கார்ஸ்
பைக்ஸ்
Published:Updated:

பக்கா குடும்பத்து பைக்!மைலேஜில், லுக்கில் அசத்தும் ரேடியான்!

டிவிஎஸ் ரேடியான்
பிரீமியம் ஸ்டோரி
News
டிவிஎஸ் ரேடியான்

லாங் டெர்ம் ரிப்போர்ட்: டிவிஎஸ் ரேடியான்

எல்லா பைக்குகளுக்குமே அப்கிரேட் தேவை. அது காஸ்ட்லி பைக்காக இருந்தாலும் சரி; என்ட்ரி லெவல் பைக்காக இருந்தாலும் சரி – டிவிஎஸ் இதைச் சரியாகப் புரிந்து கொண்டு, தனது ரேடியான் 110 சிசி பைக்கை 2022–க்காக அப்கிரேட் செய்து வைத்திருக்கிறது.

அப்படி புளூ கலரில் உள்ள ரேடியானில்தான் பல நாட்கள் அலுவலகம் வந்து போனேன். எப்படி இருக்கு ரேடியான்?

மொத்தம் 2 வேரியன்ட்களில் வருகிறது ரேடியான். என்னிடம் வந்தது டிஜி கிளஸ்ட்டர் வேரியன்ட். இந்த ரேடியானில் மிகவும் பிடித்ததே கலர்ஃபுல்லான டிஸ்ப்ளேதான். இது ரெய்டரில் இருப்பது. இதன் முன் பக்கம் டிஸ்க்கில் இருந்ததால்… எனக்கு இது அலுவலகம் விட்டு வீடு வர… வீடு விட்டு அலுவலகம் வர நம்பிக்கையாக இருந்தது. நீங்கள் ரேடியான் வாங்க இருந்தால், இந்த வேரியன்ட்டையே ரெக்கமன்ட் செய்வேன்.

இதில் ரியல் டைம் மைலேஜ் இண்டிகேட்டர், ஆவரேஜ் வேகம், சர்வீஸ் இண்டிகேட்டர், லோ பேட்டரி வார்னிங், கடிகாரம் என்று 18 வகையான பாராமீட்டர்கள் தெரிகின்றன.

புளூ மற்றும் கறுப்பில் இதன் டூயல் டோன் கலர் யாரையும் கவர்கிறது. ஒரு புரட்டாசி ஞாயிறு காலையில் அசைவ மார்க்கெட்டுக்குப் போனபோது ஒரு குடும்பஸ்தர், ரேடியானைப் பற்றி ஆர்வமாகக் கேட்டு வாங்கி ஓட்டிப் பார்த்தார். ‘இந்த மாதிரி ஒரு பைக்தான் சார் வாங்கணும்னு ஆசை’ என்றார். மைலேஜ் பற்றி விசாரித்தார். நான் இதை ஓட்டிப் பார்த்தவரை எனக்கு ஆவரேஜாக சுமார் 58 – 60 கிமீ வரை தந்தது. நெடுஞ்சாலை, சிட்டி என்று மாற்றி மாற்றி ஓட்டியதால் இந்த மைலேஜ். ஹைவேஸில் இன்னும் அதிகமாகவே தந்தது. அதைச் சொன்னேன்; முகமலர்ந்தார் குடும்பஸ்தர். கம்யூட்டர்களுக்கு இதுதானே தேவை!

கம்யூட்டர் பைக்கில் மொபைல் சார்ஜிங் வசதி!
கம்யூட்டர் பைக்கில் மொபைல் சார்ஜிங் வசதி!
பக்கா குடும்பத்து பைக்!மைலேஜில், லுக்கில் அசத்தும் ரேடியான்!

ஹாலோஜன் பல்புகள்தான் என்றாலும், பளீரென்று இருக்கிறது இரவு. இதன் 109.7 சிசி கொண்ட சிங்கிள் சிலிண்டர் ஏர்கூல்டு இன்ஜின், 8.3bhp பவரையும், 8.7Nm டார்க்கையும் வெளியிடுகிறது. இது மாறவில்லை. இதன் டேங்க்கும் அதே 10 லிட்டர் கொள்ளளவு. இதன் 4 ஸ்பீடு கியர்பாக்ஸ்… எல்லாமே அப் ஷிஃப்ட். கம்யூட்டர்களுக்கு ஈஸிதான்.

நான் ஒரு தடவை என் போனில் சார்ஜ் குறைவாக இருந்த நேரத்தில், செங்கல்பட்டு வரை என் போனில் சார்ஜ் ஏற்றிக் கொண்டே போனேன். கம்யூட்டர் பைக்கில் யுஎஸ்பி சார்ஜிங் போர்ட் – அருமை டிவிஎஸ்!

இதிலுள்ள ஸ்டார்ட்/ஸ்டாப் தொழில்நுட்பம் ரொம்பவே எஃபெக்ட்டிவ். நல்ல மைலேஜுக்கு இதுகூடக் காரணம்.

இந்த ரேடியானில் மிகவும் பிடித்த அம்சம் – இதன் பெரிய சீட்தான். கணவன்/மனைவி/குழந்தை உட்கார்வதுபோக மீதமிருக்கிறது இடம். இவ்வளவு தாராள பைக்கை நான் பார்த்ததே இல்லை.

இதன் சஸ்பென்ஷன் பற்றியும் சொல்லியாக வேண்டும். மேடு பள்ளங்களில் ஏறி இறங்கும்போது, பெரிதாகப் படுத்தி எடுக்கவில்லை. ஆனால், எடை அதிகமாக ஏற்றினால்… பெரிய ஸ்பீடு பிரேக்கர்களில் கீழே தட்ட வாய்ப்புண்டு. மற்றபடி பெரிய குறைகள் தெரியவில்லை ரேடியானில். இதன் ஆன்ரோடு விலை சுமார் 91,500 ரூபாய் வருகிறது.

100 ரூபாய்க்கு பெட்ரோல் போட்டால்… சுமார் 55 கிமீ மைலேஜ் தரும் இந்த ரேடியான் மனைவி/குழந்தையை ஏற்றிக் கொண்டு போக பெரிய வரம்.