கார்ஸ்
ஆசிரியர் பக்கம்
பைக்ஸ்
Published:Updated:

BS-6 பேஸன் ப்ரோ... ஹிட் அடிக்குமா?

ஹீரோ பேஸன் ப்ரோ
பிரீமியம் ஸ்டோரி
News
ஹீரோ பேஸன் ப்ரோ

டெஸ்ட் ரைடு ரிப்போர்ட்: ஹீரோ பேஸன் ப்ரோ

100சிசி பிரிவில் ஸ்ப்ளெண்டரும், 110சிசி பிரிவில் பேஸனும் கோலோச்சுவது தெரிந்ததே! இரண்டுமே ஹீரோ என்பதுதான் ஹைலைட். கிட்டத்தட்ட 19 ஆண்டுகளாக விற்பனையில் இருக்கும் இந்த ப்ரீமியம் கம்யூட்டர் பைக்கில், காலத்துக்கு ஏற்றபடியான மாற்றங்களை இந்த நிறுவனம் செய்து வந்திருக்கிறது. என்றாலும், தற்போது வந்திருக்கும் பேஸன்தான் கணிசமான மாறுதல்களுடன் வந்திருக்கும் மாடல். இடையே வெளியான பேஸனின் இதர வெர்ஷன்களான எக்ஸ் ப்ரோ மற்றும் பேஸன் ப்ரோ TR ஆகியவை விற்பனையில் பின்தங்கிவிட்டன. இந்த நிலையில், புதிய பேஸன் ப்ரோ எப்படி இருக்கிறது?

டிசைன், சிறப்பம்சங்கள்

சிம்பிளான டிசைனில் ஸ்ப்ளெண்டர் இருந்தால், பெயருக்கு ஏற்றபடி கொஞ்சம் நீட்டான தோற்றத்துடன் வந்தால் அது பேஸன் ப்ரோ. இப்போது முன்பைவிட ப்ரீமியமான வடிவமைப்புடன், இந்த கம்யூட்டர் பைக் ஈர்க்கிறது. பெரிய டேங்க் Extension, U வடிவ டெயில் லைட் அதற்கான உதாரணம். மேலும் பைக் எங்கும் வியாப்பித்திருக்கும் Triple டோன் ஃபினிஷ், செம ஸ்போர்ட்டியாக இருக்கிறது. தவிர மாற்றியமைக்கப்பட்டிருக்கும் ஹெட்லைட், லேசாக அச்சீவரை நினைவுபடுத்துகிறது. மற்றபடி ரியர்வியூ மிரர்கள் & அலாய் வீல்கள் ஸ்ப்ளெண்டர் iSmart-ல் இருந்தும், இண்டிகேட்டர்கள் எக்ஸ்பல்ஸில் இருந்தும் பெறப்பட்டுள்ளன. ரேடியான் மற்றும் பிளாட்டினா போல, இங்கே LED DRL இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். தவிர முந்தைய மாடல் போலவே, இதிலும் அனலாக் - டிஜிட்டல் மீட்டர் தொடர்கிறது. அதில் வழக்கமான தகவல்கள் தெளிவாகத் தெரிகின்றன. ஆனால் முற்றிலும் புதிதாகத் தயாரிக்கப்பட்டுள்ள இந்த பைக்கில், பழைய டிசைனில் மலிவாகக் காட்சியளிக்கும் ஸ்விட்ச்கள் மற்றும் ஃபுட் பெக்ஸ் இருப்பது நெருடல் (i3S ஸ்விட்ச் மீட்டரில் உள்ளது).

மற்றபடி சிங்கிள் பீஸ் சீட் - ஹேண்டில்பார் - கிராப் ரெயில், சிகப்பு நிற ஸ்ப்ரிங் கொண்ட ட்வின் ஷாக் அப்ஸார்பர், முன்பக்க டிஸ்க் பிரேக் ஆகியவை, நாம் ஹீரோவின் இதர கம்யூட்டர்களில் பார்த்ததுதான். எக்ஸாஸ்ட் பைப் போலவே, கேட்டலிட்டிக் கன்வெர்ட்டருக்கும் Protection Plate கொடுக்கப்பட்டிருப்பது நைஸ்.

இன்ஜின் பெர்ஃபாமன்ஸ், மைலேஜ்

BS-4 பேஸன் எக்ஸ் ப்ரோவில், ஸ்ப்ளெண்டர் iSmart பைக்கின் BS-4 வெர்ஷனில் இருந்த 109.1சிசி இன்ஜின் பயன்படுத்தப்பட்டது. அதே பாணியே, இந்த பைக்குகளின் BS-6 வெர்ஷனிலும் தொடர்கிறது. இதில் இடம்பெற்றிருக்கும் 113சிசி Long Stroke இன்ஜின் - 4 ஸ்பீடு கியர்பாக்ஸ், Xsens Fi சிஸ்டத்துடன் வருகிறது. இது 9.15bhp பவர் மற்றும் 0.99kgm டார்க்கை வெளிப்படுத்துகிறது. முன்பைவிட பவர் கொஞ்சம் குறைவு என்றாலும், அதிகரிக்கப்பட்ட இன்ஜின் திறனால் 9% அதிக டார்க் கிடைத்துள்ளது. இந்த சிங்கிள் சிலிண்டர் - ஏர் கூல்டு இன்ஜினில், செல்ஃப் ஸ்டார்ட் தவிர கிக் ஸ்டார்ட் அம்சமும் உண்டு. ஸ்மூத்தாக இயங்கும் இந்த இன்ஜின், 0-60கிமீ வேகத்தை 7.21 விநாடிகளிலும், 0-80கிமீ வேகத்தை 14.9 விநாடிகளிலும் எட்டிப் பிடிக்கிறது பேஸன் ப்ரோ. ப்ளாட்டினாபோல 5-வது கியர் இங்கே இருந்திருந்தால், நெடுஞ்சாலைகளில் க்ரூஸ் செய்வதற்கு வாட்டமாக இருந்திருக்கக்கூடும். 80கிமீ வேகத்திலும் இந்த இன்ஜின் Stressed ஆகாமல் இருப்பது செம. மேலும் குறைவான வேகங்களில் எந்த கியரில் சென்றாலும், பைக் திணறாமல் வேகமெடுப்பதும் நன்று. தவிர இதில் இருக்கும் Autosail வசதி காரணமாக, ஆக்ஸிலரேட்டரைத் திருகாமலேயே பைக் தானாக முன்னோக்கி நகர்கிறது. நெரிசல்மிக்க நகரச்சாலைகளில் இந்த அம்சம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். i3S சிஸ்டம் அதிக மைலேஜுக்கு வழிவகுத்தாலும், அந்த சிஸ்டம் ஹோண்டா ஸ்கூட்டர்களைப் போல உடனுக்குடன் செயல்படவில்லை. சிறிய 10 லிட்டர் பெட்ரோல் டேங்க்கே இருந்தாலும், ஃபுல் டேங்க்கில் அதிக தூரம் பயணிக்க முடியும் என்பது ப்ளஸ்.

BS-6 பேஸன் ப்ரோ... ஹிட் அடிக்குமா?

ஓட்டுதல் அனுபவம்

முந்தைய மாடலில் ட்வின் டவுன் ட்யூப் ஃப்ரேம் இருந்த நிலையில், புதிய மாடலில் டைமண்ட் ஃப்ரேம் இடம்பெற்றுள்ளது. இதனால் பேஸன் ப்ரோவின் கையாளுமையில் நல்ல முன்னேற்றம் தெரிகிறது. முன்பைவிட அதிகமான 1,270மிமீ வீல்பேஸ் காரணமாக, பைக்கின் நிலைத்தன்மையும் சிறப்பாக உள்ளது. இதனால் ஒரு பெரிய பைக்கில் இருப்பது போன்ற உணர்வு, தானாகவே ரைடருக்கு வந்துவிடுகிறது. ஆனால் மைலேஜை மனதில் வைத்து இதில் பொருத்தப்பட்டுள்ள 18 இன்ச் டியூப்லெஸ் டயர்கள் (80-100/18) மெலிதாக இருக்கின்றன. இவை வெளிப்படுத்தும் ரோடு கிரிப், ஈரமான சாலைகள் மற்றும் திருப்பங்களில் போதவில்லை என்றே சொல்லலாம். பைக்கின் கிரவுண்ட் கிளியரன்ஸ் 15மிமீ அதிகரித்துள்ளதால் (180மிமீ), நம் ஊர்ச்சாலைகளில் இருக்கக்கூடிய ஸ்பீடு பிரேக்கர்களைக் கண்டு பயப்படத் தேவையில்லை.

இதனுடன் 30மிமீ டெலிஸ்கோபிக் ஃபோர்க்கின் டிராவல் 14% மற்றும் பின்பக்க ட்வின் ஷாக் அப்சார்பரின் டிராவல் 10% உயர்த்தப்பட்டுள்ளது. எனவே சஸ்பென்ஷன் செட்-அப் இறுக்கமாகத் தெரிந்தாலும், ஓட்டுதல் சொகுசாகவே இருக்கிறது. சிங்கிள் பீஸ் சிட்டில் இருவருக்கான இடவசதி இருந்தாலும், அதன் குஷனிங் மிகவும் மென்மையாக உள்ளது. எனவே நீண்ட நேரம் பைக்கில் பயணிக்க நேர்ந்தால், அது அசெளகரியத்தைத் தரலாம்.

iBS உடனான பிரேக்கிங் சிஸ்டத்தின் ஃபீட்பேக் டீசன்ட்டாகவே உள்ளது. வழக்கமான 130மிமீ டிரம் பிரேக்குகளைத் தவிர, முன்பக்கத்தில் 240மிமீ டிஸ்க் பிரேக் ஆப்ஷன் உண்டு. 60கிமீ வேகத்தில் செல்லும்போது பிரேக் பிடித்தால், 18.94 விநாடிகளில் பைக் நின்றுவிடுகிறது. முற்றிலும் புதிய மாடலாக இருந்தாலும், முன்பிருந்த மாடலுக்கும் இணையான எடையில்தான் இதுவும் வருகிறது (118 கிலோ).

BS-6 பேஸன் ப்ரோ... ஹிட் அடிக்குமா?

நான்கு கலர் ஆப்ஷன்களில் வந்திருக்கும் பேஸன் ப்ரோ, இரு வேரியன்ட்களில் கிடைக்கிறது (டிரம், டிஸ்க்). இவற்றின் சென்னை எக்ஸ்-ஷோரூம் விலைகள், 66,000 மற்றும் 68,200 ரூபாய். 110சிசி செக்மென்ட்டின் ப்ரீமியம் பிரிவில் இடம் பெறுவதால், இந்த பைக்கின் அதிக விலையைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் அதனை நியாயப்படுத்தும் விதத்தில், அனைத்து ஏரியாக்களிலும் முன்னேறிய தயாரிப்பாக பேஸன் ப்ரோ இருப்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். பரந்து விரிந்த டீலர் நெட்வொர்க், நல்ல பிராண்ட் மதிப்பு போன்ற ப்ளஸ் பாயின்ட்களைக் கொண்ட பேஸன் ப்ரோ, இந்த செக்மென்ட்டில் தனது இடத்தைத் தக்க வைத்துக் கொள்ளும் என்றே தோன்றுகிறது.