Published:Updated:

ரோனின்… எனக்கு ப்ரீமியம் நண்பன்!

டிவிஎஸ் ரோனின் முகமது பெரோஸ்
பிரீமியம் ஸ்டோரி
டிவிஎஸ் ரோனின் முகமது பெரோஸ்

ரீடர்ஸ் ரிவ்யூ: டிவிஎஸ் ரோனின்

ரோனின்… எனக்கு ப்ரீமியம் நண்பன்!

ரீடர்ஸ் ரிவ்யூ: டிவிஎஸ் ரோனின்

Published:Updated:
டிவிஎஸ் ரோனின் முகமது பெரோஸ்
பிரீமியம் ஸ்டோரி
டிவிஎஸ் ரோனின் முகமது பெரோஸ்
ரோனின்… எனக்கு ப்ரீமியம் நண்பன்!
முகமது பெரோஸ்
முகமது பெரோஸ்

டிவிஎஸ் ஒரு புது பைக்கை லாஞ்ச் செய்தால்… டிவிஎஸ் ஷோரூமில் கூட்டம் அள்ளு கிளப்புகிறது. அப்படி வாடிக்கையாளர்களிடம் எதிர்பார்ப்பைத் தூண்டிய பைக்தான் ரோனின். நமது ஃபர்ஸ்ட் ரைடு ரிப்போர்ட்டுக்கு முன்பே, ‘பைக் எப்படி இருக்கு… மைலேஜ் எப்படி வரும்.. விலை கம்மியாத்தானே இருக்கும்’ என்று பலதரப்பட்ட விசாரிப்புகள். அதுவும் இந்த ரோனின் பைக், இளைஞர்கள் – பெரியவர்கள் என்று எல்லோரையும் மனம் மயக்குகிறது. காரணம், இதன் ரெட்ரோ ஸ்டைலும், குறைவான விலையும். அப்படி ரோனினை வாங்கி மதுரை மாநகர் முழுக்க ஓட்டிக் கொண்டிருந்த முகமது பெரோஸை, ரீடர்ஸ் ரிவியூக்காக மடக்கிப் பிடித்தேன். நறுக் சுறுக்கென்று அவர் கொடுத்த ரிப்போர்ட் இதோ!

ஏன் டிவிஎஸ் ரோனின்?

என் சின்ன வயதில் ஹோண்டாவின் க்ரூஸர் பைக்குகள் மிகவும் பிடிக்கும். ஆனால், எனக்கு மைலேஜ்தான் பாஸ் ரொம்ப முக்கியம். அதனால், அப்போது தேவையின் காரணமாக மைலேஜ் பைக்குகளான ஸ்ப்ளெண்டர் மற்றும் யூனிகார்ன் ஆகிய பைக்குகளையே கடந்த 20 ஆண்டுகளாக வைத்து இருந்தேன். ஒரு புது பைக் வாங்கலாம் என்று தோன்றியபோது, முதலில் ஹோண்டா ஷைன் SP125, யமஹாவின் FZ சீரிஸ் பைக்குகள் மற்றும் ரெட்ரோ ரேஞ்சுகளில் பெனெல்லி 300, ஹோண்டா CB350 ஆகியவற்றை முயற்சித்தேன். மைலேஜ் பைக்குகளில் இருந்து மாறலாம் என்று தோன்றியபோது முதலில் ரோனின் மனதில் இல்லை. பின்பு கொஞ்சம் ஹையர் எண்ட் வண்டிக்கு மாறலாம் என்ற எண்ணம் தோன்றியது.

மார்க்கெட்டை அலசினேன். ஏற்கெனவே உள்ள பெரும் பிளேயர்களான ராயல் என்ஃபீல்டு, ஹோண்டா, ஜாவா பைக்குகளையும் லுக் விட்டேன். அப்போதுதான் ஸ்க்ராம்பளர் மற்றும் ரெட்ரோவின் கலவையாக டிவிஎஸ் அறிமுகப்படுத்திய ரோனின் பற்றிக் கேள்விப்பட்டேன். பார்த்தவுடனேயே ஒரு ரெட்ரோ பிரியனாக அந்த பைக் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. வசதிகளும் பக்காவாக இருந்தன. விசாரித்ததில் மைலேஜும் பட்டையைக் கிளப்பும் என்றார்கள். மேலும் டிவிஎஸ் நம் ஊர் நிறுவனம் என்பதாலும், அவர்களது சர்வீஸ் மற்றும் பராமரிப்புச் செலவுகள் மிகச் சிறப்பாக இருக்கும் என்பது எனக்கு ஏற்கெனவே தெரியும். அப்புறமென்ன, ரோனின் இப்போது என் குடும்ப நண்பனாகி விட்டான்.

ரோனினில் பிடித்தது என்னென்ன?

