ஆசிரியர் பக்கம்
கார்ஸ்
Published:Updated:

Bye Bye... பைக்ஸ், ஸ்கூட்டர்ஸ்!

டூ-வீலர்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
டூ-வீலர்கள்

நிறுத்தப்பட்ட டூ-வீலர்கள்

புதிய மாசுக் கட்டுப்பாட்டு விதியான BS-6 வந்துவிட்டது. அதனால் கார்புரேட்டருக்குப் பதில் ஃப்யூல் இன்ஜெக்டர்கள், வழக்கத்தைவிடப் பெரிய Catalytic Converter ஆகியவை பயன்பாட்டுக்கு வந்திருக்கின்றன. அதன் பலனாக, பல இரு சக்கர வாகனங்கள், தரத்தில் ஏற்றம் கண்டுவிட்டன; விலையும்தான்.

5,000-15,000 வரை செக்மென்ட்டுக்கு ஏற்ப அதிகரித்துவிட்டது. ஆனால் எதிர்பார்த்தபடியே சில மாடல்களை மேம்படுத்தாமல், டூ-வீலர் நிறுவனங்கள் அதன் உற்பத்தியை ஒரேடியாக நிறுத்திவிட்டன. இதற்கு அவற்றின் குறைவான விற்பனையே முதன்மையான காரணம். சில பைக்/ஸ்கூட்டர்களைப் பொறுத்தவரை புதிய வெர்ஷன்கள் அதற்கு மாற்றாக வந்துவிட்டன. இந்த மாற்றங்களினால் எந்தெந்த இருசக்கர வாகனங்களின் உற்பத்தி நிறுத்தப்பட்டுவிட்டது?

டிவிஎஸ் வீகோ

பாடி பேலன்ஸ் தொழில்நுட்பத்துடன் வந்த வீகோ, அனைத்து வயதினருக்குமான ஸ்கூட்டராகவே இருந்தது. நீட்டான டிசைன், ஸ்மூத் இன்ஜின், சிறப்பான ஓட்டுதல் ஆகியவையே அதற்கான காரணம். LED டெயில் லைட், USB சார்ஜிங் பாயின்ட், அலாய் வீல்கள், மெட்டல் பாடி, டெலிஸ்கோபிக் ஃபோர்க், 12 இன்ச் அலாய் வீல்கள், வெளிப்புற பெட்ரோல் டேங்க் மூடி, சிறப்பான சஸ்பென்ஷன், டிஜிட்டல் மீட்டர் எனப் பிராக்டிக்கலான வசதிகளைத் தன்வசம் கொண்டிருந்தது.

டிவிஎஸ் வீகோ
டிவிஎஸ் வீகோ

இருப்பினும் இதன் மெக்கானிக்கல் பாகங்களைக் கொண்ட ஜூபிட்டர், வீகோவை ‘கோ கோ’ எனப் பின்னுக்குத் தள்ளிவிட்டது. ஆனால் ஜூபிட்டரில் மாற்றங்களைச் செய்த அளவுக்கு, வீகோவில் டிவிஎஸ் செய்யவில்லை என்பதும் உண்மையே! அதனால், வீகோ ஸ்கூட்டர், இனி இருக்காது.

பஜாஜ் டிஸ்கவர் சீரிஸ்

16 வருடங்களில் 30 வேரியன்ட்கள்... 100, 110, 115, 125, 135, 150 எனப் பல்வேறு இன்ஜின் திறன்களில் வலம் வந்த டிஸ்கவருக்கு டாடா காட்டிவிட்டது பஜாஜ். பிளாட்டினா H-Gear மற்றும் பல்ஸர் 125 அறிமுகமானபோதே, இது எதிர்பார்க்கப்பட்டதுதான்.

பஜாஜ் டிஸ்கவர் சீரிஸ்
பஜாஜ் டிஸ்கவர் சீரிஸ்

சிறப்பான மைலேஜுக்கும், சொகுசான ஓட்டுதலுக்கும் பெயர் பெற்ற இந்த கம்யூட்டர் பைக், காலத்துக்கு ஏற்ற மாற்றங்களுடனேயே விற்பனை செய்யப்பட்டது. டிஜிட்டல் மீட்டர், மோனோஷாக் சஸ்பென்ஷன், 4 வால்வ் இன்ஜின், பெட்டல் டிஸ்க் பிரேக், LED டெயில் லைட் ஆகியவை அதற்கான உதாரணம்.

பஜாஜின் பழைய பிராண்ட்களில் ஒன்றான டிஸ்கவர், இறுதியில் 110சிசி மற்றும் 125சிசி வெர்ஷன்களில் வெளிவந்தது. பட்ஜெட் பல்ஸராக அறியப்பட்ட டிஸ்கவரின் விளம்பரத்தில் ஜாக்கிசான் வந்தது நினைவிருக்கிறதா? இதன் வேரியன்ட்களில் பல குழப்பங்கள் செய்ததே, இந்த கம்யூட்டரின் சரிவுக்குக் காரணம்.

பஜாஜ் V சீரிஸ்

டந்த ஆண்டில் V15 பைக்கில் ஏபிஎஸ் மற்றும் V12 பைக்கில் CBS சேர்க்கப்படாத போதே, இவற்றின் BS-6 வெர்ஷன்கள் வராது என்பது மறைமுகமாகத் தெரிந்துவிட்டது. `INS விக்ராந்த் போர்க்கப்பலின் இரும்பைக் கொண்ட பைக்' என்ற பெருமையைக் கொண்ட V சீரிஸ், அசத்தலாக மக்களிடம் விளம்பரப்படுத்தப் பட்டது. ஆனால் அது மட்டுமே, இந்த பைக்கின் விற்பனையை அதிகப்படுத்த உதவவில்லை.

ரெட்ரோ டிசைன், விலைக்கேற்ற தரம், சிறப்பான மைலேஜ் மற்றும் ஓட்டுதல், போதுமான வசதிகள் என ஒரு பிராக்டிக்கலான தயாரிப்பாகவே இது இருந்தது. என்றாலும் ஒரு 150சிசி மாடலில் ஒரு சாமானியன் எதிர்பார்த்த பர்ஃபாமன்ஸ் V15 பைக்கில் இல்லாதது நெருடல்.

பஜாஜ் V சீரிஸ்
பஜாஜ் V சீரிஸ்

இந்தக் குறைபாடு V12 பைக்கில் களையப்பட்டாலும், காலம் தாழ்ந்து செய்யப்பட்டதால் பயன் தரவில்லை. தவிர, இதில் டிஸ்க் பிரேக் மற்றும் அகலமான டயர்கள் இல்லாததும் பெரிய மைனஸ்.

ஹீரோ கரீஸ்மா

2018 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சி படுத்தப்பட்டபோது, இதன் ஆர்வலர்கள் உற்சாகம் அடைந்தார்கள். கடந்த ஆண்டு அமலுக்கு வந்த ஏபிஎஸ்/சிபிஎஸ் விதிகளுக்கு ஏற்ப இது அப்டேட் செய்யப்படாதபோதே, இதன் எதிர்காலம் தெரிந்துவிட்டது. 200சிசிக்கும் அதிகமான பைக்குகளுக்கு இந்தியாவில் பிள்ளையார் சுழி போட்ட கரீஸ்மா, இதைப் போலவே செமி ஃபேரிங் கொண்ட பல்ஸர் 220-ன் வருகைக்குக் காரணமாக அமைந்தது.

ஹீரோ கரீஸ்மா
ஹீரோ கரீஸ்மா

இதன் நீட்சியாக வந்த யமஹாவின் R15, பர்ஃபாமன்ஸ் பிரியர்களுக்கு விருந்தாக அமைந்தது. ஸ்மூத் இன்ஜின், ரிலாக்ஸ்டான ஓட்டுதல் எனப் பெயர்பெற்ற கரீஸ்மா, டூரிங் பார்ட்டிகளுடன் செம கூட்டணி அமைத்தது. இடையே ஃபுல் ஃபேரிங் - Fi உடன் வந்த ZMR, கால ஓட்டத்துக்கு ஏற்றபடி அமைந்திருந்தது. ஆனால் இந்த இடைப்பட்ட நேரத்தில், பல்ஸர் 220 வேற லெவல் வளர்ச்சியைப் பெற்றிருந்தது. ஹோண்டாவுடனான பார்ட்னர்ஷிப் முறிந்தபிறகு வெளியான கரீஸ்மா, அதன் ஆர்வலர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தையே தந்தது. அதன் பிறகு இந்த பைக்கின் சரிவு தவிர்க்க முடியாமல் போய்விட்டது.

