Published:Updated:

ஓலாவை விடுங்க… இந்தியாவில் 300 கி.மீ ரேஞ்ச் தரும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இப்போ இதுதான்!

Simple One Electric

எக்ஸ்ட்ரா பேட்டரி பேக்கேஜ் கொண்ட சிம்பிள் ஒன் ஸ்கூட்டரின் டாப் வேரியன்ட் ஒன்றை மார்க்கெட்டில் விடவிருக்கிறது. இதன் பேட்டரி பவர் 6.4kWh. இது அதையும் தாண்டி சுமார் 300 கி.மீ தூரம் ஒரே சார்ஜில் கிடைக்கும் என்று க்ளெய்ம் செய்கிறது சிம்பிள் எனர்ஜி!

ஓலாவை விடுங்க… இந்தியாவில் 300 கி.மீ ரேஞ்ச் தரும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இப்போ இதுதான்!

எக்ஸ்ட்ரா பேட்டரி பேக்கேஜ் கொண்ட சிம்பிள் ஒன் ஸ்கூட்டரின் டாப் வேரியன்ட் ஒன்றை மார்க்கெட்டில் விடவிருக்கிறது. இதன் பேட்டரி பவர் 6.4kWh. இது அதையும் தாண்டி சுமார் 300 கி.மீ தூரம் ஒரே சார்ஜில் கிடைக்கும் என்று க்ளெய்ம் செய்கிறது சிம்பிள் எனர்ஜி!

Published:Updated:
Simple One Electric

வதவதவென எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் வருகைதான் இப்போதைய ஆட்டோமொபைலின் ஹாட் டாபிக். பெயர் தெரியாத நிறுவனங்களும் எலெக்ட்ரிக் ஸ்டார்ட்அப்பில் நுழைந்துவிட்டிருக்கின்றன. ‘‘ஆனால் நாங்கள் பத்தோடு பதினொன்றாக இருக்கப்போவதில்லை. காரணம், எங்கள் ஸ்கூட்டரின் ரேஞ்ச் அப்படி!’’ என்கிறார், அந்த எலெக்ட்ரிக் ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் CEO சுஹாஷ் ராஜ்குமார்.

அந்த நிறுவனம் – சிம்பிள் எனர்ஜி. அதன் ‘சிம்பிள் ஒன்’ எனும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்தான், இப்போதைக்கு இந்தியாவின் அதிக ரேஞ்ச் கி.மீ கொண்ட ஸ்கூட்டர்.

இப்போது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வரிசையில் சிம்பிள் ஒன் ஸ்கூட்டரைத் தவிர்த்துவிட முடியாது. ஓலாவுக்கும் சிம்பிள் எனர்ஜிக்கும் நிறைய ஒற்றுமைகள் உண்டு. போன ஆண்டு ஓலா டெலிவரியாகும் என்று சொல்லப்பட்ட ஆகஸ்ட் மாதம்தான் சிம்பிள் எனர்ஜி நிறுவனம், சிம்பிள் ஒன் ஸ்கூட்டரை லாஞ்ச் செய்தது.. ஓலா போலவே இந்த நிறுவனத்தின் தொழிற்சாலையும் தமிழ்நாட்டில்தான் இயங்குகிறது. ஓசூரில் இதன் ப்ளான்ட்டில் ஆண்டுக்கு ஓலா போலவே சுமார் ஒரு மில்லியன் யூனிட்டுகள் தயாராகும் அளவுக்குத் திறன் கொண்டிருக்கிறது சிம்பிள் எனர்ஜி. தர்மபுரியில் இன்னொரு ப்ளான்ட்டும் ரெடியாகி வருகிறது. இதில் ஆண்டுக்கு 12.5 மில்லியன் ஸ்கூட்டர்கள் உற்பத்தியாகுமாம்.

ஓலா அளவுக்கு இல்லை என்றாலும், சுமார் 30,000 புக்கிங்குகள் இதுவரை சிம்பிள் ஒன் ஸ்கூட்டருக்குக் குவிந்திருக்கின்றன. ஓலா போலவே பல வசதிகளையும் கொண்டு வந்திருக்கிறது சிம்பிள் எனர்ஜியின் முதல் ஸ்கூட்டரான சிம்பிள் ஒன். அட, டெலிவரி சொதப்பலில்கூட ஓலா மாதிரியேதான் என்றால் நம்புவீர்களா? ஆரம்பத்தில், 2021 இறுதியில் டெலிவரி என்றார்கள். இப்போது ஜூன் மாதத்துக்கு ஒத்தி வைத்திருக்கிறார்கள். தமிழ்நாட்டில் இன்னும் சிம்பிள் ஒன் ஸ்கூட்டரின் டெலிவரியைப் பார்க்க முடியவில்லை என்றாலும், பெங்களூரு நகரம் மற்றும் ஆந்திர மாநிலத்தில் சிம்பிள் ஒன் ஸ்கூட்டர் ஓடிக்கொண்டிருக்கிறது. ஓலா ஸ்டைலிலேயே இதிலும் ஹோம் டெலிவரியையும் நாம் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாமாம். ஆனால், சிம்பிள் எனர்ஜிக்கு டீலர்ஷிப் உண்டு.

LED Headlights
LED Headlights

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஓலாவுக்குக் கடுமையான போட்டி ஏற்படுத்துவதற்காகவே – ஜியோஃபென்சிங், ட்யூப்லெஸ் டயர்கள், 7 இன்ச் டச் ஸ்க்ரீன், இன்பில்ட் நேவிகேஷன், டயர்களில் காற்று குறைகிறதா என்பதைச் சொல்லும் டயர் ப்ரஷர் மானிட்டரிங் சிஸ்டம், ட்ரிப் மீட்டர், ரேஞ்ச் மீட்டர், கடிகாரம், போனிலேயே ஆப்பரேட் செய்து கொள்ளக்கூடிய ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி, பாட்டுக் கேட்பது, போன் கால்கள் அட்டெண்ட் செய்துகொள்வது, மெசேஜ் நோட்டிஃபிகேஷன்கள் என்று, சிம்பிளாக இல்லாமல், வெயிட்டாகவே வசதிகளைக் கொடுத்திருக்கிறது சிம்பிள் எனர்ஜி.

ஓலாவைவிட (3.97kWh) பேட்டரி பேக்கேஜில் கெத்து காட்டுகிறது சிம்பிள் ஒன். இதில் இருப்பது 4.8kWh லித்தியம் அயன் பேட்டரி பேக்கேஜ். ஆனால், ஓலா S1 Pro–வைவிட பவர் இதில் குறைவுதான். 9.4bhp பவர் – இது ஓலாவைவிட சுமார் 2bhp கம்மி. ஆனால், டார்க்கில் எகிறுகிறது – சிம்பிள் ஒன். 72Nm. ஓலாவில் இருப்பது 58Nmதான். அப்படியென்றால், நிச்சயம் ஓலாவைவிட பிக்–அப் செமையாக இருக்கும்.

ஓலாவில் Normal, Sport, Hyper என 3 ரைடிங் மோடுகள்தான் என்றால், இதில் Eco, Ride, Dash, Sonic என்று 4 ரைடிங் மோடுகள் கொடுத்திருக்கிறார்கள். எக்கோ மோடில் 45 முதல் 50 கி.மீ வரை டாப் ஸ்பீடு போகலாம். பெர்ஃபாமன்ஸ் மோடில் 105 கி.மீ வரை ஓட்டியதாக பெங்களூரு சிம்பிள் ஒன் வாசகர் ஒருவர் சொன்னார். ஆனால், ஓலாவில் 115 கி.மீ வேகம் வரை போகலாம். 0–40 கி.மீ–ல் ஓலாவைவிட சில மைக்ரோ விநாடி சிம்பிள் ஒன் குறைவாக இருக்கிறது. அதாவது, பிக்–அப் அதிகம்.

30 Ltrs Boot Space
30 Ltrs Boot Space

ஓலா S1 Pro–வில் சிங்கிள் சைடு ஃபோர்க் மற்றும் மோனோ ஷாக் சஸ்பென்ஷன் இருக்கும் வேளையில்… சிம்பிள் ஒன் ஸ்கூட்டரில் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க் மற்றும் மோனோ ஷாக் கொடுத்திருக்கிறார்கள். ஓலாவுக்கு இணையான சொகுசுதான் இதிலும் கிடைக்கும் என்றாலும், ஓட்டிப் பார்த்தால்தான் ரியல் டைமில் எது சொகுசு என்று தெரியும். ஓலாவில் 220/180மி.மீ முன்/பின் என டிஸ்க் பிரேக் இருந்தால்… சிம்பிள் ஒன்னில் 200/190 மி.மீ டிஸ்க்குகள் கொடுத்திருக்கிறார்கள். பூட் ஸ்பேஸில் ஓலாவைவிட 6 லிட்டர் குறைவாக, 30 லிட்டர் என்று இருக்கிறது சிம்பிள் ஒன். ஆனால், சீட்டுக்கு அடியில் ஒரு ஹெல்மெட்டும், கொஞ்சம் லக்கேஜும் வைத்துக்கொள்ளலாம்.

சாதாரண சார்ஜரில் சார்ஜ் போடும்போது, ஓலாவைப் பொறுத்தவரை 5.30 முதல் 6 மணி நேரம் வரை ஆகும். ஃபாஸ்ட் சார்ஜிங் என்றால், 75 கி.மீ போகும் அளவுக்கு18 நிமிடங்களில் சார்ஜ் ஏறியிருக்கும். இதுவே சிம்பிள் ஒன்னில் ஃபாஸ்ட் சார்ஜிங்கிலேயே 75 கி.மீ–க்கு 30 நிமிடங்கள் ஆகும். மற்றபடி நார்மல் சார்ஜிங்குக்கு அதே நேரம்தான்.

Single Range 300 Km
Single Range 300 Km

சிம்பிள் ஒன் ஸ்கூட்டர் – ரேஞ்ச் விஷயத்தில்தான் சொல்லியடிக்கிறது. ஏற்கெனவே ஒரு தடவை சார்ஜ் செய்தால், இது 236 கி.மீ தூரம் போகும் என்று க்ளெய்ம் செய்து வந்தது சிம்பிள் எனர்ஜி. இது எக்கோ மோடில் ஓட்டினால்தான் இந்த தூரம் என்பதை நினைவில் கொள்க. ஆனால், இப்போது அதையும் தாண்டி ஒரு ஸ்பெஷல் ஆப்ஷனை வழங்குகிறது அந்நிறுவனம். எக்ஸ்ட்ரா பேட்டரி பேக்கேஜ் கொண்ட சிம்பிள் ஒன் ஸ்கூட்டரின் டாப் வேரியன்ட் ஒன்றை மார்க்கெட்டில் விடவிருக்கிறது. இதன் பேட்டரி பவர் 6.4kWh. இது அதையும் தாண்டி சுமார் 300 கி.மீ தூரம் ஒரே சார்ஜில் கிடைக்கும் என்று க்ளெய்ம் செய்கிறது சிம்பிள் எனர்ஜி. அட, இது ஒரு டாடா டிகோர் எலெக்ட்ரிக் காருக்கு இணையான தூரம்! மேலும், இதில் கழற்றி மாட்டிக் கொள்ளக்கூடிய Detachable Battery–களைக் கொடுத்திருப்பது ரொம்ப ஸ்பெஷல்! இதில் ஃபாஸ்ட் சார்ஜிங் போட்டால், சட்டு புட்டு என ஒரு மணி நேரத்துக்குள் ஃபுல் சார்ஜ் போட்டுவிட்டுக் கிளம்பலாம் என்கிறது சிம்பிள் எனர்ஜி.

விலையிலும் ஓலாவைவிடக் குறைவாகவே பொசிஷன் செய்திருக்கிறார்கள். 1.3 லட்சம் ஓலாவுக்கு என்றால், சிம்பிள் ஒன் 1.1 லட்சம் எக்ஸ் ஷோரூம் விலையாக இருக்கிறது. ஆனால், இந்த டாப் வேரியன்ட், ஓலா S1 Pro–வின் விலையை நெருங்கலாம்.

எல்லாம் ஓகே! ஓலாபோல் சில விஷயங்களில் சொதப்பாமல் இருங்க சிம்பிள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism