கடந்த சில மாதங்களுக்கு முன் அஜித்தின் சைக்கிள் பயண புகைப்படங்கள் வைரல் ஆன நிலையில் இப்போது பைக் பயணம் ட்ரெண்டாகி வருகிறது. பிஎம்டபிள்யு பைக்கில் செம ஸ்டைலிஷ் ஜாக்கெட் மற்றும் ஹெல்மெட்டோடு ஒரு மலைப்பிரதேசத்தில் அஜித் நிற்கும் புகைப்படம்தான் ட்ரெண்டைத் தொடங்கி வைத்திருக்கிறது.
2021 பிப்ரவரி மாத இறுதியில் அஜித் ஜாலியாக தனது பைக்கர் கிளப் நண்பர்களுடன் சிக்கிம் நோக்கிப் போனபோது எடுத்த படதான் அது. அந்தப் பயணத்தில் சுமார் 10,000 கிமீ தூரம் பைக் ரைடு செய்திருக்கிறார் அஜித். இந்த 10 ஆயிரம் கிமீட்டர் பயணத்துக்கு அஜித் தேர்ந்தெடுத்த பைக் பிஎம்டபிள்யூ R1200 GS அட்வென்சர் பைக். 2014 மாடலான இது அஜித்தின் சொந்த பைக் இல்லையாம். நண்பருடைய பைக்கையே இந்தப் பயணத்துக்குப் பயன்படுத்தியிருக்கிறார் அஜித். அப்படி இந்த பைக்கில் என்ன ஸ்பெஷல்?!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
அஜித் ஓட்டிய BMW R1200 GS பைக்கை அட்வென்சர் ட்ரிப்புக்கு ஏற்றபடி சில ரீ–மாடிஃபிகேஷன் செய்திருக்கிறார்கள். இந்த பைக்கின் டாப் ஸ்பீடு 220 கிமீ. மூன்றிலக்க வேகங்களில் போனாலும், பைக் காற்றில் அலைபாயாமல் பறப்பதுதான் பிஎம்டபிள்யூ டைனமிக் ஸ்பெஷல். பைக்கின் முன்பக்கத்தில் இருக்கும் பெரிய வைஸர், காற்று முகத்தில் அறையாமல் தடுக்கும்.
இந்த பைக்கில் இருப்பது 1,170சிசி இன்ஜின். அதுவும் ட்வின் சிலிண்டர். இதன் பவர் 125bhp. குத்துச்சண்டை போடும்போது பாக்ஸ்ர்களிடம் இருந்து சட்டென ஒரு வேகம் வருமே... அதுபோன்றதொரு திடீர் பிக்–அப் இதில் இருக்கும். காரணம், இந்த இன்ஜின் பெயரே பாக்ஸர் இன்ஜின்தான். இதில் சைலன்ஸர்களே இரண்டு விதத்தில் கிடைக்கும். சாதாரண ஸ்டாண்டர்டு சைலன்ஸரில் வரும் பீட் சத்தத்தைவிட, எக்ஸ்ட்ராவாகக் கிடைக்கும் ஸ்போர்ட் சைலன்ஸர் சத்தம் செம ஸ்போர்ட்டியாக இருக்கும்.
மலைப் பகுதிகளில் ஓட்ட இந்த பைக்கை அஜித் தேர்ந்தெடுத்ததற்கு இதில் உள்ள ரைடிங் மோடுகள்தான் காரணம். இதில் உள்ள Rain எனும் மோடு, எப்படிப்பட்ட மலைச் சாலை – மழைச் சாலையிலும் ஓட்டுவதற்கு செம ஃபன்னாக இருக்கும். எவ்வளவு வேகத்தில் போனாலும் வழுக்காத டயர்களைக் கொடுத்திருக்கிறது பிஎம்டபிள்யூ. இரண்டு பக்கமும் ஏபிஎஸ் பிரேக்ஸ் இருப்பதால், தைரியமாக சடர்ன் பிரேக் அடிக்கலாம். மேலும், கார்களில் இருப்பதுபோல் HSC (Hill Start Control) இருப்பதால், மலைச் சரிவுகளில் தேவையில்லாமல் பைக் இறங்காது. உதாரணத்துக்கு, கைகளில் உள்ள பிரேக் லீவரிலேயே பின் பிரேக்கும் அப்ளை ஆகும்.
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSஇதன் பெயரே அட்வென்ச்சர் பைக்தான். பெயருக்கு ஏற்றபடி ஆஃப்ரோடு செய்வதற்கும் `Enduro Pro’ எனும் ரைடிங் மோடு இருக்கிறது. ஆக்ஸிலரேட்டரைத் திருகியதும் பின்னால் அமர்ந்திருப்பவர் பின்னால் போகும்படி டார்க் கொப்புளிப்பது நமக்கே தெரியும். அதேபோல், சேறு சகதி நிறைந்த வழுக்கலான சாலைகளில் இது பைக்கின் ட்ராக்ஷனை அதிகரிக்கும். அதாவது, பீச் மணலில் எல்லாம் இந்த பைக்கில் சுற்றி சுற்றி வீலிங் செய்யலாம். ஹைவேஸுக்கும் `Dynamic Pro’ என்றொரு மோடு கொடுத்திருப்பார்கள். இதில் பவர் எக்ஸ்ட்ராவாகக் கிடைக்கும். பைக் பறப்பது மட்டும்தான் தெரியும். இதிலுள்ள த்ராட்டில் எலெக்ட்ரானிக் சிஸ்டத்தில் இயங்குவதால், பவரும் எரிபொருளும் தேவையில்லாமல் செலவாகாது.
அட்வென்ச்சர் பைக் ஓட்டுவதில் ஒரே ஒரு சிரமம் – உயரமானவர்களுக்குத்தான் இதன் ஹேண்ட்லிங் எளிமையாக இருக்கும். காரணம், இதன் சீட் உயரம் 850 மிமீட்டர். எடை சுமார் 244 கிலோ. அதனால் அஜித் போன்று 'வலிமை'மிக்கவர்கள்தான் இந்த பைக்கை கையாள முடியும். இந்த பைக்கின் சஸ்பென்ஷன் மிகவும் சிறப்பானது என்பதால் முதுகு வலி தொல்லைகள் இருக்காது.
அஜித் ஓட்டிய இந்த R1200 GS பைக்கின் தயாரிப்பை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பிஎம்டபிள்யூ நிறுத்திவிட்டது. இது 2014 மாடல் என்பதால் இதன் அப்போதைய விலை சுமார் 19–20 லட்சத்துக்குள் இருந்திருக்கலாம்.
அஜித்திடம் பல்வேறு கார்கள் இருந்தாலும் அவர் எப்போதுமே பைக் பயணங்களைத்தான் விரும்புவார். ''நான்கு சக்கர வாகனம் உங்கள் உடலை இடம் மாற்றும். ஆனால், இருசக்கர வாகனம்தான் உங்கள் ஆன்மாவையே இடம் மாற்றும்'' என்பார்கள். அதனால்தான் ஆன்மாவை இடம் மாற்ற பைக் பயணங்களையே தேர்ந்தெடுக்கிறார் அஜித்!