Published:Updated:

சத்தம் போடாத கவாஸாகி! தமிழ்நாட்டு எலெக்ட்ரிக் பைக் ப்ராணா!

SVM ப்ராணா E-Bike
பிரீமியம் ஸ்டோரி
SVM ப்ராணா E-Bike

பர்ஸ்ட் ரைடு SVM ப்ராணா E-Bike | படங்கள்: தயாளன்

சத்தம் போடாத கவாஸாகி! தமிழ்நாட்டு எலெக்ட்ரிக் பைக் ப்ராணா!

பர்ஸ்ட் ரைடு SVM ப்ராணா E-Bike | படங்கள்: தயாளன்

Published:Updated:
SVM ப்ராணா E-Bike
பிரீமியம் ஸ்டோரி
SVM ப்ராணா E-Bike

ஒரு தமிழரால் தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் முழு எலெக்ட்ரிக் பைக்தான் SVM ப்ராணா. மோட்டார் விகடனில் இருந்து வந்திருக்கிறோம் என்றவுடன், SVM - ன் நிறுவனர் மோகன் ராமசாமியே வரவேற்று டெஸ்ட் பைக்கின் சாவியைக் குடுத்தார்.

எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கிறதே!
எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கிறதே!

டிசைன்

பார்த்த முதல் கணத்திலேயே, இதை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கிறதே என்று உங்களுக்குத் தோன்றினால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. ஏனென்றால் கவாஸாகியின் பிரபல ஸ்ட்ரீட் நேக்கட் பைக்கான Z900-ன் பேபி வெர்ஷன்தான் ப்ராணா. அதுவும் நாம் டெஸ்ட் செய்த கறுப்பு நிற பைக், சாலையில் செல்வோரை, `சத்தமில்லாத புது கவாஸாகியா இருக்குமோ’ என்பதுபோலத் திரும்பி பார்க்க வைத்தது.

R15 போல ஸ்ப்ளிட் சீட் செட்-அப் இளசுகளுக்கு மட்டும் ஓகே. மற்ற அனைவருக்கும் நோ - நோ! முன்பக்கம் இரட்டை LED டெயில் லாம்ப்... ஷார்ப்பாகவும், ஸ்போர்ட்டியாகவும் இருக்கிறது ப்ராணா. நம் பைக்கில் எப்போதும் இன்ஜின் இருக்கும் இடத்தில் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. அதைச் சுற்றி இரும்பால் ஆன ப்ளேட் கொண்டு மூடியிருப்பதால், ஒரு ஆங்கிளில் இருந்து பார்க்கும்போது வித்தியாசமாகக் காட்சியளிக்கிறது.

முன் பக்கம் 10 ஸ்போக் அலாய்வீல் குடுத்துவிட்டு, பின் பக்கம் 5 ஸ்போக் அலாய் கொடுத்திருக்கிறார்கள். பின்பக்கம் பேட்டரியில் இருந்து மோட்டார் நேராக பின்வீல்களைச் சுற்றவைப்பதால் இந்த ஐடியா. இதன் காரணமாக சைடில் இருந்து பார்க்கும்போது கண்களுக்கு வித்தியாசமாகத் தெரிகிறது. பின்பக்கம் டயர் ஹக்கர் இல்லாதது பார்ப்பதற்கு ஸ்போர்ட்டியாக இருந்தாலும், மழைக் காலத்தில் சேறு அடிக்குமோ என்ற அச்சம் எழுகிறது.

அதேசமயம் பேனல்களுக்கு இடையே சமச்சீரற்ற இடைவெளியைப் பார்க்க முடிகிறது. பெயின்ட்டிங் தரத்தை நிறைய மேம்படுத்த வேண்டும். மற்றபடி, டேங்க் ஸ்கூப்புகளோடு ஸ்டிக்கரிங்கை நிறுத்திக் கொண்டிருந்தால், பார்ப்பதற்கு இன்னும் கொஞ்சம் நீட்டாக இருந்திருக்கும்.

4.32 kW லித்தியம் அயன் பேட்டரி
4.32 kW லித்தியம் அயன் பேட்டரி


வசதிகள் & சிறப்பம்சங்கள்

ப்ராணாவிற்கு உயிர் குடுப்பது 72V, 4.32 kW லித்தியம் அயன் பேட்டரி. விற்பனையின் போது நம்மிடம் கொடுக்கப்டும் வால் அடாப்டர் மூலம் முழுதாக சார்ஜ் ஏற்ற 4 மணி 15 நிமிடங்கள் போதும் எனச் சொல்கிறது SVM. நார்மல் சார்ஜிங் என்பதால், 2,000 சார்ஜிங் சைக்கிள்கள் வரை இதன் பேட்டரி நீடிக்கும், மேலும் பாஸ்ட் சார்ஜிங் சிஸ்டமும் அடுத்த மாடலில் ஆப்ஷனலாக வரும் எனக் கூறியது SVM.

ஸ்ப்ளிட் LED ஹெட்லேம்ப்பில் 4 பல்புகள் உள்ளன. ஆட்டோ ஹெட் லாம்ப் காரணமாக லோ பீம் எப்பொழுதும் ஒளிர்ந்து கொண்டேதான் இருக்கும். ஹை பீமுக்கு மாற்றும்பொழுது அதிக பவர் கொண்ட மற்ற இரண்டு பல்புகள் மிரள்கின்றன. இருட்டில் வெளிச்சத்தை நன்றாக உமிழ்ந்தாலும், குறைவான த்ரோ காரணமாக எதிரில் நார்மல் பல்புடன் வாகனம் வந்தால், இதன் LED மட்டுப்பட்டு விடுகிறது. மேலும், லோ பீமில் பாஸ் ஸ்விட்சை அழுத்தும்போது 4 புல்புகளும் எரிகின்றன. ஆனால் இது சார்ஜுக்கு வேட்டு வைத்துவிடும்.

சியட்டின் அகலமான 140 செக்‌ஷன் ரேடியல் டயர்கள் சாலையுடன் நல்ல தொடர்பில் இருக்கின்றன. இந்த டயர்களை நிறுத்துவதற்கு முன்பக்கம் இருபுறமும், பின்பக்கம் ஒரு டிஸ்க் பிரேக் எனவும் 3 - சேனல் காம்பி பிரேக்கிங் சிஸ்டம் உள்ளது. இதில் முக்கியமான அம்சம் என்னவென்றால், கால்களில் பிரேக் பெடல் கிடையாது. ஸ்கூட்டர் போல இருபுறம் லீவர் மூலம்தான் இந்த 165 கிலோ எடை கொண்ட ப்ராணாவை நிறுத்த முடியும்.

இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர்
இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர்


முதன்முறை ஓட்டும்போது இந்த பிரேக் செட்டிங்கிற்கு மாற சிறிது பழக வேண்டியிருக்கிறது. அதேபோல கியர் ஷிப்ட்டிங்கும் காலில் கிடையாது. லெஃப்ட் த்ராட்டிலில் இருக்கும் மோடு செலெக்டரில் இருந்து ப்ராக்டிஸ், டிரைவ், ஸ்போர்ட்ஸ், ரிவர்ஸ் என நான்கு ரைடிங் மோடுகளில் ஏதேனும் ஒன்றை கியர் சைக்கிள் போலத் திருகி செலக்ட் செய்து கொள்ள வேண்டும்.

இதில் ஹை லைட் 5 கி மீ வேகம் கொண்ட ரிவர்ஸ் கியர்தான். மால்கள், அபார்ட்மென்ட்டில் எளிதாக பார்க் செய்து எடுக்க உதவும்.

ப்ராக்டிஸ் மற்றும் டிரைவ் மோடில் அதிபட்சமாக 134 கிமீயும் , டிரைவ் மோடில் 126 கிமீயும், ஸ்போர்ட்ஸ் மோடில் 107 கிமீ ரேஞ்சும் கொடுக்கும் என்று சொல்கிறது SVM. நம் டெஸ்ட் செய்தபோது, மற்ற மோடுகளை விட ஸ்போர்ட்ஸ் மோடில் சார்ஜ் வேகமாக இறங்கியது. எனவே, ஸ்போர்ட்ஸ் மோடில் அதே 107 கிமீ ரேஞ்சை எதிர்பார்க்க முடியாது.

ப்ராணாவின் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் சுமாராகத்தான் இருக்கிறது. வேகத்தைத் தெளிவாகக் காட்டினாலும், நாம் டெஸ்ட் செய்த ஒரு மாடலில் சார்ஜ் சரியாகக் காட்டவில்லை. விற்பனைக்கு வரும் வாகனங்களில் இந்தக் குறை நிவர்த்தி செய்யப்பட்டிருக்கும் என்ன நம்மிடம் கூறினார்கள் SVM-ன் இன்ஜினீயர்கள்.

123 கிமீ டாப் ஸ்பீடு
123 கிமீ டாப் ஸ்பீடு


ரைடு & ஹேண்ட்லிங்

முன்பே கூறியதுபோல 3 மூன்று ரைடிங் மோடுகள் ஒவ்வொன்றும் அம்பி, ரெமோ, அந்நியன் என ஒவ்வொருவிதமாக இருக்கின்றன. ப்ராக்டிஸில் 55 கி மீ டாப் ஸ்பீடுடன் அம்பி போல அடக்கி வாசிக்கும் ப்ராணா, டிரைவ் மோடில் 123 கிமீ டாப் ஸ்பீடுடன் சாலையில் சீறிப் பாய்கிறது.

நிதானமாக ஓட்டும்போது, சட்டென ஓவர்டேக் எடுக்க டிரைவில் இருந்து ஸ்போர்ட்ஸ் `மோடு'க்கு மாற்றிக் கொள்ளலாம். எலெக்ட்ரிக் வாகனம் என்பதால், எப்போதும் ரெடியாக இருக்கும் இதன் 39 Nm டார்க், ஸ்போர்ட்ஸ் மோடில் அந்நியன்போல விஸ்வரூபமெடுத்து 0 - 60 கி மீ வேகத்தை வெறும் 3.6 விநாடிகளில் கடக்கிறது.

லோ ரேஞ்சில் 220 - 250 சிசி பைக்கின் பிக் அப்பைக் கொண்டிருந்தாலும், 100 கிமீ வேகத்தைத் தாண்டிய பின்னர், சாவகாசமாக டாப் ஸ்பீடை அடைகிறது. நேரான சாலையில் நாம் டெஸ்ட் செய்தபோது கூட மீட்டரில் காட்டிய 114 கிமீ வேகத்தை மட்டுமே அடைய முடிந்தது. எனவே, டாப் ஸ்பீடைப் பொறுத்தமட்டில் ஸ்போர்ட்ஸ் கம்யூட்டர் ஆன பல்ஸார் 150 சி சி பைக்குடன்தான் ஒப்பிட முடிகிறது.

1.99 லட்சம் எக்ஸ் - ஷோரூம் விலை
1.99 லட்சம் எக்ஸ் - ஷோரூம் விலை


மோனோ சஸ்பென்ஷன் ஸ்டிஃப்பாக இருந்தாலும், சியட்டின் டயர்கள் கார்னரிங் செய்வதற்குப் போதுமான கிரிப்பை அளிக்கவில்லை. அதேசமயம், சாலையில் இருக்கும் சின்னஞ்சிறிய பள்ளத்தைக்கூட உள்வாங்காமல், அப்படியே கடத்திவிடுகிறது. பெரிய குழியில் அப்படியே இறக்கினால், பேட்டரியைச் சுற்றியுள்ள இரும்பு கவசத்தில் உட்பக்க காம்போனென்ட்ஸ் மோதி நங்கென்ற சத்தம் உண்டாகிறது.

தீர்ப்பு

1.99 லட்சம் எக்ஸ் - ஷோரூம் விலைக்கு ப்ராணாவைக் கொண்டு வந்திருக்கும் SVM, ஆன் - ரோடுக்கு வரும்போது 2.25 லட்சத்தைத் தொடுகிறது. டொமினார், ஹிமாலயன் என இந்த பட்ஜெட்டில் பைக் வாங்குபவர்கள் பொதுவாக நகருக்குள் சென்று வருவதைத் தாண்டி, வார இறுதிகளில் லாங் ரைடுக்கும் எடுத்துச் செல்வார்கள். இந்தியாவில் இன்னும் பெருநகரங்களில் உள்ள மால்களைத் தாண்டி வராத சார்ஜிங் கட்டமைப்பு, ப்ராணாவை நகர எல்லைக்குள் தடுத்து நிறுத்துகிறது.

கல்லூரி மற்றும் அன்றாடம் நகருக்குள் மட்டும் சென்று வரக்கூடிய ப்ராணா, சுற்றுச்சூழல் மீது ஆர்வம் கொண்டவர்களைத் தாண்டி தன் பக்கம் இளைய வாடிக்கையாளர்களையும் இழுத்தால்தான் மார்க்கெட்டில் நிலைக்க முடியும். எகிறியடிக்கும் பெட்ரோல் விலையை நினைத்தால், இவ்வளவு விலைக்கு ப்ராணா தேவலையோ என்றுதான் தோன்றுகிறது.