ஹீரோ எக்ஸ்ட்ரீம் சீரிஸ்

ரு வேறு நிறுவனங்களின் தயாரிப்பாக இருந்தாலும், இந்த 150சிசி கம்யூட்டர் பைக்குகளில் இருந்தது ஒரே 149.2சிசி இன்ஜின்தான். தனது இன்ஜின்தான் என்றாலும், யூனிகார்னிலும் அச்சீவரிலும் இது குறைவான 13bhp பவரையே வெளிப்படுத்தியது. இதுவே எக்ஸ்ட்ரீமில் 14bhp மற்றும் எக்ஸ்ட்ரீம் ஸ்போர்ட்டில் 15bhp பவரை இதே இன்ஜின் தந்ததுதான் முரண். ஆனால் கூடுதல் பவருக்கு டியூன் செய்யப்பட்டதால், இவை எதிர்பார்த்தபடியே மைலேஜில் கொஞ்சம் பின்தங்கின. இன்ஜினில் அதிர்வுகளும் இருந்தன.

ஹீரோ எக்ஸ்ட்ரீம் சீரிஸ்
ஹீரோ எக்ஸ்ட்ரீம் சீரிஸ்

மெலிதான டயர்களுடன் இருந்த அச்சீவர், மக்களிடையே எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. யூனிகார்ன் 150-க்குப் பதிலாக, அதே பைக்கில் தனது 162.7சிசி இன்ஜினைப் பொருத்தி, யூனிகார்ன் 160 என ப்ரமோஷன் கொடுத்துவிட்டது ஹோண்டா. இதே ரூட்டில் தனது 150சிசி எக்ஸ்ட்ரீம் பைக்குகளுக்கு மாற்றாக, புதிய 163சிசி இன்ஜினுடன் கூடிய எக்ஸ்ட்ரீம் 160R பைக்கை, விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது ஹீரோ. ஆயில் கூலருடன் கூடிய 200சிசியும் வரலாம்.

ஹோண்டா க்ளிக்/நவி

ர்வதேசச் சந்தைகளில் அதிரடி வெற்றியைப் பெற்ற Grom 125 பைக்கை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டதுதான் நவி. ஆனால் இதன் விலையைக் கட்டுக்குள் வைக்க, அதிலிருந்த பல விஷயங்கள் இங்கே இடம்பெறவில்லை. முன்பக்கத்தில் பெரிய 12 இன்ச் வீல் - ஆக்டிவாவின் 110சிசி இன்ஜின் - குறைவான எடை என ப்ளஸ் பாயின்ட்கள் இருந்தாலும், இதன் சிறிய பெட்ரோல் டேங்க் மற்றும் சைஸ், பலருக்கும் பிடிக்கவில்லை.

கிராமப்புறங்களில் வரவேற்பைப் பெற்ற XL, CD Dawn, CT100 ஆகிய வாகனங்களுக்குப் போட்டியாகக் களமிறக்கப்பட்ட க்ளிக், பெரிதாக எடுபடவில்லை.

ஹோண்டா க்ளிக்/நவி
ஹோண்டா க்ளிக்/நவி

இதைத் தாண்டி அப்படியே ஆக்டிவாவின் மெக்கானிக்கல் பாகங்களைக் கொண்டிருந்த இந்த ஸ்கூட்டரும், நவி போலவே வெற்றி பெறாமல் போனது சோகம். முதலில் குறைவான விலையில் வந்த இதன் விலை ஏற்றப்பட்டதும் இன்னொரு காரணம்.

ஹோண்டா ஆக்டிவா-i/ஏவியேட்டர்

புல் மெட்டல் பாடியைக் கொண்ட ஆக்டிவாவின் பட்ஜெட் வெர்ஷன்தான் ஆக்டிவா-i. இதில் ப்ளாஸ்டிக் ஃபைபர் பாடி, மெலிதான சைஸ் என மாற்றம் தெரிந்தது. எனவே ஸ்கூட்டி/ப்ளெஷர் போலவே இதுவும் பெண்களுக்கான ஆக்டிவாவாக பொசிஷன் செய்யப்பட்டது. ஆனால் போட்டியாளர்களுடன் ஒப்பிடும்போது, இதில் வசதிகள் குறைவுதான்.

விலை விஷயத்திலும் இது சிறப்பாக இல்லை. மற்றபடி ஏவியேட்டரைப் பொறுத்தவரை, அது அறிமுகமானபோது ஜூபிட்டர் மற்றும் ஆக்ஸஸுக்குப் போட்டியாக இருந்தது. அதற்கேற்றபடி டெலிஸ்கோபிக் ஃபோர்க், ப்ரீமியம் டிசைன், அலாய் வீல், டிஸ்க் பிரேக் என நவீன அம்சங்களும் இருந்தன. ஆனால் ஆக்டிவா 125-ன் அறிமுகத்துக்குப் பிறகு, இதன் முக்கியத்துவம் குறைந்தது.

ஹோண்டா ஆக்டிவா-i/ஏவியேட்டர்
ஹோண்டா ஆக்டிவா-i/ஏவியேட்டர்

அதற்கேற்ப இந்த மாடலில் இதுவரை, காலத்துக்கு ஏற்றபடி பெரிதாக எந்த மாற்றத்தையும் ஹோண்டா செய்யவில்லை. ஏவியேட்டரைவிட விலை குறைவான டியோவில் இருந்த டிஜிட்டல் மீட்டர் இங்கே இல்லாததை உதாரணமாகச் சொல்லலாம்.

ஹோண்டா CBR 250R

லகின் பல நாடுகளிலும் இதன் அடுத்த வெர்ஷன் விற்பனையாகும் நிலையில், நம் நாட்டில் இது பத்து ஆண்டுகளாக மாறுதல் இல்லாமல் இருந்தது.

BS-4 விதிகள் அறிமுகமானபோதுகூட வெறுமனே LED ஹெட்லைட், புதிய கலர் - கிராஃபிக்ஸ் உடன் நிறுத்திக் கொண்டது ஹோண்டா. மேலும் காலப்போக்கில் இதன் விலை மற்றும் பராமரிப்புச் செலவுகள் புதிய உச்சத்தை எட்டியதுடன், இதைவிடக் குறைவான விலையில் திறன்மிக்க பைக்குகள் வந்ததும் CBR 250-ன் வீழ்ச்சிக்குக் காரணம்.

ஹோண்டா CBR 250R
ஹோண்டா CBR 250R

ஆனால் VFR 1200F போன்ற ஃபுல் ஃபேரிங் டிசைன், போதுமான பவரைத் தந்த சிங்கிள் சிலிண்டர் இன்ஜின், டூரிங்குக்கு ஏற்றபடியான ஓட்டுதல் என ஒரு சிறப்பான பேக்கேஜாக இது இருந்ததை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். இந்தியாவில் 250சிசி செக்மென்ட்டைத் தூசுதட்டி எழுப்பிய பெருமை, இந்த பைக்கையே சேரும்.

ஹோண்டா எக்ஸ்-பிளேடு/ஹார்னெட்

ஜிக்ஸர், அப்பாச்சி, பல்ஸர், FZ எனப் போட்டியாளர்கள் BS-6 விதிகளுக்கு அப்டேட் ஆகிவிட்ட நிலையில், 150-160சிசி செக்மென்ட்டில் படு சைலன்ட்டாக இருக்கிறது ஹோண்டா. தனது ஹார்னெட் மற்றும் எக்ஸ்-பிளேடு ஆகிய பைக்குகளில் இருக்கும் அதே 162.7சிசி இன்ஜின், BS-6 விதிக்கு மேம்படுத்தப்பட்டு யூனிகார்னில் பொருத்தப் பட்டுள்ளது. ஆனால் முன்னே சொன்ன மாடல்கள் இன்னும் BS-6 க்கு அப்கிரேடு ஆகவில்லை.