முதலில் இதனுடைய கலர் மற்றும் டிசைன்தான் என்னை மிகவும் இம்ப்ரஸ் செய்தது. நான் இப்பொழுது வைத்துள்ள பேசிக் வேரியன்ட், மேக்மா சிவப்பு எனக்கு மிகவும் பிடித்தமான கலர். இதன் பெட்ரோல் டேங்க் மற்றும் ஹெட்லைட் டிசைனிலும் டிவிஎஸ் தங்களின் தனித்துவத்தைக் காட்டியுள்ளனர். இந்த பைக்கில் மிகவும் பிடித்தமான வசதிகள் என்று பார்த்தால், இதில் கொடுக்கப்பட்டுள்ள இரண்டு ரைடிங் மோடுகள். Rain மற்றும் Urban என அந்த 2 மோடுகளும் செம! நான் இரண்டிலுமே ஓட்டிப் பார்த்தேன். பக்காவாக இருக்கிறது.

அப்புறம், இதில் ரைடு அண்ட் ஹேண்ட்லிங்குக்கு இன்னொரு உறுதுணையாக இருப்பது – இதன் அசிஸ்ட் ஸ்லிப்பர் க்ளட்ச். இந்த வசதி கேடிஎம் போன்ற பெரிய பைக்குகளில்தான் இருக்கும். குறைவான வேகங்களில் இன்ஜின் பிரேக்கிங் நடந்து வீல் ஸ்பின் ஆகாமல் இருக்க இது உதவுகிறது. ஸ்பீடு பிரேக்கர்களில் கியரைக் குறைக்காமல் போனாலும், இன்ஜின் நாக்கிங் தெரியவில்லை என்பது ஓட்டுவதற்கு ஜாலியாக இருக்கிறது. சிட்டி டிராஃபிக் மற்றும் நெடுஞ்சாலை என இரண்டிலுமே ரோனினை ஓட்டுவதற்கு அருமையாக இருக்கிறது.

உயரம் குறைவானவர்களும் ஓட்டுவதற்கு வசதியாக, இதன் குறைவான சீட் உயரம் 795 மிமீ என்பது செம! ரோனினின் கிரவுண்ட் கிளியரன்ஸும் எனக்குப் பிடித்திருக்கிறது. 181 மிமீ என்பது எந்த ஸ்பீடு பிரேக்கர்களிலும் பயமில்லாமல் ஓட்டுகிறேன். இதில் சைடு ஸ்டாண்ட் இன்ஜின் கட் ஆஃப் வசதியும் உண்டு என்பதால், ‘சைடு ஸ்டாண்ட்’ எடுக்காமல் வண்டி ஓட்ட முடியாது என்பது தன்னம்பிக்கை.

ரோனின்… எனக்கு ப்ரீமியம் நண்பன்!

மைலேஜ் எப்படி?

நான் அலுவலகம் போகிறேன். வீட்டிலிருந்து என் அலுவலகம் சுமார் 20 கிமீ. ஒரு நாளைக்குச் சுமார் 50 கிமீ வரை ஓட்டுவேன். அதில் பாதி சிட்டி டிரைவ் ஆகவும், மீதி ஹைவே டிரைவ் ஆகவும் இருக்கும். இதற்குத் தகுந்தாற்போல வேகம் மற்றும் மைலேஜ் கொண்ட ஒரு பைக் தேவைப்பட்டது. அதை எனக்கு நன்றாகவே பூர்த்தி செய்கிறது ரோனின். இந்த பைக் எனக்கு ஆவரேஜாக 40 முதல் 42 கிமீ வரை மைலேஜ் தருகிறது.

ரோனினில் பிடிக்காதது?

பேஸ் வேரியன்ட்டில் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக்ஸ் மட்டும்தான் இருக்கிறது. மேலும் இவ்வளவு பெரிய பைக்கில் புளூடூத் கனெக்டிவிட்டி இல்லாதது சிறிது ஏமாற்றம். சீட்டின் உயரம் நன்றாக இருந்தாலும், இதன் நீளம் குறைவாக இருக்கிறது. இன்னும் நீளம் தேவை. ஆக்சஸரீஸில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம் டிவிஎஸ். மற்றபடி மார்க்கெட்டில், இந்த ரேஞ்சில் இருக்கும் மற்ற பைக்குகளோடு ஒப்பிடுகையில் ரோனின் சிறப்பாகவே உள்ளது.

கஸ்டமர் சர்வீஸ் எப்படி?

நான் ரோனின் லாஞ்ச் ஆன சில தினங்களுக்குள்ளாகவே வாங்கிவிட்டேன். என்னுடைய பகுதி சேல்ஸ் டீலர்கள், இதை புக் செய்து 8 நாட்களிலேயே வண்டியை டெலிவரி செய்துவிட்டனர். மேலும் வாங்கிய பின்பான கஸ்டமர் சர்வீஸும் நன்றாகவே உள்ளது.

ரோனின் பற்றிய என் தீர்ப்பு!

மைலேஜும் நன்றாகத் தர வேண்டும்; விலையும் கையைக் கடிக்கக் கூடாது; பார்ப்பதற்கு ப்ரீமியமாகவும் இருக்க வேண்டும் என்பவர்களுக்கு நான் இந்த 225 சிசி ரோனினை நிச்சயம் பரிந்துரைப்பேன்.