Published:Updated:

டாப்-5 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்!

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்ஸ்

லைசென்ஸ், ஆர்சி, இன்ஷூரன்ஸ் எதுவும் தேவையில்லை!

டாப்-5 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்!

லைசென்ஸ், ஆர்சி, இன்ஷூரன்ஸ் எதுவும் தேவையில்லை!

Published:Updated:
எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்ஸ்

ஷோரூமில் நிற்கும் ஒரு வாகனத்தை, ஆன்ரோட்டில்… அதாவது சாலையில் ஓட்ட வேண்டுமென்றால், அதற்கென்று பல விதிமுறைகள், இன்ஷூரன்ஸ், எக்ஸ்ட்ரா வரிகள் உண்டு. அதுதான் ஆன்ரோடு விலை. இதற்கு முக்கியமான விஷயம் – ரிஜிஸ்ட்ரேஷன் சர்ட்டிஃபிகேட் எனும் வாகனப் பதிவுச் சான்றிதழ். ஒரு வாகனத்தைப் பதிவு செய்வதற்கு முக்கியமான காரணமாகச் சொல்லப்படுவது வேகம். குறிப்பிட்ட வேகத்துக்கு மேல் செல்லும் வாகனங்களுக்கு நிச்சயம் பதிவுச் சான்றிதழும், இன்ஷூரன்ஸும், ஓட்டுநர் உரிமமும் அவசியம். குற்றங்களைத் தடுப்பதற்காக இந்தப் பதிவு விதிமுறை. அதனால்தான் நம்பர் ப்ளேட்.

இப்போது பெட்ரோல் விலையேற்றம் காரணமாக, பலரும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்/பைக்குகளுக்கு மாறி வருகிறார்கள். எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு மாசுச் சான்றிதழ் போன்றவை இல்லாவிட்டாலும் – ரிஜிஸ்ட்ரேஷன், ஓட்டுநர் உரிமம் என்பது மிக முக்கியம். இந்தச் சமாச்சாரங்கள் எதுவும் தேவைப்படாத பல எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மார்க்கெட்டில் உண்டு. அதாவது, இதை ஓட்ட டிரைவிங் லைசென்ஸ் தேவையில்லை; பதிவுச் சான்றிதழ் அவசியமில்லை; இன்ஷூரன்ஸ் இல்லை; ரொம்ப முக்கியமான ப்ளஸ் – குறைவான விலை. இவற்றின் டாப் ஸ்பீடு என்பதே அதிகபட்சம் 30 கிமீ–யாகத்தான் இருக்கும். அப்படிப்பட்ட ஸ்கூட்டர்கள் என்னனு பார்க்கலாம்!

ஒகினாவா R30
ஒகினாவா R30

ஒகினாவா R30

விலைரூ.58,950

பேட்டரி1.25Kw லித்தியம் அயன்

டாப் ஸ்பீடு30 கிமீ

சார்ஜிங் நேரம்4– 5 மணி நேரம்

ரேஞ்ச் சுமார் 60 கிமீ

இந்தியாவின் விலை குறைவான லித்தியம் அயன் பேட்டரி ஸ்கூட்டர்களில் ஒகினாவா நிறுவனத்தின் R30 ஸ்கூட்டர், முக்கியமான ஒன்று. செம ஸ்டைலிஷ் ஆகவும், சில பல கலர் வேரியன்ட்களிலும் கிடைக்கிறது ஒகினாவா R30. இதில் டிஜிட்டல் மீட்டர் இருப்பது சூப்பர். இரண்டு பக்கமும் 10 இன்ச் ட்யூப்லெஸ் டயர்கள் கொடுத்திருக்கிறார்கள். அட, ஆக்டிவா 6G போன்ற ஸ்கூட்டர்களே இப்போதுதான் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க் சஸ்பென்ஷனுக்கு வந்திருக்கிறது. R30–ல் ஸ்டாண்டர்டாகவே இந்த வசதி இருக்கிறது.

இதில் இரண்டு பக்கமும் E-ABS (Electronic Assisted Braking System) பிரேக்கிங் சிஸ்டம் பொருத்தியிருக்கிறார்கள். அதிலும் ரீ–ஜெனரேட்டில் பிரேக்கிங் வசதியோடு! இதனால், நீங்கள் பிரேக் பிடிக்கப் பிடிக்க, ஆற்றல் வீணாகாமல் பேட்டரியில் சேமித்துக் கொள்ளும். இதிலிருக்கும் 250Watt எலெக்ட்ரிக் மோட்டார் மற்றும் 1.25Kw லித்தியம் அயன் பேட்டரி – அதிகபட்சமாக இந்த ஸ்கூட்டரை 30 கிமீ வேகத்தில் இழுக்கின்றன. இதை சார்ஜ் போட 4 – 5 மணி நேரம் வரை எடுப்பதாகச் சொல்கிறார்கள் இதன் வாடிக்கையாளர்கள். இதன் ரேஞ்ச் 60 கிமீ என்று ஒகினாவா சொல்கிறது. ‘55 கிமீதான் வருது’ என்பவர்களும் இருக்கிறார்கள். ‘64 கிமீ வருது’ என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள். 60,000 ரூபாய்க்குள் இந்த ஒகினாவா R30–யை வாங்கிவிடலாம்.

ஹீரோ எலெக்ட்ரிக் ஃப்ளாஷ் E2
ஹீரோ எலெக்ட்ரிக் ஃப்ளாஷ் E2

ஹீரோ எலெக்ட்ரிக் ஃப்ளாஷ் E2

விலைரூ.51,600

பேட்டரி48V/28Ah லித்தியம் அயன்

டாப் ஸ்பீடு 25 கிமீ

சார்ஜிங் நேரம்4–5 மணி நேரம்

ரேஞ்ச் சுமார் 65 கிமீ

இந்தியாவின் விலை குறைந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக இதைச் சொல்லலாம். அதாவது, ஒரு லெட் ஆசிட் பேட்டரி ஸ்கூட்டரின் விலைக்கு லித்தியம் அயன் பேட்டரி ஸ்கூட்டர் கிடைக்கிறது என்றால், ஹீரோவின் எலெக்ட்ரிக் ஃப்ளாஷ் E2 ஸ்கூட்டராகத்தான் இருக்கும். முன் பக்க ஆப்ரானில் கார்கோவுக்கு அதிக இடவசதி கொடுத்திருக்கிறார்கள். இதன் எடை மிகவும் குறைவு என்பதால், (சுமார் 70 கிலோ) ஹேண்ட்லிங்குக்கு ரொம்பவும் எளிதாக இருக்கும். இதன் ட்யூப்லெஸ் டயர்கள் ஓகே! டிஸ்க் பிரேக்ஸ் இல்லை. எல்லாமே டிரம்தான். ஆனால், இதில் CBS (Combined Braking System) வசதி உண்டு. இதன் கிரவுண்ட் கிளியரன்ஸ் 165 மிமீ என்பதால், ரைடிங்கில் ஓரளவு கலக்கும் ஃப்ளாஷ் E2.

மற்றபடி வழக்கம்போல், இதிலும் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க் சஸ்பென்ஷனும், ஸ்ப்ரிங் லோடட் ஷாக் அப்ஸார்பரும் கொடுத்திருக்கிறார்கள். இதிலுள்ள 250W எலெக்ட்ரிக் மோட்டார், உங்களை 25 கிமீ வேகத்துக்குள் பயணிக்க வைக்கும். இந்த 48V/28Ah லித்தியம் அயன் பேட்டரியில், ரீ–ஜெனரேட்டிவ் பிரேக்கிங் சிஸ்டம் இல்லை என்பது மைனஸ். இதுவே விலை குறைவுதான். இருந்தாலும் இதில் லெட் ஆசிட் பேட்டரி மாடல் தற்போது விற்பனையில் இருக்கிறதா என்று தெரியவில்லை. மேலும், வாரன்ட்டி போன்ற விஷயங்களில் வாடிக்கையாளர்களைக் கவர்கிறது ஹீரோ.

