Published:Updated:

250 சிசியில் சின்ன டொமினார்!

பஜாஜ் டொமினார் D250
பிரீமியம் ஸ்டோரி
News
பஜாஜ் டொமினார் D250

டெஸ்ட் ரைடு ரிப்போர்ட்: பஜாஜ் டொமினார் D250

ன்ஜின் சிசி... இதுதான் நம் நாட்டில் பைக் வாங்கப் போகிறவர்கள் பார்க்கும் முதல் விஷயமாக இருக்கிறது. ஏனெனில் இதுதான் அந்த டூ-வீலரின் பெர்ஃபாமன்ஸ், மைலேஜ் ஆகியவற்றைத் தீர்மானிக்கக்கூடிய அம்சமாகவும் இருக்கிறது. பஜாஜின் டொமினாரைப் பொறுத்தவரை, அதன் 373சிசி இன்ஜின் பலருக்கு ஓவர்டோஸ் ஆகவே இருந்திருக்கும். எனவே அதற்கான தீர்வாக, குறைவான இன்ஜின் திறனுடன் கூடிய மாடலை பஜாஜ் தற்போது களமிறக்கியுள்ளது. இது 400சிசி வெர்ஷனுக்கு இணையான சொகுசு மற்றும் டூரிங் திறனைக் கொண்டிருக்கிறதா?

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விலை: ரூ:1,88,000 (சென்னை ஆன்ரோடு)
ப்ளஸ்: விலை, ஸ்லிப்பர் க்ளட்ச்  I மைனஸ்: எடை, முக்கியமான வசதிகள் மிஸ்ஸிங்
விலை: ரூ:1,88,000 (சென்னை ஆன்ரோடு) ப்ளஸ்: விலை, ஸ்லிப்பர் க்ளட்ச் I மைனஸ்: எடை, முக்கியமான வசதிகள் மிஸ்ஸிங்

டிசைன் மற்றும் சிறப்பம்சங்கள்

இந்தியாவில் விற்பனை செய்யப்படும் டூ-வீலர்கள் எது மாதிரியும் இல்லாமல், தனித்தன்மையான தோற்றத்துடன் ஈர்க்கிறது டொமினார் D250. கடந்தாண்டில் இதன் 400சிசி வெர்ஷன், ஃபேஸ்லிஃப்ட் பெற்றது. அதில் பைக்கின் பவர் க்ரூஸர் பொசிஷனிங்குக்கு ஏற்ப கணிசமான மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. அதன்படி Gloss பெயின்ட் ஃபினிஷுடன், கறுப்பு நிற பாகங்கள் இயைந்து செல்கின்றன. D400 பைக்கில் இருக்கும் அதே பாடி பேனல்கள், பளிச் LED ஹெட்லைட், பெரிய 13 லிட்டர் பெட்ரோல் டேங்க், கட்டுறுதியான மிரர்கள் & சைடு ஸ்டாண்ட் ஆகியவை அப்படியே D250-யிலும் தொடர்கின்றன. ஆனால் பெரிய டொமினாரில் இருந்த டைமண்ட் கட் அலாய் வீல்கள், சிறிய டொமினாரில் மிஸ்ஸிங். மேலும் NS200/RS200 பைக்கில் இருக்கும் அதே 17 இன்ச் டயர்கள், D250 பைக்கில் பயன்படுத்தப்பட்டிருப்பது நெருடல். இது டொமினாரின் கட்டுமஸ்தான தோற்றத்துக்குப் பொருந்தாமல் இருக்கிறது. 160சிசி ஸ்ட்ரீட் பைக்குகளைப்போல, குறைந்தது பின்பக்கத்தில் மட்டுமாவது ரேடியல் டயர் வழங்கப்பட்டிருக்கலாம். இந்த மெலிதான டயர்களுக்கு இணையாக, முன்பக்க USD ஃபோர்க்கின் தடிமனும் குறைந்திருக்கிறது (D400: 43மிமீ, D250: 37மிமீ).

 பைக்கின் ஃபிட் அண்ட் ஃபினிஷ் ஓகே ரகம். ஸ்விட்சுகளின் தரமும் ஓகே.,  248.77 சிசி இன்ஜின். 27.5bhp பவரும், 2.35 kgm டார்க்கும். பவர் டெலிவரு அருமை.
பைக்கின் ஃபிட் அண்ட் ஃபினிஷ் ஓகே ரகம். ஸ்விட்சுகளின் தரமும் ஓகே., 248.77 சிசி இன்ஜின். 27.5bhp பவரும், 2.35 kgm டார்க்கும். பவர் டெலிவரு அருமை.

இப்படி பைக்கில் சில குறைகள் இருந்தாலும், அதன் கட்டுமானத் தரம் மற்றும் ஃபிட் & ஃபினிஷ் ஆகியவை சிறப்பாக இருக்கிறது. பேக்லிட் ஸ்விட்ச்கள் பயன்படுத்த நன்றாக இருப்பதுடன், D250 பைக்குக்கு எனப் பிரத்யேகமாகக் கொடுக்கப்பட்டுள்ள சிவப்பு நிறமும் அசத்தல் ரகம். ஆனால் பைக்கின் பிரீமியம் பொசிஷனிங்கைக் கருத்தில்கொண்டு, இதிலும் D400 பைக்கில் இருக்கும் LCD மீட்டர் இடம் பெற்றிருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஏனெனில் D250 பைக்கில் இருப்பது, 2016-ம் ஆண்டில் முதன்முறையாக வெளிவந்த டொமினார் பைக்கில் இருந்த டிஜிட்டல் மீட்டர்களே. எனவே கியர் இண்டிகேட்டர், சராசரி மைலேஜ், Distance To Empty போன்ற தகவல்கள் இதில் இல்லை. மேலும் பெட்ரோல் டேங்க்கில் இருக்கக்கூடிய டிஜிட்டல் டிஸ்ப்ளேவில், வழக்கமான இண்டிகேட்டர் விளக்குகளே இருக்கின்றன. தவிர டூரிங் பைக்காக அறியப்படும் டொமினாரில், Hazard இண்டிகேட்டர்கள் & மொபைல் USB பாயின்ட் இல்லாதது மைனஸ். ஒருவேளை விலை அதிகமான டொமினார் D400 பைக்கிலிருந்து D250 பைக்கை வேறுபடுத்திக் காட்டவே, இதுபோன்ற சிக்கன நடவடிக்கைகளாக இருக்குமோ?

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

 டிஜிட்டல் மீட்டரில் கியர் இண்டிகேட்டர், ஆவரேஜ் மைலேஜ், Distance to Empty தகவல்கள் இல்லை.,   NS200/RS200 பைக்கில் இருக்கும் அதே 17 இன்ச் டயர்கள், D250-ல் இருப்பது நெருடல்.
டிஜிட்டல் மீட்டரில் கியர் இண்டிகேட்டர், ஆவரேஜ் மைலேஜ், Distance to Empty தகவல்கள் இல்லை., NS200/RS200 பைக்கில் இருக்கும் அதே 17 இன்ச் டயர்கள், D250-ல் இருப்பது நெருடல்.

இன்ஜின் பெர்ஃபாமன்ஸ்

கேடிஎம் டியூக் 250 & ஹஸ்க்வர்னா 250சிசி பைக்ஸ் ஆகியவற்றில் இருக்கக்கூடிய 248.77சிசி இன்ஜினை அடிப்படையாகக் கொண்டு, டொமினார் D250 பைக்கின் இன்ஜினைத் தயாரித்திருக்கிறது பஜாஜ். இந்த நிறுவனத் தயாரிப்புகளுக்கே உரித்தான DTS-i தொழில்நுட்பம் இங்கிருப்பதுடன், கேடிஎம்/ஹஸ்க்வர்னா போலவே இங்கும் ஸ்லிப்பர் க்ளட்ச் - லிக்விட் கூலிங் - 4 வால்வ் - DOHC அமைப்பு - 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் - Fi ஆகியவை இருப்பது ப்ளஸ். ஆனால் D250 பைக்கின் கம்ப்ரஷன் ரேஷியோ (11.9:1), டியூக் 250 மற்றும் ஹஸ்க்வர்னா பைக்குகளைவிடக் குறைவு (12.5:1). இதில் டொமினாரின் குணாதிசயம் பெரும்பங்கு வகித்திருக்கிறது. எனவே எதிர்பார்த்தபடியே, முன்னே சொன்ன தயாரிப்புகளைவிடக் குறைவான செயல்திறனையே D250 வெளிப்படுத்துகிறது (27bhp பவர் - 2.35kgm டார்க்). இந்தத் திறன் குறைவான டொமினாரின் எடை 180கிலோ என்றாலும், டியூக் 250 போலவே கியர் & Final Drive Ratio ஆகியவை இருப்பதால், நினைத்ததைவிட இதன் பெர்ஃபாமன்ஸ் துடிப்பாகவே இருக்கிறது. 0 - 60கிமீ வேகத்தை 3.82 விநாடிகளிலும், 0 - 100கிமீ வேகத்தை 9.84 விநாடிகளிலும் எட்டிப் பிடிக்கிறது D250. இவை கேடிஎம் விட 0.5-1 விநாடி மட்டுமே அதிகம்! மேலும் ஒரு டூரர் பைக்கில் அடிப்படைத் தேவையான ஆரம்ப கட்ட பவர் டெலிவரி, டொமினார் D250 பைக்கில் நிறைந்திருக்கிறது.

 டொமினார் 400 சிசி-யில் இருக்கும் அதே பளிச் LED ஹெட்லைட் யூனிட்.,  ஸ்ப்ளிட் சீட்கள், பில்லியனருக்குக் கொஞ்சம் கஷ்டம்தான்.
டொமினார் 400 சிசி-யில் இருக்கும் அதே பளிச் LED ஹெட்லைட் யூனிட்., ஸ்ப்ளிட் சீட்கள், பில்லியனருக்குக் கொஞ்சம் கஷ்டம்தான்.

எனவே குறைவான வேகம் - அதிக கியரில் வைத்து இதை ஓட்ட முடிவதுடன், எந்த கியரில் இருந்தாலும் ஆக்ஸிலரேட்டரில் பலத்தைக் கூட்டும்போது சிக்கலின்றி பைக் வேகம் பிடிப்பதும் கவனிக்கத்தக்கது. எடை குறைவான க்ளட்ச் மற்றும் துல்லியமான கியர்பாக்ஸ், பயன்படுத்துவதற்கு வாட்டமாக உள்ளன. எனவே நெரிசல்மிக்க நகரச்சாலைகளில் இந்த டொமினார் D250 பைக்கை ஓட்டுவது சுலபமாகவே இருக்கிறது. பவர் க்ரூஸர் என்ற சிறப்புக்கு ஏற்ப, நெடுஞ்சாலைகளில் இதன் பெர்ஃபாமன்ஸ் உள்ளது. 5&6-வது கியர்கள் Taller Ratio-வில் இருப்பதால், 100-120கிமீ வேகத்தில் இன்ஜின் 6,000-7,000 ஆர்பிஎம்மில் ரிலாக்ஸ்டாக இயங்குகிறது. ஆனால் முன்னே செல்லும் வாகனத்தை ஓவர்டேக் செய்வதற்கு, ஒரு கியரை கட் செய்வது அவசியம். பெரிய டொமினார் போலவே இங்கும் டபுள் பேரல் எக்ஸாஸ்ட் இருப்பதால், சிறிய டொமினாரின் வேகம் செல்லச் செல்ல எக்ஸாஸ்ட் சத்தம் ஸ்போர்ட்டியாகவே இருக்கிறது. பெரும்பான்மையான நேரங்களில் இந்த இன்ஜின் ஸ்மூத்தாகவே செயல்பட்டாலும், அவ்வப்போது பைக்கில் அதிர்வுகள் எட்டிப்பார்க்கிறது.

 சஸ்பென்ஷன், நம் ஊர் சாலைகளுக்கு ஏற்றபடி செமையாக இருக்கிறது.,  H வடிவ பின் பக்க டெயில் லைட்கள், செம ஸ்டைல். ஸ்ப்ளிட் கிராப் ரெயிலும் ஸ்டைல்.
சஸ்பென்ஷன், நம் ஊர் சாலைகளுக்கு ஏற்றபடி செமையாக இருக்கிறது., H வடிவ பின் பக்க டெயில் லைட்கள், செம ஸ்டைல். ஸ்ப்ளிட் கிராப் ரெயிலும் ஸ்டைல்.

ஓட்டுதல் அனுபவம்

கடந்தாண்டு வெளியான டொமினார் D400 பைக்கின் ஃபேஸ்லிஃப்ட்டில், சொகுசான ஓட்டுதலுக்குத் தேவையான மாறுதல்களைச் செய்திருந்தது பஜாஜ். அதேபோன்ற அனுபவம், D250 பைக்கிலும் கிடைக்கப் பெறுவது நைஸ். ஏனெனில் இரு பைக்கிலுமே இருப்பது, ஒரே ஸ்டீல் பெரிமீட்டர் ஃப்ரேம் மற்றும் பின்பக்க மோனோஷாக் - டிஸ்க் பிரேக் செட்-அப்தான்; மற்றபடி முன்பக்க USD ஃபோர்க் & டிஸ்க் பிரேக் (D400: 320மிமீ, D250: 300மிமீ) - டயர்கள் - பின்பக்க ஸ்விங் ஆர்ம் (D400: Stamped Steel, D250: Box Section) ஆகியவற்றில் இரண்டுமே வித்தியாசப்படுகின்றன. சிறிய இன்ஜினுக்குப் பெரிய டயர்களைக் கொடுக்காதது, இந்த பைக்கின் பெர்ஃபாமன்ஸ் மற்றும் மைலேஜில் உதவும் என பஜாஜ் கூறியுள்ளது. அதற்கேற்ப நகரத்தில் 36.76கிமீயும், நெடுஞ்சாலையில் 42.92கிமீயும் இந்த பைக் மைலேஜ் தருகிறது. மேலும் NS200/RS200 பைக்குகளில் இருக்கும் அதே சைஸ்தான் என்றாலும், அவற்றில் இருப்பதைவிட டொமினார் D250 பைக்கின் டயர்கள் Soft Compound ரகம் எனவும் தகவல் வந்திருந்திருக்கிறது. ஆனால் திருப்பங்களில் இந்த பைக்கின் கையாளுமை ரசிக்கும்படியே உள்ளது.

250 சிசியில் சின்ன டொமினார்!

இதற்கு டொமினார் D400-யைவிட 7 கிலோ குறைவான எடையில் D250 இருப்பதும் ஒரு காரணம் எனலாம் (D400: 187 கிலோ, D250: 180 கிலோ). சேஸி மற்றும் டயர்களின் ரெஸ்பான்ஸ் அருமை என்பதுடன், சஸ்பென்ஷன் செட்-அப்பும் நம் ஊர்ச் சாலைகளுக்கு ஏற்றபடி கச்சிதமாக இருக்கிறது. எனவே ஃபுல் லோடில் கரடுமுரடான சாலைகளில் சென்றாலும் கூட, இந்த டொமினாரின் ஓட்டுதல் சொகுசாகவே உள்ளது.

250 சிசியில் சின்ன டொமினார்!

மேலும் நெடுஞ்சாலைகளில் D250 பைக்கின் அற்புதமான நிலைத்தன்மைக்கு, D400-க்கு இணையான 1,453மிமீ வீல்பேஸ் துணை நிற்கிறது. இதனால் முதன்முறையாக இந்தவிதமான பைக்குகளுக்கு அப்கிரேடு ஆகும் நபர்களுக்கு ஏற்றபடி டொமினார் D250 பைக்கின் ஓட்டுதல் அனுபவம் இருப்பது வரவேற்கத்தக்க அம்சமே! டூயல் சேனல் ஏபிஎஸ் உடனான Bybre டிஸ்க் பிரேக் அமைப்பின் செயல்பாடு மனநிறைவைத் தந்தாலும், அதன் ஃபீட்பேக் பெட்டராக இருந்திருக்கலாம். பின்பக்க சீட்டுக்கு அடியே இருக்கும் Bungee Cords, பைகளைக் கட்ட உதவுகிறது. 157மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ், பைக்கின் அடிப்பகுதி தரை தட்டாத அளவுக்கு இருப்பதை உறுதி செய்கிறது.

மோட்டார் விகடன் தீர்ப்பு

மேலோட்டமாகப் பார்க்கும்போதே, ‘பெரிய பைக்கில் சிறிய இன்ஜினா’ என்ற தயக்கம் முதலில் இருந்ததை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். ஆனால் ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், ஏறக்குறைய டொமினார் D400-க்கு இணையான அனுபவத்தை D250 தந்தது என்பதே நிதர்சனம்.

250 சிசியில் சின்ன டொமினார்!

எதிர்பார்த்தபடியே பவர்ஃபுல் மாடலில் இருக்கக்கூடிய வசதிகள் மற்றும் பெர்ஃபாமன்ஸ் இங்கே இல்லை என்றாலும், விலை விஷயத்தில் அதைச் சரிகட்டிவிட்டது பஜாஜ். சென்னை எக்ஸ்-ஷோரூம் விலையான 1.60 லட்சத்துக்கு வந்திருக்கும் D250, D400 பைக்கைவிட 35,000 ரூபாய் விலை குறைவு. எனவே ஆன்-ரோடு விலையில், இரண்டுக்கும் இடையே கிட்டத்தட்ட 45-50 ஆயிரம் ரூபாய் வித்தியாசம் இருக்கும். எனவே 150சிசி பைக்கிலிருந்து அப்கிரேடு ஆகிறவர்களுக்கு ஏற்ற விலையில் வந்திருக்கிறது டொமினார் D250. 250சிசி செக்மென்ட்டில், விலை குறைவான பைக் என்ற பெருமையை இந்த பஜாஜ் பைக் தன்வசப்படுத்தி இருக்கிறது. போதுமான பெர்ஃபாமன்ஸ், சொகுசான ஓட்டுதல், சிறப்பான கையாளுமை, விலைக்கேற்ற வசதிகள், மனநிறைவைத் தரும் தரம் என ஆல்ரவுண்டர் பேக்கேஜாக அசத்தும் D250 பைக், D400 பைக்கால் சாத்தியப்படுத்த முடியாத வெற்றியை டொமினார் பிராண்டுக்குப் பெற்றுத் தருமா என்பதைப் பார்க்கலாம்.