Published:Updated:

ஜிக்ஸர்... இப்போ இன்னும் அடிக்குது சிக்ஸர்!

ஃபர்ஸ்ட் ரைடு - சுஸூகி ஜிக்ஸர் 250

பிரீமியம் ஸ்டோரி

ஜிக்ஸர் SF 250... கடந்த மே மாதத்தில் வெளிவந்த சுஸூகியின் இந்த ஃபுல் ஃபேரிங் பைக், ஆர்வலர்களின் லைக்குகளைப் பெற்றது தெரிந்ததே! ‘ஃபுல் ஃபேரிங் is Equal to ஸ்போர்ட்டி’ என்ற கருத்து பொதுவாகவே நிலவுவதால், உடனடியாக ஆகஸ்ட் மாதத்தில் அதன் நேக்கட் வெர்ஷனை சுஸூகி களமிறக்கிவிட்டது. பலதரப்பட்ட வாடிக்கையாளர்களைச் சென்றடையக்கூடிய திறன் கொண்ட ஜிக்ஸர் 250 எப்படி இருக்கிறது?

ஜிக்ஸர்... இப்போ இன்னும் அடிக்குது சிக்ஸர்!

டிசைன்

சில்வர் மற்றும் கறுப்பு மேட் ஃபினிஷ் நிறங்களில் வந்திருக்கிறது ஜிக்ஸர் 250. இவற்றைத் தவிர, மற்ற அனைத்துமே ஜிக்ஸர் 155 பைக்கிலிருந்தே பெறப்பட்டுள்ளன. ஆனால் அதனுடன் ஒப்பிட்டால், டிஜிட்டல் மீட்டரின் பேக்லிட் - டயர்கள் மற்றும் டிஸ்க் பிரேக்கின் சைஸ் ஆகியவற்றில் மாறுதல் இருக்கிறது.

ஜிக்ஸர்... இப்போ இன்னும் அடிக்குது சிக்ஸர்!

முந்தைய ஜிக்ஸர் 155 பைக்கில் இருந்த பளிச் நிறங்கள் மற்றும் கிராஃபிக்ஸ் உடன் ஒப்பிடும்போது, இப்போதைய கலர்கள் பைக்கைக் கொஞ்சம் டல்லாகவே காட்டுகின்றன. புதிய அலாய் வீல்கள், Bronze வேலைப்பாடுகள் ஆகியவை கொஞ்சம் ஆறுதல். ஃபுல் ஃபேரிங் இல்லாததால், Cooling Fins இல்லாத இன்ஜின் தெளிவாகத் தெரிகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இது ஆயில் கூலரையே கொண்டிருந்தாலும், பார்க்க லிக்விட் கூல்டு இன்ஜின்போலக் காட்சியளிக்கிறது. LED ஹெட்லைட் வித்தியாசமான வடிவத்தில் இருந்தாலும், அது தனது பணியைத் திறம்படச் செய்கிறது. ஸ்ப்ளிட் சீட்கள் இருப்பதால், பைக்கைப் பின்னால் இருந்து பார்ப்பதற்கு ஸ்போர்ட்டியாக உள்ளது.

 ஆயில் கூல்டு இன்ஜின்தான்; பார்க்க லிக்விட் கூல்டு இன்ஜின்போல உள்ளது.
ஆயில் கூல்டு இன்ஜின்தான்; பார்க்க லிக்விட் கூல்டு இன்ஜின்போல உள்ளது.

ஹேண்டில்பார் - பெட்ரோல் டேங்க் - டெயில் லைட் ஆகியவை ஒரே நேர்கோட்டில் இருப்பது, ஜிக்ஸர் 250 பைக்கின் ஸ்டைலான Profile-க்குத் துணைநிற்கின்றன. FZ-25 பைக்கைவிட இது கட்டுமஸ்தான தோற்றத்தைக் கொண்டிருக்கிறது.

இன்ஜின் பர்ஃபாமென்ஸ்

ஜிக்ஸர் SF 250 பைக்கிலிருக்கும் அதே 249சிசி இன்ஜின் - 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் கூட்டணிதான். 4 வால்வ் & Fi சிஸ்டம் கொண்ட இது வெளியிடும் 26.5bhp பவர் மற்றும் 2.26kgm டார்க்கில் எந்த மாறுதலும் இல்லை. இது பெரிய விஷயமாகத் தெரியாவிட்டாலும், இந்த சிங்கிள் சிலிண்டர் இன்ஜினின் மிட் ரேஞ்ச் பர்ஃபாமென்ஸ் பற்றிக் குறிப்பிட்டே ஆக வேண்டும். இதனால் 5,000 ஆர்பிஎம்மைத் தாண்டிய பிறகு, ஜிக்ஸர் 250 விருட்டென வேகம் பிடிக்கிறது.

 LED ஹெட்லைட் பார்க்க வித்தியாசமாக இருந்தாலும், பளிச்!
LED ஹெட்லைட் பார்க்க வித்தியாசமாக இருந்தாலும், பளிச்!

அங்கிருந்து ரெட்லைன் வரை பவர் டெலிவரி அற்புதமாக இருக்கிறது. எனவே, நெரிசல்மிக்க நகரச் சாலைகளில் இந்த பைக்கை ஓட்டுவது சிறப்பான அனுபவத்தைத் தரலாம். 0 - 60 கிமீ வேகத்தை 3.46 விநாடிகளில் எட்டிப்பிடிக்கும் ஜிக்ஸர் 250, 0-100 கி.மீ-யை வெறும் 9.39 விநாடிகளிலேயே தொட்டுவிடுகிறது. டூயல் சேனல் ஏபிஎஸ் உடனான டிஸ்க் பிரேக்ஸின் ஃபீட்பேக் சிறப்பாக இல்லாவிட்டாலும், பைக்கை 16 மீட்டர்களுக்குள்ளாகவே நிறுத்திவிட முடிவது ப்ளஸ் (60-0 கிமீ வேகம்).

ஓட்டுதல் அனுபவம்

ஜிக்ஸர் SF 250 பைக்கின் அதே சேஸி - சஸ்பென்ஷன் காம்போதான் ஜிக்ஸர் 250 பைக்கிலும் தொடர்கிறது. நம் ஊர்ச்சாலைகளை மனதில் வைத்துத் தயாரிக்கப்பட்டிருக்கும் இது, கொஞ்சம் இறுக்கமான சஸ்பென்ஷன் செட்-அப்பைக் கொண்டிருக்கிறது.

 ஸ்ப்ளிட் சீட் மற்றும் ஸ்ப்ளிட் கிராப் ரெயில், பைக்கை செம ஸ்போர்ட்டியாகக் காட்டுகின்றன.
ஸ்ப்ளிட் சீட் மற்றும் ஸ்ப்ளிட் கிராப் ரெயில், பைக்கை செம ஸ்போர்ட்டியாகக் காட்டுகின்றன.

ஆனால் மென்மையான இருக்கைகள், அந்தக் குறைப்பாட்டைக் கொஞ்சம் சரிக்கட்டிவிடுகின்றன. உயரமான ஹேண்டில்பார் மற்றும் கொஞ்சம் பின்னால் தள்ளி வைக்கப்பட்டிருக்கும் ஃபுட் பெக்ஸ் ஆகியவை சேர்ந்து, கொஞ்சம் ஸ்போர்ட்டியான ரைடிங் பொசிஷனைத் தருகின்றன. முன்பக்கத்தில் எடை அதிகமான ஃபுல் ஃபேரிங் இல்லாததால் (5 கிலோ குறைவு), பைக்கைக் கையாள்வது சுலபமாகவே உள்ளது. MRF நிறுவனத்தின் 17 இன்ச் ரேடியல் டயர்களின் ரோடு க்ரிப்பும் நன்றாகவே உள்ளன .

முதல் தீர்ப்பு

விலை அதிகமான கேடிஎம் டியூக் 250 உடன் ஒப்பிடும்போது, வழக்கமான பைக் போன்றே ஜிக்ஸர் 250 தெரிகிறது. ஆனால் பர்ஃபாமென்ஸ், ஓட்டுதல் அனுபவம், சொகுசு ஆகியவற்றில் சொல்லியடிக்கும் இதை, நிச்சயம் புதிதாக பைக் வாங்கப் போகும் நபர்கள் பரிசீலிக்கலாம். நகரம் - நெடுஞ்சாலை - திருப்பங்கள் நிறைந்த மலைச்சாலை என எதுவாக இருந்தாலும், ஜிக்ஸர் 250 மனநிறைவைத் தருகிறது. த்ரில்லிங்கான ஓட்டுதலைத் தரக்கூடிய கேடிஎம் டியூக் 200, கிட்டத்தட்ட இதே விலையில் கிடைக்கிறது. என்றாலும், அது விற்பனைக்கு வந்து ஏறக்குறைய 8 ஆண்டுகள் ஆகிவிட்டது; டிசைனில் மாற்றங்கள் இல்லாவிட்டாலும், அது இன்றும் தவிர்க்க முடியாத பைக்காகவே இருந்துவருகிறது.

ஆல்ரவுண்டர் திறன் கொண்ட இந்த ஜிக்ஸரை, கச்சிதமாக FZ-25 மற்றும் கேடிஎம் டியூக் 250 ஆகிய பைக்குகளுக்கிடையே பொசிஷன் செய்திருக்கிறது சுஸூகி. முந்தைய ஜிக்ஸர் 155 பைக்கின் ப்ளஸ்கள் அனைத்தும் இங்கே தொடர்வதுடன், பைக் ஆர்வலர்களின் நீண்ட கால எதிர்பார்ப்பான கூடுதல் பர்ஃபாமன்ஸ் தற்போது காணக் கிடைக்கிறது. எனவே ஜிக்ஸர் 250, பலரது மனதைக் கவர நிச்சயம் வாய்ப்புண்டு.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு