வரை, நெய்ல்ஸுடன் சேர்ந்து ஒரு விழிப்புஉணர்வு ரைடு நடத்த இருக்கிறதாம் ராயல் என்ஃபீல்டு. போகும் வழியெங்கும் ஹெல்மெட் கண்காட்சி, விழிப்புஉணர்வு நிகழ்வுகள் எனக் கலக்க இருக்கிறார்களாம்.
உலகப்புகழ் பெற்ற பைக் ஸ்டன்ட் வீரர்கள், நடிகர்கள், பைக் ரைடர்கள் என்று பலருடன் கைகோர்த்திருக்கும் ‘Helmets for India’ வுடன், இந்தியா சார்பில் நமது ராயல் என்ஃபீல்டும் கைகோர்த்திருப்பது பெருமைதானே!