ஹோண்டா எக்ஸ்-பிளேடு/ஹார்னெட்
ஹோண்டா எக்ஸ்-பிளேடு/ஹார்னெட்

ஏனெனில் எக்ஸ்-பிளேடுடன் ஒப்பிட்டால், ஹார்னெட்டின் விற்பனை பெட்டராகவே இருந்தது. LED ஹெட்லைட் - டெயில் லைட், தடிமனான டயர்கள், மனநிறைவைத் தரும் ஓட்டுதல் அனுபவம், நேக்கட் பைக்குக்கான பக்கா டிசைன் என இவை நல்ல தயாரிப்புகளாகவே இருந்தாலும், எதிலுமே தனித்துத் தெரியாதது இவற்றின் மைனஸ். மேலும் இதர ஹோண்டா தயாரிப்புகளைப்போலவே, இவையும் போட்டியாளர்களைவிட காஸ்ட்லி என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்.

ஹோண்டா கிராஸியா

ன்டார்க், SR 125 ஆகியவற்றுக்கு முன்பே அறிமுகமாகி, 125சிசி ஸ்கூட்டர் செக்மென்ட்டில் ஸ்போர்ட்டியான தயாரிப்புகளுக்கு வழிவகுத்த பெருமை, கிராஸியாவையே சேரும். அதற்கேற்ப LED ஹெட்லைட்ஸ், டேக்கோமீட்டருடன் கூடிய டிஜிட்டல் மீட்டர், சார்ஜிங் பாயின்ட்டுடன் கூடிய முன்பக்க க்ளோவ் பாக்ஸ், MultiFunction Key Slot என அதிக வசதிகளுடன், ஷார்ப்பான டிசைனுடன் கிராஸியா வந்திறங்கியது.

ஹோண்டா கிராஸியா
ஹோண்டா கிராஸியா

மெக்கானிக்கலாக இது ஆக்டிவா 125தான் என்றாலும் - ஸ்மூத் இன்ஜின், குறைவான எடை, போதுமான கையாளுமை என இதன் யூத்ஃபுல் பேக்கேஜ் விற்பனைக்கு நன்கு உதவியது. அதற்கேற்ப அறிமுகமான புதிதில் விற்பனையில் எகிறியடித்த இந்த ஸ்கூட்டர், என்டார்க்கின் வருகைக்குப் பிறகு சரிவடையத் தொடங்கியது. மேலும் ஆக்ஸஸின் தடாலடியான எழுச்சி, கிராஸியாவை மிகவும் பாதித்தது என்றே சொல்ல வேண்டும்.

ஹோண்டா 110சிசி சீரிஸ்

வ்வொரு மாதமும் விற்பனையில் அடித்து நொறுக்கும் ஹீரோ மற்றும் பஜாஜின் 100சிசி பைக்குகளுக்குப் போட்டியாக, ஹோண்டா களமிறக்கியவைதான் ட்ரீம் சீரிஸ். ஸ்ப்ளெண்டரின் பல்வேறு வெர்ஷன்களைப் போலவே, கலர் - கிராஃபிக்ஸ் மற்றும் சில வசதிகளைத் தாண்டி, CD 110 - ட்ரீம் நியோ - ட்ரீம் யுகா ஆகியவை அடிப்படையில் ஒன்றுதான்.

இதிலிருந்து கொஞ்சம் வேறுபட்டு, ட்விஸ்ட்டருக்கு மாற்றாக வெளிவந்த லிவோ, கொஞ்சம் ப்ரீமியம் அம்சத்தோடு இருந்தது. விலையிலும்தான் என்பதே அதற்கு வில்லனாக மாறிவிட்டது.

ஹோண்டா 110சிசி சீரிஸ்
ஹோண்டா 110சிசி சீரிஸ்

மற்றபடி ட்ரீம் சீரிஸும் விற்பனையில் குறிப்பிடும்படி எதுவுமே சாதிக்கவில்லை. காலப்போக்கில் சின்னச்சின்ன அப்டேட்கள் இருந்தாலும், அவையும் பெரிதாகக் கைகொடுக்கவில்லை.

யமஹா YZF-R3

வாஸாகி நின்ஜா 300 பைக்குக்குப் போட்டியாக, 2015-ம் ஆண்டில் வந்தது யமஹா YZF-R3. 41bhp பவரைத் தரும் பேரலல் ட்வின் இன்ஜின், வேகப்போட்டியில் கவாஸாகியை வீழ்த்திவிடும். ஆனால் போட்டி பைக்குகளில் இருக்கும் USD ஃபோர்க், அலாய் ஸ்விங் ஆர்ம், ட்ரெல்லிஸ் ஃபிரேம் உடன் ஒப்பிட்டால், மெக்கானிக்கலாக இந்த ஃபுல் ஃபேரிங் கொண்ட யமஹா பைக் கொஞ்சம் வீக்தான். மேலும் டிஜிட்டல் மீட்டர், ரைடு பை வயர், ஸ்லிப்பர் கிளட்ச் போன்ற மாடர்ன் வசதிகளும் YZF-R3ல் இல்லை.