ஹீரோ எலெக்ட்ரிக் ஆப்டிமா LX
ஹீரோ எலெக்ட்ரிக் ஆப்டிமா LX

ஹீரோ எலெக்ட்ரிக் ஆப்டிமா LX

விலைரூ.58,500

பேட்டரி48V/28Ah லித்தியம் அயன்/லெட் ஆசிட்

டாப் ஸ்பீடு 25 கிமீ

சார்ஜிங் நேரம்5 மணி நேரம்

ரேஞ்ச்

சுமார் 50 கிமீ

நீங்கள் ஹீரோ ஷோரூமுக்குள் நுழைந்தால், முதலில் உங்கள் கண்களுக்கு ஆப்டிமாவைத்தான் காட்டுவார்கள். ஆப்டிமாவில் LX வேரியன்ட்தான், ஒரு குடும்பத் தலைவன்/தலைவிக்குத் தொல்லை தராத, மிகவும் விலை குறைந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர். சிவப்பு, கிரே, புளூ, வெள்ளை என நான்கு கலர்களில் கிடைக்கிறது ஆப்டிமா LX. இதில் லித்தியம் அயன் பேட்டரி மாடல் தவிர்த்து, 45,500 ரூபாய்க்கு லெட் ஆசிட் பேட்டரி மாடலும் விற்பனையில் உண்டு.

இதன் கெர்ப் எடை 86 கிலோ என்பது இதற்கு ஓகே! சிட்டிக்குள் மார்க்கெட் போக, குழந்தைகளைப் பள்ளியில் டிராப் செய்ய என இதைப் பயன்படுத்தலாம். வசதிகளைப் பொருத்தவரை ஹீரோ, IC ஸ்கூட்டர்களுக்கு இணையாகக் கலக்க ஆரம்பித்துவிட்டது. இதில் LED ஹெட்லைட், பேக்லிட்டோடு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், ஸ்டைலிஷ் ஆன அலாய்வீல்கள் போன்ற ரிம் வீல் எல்லாம் கொடுத்திருக்கிறார்கள். இதிலிருக்கும் 48V/28Ah பேட்டரியை சார்ஜ் செய்ய 5–5.30 மணி நேரம் பிடிக்கும். இதன் ரேஞ்ச் 60 கிமீ–க்கு மேல் க்ளெய்ம் செய்யப்பட்டாலும், இதன் ரியல் டைம் ரேஞ்ச் என்பது 50 கிமீ–க்குள் இருக்கும். தாய்மார்களுக்கு ஏன் இது வசதியான ஸ்கூட்டர் என்று ரெக்கமண்ட் செய்தோம் என்றால், எவ்வளவு ஆக்ஸிலரேட்டர் முறுக்கினாலும், 25 கிமீ–க்கு மேல் போக முடியாது ஆப்டிமாவில். ஸ்கூட்டருக்கும் பேட்டரிக்கும் ஹீரோ 3 ஆண்டுகள் வாரன்ட்டி கொடுத்திருப்பது ரொம்பவும் வசதி.

ஆம்பியர் ரியோElite & Elite Plus
ஆம்பியர் ரியோElite & Elite Plus

ஆம்பியர் ரியோElite & Elite Plus

விலைரூ.55,000 - 64,000

பேட்டரி48V/24Ah லித்தியம் அயன்/லெட் ஆசிட்

டாப் ஸ்பீடு28 கிமீ

சார்ஜிங் நேரம் 4–5 மணி நேரம்

ரேஞ்ச் சுமார் 65 கிமீ

முழுக்க முழுக்க ஒரு தமிழ்நாட்டுத் தயாரிப்பு வேண்டும் என்பவர்களுக்கான சரியான சாய்ஸ், ஆம்பியர் எலெகட்ரிக் ஸ்கூட்டர். கோவையில்தான் தயாரிக்கப்படுகிறது. ராணிப்பேட்டையிலும் ஒரு ப்ளான்ட் வருவதாகத் தகவல். இதிலேயே விலை குறைவான (ரூ.42,000) லெட் ஆசிட் பேட்டரி கொண்ட மேக்னஸ் ப்ரோ, V48 போன்ற மாடல்களும் உண்டு. 250W BLDC மோட்டார் கொண்ட இதன் பேட்டரியை 4–5 மணி நேரங்களில் சார்ஜ் செய்துவிட முடியும்.

பைக்குகளிலேயே இல்லாத ரிவர்ஸ் எடுக்கும் வசதி இதில் உண்டு. USB போன் சார்ஜிங் பாயின்ட்டும் இருக்கிறது. அலாய் வீல்கள், ட்யூப்லெஸ் டயர்கள், ஏகப்பட்ட வண்ணங்களோடு பார்ப்பதற்கு ஹோண்டாவின் டியோ போல செம ஸ்டைலாக இருக்கிறது. ரியோ எலீட் ப்ளஸ்–ன் எடை சுமார் 86 கிலோதான் என்பதால், ஹேண்ட்லிங் செம ஈஸியாக இருக்கும். LED ஹெட்லைட்/டெயில்லைட், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் என பார்ப்பதற்கு ப்ரீமியமாக இருந்தாலும், ப்ளாஸ்டிக் பாகங்களில் மட்டும் கொஞ்சம் தரம் வேண்டும். கூடவே, கொஞ்சம் வெயிட்டிங் பீரியடிலும் கவனம் செலுத்த வேண்டும் ஆம்பியர்.

ஒகினாவா லைட்
ஒகினாவா லைட்

ஒகினாவா லைட்

விலைரூ.59,950

பேட்டரி1.25kWh/250W லித்தியம் அயன்

டாப் ஸ்பீடு25 கிமீ

சார்ஜிங் நேரம் 4–5 மணி நேரம்

ரேஞ்ச் சுமார் 60 கிமீ

ஒகினாவாவின் லைட் ஸ்கூட்டரைப் பார்த்தால், சட்டென வெஸ்பாவின் டிசைன்தான் ஞாபகத்துக்கு வருகிறது. அந்தளவு க்ளாஸிக் லுக்கில் அசத்துகிறது லைட். சிலருக்கு இது பிடிக்கலாம்; பலருக்குப் பிடிக்காமலும் போகலாம். ஸ்கூட்டர் ஃபங்கியான டிசைனில் இருந்தாலும், மார்டனான அம்சங்களைச் சேர்க்க மறக்கவில்லை ஒகினாவா. ஹெட்லைட், டெயில் லைட், இண்டிகேட்டர்கள் என எல்லாமே LED மயம். இதன் ஹெட்லைட்டை யமஹா ரே, ஹோண்டா டியோ போன்ற ஸ்கூட்டர்களில் இருப்பதுபோல், முன் பக்க ஆப்ரானில் செதுக்கி இருப்பதும் ஸ்டைலாகத்தான் இருக்கிறது. சைடு வியூ மிரர்கள் செங்குத்தாக இருப்பதும் புதுமை. இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், டிஜிட்டலில் மிளிர்கிறது.

ஒகினாவா லைட், மற்ற டெக்னிக்கல் அம்சங்கள் அனைத்திலும் R30 ஸ்கூட்டர்தான். முன் பக்கம் டெலிஸ்கோப்பிக் சஸ்பென்ஷனும், பின் பக்கம் ஸ்ப்ரிங் லோடட் ஷாக் அப்ஸார்பரும் கொடுத்திருக்கிறார்கள். ஓட்டுதலும் நன்றாகவே இருக்கிறது. முன் பக்கம் டிஸ்க்கும், பின் பக்கம் டிரம் பிரேக்கும் இருக்கின்றன. இதிலும் E-ABS சிஸ்டம் உண்டு..

இதில் 250Watt கொண்ட BLDC எலெக்ட்ரிக் மோட்டார் இருக்கிறது. இதைச் செயல்படுத்துவதற்காக 1.25kWh/250W சக்தி கொண்ட லித்தியம் அயன் பேட்டரி கொடுத்திருக்கிறார்கள். சார்ஜ் போட வேண்டும் என்றால், பேட்டரியை வெளியே எடுத்துக் கொள்ளலாம். சிங்கிள் சார்ஜில் 60 கிமீ வரை பயணிக்க முடிகிறது என்கிறார்கள் இதைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள். அதேபோல் சிங்கிள் சார்ஜிங்குக்கு 4 – 5 மணி நேரம் வரை ஆகும். இதன் டாப் ஸ்பீடு 25 கிமீ. சுமார் 60,000 ரூபாயில் அலுங்காமல் குலுங்காமல் 25 கிமீ–ல் பயணிக்க, ஒகினாவா லைட், ரைட் சாய்ஸ்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism