Published:Updated:

வேறு எந்த ஸ்கூட்டரிலும் இல்லாத வசதி இந்த ஜூபிட்டரில்!

ஃபர்ஸ்ட் ரைடு: டிவிஎஸ் ஜூபிட்டர் 125

பிரீமியம் ஸ்டோரி

விலை: சுமார் 95,000 – 1 லட்சம் வரை (ஆன்ரோடு)

ப்ளஸ்: வசதிகள், இன்ஜின் ரிஃபைன்மென்ட், இடவசதி

மைனஸ்: பெப்பியான ரைடிங் எக்ஸ்பீரியன்ஸ் இல்லை

ஃபேக்டரி போகும்வரை நமக்கே தெரியாது; என்ன பைக் ஓட்டப் போகிறோம் என்று. அட, பைக்கா ஸ்கூட்டரா என்றே தெரியாது. ஒரு ஸ்லீப்பர் செல் மாதிரி அத்தனை சஸ்பென்ஸாக நம்மை தனது ஃபேக்டரிக்கு அழைத்துச் சென்றது டிவிஎஸ். ‘என்னவா இருக்கும்’ என்ற சிந்தனையில் காலை இட்லிகூட இறங்கவில்லை. ஆனால், நாம் நினைத்தது சரியாகத்தான் போனது; அது ஜூபிட்டர் ஸ்கூட்டரின் 125 சிசி மாடல். ஒருவழியாக ஜூபிட்டரை டிவிஎஸ் ட்ராக் முழுதும் ஓட்டிப் பார்த்த பிறகுதான் ஆசுவாசமாக இருந்தது.

ஜூபிட்டரின் 125 சிசி எப்படி இருக்குனு பார்க்கலாம்.

டிசைன்

விற்பனையில் இருக்கும் 110 சிசி ஜூபிட்டரைப்போல்தான் இருக்கிறது 125சிசியும். ஒற்றைக் கண்ணில் மேலோட்டமாகப் பார்த்தால் தெரியவில்லை. ஆனால் உற்றுப் பார்த்தால் பல மாற்றங்களைக் கண்டுபிடிக்கலாம். பேர் பாடியில் ஒரு ஜிகினா பனியன், கூலிங் கிளாஸ் போட்டது மாதிரி சில சின்னச் சின்ன மாற்றங்கள் மட்டும். 110சிசி ஜூபிட்டரில் ஹாலோஜன் ஹெட்லைட்ஸ் இருக்க, இதில் முழுக்க LED ஹெட்லைட்ஸ் ஆக்கியிருக்கிறார்கள். இது ஸ்டாண்டர்டாகவே கொடுக்கிறார்கள். இதில் டிஜி அனலாக் மீட்டர் இருந்தது. ஏகப்பட்ட தகவல்கள் இருந்தன. விண்ட் ஸ்க்ரீன் இல்லை. காற்று முகத்தில் அடிக்காமல் இருக்க விண்ட் ஸ்க்ரீன் வேண்டுமென்றால், Classic மாடலுக்குத்தான் போக வேண்டும்.

வேறு எந்த ஸ்கூட்டரிலும் இல்லாத வசதி இந்த ஜூபிட்டரில்!இதில் டிவிஎஸ் குறிப்பிடும் இன்னொரு முக்கியமான அம்சம் – MetalMax. அதாவது, பாடியில் முன்/பின் பக்க ஃபெண்டர், பக்கவாட்டுப் பகுதி, ஆப்ரான் போன்ற ஏகப்பட்ட விஷயங்கள் உலோகம் கொண்டு தயாரித்திருக்கிறார்கள். சில ஃபைபர் மெட்டீரியல் கொண்ட ஸ்கூட்டர்கள் க்ராஷின்போது பாதிப்பு அதிகம் இருக்கும். இந்த ஜூபிட்டரில் அப்படி இருக்காது. ஆப்ரானில் DRL பொருத்தியிருந்தார்கள். டெயில் லைட் மொத்த ஸ்கூட்டரையும் ஆக்கிரமித்திருந்தது. பின் பக்க கிராப் ரெயிலில் அதென்ன சின்னதாக? அட, ரெஃப்ளெக்டர்! இது புதுமை. மற்றபடி 12 இன்ச் அலாய் வீல்களும், ஹெட்லைட், சைடு பேனல், எக்ஸாஸ்ட் ஆகியவற்றில் க்ரோம் ஃபினிஷுங்கும் நல்ல ப்ரீமியம் லுக் கொடுக்கின்றன.

ஓவர்ஆலாக ஒரு நல்ல ஃபேமிலி லுக்கோடு களையாகவே இருக்கிறது ஜூபிட்டர் 125.

பயன்பாடு, வசதிகள்

பிராக்டிக்காலிட்டியில்தான் ஜூபிட்டருக்கு 10–க்கு 9 மார்க் கொடுக்கலாம்.USB சார்ஜரில் ஆரம்பிக்கிறது டிவிஎஸ்–ன் கைவண்ணம். இது டாப் எண்டான ZX மற்றும் Classic வேரியன்ட்களில்தான். Standard மாடலில் ஆப்ஷனலாகப் பொருத்திக் கொள்ளலாம். அந்த போனை வைத்துக்கொள்ள முன் பக்க ஆப்ரானில் க்ளோவ் பாக்ஸ் – அதுவே 3 லிட்டர் இடவசதி இருந்தது. ஆனால் திறந்த க்ளோவ்பாக்ஸ்தான். போன் சார்ஜ் போடும்போது கவனம் தேவை. ஆப்ரானில் கூடுதலாக பை மாட்டுவதற்கு ஒரு கொக்கியும் இருந்தது.

புளூடூத் கனெக்ட்டிவிட்டியும் கொடுக்கிறார்கள். இதுவும் டாப் எண்டில்தான். டிஜி–அனலாக் மீட்டரில் பல தகவல்கள். மைலேஜ் மீட்டரும் இருந்தது. நம் ஓட்டுதலுக்கு ஏற்ப அது தகவல் கொடுக்கிறது. சைடு ஸ்டாண்ட் இன்ஜின் கட் ஆஃப் வசதியும் இருந்தது. இதில் ஆட்டோ ஸ்டார்ட் ஸ்டாப் வசதியும் கொடுத்திருக்கிறார்கள்.

முக்கியமாக பூட் ஸ்பேஸில்தான் சொல்லியடிக்கிறது ஜூபிட்டர். இதன் அண்டர் சீட் ஸ்டோரேஜில் 33 லிட்டர் இடவசதி! வாவ்! இதில் இரண்டு ஹெல்மெட்களை வைத்துப் பார்த்தேன். ஃபிட் ஆகிவிட்டது. அப்புறம், பெட்ரோல் நிரப்புவதற்கு சீட்டை விட்டு இறங்கத் தேவையில்லை என்பதைத் தாண்டி, அந்த ஃப்யூல் ஃபில்லிங் கேப்பை முன் பக்கமே வைத்திருக்கிறார்கள் என்பதற்காக டிவிஎஸ் டிசைன் டீமுக்கு ஒரு சல்யூட் அடிக்கலாம். ஆனால், அதே 5 லிட்டர் டேங்க் கொள்ளளவுதான். 2 லிட்டராவது கூட்டியிருக்கலாம். வரப் போகும் ஓலா ஸ்கூட்டரைத் தவிர, எந்த ஸ்கூட்டரிலும் இந்த வசதி இல்லை. வெல்டன் டிவிஎஸ்.

33லிட்டர் அண்டர் சீட் ஸ்டோரேஜ்... இரண்டு ஹெல்மெட் வைக்கலாம்.
33லிட்டர் அண்டர் சீட் ஸ்டோரேஜ்... இரண்டு ஹெல்மெட் வைக்கலாம்.
வேறு எந்த ஸ்கூட்டரிலும் இல்லாத வசதி இந்த ஜூபிட்டரில்!
வேறு எந்த ஸ்கூட்டரிலும் இல்லாத வசதி இந்த ஜூபிட்டரில்!
மல்ட்டி ஃபங்ஷன் கீ ஸ்லாட்...
மல்ட்டி ஃபங்ஷன் கீ ஸ்லாட்...
ஃப்யூல் டேங்க் முன் பக்க ஏப்ரானின் உள்ளே இருக்கிறது. சீட்டை விட்டு இறங்கத் தேவையில்லை.
ஃப்யூல் டேங்க் முன் பக்க ஏப்ரானின் உள்ளே இருக்கிறது. சீட்டை விட்டு இறங்கத் தேவையில்லை.
டிஜி அனலாக் மீட்டரில் மைலேஜ் உட்பட பல தகவல்கள். சைடு ஸ்டாண்ட் இன்ஜின் கட் ஆஃபும் உண்டு.
டிஜி அனலாக் மீட்டரில் மைலேஜ் உட்பட பல தகவல்கள். சைடு ஸ்டாண்ட் இன்ஜின் கட் ஆஃபும் உண்டு.இன்ஜின், பெர்ஃபாமன்ஸ், மைலேஜ்

ஜூபிட்டரின் இதயமே மாறிவிட்டது. ஆம், இதில் இருப்பது 124.8 சிசி சிங்கிள் சிலிண்டர் ஏர்கூல்டு இன்ஜின். என்டார்க் 125 மற்றும் ரெய்டரில் இருக்கும் அதே இன்ஜின்தான். ஆனால், ‘அதே இன்ஜின்னு சொல்லாதீங்க’ என்று செல்லமாக எங்களிடம் கடிந்து கொண்டது டிவிஎஸ். ஜூபிட்டருக்காக இதில் ஏர்பாக்ஸில் இருந்து வால்வ் செட்–அப் வரை ஏகப்பட்ட வேலை பார்த்துள்ளதாம். அந்த இரண்டிலும் 3 வால்வ் இருக்க, இதில் ஒரு வால்வைக் குறைத்தது ஏனோ எனும் கேள்விக்கு, சட்டென பதில் வருகிறது டிவிஎஸ்ஸிடம் இருந்து: மைலேஜுக்காகத்தான்! ஆம்! காரணம், இது ஒரு பக்கா கம்யூட்டிங் ஸ்கூட்டராச்சே! ஆனால், டிவிஎஸ் ட்ராக்கில் மட்டுமே ஓட்டியதால், இதன் துல்லியமான மைலேஜைக் கண்டுபிடிக்க முடியுவில்லை.

வழக்கம்போல் பவர் மற்றும் எக்கோ மோடுகள் இருந்தன. எக்கோ மோடிலேயே பவர் டெலிவரி நன்றாக லீனியராகவே இருக்கிறது. வெறித்தனமான பெர்ஃபாமன்ஸ் என்று சொல்ல முடியாது. ஆனால், கம்யூட்டிங் பிரியர்களுக்கு இது போர் அடிக்காது. இதன் டாப் ஸ்பீடு டெஸ்ட்டிங்கில் ஜூபிட்டரை ஃபுல் த்ராட்டில் செய்து பார்த்தோம். 90 கிமீ வரை ஸ்ட்ரெய்ட் ஸ்ட்ரெச்சில் பறந்தது ஜூபிட்டர். 70 கிமீ–யைத் தாண்டியதும் கொஞ்சம் ஆக்ஸிலரேஷன் டல் அடிக்கத்தான் செய்கிறது. ஃப்ளோர்போர்டில் 50 கிமீ–யைத் தாண்டியதும் லேசான அதிர்வுகளும் தெரிந்தது. ஆனால், சத்தம் போடாத இந்த இன்ஜினின் ரிஃபைன்மென்ட்டும், எக்ஸாஸ்ட்டில் இருந்து வரும் பீட்டும் யாருக்கும் எரிச்சலை ஏற்படுத்தாது.

ரைடு அண்ட் ஹேண்ட்லிங்

எனக்குத் தெரிந்து ஸ்கூட்டர் ஓட்டத் தெரியாதவர்கள்கூட வசதியாக உட்கார்ந்து, எளிமையாக ஓட்டலாம் எனும் அளவுக்கு ஜூபிட்டரின் சீட் இடவசதி இருக்கிறது. சிங்கிள் சீட்தான்; ஆனால் நீளமாக இருந்தது. இது ஜூபிட்டர் 110 சிசியைவிட 65 மிமீ நீளமானது இது. கணவன்–மனைவி–சின்னக் குழந்தைக்கு நல்ல இடவசதி இருக்கும். இதன் எர்கானமிக்ஸும் அருமை. உயரமானவர்களுக்குக்கூட முழங்கால் ஆப்ரானில் இடிக்கவில்லை. கூனிக்குறுகியும் பயணிக்க வேண்டியதில்லை. இத்தனைக்கும் ஃப்யூல்டேங்க் முன் பக்கம் இருந்துமே இது இடிக்கவில்லை என்பது வாவ் ஃபேக்டர்! இதன் சீட் உயரமும் 765 மிமீதான் என்பதைச் சொல்லியாக வேண்டும். உயரம் குறைவானவர்களும் ஹேண்டில் செய்ய எளிதாகவே இருக்கிறது.

சஸ்பென்ஷனும் அருமை. இதில் பின் பக்கம் இருப்பது கேஸ் சார்ஜ்டு சிங்கிள் ஷாக் அப்ஸார்பர். ப்ரீலோடு அட்ஜஸ்ட்மென்ட் வசதியுடன் கொடுத்திருக்கிறார்கள். இதன் ஓட்டுதல் தரம் கொஞ்சம் சாஃப்ட் ஆகவே இருக்கிறது. டிவிஎஸ் ஃபேக்டரியில் உள்ள ரஃப் அண்ட் டஃப் ரோடு, மேடு பள்ளங்கள், ஸ்பீடு பிரேக்கர்கள் என எல்லா இடத்திலும் ஓட்டிவிட்டோம். வெளிச்சாலையில் ஓட்டினால் இதன் முழுமையான ஓட்டுதல் தரம் பற்றித் தெரிந்துவிடும். இருந்தாலும், நமக்குத் தெரிந்து செக்மென்ட்டின் பெஸ்ட் என்று சொல்ல முடியாவிட்டாலும், ஓட்டுதல் தரம் அருமைதான்!

இதன் எடை பழைய ஸ்கூட்டரின் அதே 109 கிலோதான். வீல்பேஸும் அதே 1,275 மிமீ. எடை அதிகமும் இல்லை; ரொம்பக் குறைவும் இல்லை! ஓட்டுதலுக்காக கிரவுண்ட் கிளியரன்ஸை 15 மிமீ வரை கூட்டியிருக்கிறார்கள். 165 மிமீ என்பது இந்த செக்மென்ட் ஸ்கூட்டருக்கு அருமைதான். மொத்தம் 3 வேரியன்ட்களில் டிரம், டிஸ்க், அலாய் என்று வரும் ஜூபிட்டரில் நமது சாய்ஸ் – டிஸ்க் அலாய். இதன் பிரேக்கிங் பவர் நல்ல இம்ப்ரஸ்ஸிவ்வாகவே இருக்கிறது.

வேறு எந்த ஸ்கூட்டரிலும் இல்லாத வசதி இந்த ஜூபிட்டரில்!

ஜூபிட்டர் வாங்கலாமா?

டிவிஎஸ் எப்போதுமே விலை விஷயத்தில் கையைக் கடிக்காது. நான் இதை ஓட்டும்வரை விலை தெரியாமல் இருந்தது. இப்போது இதன் எக்ஸ்ஷோரூம் விலையாக 73,500 ரூபாய் நிர்ணயித்திருக்கிறது. இது என்ட்ரி லெவல். டிரம் அலாய் மற்றும் டிஸ்க் அலாய் வேரியன்ட்டின் விலை 76,800 மற்றும் 81,300 ரூபாய். அதாவது, இதன் ஆன்ரோடு விலை சுமார் 90,000 – 1 லட்சம் வரை தொடலாம். ஒரு 125 சிசி ஸ்கூட்டருக்கு இது நல்ல பொசிஷன்தான். இதே புளூடூத் போன்ற வசதிகள் கொண்ட ஆக்ஸஸ் போன்ற ஸ்கூட்டர்கள் 1 லட்சத்தைத் தாண்டி விட்டதே!

ஓட்டுவதற்கு இதன் போட்டியாளர்கள் மாதிரி பெப்பியாக இல்லைதான்; ஆனால் நமக்குத் தெரிந்து நல்ல இடவசதி, எக்யூப்மென்ட் லிஸ்ட், எர்கானமிக்ஸ், பிராக்டிக்கல் வசதிகள், பூட் ஸ்பேஸ் போன்றவற்றில் டிஸ்டிங்ஷன் வாங்கும் ஜூபிட்டர், கம்யூட்டிங் செய்வதற்கு நல்ல சாய்ஸ்தான் என்போம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு