Published:Updated:

20 லட்சத்துக்கு ஜிம் பாய் ஹயபூஸா! #Suzuki Hayabusa

Suzuki Hayabusa
பிரீமியம் ஸ்டோரி
Suzuki Hayabusa

ஃபர்ஸ்ட் லுக்: சுஸூகி ஹயபூஸா 2021

20 லட்சத்துக்கு ஜிம் பாய் ஹயபூஸா! #Suzuki Hayabusa

ஃபர்ஸ்ட் லுக்: சுஸூகி ஹயபூஸா 2021

Published:Updated:
Suzuki Hayabusa
பிரீமியம் ஸ்டோரி
Suzuki Hayabusa

நம்மூரில் எப்படி ‘பொல்லாதவன்’ திரைப்படம் பல்ஸர் என்னும் ஸ்போர்ட்ஸ் கம்யூட்டரை பட்டிதொட்டி எங்கும் கொண்டு சேர்த்ததோ, அதுபோல ஸ்போர்ட்ஸ் பைக் பிரியரான ஜான் ஆபிரகாம் நடித்த ‘தூம்’ திரைப்படம் இளைஞர்களுக்கு சூப்பர் பைக் என்றால் ஹயபூஸா என்று விதைத்தது. யூரோ VI மாசுக் கட்டுப்பாடு காரணமாக 2019 தொடக்கத்தில் இருந்து உலகின் பல நாடுகளில் விற்பனை நிறுத்தப்பட்டாலும், இந்தியாவில் BS-6 விதிமுறைகள் அமலுக்கு வரும் வரை விற்பனையில் இருந்தது. ஒரு வருட இடைவெளிக்குப் பின் வந்திருக்கும் 2021 ஹயபூஸா 5ஜி காலத்துக்கு ஏற்றவாறு அப்டேட் செய்திருக்கிறதா சுஸூகி?

விலை: ரூ 20 லட்சம் (உத்தேச விலை)
விலை: ரூ 20 லட்சம் (உத்தேச விலை)

டிசைன்

நல்லா ஜிம்முக்குச் சென்று உடம்பை ஏற்றிய ‘பல்க்’ டிசைன் தான் ஹயபூஸாவின் அடையாளம். எனவே மொத்த கெட் அப்பையும் மாற்றம் செய்யாமல், தேர்ந்த முடி திருத்தும் கலைஞரைப்போல அங்கங்கே பிசிறு எடுத்து ஷார்ப்பாக அனுப்பியிருக்கிறது சுஸூகி.

காபி ஷாப் வாசலில் பார்க் செய்துவிட்டுப் போனால், அதை பல செல்போன் கேமராக்கள் க்ளிக் செய்யும் சத்தம் கேட்பது உறுதி. ஆனால், பின்புறம் உள்ள 190-செக்ஷன் டயர் பார்க்க சிறியதாக இருக்கிறது.

இன்ஜின்

2021 ஹயபூஸாவின் இன்ஜின், முன்பிருந்த அதே 1,340 சிசியைக் கொண்டு 190 bhp பவர் மற்றும் 15.0kgm டார்க்கை வெளியிடுகிறது. இந்த இடத்தில் ஒரு முக்கிய விஷயம், BS-6 விதிமுறைகளைப் பூர்த்தி செய்யும்போது எல்லா பைக்குகளிலும் ஏற்படுவதுபோல், ஹயபூஸாவிலும் 7 bhp பவர் குறைந்துள்ளது.

மோட்டார் சைக்கிள் ஆர்வலர்கள் கொந்தளிப்பதற்கு முன்னர் ஒன்றைத் தெளிவுபடுத்துகிறோம். புதிய பிஸ்டன்கள், கேம்ஷாஃப்ட்ஸ் போன்ற கண்ணுக்குத் தெரியாத மெக்கானிக்கல் மாற்றங்களால், முன்பைவிட லோ எண்ட் மற்றும் மிட் ரேஞ்ச் ஆக்ஸிலரேஷன் வேற லெவலில் இருக்கிறது.

Suzuki Hayabusa |
125 மிமீதான்  கிரவுண்ட் கிளியரன்ஸ்
Suzuki Hayabusa | 125 மிமீதான் கிரவுண்ட் கிளியரன்ஸ்


ரைடிங் அனுபவம்

டிராபிக் வேகத்தில் நிச்சயம் ஹெவியான பைக்கை ஒட்டுகிறோம் என்பதை உணர முடிகிறது. ஆனால் வேகம் எடுத்தவுடன், ஹயபூஸாவைச் சவாரி செய்வது எளிது. ரைடிங் ஆரம்பத்திலேயே உணரக்கூடிய முதல் விஷயம், திருத்தப்பட்ட சஸ்பென்ஷன் ட்யூனிங். சாலையில் உள்ள மேடு பள்ளங்களை அப்படியே உள்வாங்கிக் கொள்வதால், வேகத்தைக் குறைக்கத் தோன்றவில்லை. அதேசமயம் சூப்பர் பைக் என்பதால், 125 மிமீதான் கிரவுண்ட் கிளியரன்ஸ். எனவே ஸ்பீடு பிரேக்கர்களில் கவனம் தேவை.

மேலும் கார்னரரில் நுழையும்போது இந்த பைக்கின் ஹேண்ட்லிங் ஷார்ப்பாக இருக்கிறது. இதன் பிரிட்ஜ்ஸ்டோன் S 22 டயர்கள், அதிக வேகத்தில் கார்னரிங் செய்ய உதவுகின்றன. ஆனால் கார்னரிங் வேகம் அதிகரிக்க, சொகுசான சஸ்பென்ஷன் காரணமாக சற்று சாப்ஃட்டாக உணரத் தொடங்குகிறது. இருப்பினும் இரு முனைகளிலும் அட்ஜஸ்ட்டபிள் சஸ்பென்ஷன் என்பதால், உங்கள் எடை மற்றும் சாலைக்கு ஏற்ற ஒரு செட்டிங்கை எளிதில் கண்டுபிடிக்க முடியும்.

கிளிப்-ஆன் ஹேண்டில்களை முன்பை விட 1.2 செமீ-க்கு நெருக்கமாக இழுத்து விட்டிருக்கிறது சுஸூகி. இருந்தும் மற்ற டிராக் பைக்குகளை விட மணிக்கட்டில் மென்மையாக இருக்கிறது. 800 மிமீதான் சீட்டின் உயரம் என்பதால், சராசரி உயரம் கொண்டவர்களுக்கு ஹேண்ட்லிங் சுலபமாக இருக்கும். அதேசமயம் ஆறடி உயரம் கொண்டவர்கள் முட்டியை மடக்கி ஓட்ட வேண்டும் என்பதால், லாங் ரைடில் சிரமப்படுவார்கள்.

டிராக்கில் ஓட்டுவதற்காக ட்யூன் செய்யப்படும் மற்ற 1000 சிசி சூப்பர் பைக்குகளைப்போல, 12,000 rpm - ல் ரெட் லைன் நெருக்கத்தில் மொத்த பவரையும் வைக்கவில்லை சுஸூகி. 5000 rpm-லேயே உங்கள் கைகளில் பவர் இருப்பதால், நாள் முழுவதும் விறுவிறுவென நம்ம ஊர் சாலைகளில் தூரத்தைக் கடக்க முடியும். சுஸூகியின் இந்த அணுகுமுறையைப் பாராட்டியே ஆக வேண்டும்.

இருப்பினும், நீங்கள் இந்த பைக்கின் 11,000 ஆர்பிஎம் ரெட் லைன் வரை எடுத்துச் சென்றால், 299 கிமீ டாப் ஸ்பீடை அடைய முடியும். சாலை அனுமதி உள்ள சூப்பர் பைக்குகளின் டாப் ஸ்பீடு என்பதால், நிச்சயம் இந்த பவரைக் கையாள்வதற்கு - திறமை வாய்ந்த, பொறுப்பான ரைடராக இருக்க வேண்டும்.

சிறப்பம்சங்கள்

2021 ஹயபூஸாவுக்கு சுஸூகி புதிய எலெக்ட்ரானிக்ஸ் பேக்கேஜ் அப்டேட் கொடுத்ததால், இதன் மோட்டார் புத்துணர்ச்சி அடைந்துள்ளது. இப்போது 10 லெவல் டார்க் மற்றும் வீலி கன்ட்ரோல் உடன், மூன்று-நிலை இன்ஜின் பிரேக் கண்ட்ரோல் மற்றும் உயர்மட்ட IMU - உடன் கூடிய ரைடர் அசிஸ்ட்களைப் பெறுகிறது. முன்புபோலவே, பைக்கில் மூன்று சக்தி முறைகள்தான் உள்ளன. ஆனால் இப்போது அது மூன்று வகையிலும் கஸ்டமைஸ் செய்து கொள்ள முடியும்.

கூடுதல் அம்சங்களில் மூன்று-நிலை லான்ச் கன்ட்ரோல், ஹில் ஹோல்டு, க்ரூஸ் கன்ட்ரோல் மற்றும் ஒரு புதிய இரு-திசை க்விக் ஷிஃப்ட்டர் ஆகியவை நன்றாக வேலை செய்கின்றன. ஆனால், குறைந்த rpm ல் கியர் ஷிப்ட்கள் அவ்வளவு ஸ்மூத்தாக இல்லை. பூஸாவின் ஐந்து டயல்கள் கொண்ட இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் நடுவில் ஒரு புதிய TFT டிஸ்ப்ளே பெறுகிறது. மேலும் முன்னும் பின்னும் முழு LED விளக்குகள் இடம் பெற்றிருக்கின்றன .

எலெக்ட்ரானிக்ஸ் ஒரு பெரிய அப்டேட்டைப் பெறும்போது, சேஸி மற்றும் ஸ்விங்ஆர்மில் கை வைக்கவில்லை ​சுஸூகியின் இன்ஜினீயர்கள். அதற்குக் காரணம், இந்த XL சைஸ் பைக்கிலும் ஆச்சரியப்படும் வகையில் ஹேண்ட்லிங் இருந்தது. 2021 ஹயபூஸாவில் பின்புற சப் - ஃப்ரேம் புதிது என்றாலும் அதே ஹேண்ட்லிங் தொடர்வது நற்செய்தி.

299 கிமீ டாப் ஸ்பீடு
299 கிமீ டாப் ஸ்பீடு


உண்மையில் சர்வதேச மாடலில் இரண்டு கிலோ எடைக் குறைப்பு நடைபெற்றுள்ளது. நம்மூர் அரசாங்க விதிமுறைகளின் காரணமாக சாரீ கார்டு & முன்பக்க நம்பர் பிளேட் இழந்த அந்த இரண்டு கிலோவையும் மீண்டும் கொண்டு வருகின்றன.

இன்ஜின் பவருக்கு பிரேக்குகளால் ஈடு கொடுக்க முடியாமல் இருந்ததுதான், முந்தைய தலைமுறை ஹயபூஸாவின் பெரிய மைனஸ். ஆனால், புதிய ஹயபூஸாவில் இந்தக் குறையை நிவர்த்தி செய்திருக்கிறது சுஸூகி. புதிய ப்ரெம்போ ஸ்ட்டிலமா பிரேக் காலிபர்ஸ் உடன் முன்பக்க டிஸ்க்குகள் தற்போது 10 mm அதிகரித்து 320 mm ஆகியுள்ளது. உறுதியளிக்கும் வகையில் இது மிகச் சிறப்பாக செயல்படுவதால், 2021 மாடலில் இதுவே மிகச் சிறந்த அப்டேட் ஆகும். இருப்பினும் ஸ்ட்டிலமா பிரேக்குகள் கொண்ட மற்ற 1,000 சிசி சூப்பர் பைக்குகளைவிட புஸாவின் எடை 60 கிலோ கூடுதலாக இருப்பதால், அதேபோல நச்சென்று பிரேக்கிங் இல்லை. ஆனால், தேவையான அளவு ஷார்ப்பாக உள்ளது.

ஃபர்ஸ்ட் ரைடு ரிப்போர்ட்

2021 ஹயபூஸாவிலும் ஒரு சில சிக்கல்கள் உள்ளன. த்ராட்டில் முறுக்க கடினமாக இருக்கிறது. நீண்ட நெடுஞ்சாலை ரைடுகளுக்கு க்ரூஸ் கன்ட்ரோல் உதவினாலும், நகர டிராஃபிக்கில் சோர்வடைய வைக்கக்கூடும். கிளிப் ஆன் ஹேண்டில் பார், ரைடருடன் நெருக்கமாக இழுக்கப்பட்டுள்ளதால், U டர்ன் செய்யும்போது கைகள் டேங்க்கில் முட்டுகின்றன. இது நெருக்கடியான பார்க்கிங்கில் நிச்சயம் அசௌகரியமாக இருக்கும்.

2021 மாடல், பழைய ஹயபூஸாவைவிட ரூ.2.7 லட்சம் அதிகமாக ரூ.16.4 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலைக்குக் கொண்டு வந்துள்ளது சுஸூகி. இது ஆன் ரோடுக்கு வரும்போது, சுமார் 20 லட்சம் இருக்கலாம். இதன் நேரடிப் போட்டியாளரான கவாஸாகி ZX - 14R இன்று விற்பனையில் இல்லாததால், கவாஸாகி ZX-10R மற்றும் டுகாட்டி பனிகாலே V2 போன்ற பைக்குகளுடன்தான் ஒப்பிட முடியும். அந்த இரண்டையும்விட இது நம்மூர்ச் சாலைகளில் மிகவும் சுவாரஸ்யமான ஓட்டக்கூடிய சூப்பர் பைக்காக உள்ளது.

மோட்டார் சைக்கிள் வரலாற்றில், லெஜெண்ட் ஸ்டேட்டஸ் உடன் சில பைக்குகள்தான் உள்ளன. அப்படிப்பட்ட பைக்குகளுக்கு மாற்று பைக் கண்டுபிடிப்பது அரிது. அப்படி ஒரு அல்ட்ரா லெஜெண்ட்தான் - ஹயபூஸா. இன்று இது உலகின் உச்சபட்ச வேகம் கொண்ட மோட்டார் சைக்கிள் அல்ல, ஆனால் இந்த மூன்றாம் தலைமுறை அப்டேட் மூலம் உயிர் பெற்றிருக்கும் ஹயபூஸாவின் வெற்றி வருங்காலங்களிலும் தொடரும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism