Published:Updated:

நல்ல மைலேஜ் நண்பன்… டிவிஎஸ் ரேடியான்!

டிவிஎஸ் ரேடியான் 110
பிரீமியம் ஸ்டோரி
டிவிஎஸ் ரேடியான் 110

டெஸ்ட் ரைடு: டிவிஎஸ் ரேடியான்

நல்ல மைலேஜ் நண்பன்… டிவிஎஸ் ரேடியான்!

டெஸ்ட் ரைடு: டிவிஎஸ் ரேடியான்

Published:Updated:
டிவிஎஸ் ரேடியான் 110
பிரீமியம் ஸ்டோரி
டிவிஎஸ் ரேடியான் 110
ரேடியான்
ரேடியான்

ஆபீஸ் விட்டா வீடு; வீடு விட்டால் ஆபீஸ் என்று இருப்பவர்களுக்கும், மைலேஜ் பற்றி அதிகம் கவனமாக இருப்பவர்களுக்கும் உருவாக்கப்பட்டதுதான் கம்யூட்டர் பைக் செக்மென்ட். ஹீரோவில் ஸ்ப்ளெண்டர், பஜாஜில் ப்ளாட்டினா 110, ஹோண்டா லிவோ 110, ஹோண்டா CD ட்ரீம் 110 என்ற பைக்குகளுக்கு மத்தியில் டிவிஎஸ் ரேடியானும் களமாடிக் கொண்டிருக்கிறது. டிவிஎஸ் என்றாலே பராமரிப்பும் மைலேஜும்தான் நினைவுக்கு வரும். அப்படிப்பட்ட ரேடியானை நம் அலுவலகத்துக்கு அனுப்பி, ஓட்ட வாய்ப்புக் கொடுத்தது டிவிஎஸ்.

சுத்தமான கம்யூட்டர் பைக் என்பதால், ரைடிங் பொசிஷனில் ஸ்போர்ட்டி ஃபீலை எல்லாம் எதிர்பார்க்க முடியாது. அதாவது, இளசுகள் கெத்து காட்ட முடியாது. ஆனால், சாந்தமாக அமர்ந்து ஓட்டினால் ஆர்ப்பாட்டமாக இல்லாமல் ஜிவ்வெனப் பறக்கிறது ரேடியான். பராமரிப்பில்தான் இது கில்லி என்பதுபோல், இதிலிருக்கும் ஏர்கூல்டு 4 ஸ்ட்ரோக் இன்ஜின், செலவே வைக்காதுபோல! இப்படித்தான் பல வாசகர்கள் நம்மிடம் ஃபீட்பேக் கொடுத்தார்கள்.

2020–ல் லாஞ்ச் ஆனபோது இருந்த 8.4bhp பவரைக் கொஞ்சம் 8.2bhp–க்குக் குறைத்தார்கள். ஆனால் இதன் டார்க் அதே 8.7nmதான். ஆனால் பவர் குறைந்ததைச் சரிக்கட்டி இருக்கிறார்கள். அடுத்த ரேடியானில் இன்னும் கொஞ்சம் கூடுதலாக எதிர்பார்க்கிறோம்.

ஆனால், இதன் எக்ஸாஸ்ட் இருக்கிறதே.. வாவ்! ஸ்போர்ட்டி பைக்ஸே குழம்பும் இந்த எக்ஸாஸ்ட் பீட்… ஓட்டுவதற்கு ஃபன்னாக இருக்கிறது. வெல்டன் டிவிஎஸ்! அதேபோல் ஸ்மூத்தாகவும் இருக்கிறது இதன் சத்தம். சில பைக்குகளின் எக்ஸாஸ்ட் பீட், கேட்கும்போதே எரிச்சல் ஏற்படுத்தும். ஆனால், இது அப்படி இல்லை.

ஹைவேஸில் ஜிவ்வென்று பறக்க பெரிய அப்பாச்சியோ கேடிஎம்–மோதான் வேண்டும் என்றில்லை போல! ரேடியானிலும் ஹைஸ்பீடில் போய்ப் பார்த்தேன். 0–40 கிமீ–யை இது தொட 3.58 விநாடிகள் ஆனது. 0–80 கிமீக்கு சுமாராக 8 விநாடிகள் ஆனது. இது ஒரு கம்யூட்டர் பைக்குக்கு ஆஹாதான். நெடுஞ்சாலையில் இதன் டைனமிக்ஸ் அருமையாகவே இருக்கிறது. அதிர்வுகளும் பெரிதாகப் படுத்தவில்லை.

இதில் ஒரே ஒரு குறையாக எனக்குத் தெரிவது – 4 ஸ்பீடு கியர்பாக்ஸ் மட்டும்தான். ஆனால் கம்யூட்டர் பைக்ஸில் இதைப் பெரிதாக எதிர்பார்க்க முடியாது. இதன் அகலமான, நீளமான சீட்டிங் இடவசதியும் ரேடியானில் பெரிய பலம். பெரிய சீட் இருப்பது தடிமனான உடல்வாகு கொண்டவர்களுக்குப் பெரிய ப்ளஸ். பில்லியன் ரைடரையும் வைத்துக் கொண்டு சிட்டிக்குள் கட் அடிப்பதற்கு இது செமையாக இருக்கிறது. இதன் எடையும் 116 கிலோ என்பது இதன் ஹேண்ட்லிங்கும் இலகுவாகவே இருக்கிறது. வழக்கம்போல் சஸ்பென்ஷன் 110 சிசிக்கு ஏற்ற ஓகே ரகம்.

மற்றபடி டிசைன் எல்லாம் அதேதான். மாற்றமே இல்லை. பின் பக்கம் கிராப் ரெயில் இருந்தது. 10 லிட்டர் டேங்க், இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர் என எல்லாம் அதே! நமக்குக் கொடுத்த மாடலில் க்ரோம் மிரர்கள், டூயல் டோன் கலர்கள் இருந்தன. டிரம் பிரேக்ஸ்தான் கொடுத்திருந்தார்கள். அலாய் வீல்களை ஸ்டாண்டர்டாகக் கொடுக்கிறது டிவிஎஸ். ஓவர்ஆலாகப் பார்ப்பதற்கு அழகாகவே இருக்கிறது ரேடியான்.

கியர்பாக்ஸுக்கு அப்புறம் ரேடியானில் ஓகேதான் என்று தோன்றுவது – பிரேக்குகளின் ஃபீட்பேக். வெறித்தனமான பார்ட்டிகளுக்கு நாங்கள் ரெக்கமண்ட் செய்வது டிஸ்க் பிரேஸ் வேரியன்ட்டைத்தான். டிரம்ஸ், `வாவ்’ ரகமாக இருக்குமா என்று தெரியவில்லை. ஆனால், நிச்சயமாக டிரம்ஸில் இன்னும் பவர் வேண்டும்.

ரேடியான் சொல்லியடிப்பது எதில் தெரியுமா? மைலேஜில்தான். ஆம்! நமது டெஸ்ட்டிங்குக்கே இதன் சராசரி மைலேஜாக 62.5 கிமீ தந்தது. இது நகரச் சாலைகளில். நமது வாசகரும் ரேடியான் உரிமையாளருமான ஜெஃப்ரினுக்கு நகரத்துக்குள்ளேயே 65 கிமீ கிடைப்பதாகச் சொன்னார்.

நெடுஞ்சாலையில் ஒரு தடவை டேங்க்கை நிரப்பினால், சுமார் 700 கிமீ வரை போகலாம். அதாவது, சென்னை – திருவெல்வேலி வரை ஒரு ரவுண்ட் ட்ரிப் அடிக்கலாம் போல! நெடுஞ்சாலைகளில், சுமார் 70 கிமீ தருகிறது என்றார் வாசகர் ஜெஃப்ரின். சர்வீஸ் காஸ்ட் என்பது ஃப்ரீ சர்வீஸில் சுமார் 450 ரூபாய் வருவதாகச் சிலர் சொன்னார்கள். பெய்டு சர்வீஸ் என்றால், சுமார் 800 ரூபாய்க்கு வருவதாகச் சொல்கிறார்கள். இதன் உதிரி பாகங்களின் விலையும் கையைக் கடிக்காத அளவே இருக்கின்றன. உதாரணத்துக்கு இதன் இரண்டு க்ரோம் மிரர்களும் சேர்ந்தே 800 ரூபாய்தான் வருகிறதாம். டிஸ்க் மற்றும் டிரம் பேடுகள் சுமார் 225 ரூபாய் முதல் 350 ரூபாய். ஒரு கம்யூட்டிங் பைக் வாடிக்கையாளருக்கு இது பெரிய பாரமாக இருக்காது.

நீட்டான இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர்... ட்ரிப் மீட்டர் இல்லை.
நீட்டான இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர்... ட்ரிப் மீட்டர் இல்லை.
10 லிட்டர் பெட்ரோல் டேங்க், தொடைகளுக்கு நல்ல சப்போர்ட்.
10 லிட்டர் பெட்ரோல் டேங்க், தொடைகளுக்கு நல்ல சப்போர்ட்.
பட்டர் ஸ்மூத் இன்ஜின் சத்தம் அருமை.
பட்டர் ஸ்மூத் இன்ஜின் சத்தம் அருமை.
 ஹாலோஜன் ஹெட்லைட்தான். எல்இடி வேண்டுமென்றால் ஸ்டார் சிட்டி ப்ளஸ்.
ஹாலோஜன் ஹெட்லைட்தான். எல்இடி வேண்டுமென்றால் ஸ்டார் சிட்டி ப்ளஸ்.

மொத்தம் டிரம், டிஸ்க், டூயல் டோன் என 3 வேரியன்ட்களில் வருகிறது ரேடியான். இதன் ஆன்ரோடு விலை 81,000 ரூபாய் முதல் 86,000 ரூபாய் வரை. டிஸ்க்குக்கு எக்ஸ்ட்ரா 3,000 வரை ஆகும். இது ஸ்டார் ஸ்போர்ட்டுக்கு மேலே... ஸ்டார் சிட்டிக்குக் கீழே!

பெட்ரோல் விக்கிற இந்த விலைக்கு ரேடியான் மாதிரி ஒரு நல்ல மைலேஜ் நண்பன் இருந்தால், ஒரு குடும்பஸ்தருக்கு இதைவிட வேறென்ன சந்தோஷம் இருக்க முடியும்! எண்ணிக் கொடுக்கும் பணத்துக்கு ஏற்ற பைக் ரேடியான்.

ரேடியான்
ரேடியான்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism