Published:Updated:

இந்தியாவின் வேகமான ஸ்கூட்டர்!

ஏப்ரிலியா SR160
பிரீமியம் ஸ்டோரி
News
ஏப்ரிலியா SR160

டெஸ்ட் ரைடு ரிப்போர்ட்: ஏப்ரிலியா SR160

ரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 2016-ம் ஆண்டு வெளியான ஏப்ரிலியா SR150, பைக் ஆர்வலர்களையும் தன்வசம் ஈர்த்தது. கம்யூட்டர் வகை வாகனமாக அறியப்படும் ஸ்கூட்டர்களின் ஸ்போர்ட்டி முகத்தோடு வந்தது SR150. ஆக்டிவாவை அப்படியே எதிர்திசையில் அணுகித் தயாரிக்கப்பட்ட இந்த ஏப்ரிலியா ஸ்கூட்டர், பவர்ஃபுல் இன்ஜின் - அற்புதமான கையாளுமை - ஷார்ப்பான டிசைன் போன்ற குணாதிசயங்களைக் கொண்டிருந்தது. ஏப்ரல் 2020 முதலாக BS-6 விதிகள் அமலுக்கு வந்திருக்கும் சூழலில், கூடுதல் திறன்மிக்க SR160 ஸ்கூட்டரை இந்த நிறுவனம் தற்போது அறிமுகப்படுத்தி விட்டது. புதிய இன்ஜின், எந்தளவுக்கு இந்த ஸ்கூட்டரின் ஃபன் அனுபவத்தைக் கூட்டியிருக்கிறது?

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

டிசைன் மற்றும் சிறப்பம்சங்கள்

SR150 போலவே புதிய மாடலும் காட்சி தருகிறது என்றாலும், இது SR160 என்பதைக் குறிப்பிடும் வகையில் ஸ்கூட்டரின் கிராஃபிக்ஸ் மாறியிருக்கிறது. கிட்டத்தட்ட 4 ஆண்டு டிசைன் என்றாலும், இன்றும் ஸ்டைலாகவே இந்த ஏப்ரிலியா ஸ்கூட்டர் காட்சியளிக்கிறது. இதற்கு அதிலிருக்கும் பெரிய 14 இன்ச் வீல்கள் மற்றும் ஸ்போர்ட்டியான ஃப்ரொஃபைல் ஆகியவையே காரணம். SR160-ன் ஃபிட் அண்டு ஃபினிஷ் நன்றாகவே இருந்தாலும், இன்ஸ்ட்ரூமென்ட் கன்ஸோல் மற்றும் ஸ்விட்ச்களைச் சுற்றியிருக்கும் பிளாஸ்டிக் பேனல்களின் தரம் கொஞ்சம் பெட்டராக இருந்திருக்கலாம். மேலும் இந்த ஸ்கூட்டரின் விலையுடன் ஒப்பிடும்போது, வசதிகளின் பட்டியல், அதிலிருக்கும் ஸ்டோரேஜ் ஸ்பேஸ் போல சிறிதாகவே இருக்கிறது.

ஏப்ரிலியா SR160; விலை: ` சுமார் 1.15 லட்சம் (சென்னை ஆன்ரோடு) ப்ளஸ்: டிசைன், பெர்ஃபாமென்ஸ் I மைனஸ்: விலை, வசதிகள், இன்ஜின்: 160.03 சிசி I பவர்: 10.9bhp I டார்க்: 1.16kgm I கியர்: CVT எடை: I 122 கிலோ
ஏப்ரிலியா SR160; விலை: ` சுமார் 1.15 லட்சம் (சென்னை ஆன்ரோடு) ப்ளஸ்: டிசைன், பெர்ஃபாமென்ஸ் I மைனஸ்: விலை, வசதிகள், இன்ஜின்: 160.03 சிசி I பவர்: 10.9bhp I டார்க்: 1.16kgm I கியர்: CVT எடை: I 122 கிலோ

110சிசி ஸ்கூட்டர்களிலேயே LED ஹெட்லைட் வந்துவிட்ட சூழலில், SR160-ல் இன்னுமே இரட்டை ஹாலோஜன் பல்ப் கொண்ட வழக்கமான ஹெட்லைட் இருப்பது நெருடல். மேலும் Multi-Function சாவி துவாரம், வெளிப்புற பெட்ரோல் டேங்க் மூடி, இன்ஜின் கில் ஸ்விட்ச், LED DRL போன்ற வசதிகள் எங்கே ஏப்ரிலியா? தவிர அனலாக் - டிஜிட்டல் மீட்டரில், இன்னும் பல தகவல்கள் தெரிந்தால் நன்றாக இருந்திருக்கும்; சீட்டுக்கு அடியே இருக்கும் USB பாயின்ட் மற்றும் பெரிய 7 லிட்டர் பெட்ரோல் டேங்க், ஸ்கூட்டரின் டூயல் டோன் ஃபினிஷ் ஆகியவையே ஆறுதல். சிம்பிளாகச் சொல்வதென்றால், சிறப்பம்சங்களில் 125சிசி ஸ்கூட்டர்களிடம் தோற்றுவிட்டது SR160.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இன்ஜின் பெர்ஃபாமன்ஸ் & மைலேஜ்

எப்படி பைக்குகளில் 150சிசி செக்மென்ட் 160சிசி இன்ஜின்களை நோக்கி நகர்ந்ததோ, அதேபோல 154.8சிசியில் இருந்து 160.03சிசி Long-Stroke இன்ஜினுக்கு ப்ரமோஷன் பெற்றுவிட்டது SR160. இதனால் முன்பைவிட 0.84bhp பவர் (10.9bhp@7,600rpm) & 0.07kgm டார்க் (1.16kgm@6,000rpm) கிடைப்பது ப்ளஸ். ஸ்கூட்டர்களின் பெர்ஃபாமன்ஸில் SR150 ராஜாவாக இருந்த நிலையில், புதிய 3V Tech Fi இன்ஜின் அந்த முன்னிலையை அதிகப்படுத்தும் என்றே தோன்றியது. ஆனால் ஆன்-ரோடு பெர்ஃபாமன்ஸ் வேறு பரிமாணத்தைக் காட்டியிருக்கிறது என்பதே நிதர்சனம். இதர BS-6 டூ-வீலர்களைப் போலவே, இங்கும் Secondary Catalytic Converter இடம்பிடித்திருக்கிறது. இருப்பினும் ஐடிலிங்கில், BS-4 SR150 போலவே இதன் இன்ஜின் சத்தமும் அமைந்திருக்கிறது. வேகம் செல்லச் செல்ல இன்ஜின் முன்பைவிட ஸ்மூத்தாக இருப்பதுடன், 70-80 கிமீ வேகம் வரை அது அப்படியே தொடர்கிறது.

1. வெறும் ஹாலோஜன் பல்புகள். LED ஹெட்லைட்ஸ் கொடுத்திருக்கலாம். 
2. சீட் உயரம் 775 மிமீ. குஷனிங் கொஞ்சம் இறுக்கமாகவே தெரிகிறது.  
3. 14 இன்ச் வீல்கள், ஸ்கூட்டருக்குப் பெரிய லுக் தருகிறது. முன் பக்கம் 220மிமீ Bybre டிஸ்க் பிரேக், செம ஃபீட்பேக்.
1. வெறும் ஹாலோஜன் பல்புகள். LED ஹெட்லைட்ஸ் கொடுத்திருக்கலாம். 2. சீட் உயரம் 775 மிமீ. குஷனிங் கொஞ்சம் இறுக்கமாகவே தெரிகிறது. 3. 14 இன்ச் வீல்கள், ஸ்கூட்டருக்குப் பெரிய லுக் தருகிறது. முன் பக்கம் 220மிமீ Bybre டிஸ்க் பிரேக், செம ஃபீட்பேக்.

சீரான பவர் டெலிவரிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதால், ஆரம்ப கட்ட வேகத்தில் முன்பிருந்த பஞ்ச் இங்கே மிஸ்ஸிங்! 0-60 கிமீ வேகத்தை 7.96 விநாடிகளிலும் (இது BS-4 SR150 விட அரை விநாடி அதிகம்), 0-80 கிமீ வேகத்தை 15.75 விநாடிகளிலும் SR160 எட்டிப்பிடிக்கிறது. ‘இந்தியாவின் வேகமான ஸ்கூட்டர்’ என்ற பெருமையைத் தன்வசம் தக்கவைத்திருக்கும் இந்த ஏப்ரிலியா ஸ்கூட்டர், ஸ்பீடோமீட்டரில் 90 கிமீ வேகத்தைச் சுலபமாகத் தாண்டி விடுகிறது. முந்தைய மாடலின் ஸ்பீடோமீட்டர் Calibration-ல் இருந்த குறைபாடுகள் இங்கே களையப்பட்டுவிட்டன என்பதால், அதில் தெரியும் தகவல்கள் ஓரளவுக்குத் துல்லியமாகவே இருக்கின்றன. நகரத்தில் 35 கிமீயும், நெடுஞ்சாலைகளில் 37.27 கிமீயும் மைலேஜ் தருகிறது SR160. எனவே ஃபுல் டேங்க்கில், உத்தேசமாக 252 கிமீ தூரம் வரை இந்த ஸ்கூட்டரில் செல்லமுடியும்.

ஓட்டுதல் அனுபவம்

வசதிகளில் கோட்டை விட்டதை, ஓட்டுதலில் சரிக்கட்டிவிடுகிறது SR160. கடந்த ஆண்டில் நம் ஊர்ச் சாலைகளைச் சமாளிக்கும்படி BS-4 SR150-ன் சஸ்பென்ஷனில் சில மாறுதல்களை ஏப்ரிலியா செய்திருந்தது தெரிந்ததே! அவை இங்கும் தொடர்கின்றன என்றாலும், குறைவான வேகங்களில் இந்த ஸ்கூட்டரின் ஓட்டுதல் இறுக்கமாகவே உள்ளது. என்றாலும், திருப்பங்களில் எந்த வேகத்திலும் இந்த ஸ்கூட்டரை நம்பிக்கையாகச் செலுத்த முடிவதும் உண்மைதான். இதில் இருக்கும் 120/70-14 MRF Nylogrip Zapper டயர்கள், சிறப்பான ரோடு கிரிப்பைத் தருகின்றன. அதிரடியான ஃபீட்பேக்கைத் தரக்கூடிய முன்பக்க 220மிமீ Bybre டிஸ்க் பிரேக்கை SR160 கொண்டிருப்பதும் கவனிக்கத்தக்கது. இதைவிட பவர்ஃபுல்லான பைக்குகளில் இருப்பதைவிட இதன் செயல்பாடு நச்சென இருக்கிறது. பின்பக்க 140மிமீ டிரம் பிரேக்கின் ரெஸ்பான்ஸும் பக்கா.

இந்தியாவின் வேகமான ஸ்கூட்டர்!

சிங்கிள் சேனல் ஏபிஎஸ் கொண்ட ஒரே ஸ்கூட்டரான SR160-ல், 60 கிமீ வேகத்தில் செல்லும்போது திடீரென பிரேக் பிடித்தால், 17.29 மீட்டரில் இதை நிறுத்திவிடமுடிகிறது. 775 மிமீ உயரத்தில் இருக்கும் சீட்டின் குஷனிங் இறுக்கமாகவே இருக்கிறது. இதனுடன் அதன் Step-Up வடிவமைப்பு சேரும்போது, நீண்ட நேரப் பயன்பாட்டுக்கு அது ஒத்துழைக்காது என்றே தெரிகிறது.

மோட்டார் விகடன் தீர்ப்பு

பைக்குகளில் கேடிஎம் எப்படியோ, ஸ்கூட்டர்களில் ஏப்ரிலியா அப்படி. அந்தளவுக்கு ஸ்போர்ட்டியான பேக்கேஜிங்கில் SR160 செமையாக ஸ்கோர் செய்கிறது. ஆனால் விலை மிகவும் அதிகம். BS-4 SR150 உடன் ஒப்பிடும்போது, BS-6 SR160-ன் எக்ஸ்-ஷோரூம் விலை 20-25 ஆயிரம் ரூபாய் அதிகரித்திருப்பதை, என்ன சமாதானம் சொன்னாலும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

இந்தியாவின் வேகமான ஸ்கூட்டர்!

150சிசி பைக்குகளுக்கு இணையான விலையில் கிடைக்கும் இந்த ஏப்ரிலியா ஸ்கூட்டரில், விலையை நியாயப்படுத்த கூடுதல் வசதிகளாவது சேர்த்திருக்கலாம். இதிலிருக்கும் புதிய 160சிசி இன்ஜின்தான், இந்த நிறுவனத்தின் SXR 160 மேக்ஸி ஸ்கூட்டரில் பொருத்தப்படவுள்ளது. சொகுசு மற்றும் இடவசதிக்கு முக்கியத்துவம் கொடுத்துத் தயாரிக்கப்படவிருக்கும் இதில், போதுமான வசதிகள் கொடுக்கப்படவுள்ளதும் வரவேற்கத்தக்க அம்சம்.