ஆசிரியர் பக்கம்
கார்ஸ்
Published:Updated:

“இங்கே நாலு மணிக்கெல்லாம் இருட்டிடும்!”

பைக்
பிரீமியம் ஸ்டோரி
News
பைக்

இந்தியாவின் கசோல் பனிமலையில் ட்ரெக்கிங் செய்த கோட்டி

பயணம்: அனுபவம்

ரு திரைப்படத்தில், ``நீங்க வீக் எண்டில் என்ன பண்ணுவீங்க?’ என்று மயில்சாமியிடம் கேட்கும்போது, ``ஜாலியா ஊர் சுற்றுவேன்’’ என்பார்.

``அப்போ வீக் டேஸில் என்ன பண்ணுவீங்க?’’ என்றால், ``வீக் எண்டுக்காக வெயிட் பண்ணுவேன்’’ என்பார். இது மயில்சாமிக்குப் பொருந்துகிறதோ இல்லையோ, கோட்டீஸ்வரன் எனும் கோட்டிக்குப் பொருந்தும்.

கோட்டீஸ்வரன்
கோட்டீஸ்வரன்

சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் கோட்டீஸ்வரன், பயணப் பிரியர் இல்லை; பயண வெறியர். 2011-ல் கோட்டீஸ்வரன் வாங்கிய யமஹா பைக்கின் டிஜிட்டல் ஸ்பீடோ மீட்டரைக் கவனித்தால், கிட்டத்தட்ட ஒன்றே முக்கால் லட்சம்

கி.மீ-யைத் தாண்டி எகிறிப் போகத் துடித்துக் கொண்டிருந்தது. அலுவலக கம்யூட்டிங் தவிர்த்து, சனி-ஞாயிறுப் பயணங்களை வைத்து மட்டும் கணக்கிட்டால், ஆண்டுக்கு சுமார் 15,000 கி.மீ ரவுண்ட் அடிக்கிறார்.

பயணத்தின் மீதும், பைக்கின் மீதும் இருந்த காதலில், தனது யமஹா ஆர்15-க்கு ஃப்ரண்ட்ஸ்’ எனும் நெட்ஃப்ளிக்ஸ் சீரியலில் வரும் ரேச்சலின் பெயரைச் சூட்டி, ``என் ரேச்சல்தான் எனக்கு எல்லாமே’’ என்று புளகாங்கிதம் அடைந்து கொண்டே இருக்கிறார். வீக் எண்ட் பயணம் என்றால், சென்னை-கன்னியாகுமரி, பெங்களூர், ஆந்திரா - இப்படி நம் ஊர், பக்கத்துக்கு மாநிலங்களெல்லாம் குறைவாகத்தான் இருக்கும். சென்னை-மும்பை, சென்னை-ஒரிஸா, சென்னை-கல்கத்தா, சென்னை-அருணாச்சலப் பிரதேசம் - இப்படி தூரத்து மாநிலங்கள்தான் கோட்டியின் டார்கெட்.

பைக்
பைக்

``இந்த கொரோனா லாக் டவுனுக்கு முன்னால்தான் சிக்கிம் போயிட்டு வந்தேன்!’’ என்று அசால்ட்டாகச் சொல்கிறார். ‘Lazyrider46’ எனும் ஹாஸ்டாக்கில் தனது பயண அனுபவங்களையும், புகைப்படங்களையும் சோஷியல் மீடியாக்களில் பகிரத் தவறுவதில்லை கோட்டி.கிட்டத்தட்ட இந்தியாவின் எல்லா மாநிலங்களையும், அனைத்துக் குக்கிராமங்களையும் தனது ரேச்சலிலேயே கவர் செய்துவிட்டார் கோட்டி. இதுபோக, பேக் பேக்கை மாட்டிக்கொண்டு, இந்தியாவின் இண்டு இடுக்குகளெல்லாம் `Man Vs Wild -பியர் கிரில்ஸ்’ போல் ட்ரெக்கிங்கும் அடித்து வந்துவிட்டார்.

பயணம்: அனுபவம்
பயணம்: அனுபவம்

``இந்தியாவிலேயே உங்களுக்குப் பிடிச்ச இடம் எது?’’ என்றால், சட்டென பதில் வருகிறது கோட்டியிடம் இருந்து. ``சிக்கிம் ரொம்பப் பிடிக்கும். கடல் மட்டத்தில் இருந்து 18,000 அடி உயரத்தில் இருக்கும் Gurudongmar ஏரி, அடர்ந்த காடு, கொடூரமான வனவிலங்குகள், ஆழமான பனிமலை, அன்பான மக்கள், பள்ளத்தாக்குகள், பக்கவாட்டில் ஏரிகள், நதிகள்னு செமையான இடம். மால், தியேட்டர் போன்ற கமர்ஷியல் அம்சங்கள் எதுவும் இல்லாத, இயற்கைக்கு ரொம்ப நெருக்கமான இடம் சிக்கிம். இங்கே பெட்ரோல் பங்க்கூட என் கண்ணில் படலைன்னு சொன்னா நம்புவீங்களா? ஒரு தடவை நீங்க சிக்கிம் போயிட்டீங்கன்னா, திரும்பத் திரும்ப சிக்கிம்தான் போயிக்கிட்டே இருப்பீங்க!

பைக்
பைக்

அப்புறம், கசோல்னு ஒரு இடம். இமாச்சலப் பிரதேசம் தாண்டி பார்வதி வேலி அப்படிங்கிற இடத்தில் இருக்கு. யப்பா… செமையான இடம். இதை இந்தியாவின் இஸ்ரேல்னு சொல்வாங்க. அப்படியே பனிமலைகளுக்கு நடுவில் பையை மாட்டிக்கிட்டு ட்ரெக்கிங் போனது, என் வாழ்க்கையில் த்ரில்லிங்கான பயணம். இங்கே ஒவ்வொரு அடியும் பார்த்துத்தான் வைக்கணும். சிக்கிம், இயற்கைக்கு ரொம்ப நெருக்கம் என்றால், கசோல் – இயற்கையோட ஆரம்பமே இதுதான் போல இருக்கும். பனிமலைகளுக்கு நடுவில் நடந்துக்கிட்டே, பார்வதி ஆறு ஓடும் சத்தத்தைக் கேட்டபடி நடந்தால்... அடடா..கடவுள்கூட உறவாடுறது போலவே இருந்தது. இங்கே மாலை 4 மணிக்கெல்லாம் இருட்டிடும். நடுக்காட்டில் பைக் நின்னது, சுத்திலும் பனிமலையில் வழி தெரியாமல் மாட்டியதுனு ஏகப்பட்ட த்ரில்லிங் அம்சங்கள் கசோலில் உண்டு.’’ என்று கோட்டி சொல்லும்போதே கசோலுக்கோ, சிக்கிமுக்கோ வண்டியை விட வேண்டும்போல் இருந்தது.

``ஒரே இடத்தில் நான் எப்போதுமே பிரேக்டவுன் ஆகி தங்கினதே இல்லை. இந்த லாக்டவுன் என்னை வெறியேத்திடுச்சு. லாக்டவுன் முடிஞ்சவுடனே மேகாலயா, சில்லாங்குக்கு ரெடி பண்ணிக்கிட்டிருக்கேன் என் ரேச்சலை!’’ என்று நம்மையும் வெறியேற்றுகிறார் கோட்டி.

பைக் பயணம் போறீங்களா?

இதைக் கவனிங்க!

பயணம், எல்லோருக்கும் பிடிக்கும். ஆனால், எல்லாமே தெரிந்திருக்காது. அதுவும் இந்தியாவின் பிற மாநிலங்களுக்கு பைக்கில் போவதில், எக்கச்சக்க விஷயங்களைக் கவனிக்க வேண்டும். அதற்கு டிப்ஸ் சொல்கிறார் கோட்டி.

  • வழக்கம்போல் பயணம் என்றால், ஹெல்மெட், ஜாக்கெட் போன்ற ரைடிங் கியர் இல்லாமல் பைக்கை ஸ்டார்ட் செய்யாதீர்கள்.

  • `க்ளோவ்ஸ்லாம் எனக்குத் தேவையில்லை’ என்பவர்களை, பனிப்பிரதேசத்தில் பைக் ஓட்ட வைக்க வேண்டும். க்ளோவ்ஸ் இல்லாமல் பைக் ஓட்டினால், விரல்களில் ரத்த ஓட்டம் இல்லாமல், ஆக்ஸிலரேட்டரைத் திருகக்கூடத் தெம்பிருக்காது.

  • திட்டமிடல் ரொம்ப அவசியம். அதைவிட, உங்கள் பைக்கைப் பற்றிய அறிவு கொஞ்சமாவது இருக்க வேண்டும். அட்லீஸ்ட், ஒரு பிரேக்டவுன் சமயத்தில் பைக்கின் வீலைக் கழற்றி மாட்டவாவது தெரிந்திருக்க வேண்டும். இதற்கு பைக்கில் டூல் கிட் எப்போதும் அவசியம்.

  • கார்புரேட்டர் மாடல் என்றால், ஸ்பார்க் பிளக் போன்றவை எக்ஸ்ட்ரா கையில் வைத்திருங்கள். மற்றபடி Fi போன்ற எல்லா பைக்குக்கும் ஆக்ஸிலரேட்டர் கேபிள், க்ளட்ச் கேபிள், ஏர் ஃபில்டர் போன்றவை எக்ஸ்ட்ரா வைத்திருங்கள்.

  • இந்தியாவை மொத்தமாகச் சுற்ற வேண்டும் என்றால், கல்கத்தா வரை ரயிலோ, விமானப் பயணமோ மேற்கொண்டு விடுங்கள். என்னுடைய சாய்ஸ் சிலிகுரி. கல்கத்தாவில் சிலிகுரி எனும் இடம்தான், பைக் வாடகைக்குக் கிடைக்கும் பிரபலமான இடம். அங்கிருந்து நேபாளம், பூட்டான், இமாச்சல், சிக்கிம், கசோல், மேகாலயா என்று இந்தியாவின் எந்த மூலைக்கும் பைக்கை வாடகைக்கு எடுத்துச் சுற்றலாம்.

  • ராணுவப் பகுதிக்குச் செல்பவர்கள் – உங்கள் ஆதார், ரேஷன், டிரைவிங் லைசென்ஸ், பான்கார்டு போன்ற ஐடென்ட்டி கார்டுகளை மறக்காதீர்கள்.

  • சில இடங்கள் நாலரை மணிக்கெல்லாம் இருட்டிவிடும். எனவே, பயணத்தை 6 மணி வரையெல்லாம் தள்ளி வைக்காதீர்கள். பைக்குகளில் சேடில் பேக், எக்ஸ்ட்ரா பெட்ரோல் போன்றவை கைவசம் வைத்திருக்க மறக்காதீர்கள்.