கார்ஸ்
Published:Updated:

``ஹலோ நானும் ரேஸர்தான்!” ஒரு இளம் ரிப்போர்ட்டரின் முதல் ரேஸ் அனுபவம்!

டிவிஎஸ் மீடியா ரேஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
டிவிஎஸ் மீடியா ரேஸ்

சென்னை இருங்காட்டுக்கோட்டை: டிவிஎஸ் மீடியா ரேஸ்

``ஹலோ நானும் ரேஸர்தான்!” ஒரு இளம் ரிப்போர்ட்டரின் முதல் ரேஸ் அனுபவம்!

ரேஸ் ட்ராக்கில் ரேஸில் கலந்து கொண்டு பைக் ஓட்டுவது ஒண்ணும் மோ.வி டீமுக்கு ஒண்ணும் புதுசு இல்லை; ஆனால், எனக்குப் புதுசு! ‘‘ரேஸில் கலந்துக்கப் போறேன்… பார்த்து ஓட்டுடா!’’ என்று புலி வேட்டைக்குப் போகும் கவுண்டமணிக்குக் கிடைத்தது மாதிரி வீட்டிலிருந்து ஓவர் பில்டப்போடுதான் என் பயணம் இருந்தது.

பெட்ரோனாஸ் ரேஸிங் டீம் சார்பில் இந்தியா முழுவதும் 32 இளம் பத்திரிக்கையாளர்களைத் தேர்ந்தெடுத்தது டிவிஎஸ். அதில்தான் கலந்து கொள்ளப் போகிறேன். சென்னையில் உள்ள எம்எம்ஆர்டி ட்ராக்கில் நடைபெற்ற இந்த 7-வது சீசன் இது! பயிற்சியோடு ஆரம்பித்தார்கள் பயிற்சியை!

எப்படி ரேஸ் ட்ராக்கில் ஓட்டுவது?

முதலில் பிட் ஏரியா பற்றி விளக்கிவிட்டு, ஒரு பெரிய அப்பாச்சி RTR 4V பைக் ஒன்றைக் கையில் கொடுத்தார்கள். பைக்கோடு பயிற்சி! முதல் முறையாக ரேஸிங் சூட் அணிந்த பின்புதான் தெரிந்தது, அது சுமார் 6 - 8 கிலோ வரை எடை இருக்கும் என்று. ட்ராக்கில் ஓட்டும்போது நம்முடைய உடல் தோரணை எவ்வாறு இருக்க வேண்டும்; குறிப்பாக வளைவுகளில் எந்த நிலையில் உடல் தோரணை இருக்கணும் என்று டிவிஎஸ் ஃபேக்டரி ரேஸர்கள் நமக்குச் செய்து காண்பித்தார்கள்.

மொத்தம் 12 கார்னர்கள். 3.74 கிமீ தூரம் கொண்ட இந்த ட்ராக்கில் ஒவ்வொரு வளைவிலும் பிரேக் பிடிக்கக் கூடாது என்று என் கோச் சொன்னது எனக்கு வியப்பாக இருந்தது. ஒரு தடவை பதற்றத்தில் பிரேக் பிடித்துவிட்டேன்; நிஜம்தான்; அந்தச் சின்ன செகண்ட் கேப்பில் எனக்குப் பின்னால் வந்த ஒரு ரைடர் எனக்கு முன்னால் போய் விட்டிருந்தார். இன்ஜின் பிரேக்கிங் மட்டும் செய்ய வேண்டும் என்பதுதான் இங்கே விதி… இல்லை… தேவை! அதன் பிறகு நான் விதியை மீறவில்லை; எனக்குள் ஒரு ரேஸன் தன்னம்பிக்கையாகக் கண் விழித்துக் கொண்டான்.

மேலும், இதில் உடல் வலிமையைவிட மனவலிமை மிக முக்கியம் என்பதையும் உணர்ந்தேன், சிறிது தப்பினால்கூட, உச்சி வெயிலில் ட்ராக்கின் ஓரமாகக் கிடக்க வேண்டியதுதான். அதேநேரம், வேறு ரைடர்கள் விழுந்தால்… உடனே பைக்கில் இருந்து இறங்கிச் சென்று காப்பாற்றத் துடிக்கும் ‘எம்ஜிஆர்’ மனங்களையெல்லாம் பிட் ஸ்டாப்பிலேயே வைத்துவிட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. காரணம், இதிலும் விபத்துகள் நடக்கக் கூடும். அதற்கென மார்ஷல்கள் சுற்றிக் கொண்டே இருக்கிறார்கள் ட்ராக் முழுக்க.

``ஹலோ நானும் ரேஸர்தான்!” ஒரு இளம் ரிப்போர்ட்டரின் முதல் ரேஸ் அனுபவம்!

நடுவே ஐபிஎல் மாதிரி 5 நிமிடம் ‘டைம் அவுட்’ கொடுத்தார்கள். ரொம்ப ஸ்ட்ரிக்ட். 5.01–வது விநாடியில் பைக்கில் இருக்க வேண்டும். மீண்டும் 5 லேப்கள். ட்ராக்கில் பைக்கை எந்தெந்த சிக்னலுக்கு எவ்வாறு தயார்ப்படுத்த வேண்டுமென்று செய்து காண்பித்தார்கள். முதலில் கவுன்ட்டவுனைப் பார்த்து அதற்கு ஏற்றவாறு முதல் கியரில் 4,500rpm அளவில், முன் பிரேக்கைப் பிடித்தவாறு க்ளட்ச்சை ரிலீஸ் செய்யாமல் இருக்க வேண்டும். ஃப்ளாக் ஆஃப் செய்தவுடன் இரண்டையும் மெதுவாக ரிலீஸ் செய்தால் மட்டுமே சரியாக பைக் கிளம்பும். இல்லையெனில் ‘வீலி’ ஆகி விடும் எனச் சொன்னார்கள். அதைச் சரியாக நானும் பின்பற்றினேன்.

மூன்றாவது பயிற்சி முடிந்த பின்பு மதிய உணவு. இப்போது முதல் லேப் எவ்வளவு குறுகிய நேரத்தில் முடிப்பது என்பதுதான் கணக்கு. கற்றுக்கொண்ட மொத்த வித்தையையும் மனதில் வைத்துக்கொண்டு ஓட்டினேன்.

அதற்குப் பிறகுதான் இறுதிச்சுற்று. மனதில் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, பொறுமையாக அனைத்து முறைகளையும் பின்பற்றி 2.40 நிமிடத்தில் 1 லேப்பை நிறைவு செய்தேன். சோர்வு என்னைப் போட்டுத் தாக்கியது. நடக்க முடியாமல் நடந்து சென்று ரேஸிங் சூட்டைக் கழற்றிய பின்புதான் நடக்க முடிந்தது. ஆனால், ரேஸிங் சர்ட்டிஃபிகேட்டைப் பார்க்கும்போது சோர்வெல்லாம் காணாமல் போயிருந்தது.

‘ஹலோ… நானும் ரேஸர்தான்’ என்று ‘தலைநகரம்’ வடிவேலுபோல் சீன் போட்டுத்தான் இப்போது திரிந்து கொண்டிருக்கிறேன். ‘‘அது இருக்கட்டும், ரேஸ்ல எத்தனாவது வந்தடா தம்பினு கேட்கிறீங்களா!’’

அஸ்க்குபுஸ்க்கு!