கார்ஸ்
Published:Updated:

என்னோட மினி டாய்தான் ஹன்ட்டர்!

செப்ரின் ரிச்சர்ட் / ராயல் என்ஃபீல்டு ஹன்ட்டர் 350
பிரீமியம் ஸ்டோரி
News
செப்ரின் ரிச்சர்ட் / ராயல் என்ஃபீல்டு ஹன்ட்டர் 350

ரீடர்ஸ் ரிவ்யூ: ராயல் என்ஃபீல்டு ஹன்ட்டர் 350

என்னோட மினி டாய்தான் ஹன்ட்டர்!
செப்ரின் ரிச்சர்ட்
செப்ரின் ரிச்சர்ட்

ராயல் என்ஃபீல்டு ஹன்ட்டர், எல்லோர் மனதையும் ஹன்ட் செய்து விட்டது என்றுதான் சொல்ல வேண்டும். லாஞ்ச் ஆன ஒரு மாதத்திலேயே சும்மா பட்டையக் கிளப்பிக் கொண்டிருக்கிறது. ‘‘பைக் சும்மா வேற லெவல்ல இருக்குது!’’ – இப்படி நாங்க சொல்லவில்லை. ஹன்ட்டர் பைக்கை ஆசை ஆசையாக... பார்த்துப் பார்த்து… மதுரை முழுவதும் ‘மேகம் கறுக்காதா பெண்ணே’ எனும் ரீதியில், தனுஷ் கணக்காகப் புளகாங்கிதமாக ஓட்டிக் கொண்டு வரும் செப்ரின் ரிச்சர்ட்தான் இப்படிச் சொல்கிறார். ஹன்ட்டர் பற்றிய அவரின் ரிவ்யூ இதோ!

ஹன்ட்டர் 350 ஏன்?

நமக்கு எப்பவுமே புல்லட்தான் ஃபேவரைட். முன்னாடி நான் ராயல் என்ஃபீல்டுல க்ளாஸிக் 350 வச்சிருந்தேன். அந்தச் சத்தத்துக்கு நான் அடிமை. 8 வருஷம் ஆயிடுச்சு க்ளாஸிக் 350 பயன்படுத்தி! அதனால் ஒரு புதிய மாடல் வாங்கலாம் என்று முடிவெடுத்தேன். எடுத்த உடனே நான் ஹன்ட்டரைத் தேர்ந்தெடுக்கவில்லை. பல பைக்குகளைத் தேடிப் பார்த்தேன். ஹோண்டா ஹைனெஸ் சிபி350, டிவிஎஸ் ரோனின், இல்லைனா ஹிமாலயன் வாங்கலாம்னுதான் இருந்தேன். அப்போதான் திடீர்னு ஹன்ட்டர் பற்றிக் கேள்விப்பட்டேன். என்ஃபீல்டுலேயே ரொம்பவும் எடை குறைவான பைக், மைலேஜ் நல்லா கொடுக்கும், டூயல் சேனல் ஏபிஎஸ், அலாய் வீல்கள், அகலமான டயர்கள், எல்இடி லைட்… அப்டி இப்டினு பல வசதிகள் இருக்கிறதா சொன்னாங்க. சரி; ஹன்ட்டரையும் ஒரு கை பார்த்திடுவோம்னு, ஒரு டெஸ்ட் டிரைவ் பண்ணேன். பார்த்தவுடனேயே ஹன்ட்டரை எனக்கு ரொம்பப் புடிச்சுப் போச்சு. லான்ச் ஆன அன்னைக்கே புக் பண்ணிட்டேன். இப்போ, என்னைவிட என் குடும்பத்துக்கு ரொம்பவே புடிச்சிருக்கு.

 டூயல் சேனல் ஏபிஎஸ் பிரேக்ஸ் நச்!
டூயல் சேனல் ஏபிஎஸ் பிரேக்ஸ் நச்!
எடை குறைவாக இருப்பதால், ஓட்டுவதற்கு ஈஸியாக இருக்கிறது.
எடை குறைவாக இருப்பதால், ஓட்டுவதற்கு ஈஸியாக இருக்கிறது.
ரெட்ரோ ஸ்டைல் அருமை.
ரெட்ரோ ஸ்டைல் அருமை.
அனலாக் மீட்டர் ஓகே.
அனலாக் மீட்டர் ஓகே.

ஹன்ட்டரில் ரொம்பப் பிடித்தது!

நான் தேர்ந்தெடுத்தது மெட்ரோ ரெபல் மாடல். கலர் ரெபல் புளூ. பொதுவாகவே, எனக்கு புளூ கலர்தான் ரொம்பவே பிடிக்கும். ஆரம்பத்தில் நான் முழுவதுமே புளூ கலரில்தான் இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் இதில் டூயல் டோன் பெயின்ட் ஸ்கீம் கொடுத்து இருக்காங்க. புளூ மற்றும் ஒயிட்னு நான் நினைத்ததைவிட ரொம்பவே அழகாக இருக்கிறது. நெக்ஸ்ட் எனக்கு ரொம்பவே பிடித்தது சீட்தாங்க. வண்டிய ஓட்டிறவங்களுக்கும் சரி; பின்னாடி உட்கார்றவங்களுக்கும் சரி – நல்லா வசதியா இருக்கிற மாதிரி 800 மிமீ உயரத்தில் சீட் கொடுத்திருக்காங்க. பெட்ரோல் டேங்க் நல்லா ஒடுக்கமா இருக்கிறது. சுமார் 13 லிட்டர் வரை பெட்ரோல் பிடிக்கிறது. அடுத்தது எல்இடி டெயில் லைட்ஸ் பக்காவாக இருக்கிறது. எனக்கு ரொம்பப் பிடிச்சதுல இந்த லைட்ஸ் மெயின்.

எல்லோருக்கும் பிடித்த புல்லட்டின் சவுண்டும் ஹன்ட்டரில் நல்லா இருக்கிறது. முக்கியமாக வைப்ரேஷன் இல்லவே இல்லை. சிட்டி ட்ராஃபிக்கில்கூட டென்ஷன் இல்லாமல் ஜாலியாக ஓட்டலாம். சைடு ஸ்டாண்ட் எடுக்காமல், எந்த ஒரு என்ஃபீல்டையும் ஓட்ட முடியாது. அப்படித்தான் ஹன்ட்டரிலும்.

அடுத்தது, இதைப் பற்றி நான் சொல்லியே ஆகனும்ங்க...ஹன்ட்டர் ரொம்பவே எடை குறைவு. 181 கிலோதான். எனக்கு மட்டும் இல்லை; என் அக்காக்கும். மற்ற புல்லட்களைவிட இது ரொம்பவே எடை குறைவாக இருக்கிறதால், பெண்களுக்கும் ரொம்பவே வசதியா இருக்ககிறது. என் பழைய க்ளாஸிக் புல்லட்டைவிட என் அக்காவினால் இதைச் சுலபமாக ஓட்ட முடிகிறது. அலாய் வீல்களுடன் ட்யூப்லெஸ் டயர்கள் கொடுத்திருக்காங்க. ஸ்பீடு பிரேக்கர்களில் ஜம்ப் ஆகாமல் நன்றாக பம்ப் பண்ணிக் கொடுக்கிறது. டூயல் சேனல் ஏபிஎஸ், டிரிப்பர் நேவிகேஷனும் நன்றாக இருக்கிறது. மொத்தத்துல க்யூட்டா ஒரு மினி டாய் மாதிரிதான் எனக்கு ஹன்ட்டர் தெரிகிறது.

ஹன்ட்டரில் பிடிக்காதது எது?

ஹேண்டில்பாரை இன்னும் கொஞ்சம் மேலே ஏத்தி வைத்திருக்கலாம். இன்ஜின்லேயும் கொஞ்சம் மாற்றம் கொண்டு வந்திருக்கலாம். பெர்ஃபாமன்ஸ் எகிறியடிக்கவில்லை. இன்னும் கொஞ்சம் நன்றாக இருந்திருக்கலாம். மற்றபடி புல்லட்டிலேயே விலையிலும் சரி; எடையிலும் சரி – ஹன்ட்டர் ரொம்பவே கம்மிதான்!

கஸ்டமர் சர்வீஸ் எப்படி?

மதுரையில் கேகே நகரில் உள்ள மெட்ராஸ் மோட்டார் ஷோரூமில்தான் ஹன்ட்டர் லாஞ்ச் ஆன அன்றே (07.08.2022) புக் பண்ணிட்டேன். வெறும் 4 நாளிலே (11.08.2022) டெலிவரி செஞ்சுட்டாங்க! தமிழ்நாட்டில் தென் மாவட்டத்திலிலேயே நம்ம பைக்தான் ஃபர்ஸ்ட் டெலிவரி. அதனால், ஷோரூமின் எம்டியே எனக்கு பைக்கை டெலிவரி பண்ணினார். ஒரு பிரத்யேக ஆப் மூலம் எனக்குத் தேவையான ஆக்சஸரீஸ் மற்றும் நிறங்களைத் தேர்வு செய்துவிட்டேன். என்ஃபீல்டின் இந்த ஆப் ரொம்பவே பயனுள்ள ஒரு ஆப்.

என் தீர்ப்பு

ரெட்ரோ பிரியர்கள், புல்லட்டின் காதலர்கள் குறிப்பாக, பெண்களுக்கு ஏற்ற பைக் ஹன்ட்டர். என் பைக்கை ஓட்டிப் பார்த்துவிட்டே என் நண்பர்கள் ஒரு மூன்று பேர் ஹன்ட்டரை புக் பண்ணிட்டு டெவிவரிக்காக வெயிட் பண்ணிட்டு இருக்காங்கனா பார்த்துக் கோங்களேன்!

என்னோட மினி டாய்தான் ஹன்ட்டர்!