யமஹா YZF-R3
யமஹா YZF-R3

கேடிஎம் RC390-யைவிட காஸ்ட்லியும்கூட. தவிர மைலேஜ் மற்றும் பராமரிப்புச் செலவுகள் விஷயத்தில், இது பர்ஸுக்கு வெடி வைக்கும் ரகம்தான். இதனாலேயே, யமஹா R3 பைக்கின் விற்பனை அதிரடியாக அமையவில்லை. இதனைச் சரிகட்டும் வகையில் டூயல் சேனல் ஏபிஎஸ் மற்றும் Metzeler டயர்களுடன் இந்த பைக்கை யமஹா 2018-ல் அறிமுகப்படுத்தியது. ஆனால் இது முன்பைவிட அதிக விலையில் வந்ததுதான் சோகம். எனவே R3 கேள்விக்குறிதான்.

ராயல் என்ஃபீல்டு 500சிசி மாடல்கள்

350சிசி இன்ஜின் கொண்ட க்ளாஸிக்/புல்லட்/தண்டர்பேர்டு பைக்குகள், BS-6 விதிகளுக்கு அப்டேட் ஆகிவிட்டன. ஆனால் 500சிசி Unit Construction இன்ஜின் பொருத்தப்பட்ட க்ளாஸிக்/புல்லட்/தண்டர்பேர்டு ஆகியவற்றை, BS-6 விதிகளுக்கு மேம்படுத்தாமல் விட்டுவிட்டது ராயல் என்ஃபீல்டு. 500சிசி மற்றும் 650சிசி மாடல்களுக்கு இடையேயான விலை வித்தியாசம் குறைந்ததே இதற்கான காரணம்.

`பெரிய சிங்கிள் சிலிண்டர் இன்ஜின்' என்று பெயர் பெற்ற இது, டார்க்கில் அசத்தியது. ஆனால், பவரிலும் மைலேஜிலும் கோட்டை விட்டுவிட்டது. மேலும் அதிர்வுகள் மற்றும் பராமரிப்பு விஷயத்திலும், இது அசெளகரியத்தையே தந்தது. ஏற்றுமதியில் அசத்திய க்ளாஸிக் 500 பைக்கை, லிமிடெட் எடிஷன் கொடுத்து முடித்து வைத்தது ராயல் என்ஃபீல்டு.

ராயல் என்ஃபீல்டு 500சிசி மாடல்கள்
ராயல் என்ஃபீல்டு 500சிசி மாடல்கள்

விலை குறைவான 500சிசி என்ற பெருமையைக் கொண்ட புல்லட் 500, ரைடர்களின் மத்தியில் பெரிய வரவேற்பைப் பெறவில்லை. டூரர்களின் ஏகோபித்த ஆதரவை, தண்டர்பேர்டு 500 பெற்றிருந்தது தெரிந்ததே! ஆனால் ஸ்க்ராம்ப்ளர் லுக்கில் இருந்த ட்ரையல்ஸ் சீரிஸின் உற்பத்தி முற்றிலுமாக நிறுத்தப்பட்டுவிட்டது.

யமஹா சல்யூட்டோ சீரிஸ்

ல்பா (G5), கிளாடியேட்டர் (SS125) ஆகியவற்றுக்குப் பிறகு, 110-125சிசி செக்மென்ட்டில் யமஹாவின் மறு அறிமுகம்தான் சல்யூட்டோ. முதலில் 125சிசி மாடல், பிறகு RX அடைமொழியுடன் கூடிய 110சிசி வெர்ஷன் (2 ஸ்ட்ரோக் பைக்கை நினைவுகூறும் வகையில்) என இந்த கம்யூட்டர் பைக் வந்தது. FZ, R15 எனக் கட்டுமஸ்தான யமஹா பைக்குகளையே பார்த்துப் பழகிவிட்டவர்களுக்கு, இந்தச் சிறிய பைக்குகள் விநோதமாகவே தெரிந்தன. ஆனால் குறைவான எடை, நீளமான சீட், சிம்பிளான இன்ஜின், பிராக்டிக்கல் வசதிகள் என ஒரு கம்யூட்டர் பைக்குக்கான அம்சங்கள்தான் இவற்றின் தனித்துவம்.

யமஹா சல்யூட்டோ சீரிஸ்
யமஹா சல்யூட்டோ சீரிஸ்

என்றாலும் ஷைன் மற்றும் கிளாமருடன் ஒப்பிடும் அளவுக்கு சல்யூட்டோ 125 விற்பனை ஆகவில்லை. தவிர டிஸ்கவரின் மறுவருகை, இந்த பைக்கைப் பாதித்துவிட்டது. வந்த நாளிலிருந்தே 110சிசி சல்யூட்டோ எந்த அதிர்வலையையும் ஏற்படுத்தவில்லை. இதன் விலையை நியாயப்படுத்தும்படி, பைக்கில் எந்தவிதமான அம்சமும் இல்லாதது நெருடல்.

யமஹா ஃபேஸர் 250

செமி ஃபேரிங் கொண்ட 150சிசி பைக்கில் இருந்து, ஃபுல் ஃபேரிங் கொண்ட 250சிசி பைக்காக ஃபேஸர் புரமோஷன் பெற்றபோது, பலத்த எதிர்பார்ப்பில் இருந்த பைக் ஆர்வலர்கள் மகிழ்ச்சியாக இருந்தார்கள். அது நீண்ட நேரம் நீடிக்காதபடி, பைக்கின் டிசைனில் கொஞ்சம் சொதப்பிவிட்டது யமஹா. எனவே இந்த நிறுவனத்தின் 250சிசி ஃபுல் ஃபேரிங் பைக்கை வாங்குவதில் ஆர்வமாக இருந்த பலர், அந்த முடிவிலிருந்து பின்வாங்கியதைப் பார்க்க முடிந்தது.

யமஹா ஃபேஸர் 250
யமஹா ஃபேஸர் 250

மேலும் FZ25 பைக்குடன் ஒப்பிடும்போது, ஃபேஸர் 25-யில் பெரிய முன்னேற்றங்கள் இல்லாததும் மைனஸ். அதிக எடையைச் சமநிலைபடுத்தும்படி அதிக பவர், அதிக வசதிகள் ஆகியவை இருந்திருந்தால், இது அதிகம் பேரைச் சென்றடைந்திருக்கலாம். தவிர டொமினாரின் வருகை, ஃபேஸர் 25-ன் சரிவை வேகப்படுத்திவிட்டது. தற்போது FZ-S 25 பைக்கை, இதற்கான மாற்றாக இறக்கியுள்ளது யமஹா.

தனது 125சிசி BS-6 ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்தும்போது, தான் 110சிசி செக்மென்ட்டிலிருந்து வெளியேறுவதாக அறிவித்தது யமஹா. அதற்கேற்ப ஃபஸினோ, ரே, ரே-ZR ஆகியவற்றின் 110சிசி மாடல்களுக்குப் பதிலாக, 125சிசி வெர்ஷன்களை இந்த நிறுவனம் களமிறக்கிவிட்டது. ஆனால் ஆல்ஃபாவுக்குப் பதிலாக எந்த ஸ்கூட்டரையும் யமஹா வெளியிடவில்லை.

Bye Bye... பைக்ஸ், ஸ்கூட்டர்ஸ்!

தனது 110சிசி இன்ஜின் கொண்ட ப்ளஷர் ப்ளஸ்ஸை BS-6 விதிகளுக்கு மேம்படுத்திய கையோடு, 100சிசி ப்ளஷரின் உற்பத்தியை நிறுத்திவிட்டது ஹீரோ. மேலும் 110சிசி இன்ஜின் கொண்ட மேஸ்ட்ரோ எட்ஜ் மற்றும் டூயட்டுக்கு மாற்றாக, 125சிசி இன்ஜின் கொண்ட மேஸ்ட்ரோ எட்ஜ் மற்றும் டெஸ்ட்டினி ஆகியவற்றை இந்த நிறுவனம் பொசிஷன் செய்திருக்கிறது.