
சம்மர் டிப்ஸ்: பைக் பராமரிப்பு

‘அக்னி நட்சத்திரம்’ ரீலீஸாகிவிட்டது. நமக்கு மட்டுமல்ல; நம் வாகனங்களுக்கும் இது ஹாட் டைம் மச்சி! ‘வெயில் நேரத்தில் ஜில்லுனு ஒரு இளநி… ஜூஸ் குடிச்சு நம் பாடியை கூல் பண்ணுவதுபோல்… இந்த நேரத்தில் பைக்குகளையும் கூல் செய்ய வேண்டியது நம் கடமை பாஸ்! பைக்குகளுக்கு ஜூஸோ… இளநியெல்லாம் வாங்கிக் குடுத்துச் செலவழிக்க வேண்டியதில்லை. சில சின்னச் சின்ன விஷயங்களைச் செய்தாலே போதும்! பைக்ஸ் ஹேப்பி அண்ணாச்சி!
வழக்கம்போல்தான்; பைக்குகளை வெயிலில் நிறுத்துவதை முடிந்தவரை தவிர்க்கலாம். பெயின்ட் ஷேடு, ஃப்ளாட் டயர் போன்றவை ஏற்படாமல் தவிர்க்கலாம். காரணம், வெயிலில் பார்க் செய்யப்படும் பைக்குகளுக்கு ‘டெஃப்லான் கோட்டிங் போட்டுடலாமா’ சார் என்று பைக் சர்வீஸ் டெக்னீஷியன்கள் சில நூறுகள் பில்லை நீட்ட வாய்ப்புண்டு. ஊருக்குப் போனால், வெயிலில் சோம்பேறித்தனம் பார்க்காமல் கவர் போடுவதும் சாலச் சிறந்தது.
மழை, குளிர் நேரங்களில்தான் எலி வாகனங்களில் குடித்தனம் நடத்தும் என்றில்லை. வெயில் காலங்களிலும் எலிகள் வரலாம். அதுவும் கார்களில் மட்டும் என்றில்லை; பைக்குகளின் ஒயர்களையும் எலிகள் பதம் பார்க்கும். நாட்டுப் புகையிலை, நாப்தலின் பால்கள் போன்றவை தாண்டி ஹமாம் சோப்பும் நல்ல தீர்வாகச் சொல்லப்படுகிறது. சோப்பைத் தின்றுவிட்டு ஒயர்களைக் கடிக்காமல் சென்று விடுகிறது எலிகள் என்று சொல்கிறார்கள். இதை நான் முயற்சித்திருக்கிறேன். நீங்களும் முயற்சிக்கலாம்.
முடிந்தவரை வெயிலில் பருத்தி வகை உடைகளையே அணிந்து வெளியே செல்தல் நலம். அதேபோல், குளிர் காலங்களில்தான் ஜாக்கெட் அணிய வேண்டும் என்கிற விதியெல்லாம் இல்லை. வெயில் காலங்களுக்கும் ஜாக்கெட் இருக்கின்றன. மெஷ் பேனல்கள் கொண்ட டெக்ஸ்டைல் ஜாக்கெட்கள், ஏர்ஃப்ளோ கொண்ட ஹெல்மெட்கள் உண்டு. லெதர் ஜாக்கெட்களைத் தவிர்க்கலாம்.
Cooling Vest என்றொரு ஜாக்கெட்டே மார்க்கெட்டில் கிடைக்கிறது. ஹைப்பர் அப்ஸார்ப்ட்டிவ் மெட்டீரியல்கள் கொண்டு தயாரிக்கப்படும் இவை, நம் உடம்பில் நீர்ச்சத்தை வெளியேறாமல் முடிந்தவரை பாதுகாத்துக் கொள்ளும். நீண்ட நேரத்துக்கு கூலிங் எஃபெக்ட்டுடனேயே வைத்திருக்கும். முயற்சித்துப் பாருங்கள்.
முடிந்தவரை வெயில் பயணங்களைத் தவிருங்கள். சட்டு புட்டுனு வண்டியைக் கிளப்புங்கள். மதிய ஷிஃப்ட் இருப்பவர்களுக்கு ஆழ்ந்த நன்றிகள்!! அவர்கள், தங்கள் சேடில் பேக்குகளில் வாட்டர் பாட்டில்கள் வைத்திருப்பது நலம். முடிந்தவரை டீ–ஹைட்ரேட் ஆகாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
பைக்கில் லாங் ரைடு செல்வபவர்கள், ஹெல்மெட் தலைக்குள் வியர்த்து ஒழுகித் தள்ளும். காற்று வேண்டும் என்று வைஸரைத் திறந்து கொண்டு போனால், பூச்சிகள் கண்களில் விழும். ஏர்ஃப்ளோ உள்ள ஹெல்மெட்கள் நல்ல சாய்ஸ். அதேபோல், ஹெல்மெட் மாட்டும்போது அப்படியே மாட்டாமல், நல்ல பருத்தி கர்ச்சீப்பையோ, ஹெல்மெட் கேப்பையோ தலையில் மாட்டிவிட்டு, அதற்கு மேலே ஹெல்மெட் மாட்டுங்கள். நேரடியாக ஹெல்மெட் மாட்டும்போது, வியர்வை படிந்து ஹெல்மெட் நாற்றமெடுக்கும். தொடர்ந்து பயன்படுத்தும்போது பூஞ்சைகள் உருவாகவும் வாய்ப்பு உண்டு. முடி உதிர்தல் அபாயமும் ஏற்படும்.
பைக்குகளின் டயர்களின் காற்றழுத்தம் சரியாக இருப்பது அவசியம். உங்களின் டயர் Soft Compound வகையைச் சேர்ந்தது என்றால், சைடு வால் தேய்மானம் ஆகிவிடும். ஓவர் பிரஷர் இருந்தாலும், குறைவான பிரஷராக இருந்தாலும் டயர் வெடிக்கும் அபாயமும் உண்டு. இதைச் சாதாரணமாக நினைக்க வேண்டாம். இருந்தாலும் வெயில் காலங்களில் 3 – 5 PSI எக்ஸ்ட்ரா காற்றழுத்தம் நல்லதுதான். ரொம்பவும் அதிகமாகி விடக் கூடாது.
தொடர்ச்சியாக வெப்பத்தில் இருக்கும்போது, பேட்டரியின் அமிலத்தின் அளவு குறையத் தொடங்கும். பேட்டரியிலும் ஒரு கண் அவசியம். சர்வீஸின்போது இதை நினைவுபடுத்துங்கள்.