கார்ஸ்
பைக்ஸ்
Published:Updated:

2022 டாப் 11 பைக்ஸ்!

Bikes
பிரீமியம் ஸ்டோரி
News
Bikes

வரவிருக்கும் பைக்ஸ் 2022 / கம்யூட்டர் முதல் ஸ்க்ராம்ப்ளர் வரை...

விஜய்யின் பீஸ்ட், கமலின் விக்ரம், அஜித்தின் வலிமை, மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் என்று மனம் கவர்ந்த ஹீரோக்களின் படங்கள் மட்டுமில்லை; யூத்களின் மனதைக் கொள்ளையடிக்க, கெத்தாக சில பைக்குகளின் என்ட்ரியும் வரிசையாக இந்த ஆண்டு நடக்கவிருக்கிறது. கேடிஎம் முதல் ராயல் என்ஃபீல்டு வரை வரிசை கட்டி வரவிருக்கும் 2022–ன் கெத்து பைக்ஸ் என்னனு பார்க்கலாம்.

ராயல் என்ஃபீல்டு சூப்பர் மீட்டியார் 650
ராயல் என்ஃபீல்டு சூப்பர் மீட்டியார் 650
Rushlane

ராயல் என்ஃபீல்டு சூப்பர் மீட்டியார் 650

ரிலீஸ்: மார்ச் 2022

ஒவ்வொரு 3 மாதங்களுக்கு ஒருமுறை ஒரு புது பைக் வரும் என்று ராயல் என்ஃபீல்டு கட்டியம் கூறியது நினைவிருக்கலாம். மீட்டியார் 350 புல்லட் தந்த வெற்றியில், அதே பேட்ஜில் மீட்டியார் 650 எனும் ஹாட்டஸ்ட் புல்லட்டைக் களமிறக்க இருக்கிறது ராயல் என்ஃபீல்டு. பழைய புல்லட்டை ஒப்பிடும்போது, மீட்டியாரில் அதிர்வுகள் இல்லாத, ரிஃபைண்டு இன்ஜின்தான் பெரிய பலமாக இருந்தது. இந்த மீட்டியார் 650–யிலும் அதே ரிஃபைன்மென்ட்டை எதிர்பார்க்கலாம். இதில் இன்டர்செப்டரில் இருக்கும் அதே 650 பேரலல் ட்வின் சிலிண்டர் இன்ஜின்தான் இருக்கும். மீட்டியார் 350–ல் இல்லாத `சூப்பர்’ என்றொரு பெயரில் இது வரவிருக்கிறது. இந்த மார்ச்சில் வரவிருக்கும் மீட்டியார் 650–ஐப் பற்றிய மற்ற தகவல்கள் எதுவும் ராயல் என்ஃபீல்டு சொல்லவில்லை.

யெஸ்டி ரோடு கிங்
யெஸ்டி ரோடு கிங்

யெஸ்டி ரோடு கிங்

ரிலீஸ்: 2022 பாதியில்…

நீங்கள் 80’ஸ் கிட்ஸாக இருந்தால், நிச்சயம் யெஸ்டி உங்களுக்குத் தெரிந்திருக்கும். யெஸ்டி அப்போது ஒரு ப்ரஸ்டீஜியஸ் பைக். அதன் ‘தட்தட்தட்’ பீட் சத்தம் இளசுகளின் இதயத் துடிப்பு. க்ளாஸிக் லெஜண்ட் நிறுவனம் மூலம் அப்படிப்பட்ட யெஸ்டி கம்பேக் கொடுக்க இருக்கிறது. வட்ட வடிவ ஹெட்லேம்ப்ஸ், ஸ்போக் வீல்கள் என்று ரெட்ரோ மாடர்ன் க்ளாஸிக்காக இருக்கும் ரோடு கிங், டூயல் சேனல் ஏபிஎஸ், ஃபுல் எல்இடி லைட்கள் என்று வசதிகளிலும் தாராளமாக இருக்கும். புதிதாக வரவிருக்கும் ராயல் என்ஃபீல்டு ஹன்ட்டருக்குப் போட்டியாக இருக்கும் யெஸ்டி ரோடு கிங்.

யெஸ்டி ADV

ரிலீஸ்: 2022 பாதியில்…

ராயல் என்ஃபீல்டு ஹன்ட்டருக்கு, யெஸ்டி ரோடு கிங் போட்டி என்றால், ஹிமாலயனுக்கும் ஒரு போட்டி வேண்டுமே! அதற்காகத்தான் ஒரு அட்வென்ச்சர் பைக்கையும் கொண்டு வரவிருக்கிறது க்ளாஸிக் லெஜெண்ட்ஸ் நிறுவனம். பெராக்கில் இருக்கும் அதே இன்ஜின் சமாச்சாரங்களுடன் வரவிருக்கிறது யெஸ்டி அட்வென்ச்சர். அட்வென்ச்சர் என்பதால் லாங் டிராவல் சஸ்பென்ஷன், பின் பக்கம் மோனோஷாக், பின் பக்கத்தைவிடப் பெரிதாக இருக்கும் முன்பக்க வீல், டூயல் சேனல் ஏபிஎஸ், சீட்டிங் பொசிஷன், நல்ல கிரவுண்ட் கிளியரன்ஸ் என்று வரவிருக்கிறது இது. 2 லட்சம் எக்ஸ் ஷோரூம் விலைக்குள் வரும் யெஸ்டி அட்வென்ச்சர், கேடிஎம் 290 அட்வென்ச்சருக்கும் போட்டியாக இருக்கும்.

கவாஸாகி W175
கவாஸாகி W175

கவாஸாகி W175

ரிலீஸ்: 2022 மத்தியில்

2022–ம் ஆண்டு க்ளாஸிக் ஆண்டுபோல! ஸ்போர்ட்ஸ் லுக்கிங்குக்குப் பெயர் பெற்ற கவாஸாகியே, க்ளாஸிக் ஸ்டைலில் களமிறங்க முடிவெடுத்து விட்டது. இந்த W175 பைக்கின் ஃபர்ஸ்ட் லுக்கைப் பார்க்க நாமே ஆவலாக இருக்கிறோம். கவாஸாகியில் இருந்து வரும் அற்புதமான க்ளாஸிக் ஸ்டைல் பைக்காக இருக்கப் போகிறது W175. இந்தோனேஷியா மற்றும் தாய்லாந்து போன்ற கிழக்காசிய நாடுகளில் விற்பனையில் இருக்கும் மாடலை, அப்படியே சில ட்யூனிங் வேலைப்பாடுகள் செய்து இந்தியாவுக்குக் கொண்டு வரவிருக்கிறது கவாஸாகி. இதுவும் ராயல் என்ஃபீல்டு, யெஸ்டி போன்ற க்ளாஸிக் பைக்குகளுக்குப் போட்டியாக இருக்கும்.

பெனெல்லி லியோன்சினோ
பெனெல்லி லியோன்சினோ

பெனெல்லி லியோன்சினோ

ரிலீஸ்: 2022 மார்ச்

போன ஆண்டே மொத்தம் 7 பைக்குகளைக் கொண்டு வருவோம் என்று சொல்லியிருந்தது பெனெல்லி. அதில் 5 பைக்குகளை ஏற்கெனவே களமிறக்கிவிட்டது. இப்போது மீதமிருக்கும் 2 பைக்குகளில் முக்கியமானதாக இருக்கப் போகிறது லியோன்சினோ. அட, இதுவும் க்ளாஸிக் ஸ்டைல்தான். பெனெல்லி TRK251 அட்வென்ச்சரில் இருக்கும் அதே சிங்கிள் சிலிண்டர் 250சிசி இன்ஜின்தான் இந்த லியோன்சினோவிலும் இருக்கும். க்ளாஸிக் ஸ்டைலில் ஸ்போக் வீல்கள்தான் இருக்க வேண்டுமா? நச்சென்று அலாய் வீல்களில் வரவிருக்கிறது லியோன்சினோ. கிண்ணென்ற கட்டுமானத்தில், அசத்தலான பெர்ஃபாமன்ஸில் ஒரு இத்தாலிய பைக் வேண்டுமென்றால், மார்ச் வரை காத்திருங்கள்.

ராயல் என்ஃபீல்டு ஷாட்கன்
ராயல் என்ஃபீல்டு ஷாட்கன்

ராயல் என்ஃபீல்டு ஷாட்கன்

ரிலீஸ்: 2022 இறுதியில்

நீண்ட ஹேண்ட்பாருடன், முன்னிருத்தி வைக்கப்பட்ட ஃபுட் பெக்குகளுடன் ஹாலிவுட் ஹீரோ அர்னால்டு ஸ்டைலில் பைக் ஓட்ட வேண்டுமென்றால், பாபர் ஸ்டைல் பைக்குகள்தான் சரியான சாய்ஸ். நம் ஊரில் ஹார்லி, இந்தியன் மோட்டார் சைக்கிள், ட்ரையம்ப் பைக்குகளை விட்டால் பெரிய ஆப்ஷன்கள் இல்லை. ராயல் என்ஃபீல்டில் ஒரு பாபர் ஸ்டைல் வரவிருக்கிறது. அதுதான் ஷாட்கன். பாபர் ஸ்டைல் என்றால், அரைலிட்டர் இன்ஜினாவது இருந்தால்தான் கெத்து. தனது 650சிசி ப்ளாட்ஃபார்மில் இதைத் தயார் செய்யவிருக்கிறது ராயல் என்ஃபீல்டு. EICMA ஆட்டோ எக்ஸ்போவில் முதன் முதலாக ஒரு கான்செப்ட் பைக்கைக் காட்சிப்படுத்தியிருந்தது ராயல் என்ஃபீல்டு. அதைத்தான் இந்தியாவுக்குக் கொண்டு வரவிருக்கிறது. ShotGun 650 (SG 650) என்ற பேட்ஜிலேயே வரவிருக்கும் இதை இந்த ஆண்டு டிசம்பருக்குள் எதிர்பார்க்கலாம்.

கேடிஎம் RC390
கேடிஎம் RC390

கேடிஎம் RC390

ரிலீஸ்: மார்ச் 2022

கேடிஎம்–மில் இருந்து இந்த மாதமே RC390 பைக்கை ஓட்ட நமக்கு அழைப்பு வந்துவிட்டது. விற்பனையில் RC390–யைவிட கொஞ்சம் கட்டுமானத்திலும், ரைடிங் சொகுசிலும், பெர்ஃபாமன்ஸிலும் முன்னேற்றம் இருக்கும் என்கிறது கேடிஎம். பெரிய விண்ட்ஸ்க்ரீன்தான் இதன் அடையாளமாக இருக்கும். அதனால், முன்பைவிட காற்றில் வேகமாகப் பறக்கலாம். மற்றபடி ஸ்லிப்பர் க்ளட்ச், க்விக் ஷிஃப்டர், லீன் கார்னரிங் ஏபிஎஸ் என்று கேடிஎம் நிறுவனத்துக்கே உரிய ஏகப்பட்ட வசதிகளுடன் வரவிருக்கிறது RC390. ட்ராக் மற்றும் ரோடு என்று இரண்டிலுமே பறக்க ஒரு அட்வென்ச்சர் வேண்டுமென்றால், அடுத்த மாதம் வரை கேடிஎம் RC390–ன் டெஸ்ட் ரிப்போர்ட்டுக்குக் காத்திருங்கள்.

2022 டாப் 11 பைக்ஸ்!

கேடிஎம் 390 ADV

ரிலீஸ்: 2022 இறுதியில்

அட்வென்ச்சர் இல்லாத வருஷமா… அதுவும் கேடிஎம்மில்? அதே RC390 இன்ஜினைப் பொருத்தி ஒரு அட்வென்ச்சரையும் டெஸ்ட் செய்து வருகிறது கேடிஎம். கொஞ்சம் உயரமான ரைடிங் பொசிஷன், அதே உயரத்தில் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், ஏற்றி வைக்கப்பட்ட கிரவுண்ட் கிளியரன்ஸ், RC–யைவிட பக்கவாட்டில் இன்னும் பெரிதாக இருக்கும் விண்ட்ஸ்க்ரீன், ஆஃப்ரோடுகளைச் சமாளிக்க உதவும் லாங் டிராவல் சஸ்பென்ஷன் செட்அப், தடிமனான டயர்கள், 373 சிசி - சிங்கிள் சிலிண்டர் லிக்விட் கூல்டு இன்ஜின் என்று ரியல் அட்வென்ச்சருக்குத் தயாராக வருகிறது கேடிஎம் 390 ADV. அதாவது, உலகின் ஆபத்தான ரேஸான டக்கார் ராலிக்காகவே ரெடியாகிறதாம் கேடிஎம் 390 ADV.

ராயல் என்ஃபீல்டு ஹன்ட்டர்
ராயல் என்ஃபீல்டு ஹன்ட்டர்

ராயல் என்ஃபீல்டு ஹன்ட்டர்

ரிலீஸ்: 2022 மத்தியில்

ராயல் என்ஃபீல்டு ஒரு முடிவோடுதான் இருக்கிறது. அட்வென்ச்சர், க்ளாஸிக் என்று களமிறங்கும் RE, ஸ்க்ராம்ப்ளர் ஸ்டைலையும் விடவில்லை. ராயல் என்ஃபீல்டிலிருந்து வரவிருக்கும் ஸ்க்ராம்ப்ளர் பைக்தான் ஹன்ட்டர். மீட்டியார் 350 ப்ளாட்ஃபார்மில் ரெடியாகவிருக்கும் ஹன்ட்டர், பல இடங்களில் ஸ்பை ஷாட்டில் சிக்கிவிட்டது. 20.5 bhp பவர், 2.7kgm டார்க், 5 ஸ்பீடு கியர்பாக்ஸுடன் வருகிறது ஹன்ட்டர். நியூட்ரலாக பொசிஷன் செய்யப்பட்ட ஃபுட் பெக்குகள், டூயல் சேனல் ஏபிஎஸ், மீட்டியாரைப் போலவே கஸ்டமைஸ் ஆப்ஷன்கள் என்று வரவிருக்கும் ஹன்ட்டர், ஹோண்டா ஹைனெஸ் சிபி350, ஜாவா 42, யெஸ்டி ரோடு கிங் போன்ற பைக்குகளுக்குப் போட்டியாக சுமார் 2 லட்சம் விலையில் இருக்கலாம்.

ஹூஸ்க்வானா ஸ்வார்ட்பிலன் 125/ விட்பிலன் 125
ஹூஸ்க்வானா ஸ்வார்ட்பிலன் 125/ விட்பிலன் 125

ஹூஸ்க்வானா ஸ்வார்ட்பிலன் 125/ விட்பிலன் 125

ரிலீஸ்: 2022 மத்தியில்

ஹூஸ்க்வானா பைக்குகள் பெர்ஃபாமன்ஸுக் குப் பெயர் பெற்றவை. இப்போது 250சிசியில் மட்டும் இந்த பைக்குகளை வாங்க முடியும். கம்யூட்டர்களையும் டார்கெட் வைத்துவிட்டது ஹூஸ்க்வானா. ஆம், 125 சிசியில் வரவிருக்கின்றன ஸ்வார்ட்பிலன் மற்றும் விட்பிலன். கேடிஎம் டியூக்கில் இருக்கும் அதே 125 சிசி இன்ஜினில் வருகின்றன இரண்டும். இந்த ஸ்வீடன் நிறுவன பைக்குகளின் ஒரே குறை – விலை அதிகமாக இருக்கும் என்பதுதான். கம்யூட்டிங் செக்மென்ட் என்பதால், இதன் விலையைக் குறைவாக பொசிஷன் செய்தும், சர்வீஸிலும் கவனம் வைத்தால் ஹூஸ்க்வானா இந்தியாவில் எடுபடலாம்.

கவாஸாகி நின்ஜா 400
கவாஸாகி நின்ஜா 400

கவாஸாகி நின்ஜா 400

ரிலீஸ்: 2022 மார்ச்

இந்தியாவில் ஸ்போர்ட்ஸ் பைக் விரும்பிகளின் முக்கியமான சாய்ஸ் – கவாஸாகிதான். அந்த வகையில் 300 சிசி – 650சிசிக்கும் இடையில், 400 சிசியில் ஒரு ஸ்போர்ட்ஸ் நின்ஜாவைக் கொண்டு வரவிருக்கிறது கவாஸாகி. சூப்பர் பைக்கான ZX10-R பைக்கில் இருந்து இன்ஸ்பையர் செய்யப்பட்ட ட்வின் எல்இடி ஹெட்லைட்ஸ், முன் பக்க ஃபேரிங், அண்டர்பெல்லி பேன் என்று இதன் டிசைன் செம ஸ்போர்ட்டியாக இருக்கும். ட்வின் சிலிண்டர்கள்தான் கவாஸாகியின் பலமே! இதிலும் அப்படித்தான்; இதில் உள்ள பேரலல் ட்வின் சிலிண்டர் 399 சிசி இன்ஜின், 9,600rpm-ல் 49bhp பவரையும், 8,000rpm–ல் 3.72kgm டார்க்கையும் வெளிப்படுத்தும். அதனால், பெர்ஃபாமென்ஸில் தெறி காட்டும் இந்த நின்ஜா 400. என்ன, விலைதான் கவாஸாகியில் பர்ஸ் பழுக்கும். இந்த நின்ஜாவும் 4 – 4.75 லட்சம் விலைக்குள் வரலாம் என்கின்றன தகவல்கள்.