Published:Updated:

தீரன் புல்லட் அதிகாரம்!

என்ஃபீல்டு கேம்பஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
என்ஃபீல்டு கேம்பஸ்

வின்டேஜ் பைக்: என்ஃபீல்டு கேம்பஸ்

பெயர்: தீரன்

ஊர்: சென்னை

பைக்: என்ஃபீல்டு கேம்பஸ் – ஸ்பெஷல் எடிஷன்

மாடல்: 1990

வாங்கிய விலை: 70,000 ரூபாய்

வாங்கி ஆண்டு : 2015

ஓடோ ரீடிங்: 2 லட்சத்துக்கும் மேல்

பிடித்தது: கம்ஃபர்ட், ஸ்பேர் பார்ட்ஸுக்கு அலையத் தேவையில்லை.

பிடிக்காதது: பெரிதாக எதுவும் இல்லை.

தீரன் புல்லட் அதிகாரம்!

அது ஒரு 1990 மாடல் புல்லட் என்று நினைக்கிறேன். ஒரு வேலையாக பாண்டிச்சேரி போனபோது, ‘டப் டுப் பட் டுப்’ என்ற பீட்டில் பறந்த அந்த புல்லட்டைப் பார்த்தேன். திருவண்ணாமலையில் தோழி ஒருவரின் வீட்டுக்குப் போனபோதும்… அதே புல்லட். ‘படிக்காதவன்’ பட ரஜினி மாதிரி தனது புல்லட்டுடன் பேசிக் கொண்டிருந்தார், தாடி வைத்த அதன் உரிமையாளர். ‘‘செல்லம்... கிளம்பிருமா… உன்னைத் தனியா விட்டுட்டுப் போக முடியாது! ஸ்டார்ட் ஆகிடு!’’ என்று இறைஞ்சிக் கொண்டிருந்தார்.

காமெடியாக இருந்தாலும், அவரின் நிலைமை ரொம்பவும் பாவமாகவும் இருந்தது. ‘‘என்னாச்சுங்க...’’ என்று அவரை நெருங்கியபோது, ரொம்ப தூரம் லாங் ரைடு போனதால்… ‘டல்கோவில் அட்வான்ஸ் டைமிங்’ என்று ஒரு விஷயம் மாறிவிட்டதாகவும், ஐடிலிங் கன்ட்ரோல் அப் அண்ட் டவுன் ஆகிக் கொண்டே இருப்பதாகவும் டெக்னிக்கலாகச் சொன்னார்.

நினைத்ததுபோலவே அது 1990 மாடல் ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் காம்பஸ் எனும் 350 சிசி புல்லட். ஸ்பெஷல் எடிஷன். வெறுமனே என்ஃபீல்டு கேம்பஸ் என்றுதான் ஸ்டிக்கரிங் இருந்தது. உருண்டை வடிவ அனலாக் மீட்டர், அதில் பேட்டரி ஆம்ப் மீட்டர், கீழே சாவித் துவாரம் க்ளாஸிக்கான ஸ்போக் வீல்கள் என்று 90ஸ் கிட்ஸை நினைவுப்படுத்தியது அந்த புல்லட்.

சென்னை முகப்பேரிலும் அதே கேம்பஸ் ‘டப்டுப்’ என்று பறந்து கொண்டிருக்க, மடக்கிப் பிடித்தேன். ‘‘என்னாச்சுங்க அன்னைக்கு?’’ என்று கேட்டபோது, மிச்சக்கதையைச் சொன்னார்.

‘‘இனிமேல் போகவே போகாது என்ற நிலையிலும் 70 கிமீ தாண்டி மெக்கானிக் ஷெட்டுக்குப் போயிட்டேன். `எப்படிங்க ஓடுச்சு… இவ்வளவு தூரம்… டல்கோ அட்வான்ஸ் டைமிங் செயின் மாறிடுச்சு! ஆச்சரியமாத்தான் இருக்கு!’னு மெக்கானிக்கே ஆச்சரியப்பட்டுப் போயிட்டார். அப்போதான் நான் நினைச்சேன். இந்த புல்லட் எந்தச் சூழ்நிலையிலும் என்னைக் கைவிடாதுனு!’’ என்று தனது கேம்பஸ் புல்லட் ஆக்ஸிலரேட்டரை முறுக்கிக் காட்டினார் தீரன்.

லேட்டஸ்ட் சினிமா பிரபலங்களை எல்லாம் தனது கேமராவுக்குள் செம ஸ்டைலாக அடக்கும் மில்லினியல் போட்டோகிராபர் தீரன். உலகநாயகன் கமல்ஹாசன் – பாரதியார் ஸ்டைலில் மீசையை முறுக்கும் போட்டோ, லேசான சில்ஹவுட்டில் முறைக்கும் விஜய் சேதுபதி, பளீர் எக்ஸ்போஸில் சிரிக்கும் சிவகார்த்திகேயன் என்று நீங்கள் ட்விட்டரில் பார்க்கும் பல விஐபிக்களின் புகைப்படங்கள் – தீரனின் கேமராவால் பிரசவமானவை. இப்போது ஜப்பான் கேமரா நிறுவனம் ஒன்றின் பிராண்ட் அம்பாஸடர்தான் தீரன். ‘‘மாடர்ன் பிரபலங்களை மாடர்னாகப் போர்ட்ரேட் படம் எடுக்கும் நீங்கள், எப்படி ஒரு க்ளாஸிக் ஸ்டைல் புல்லட்டுக்கு மயங்கினீர்கள்?’’ என்று என் சந்தேகத்தைக் கேட்டேன்.

‘‘சொன்னா நம்பமாட்டீங்க… இந்த வின்டேஜ் புல்லட் என்னோட லவ்வர். இதை நான் அந்த அளவுக்கு விரும்புகிறேன். நான் சின்னப் பையனா இருக்கும்போது எங்க பாட்டி வீட்டுக்குப் போவேன். அப்போ எங்க பாட்டி வீட்டுல நிறைய வண்டி நிற்கும். அதுல ரெண்டு வண்டி மட்டும் தனியா தெரியும்; அதான் இந்த புல்லட். அப்பொழுது முதல் எனக்கு புல்லட்னா ஒரு கிரேஸ். ஒரு கட்டத்துல இந்த வின்டேஜ் புல்லட் என்னைத் தேடி வந்தது. 70,000 ரூபாய்க்கு வாங்கினேன். எனக்கு லாங் டிரைவ் மேல ஒரு ஈர்ப்பு. நான் நிறைய டிராவல் பண்ணுவேன். அதுக்கேற்ற வண்டி என்றால் அது புல்லட்தான். அதனால், உடனே இதை வாங்கிட்டேன். எல்லோரும் திட்டினாங்க… பழைய புல்லட் செலவு வைக்கும்னு. நான் கேட்கலை.

அவங்க சொன்னது உண்மையோனு கூட தோணுச்சு. நிறைய சிக்கல் வந்துச்சு. அப்புறமா வேற 80’ஸ் மாடல் ட்ரை பண்ணலாம்னு அந்த மாடலும் வாங்கி ஓட்டிப் பார்த்தேன். அது, இதுக்கும் மேல இருந்தது. இந்த கேம்பஸ் புல்லட்டில் கிடைச்ச கம்ஃபர்ட் வேற வண்டியில எனக்குக் கிடைக்கல. அப்புறம் சலிக்காமல் களத்தில் இறங்கினேன்.

இது கிமீ கிடையாது. மைல்ஸ் பெர் ஹவர் காட்டும் ஸ்பீடோ மீட்டர்.
இது கிமீ கிடையாது. மைல்ஸ் பெர் ஹவர் காட்டும் ஸ்பீடோ மீட்டர்.
ஒரு கட்டத்துல இந்த  வின்டேஜ் புல்லட் என்னைத் தேடி வந்தது. 
70,000 ரூபாய்க்கு வாங்கினேன்.
ஒரு கட்டத்துல இந்த வின்டேஜ் புல்லட் என்னைத் தேடி வந்தது. 70,000 ரூபாய்க்கு வாங்கினேன்.
இதில் டிரான்ஸ்ஃபார்மர் பொருத்தியுள்ளேன். பேட்டரி சார்ஜ் இல்லையென்றாலும் ஸ்டார்ட் ஆகும்
இதில் டிரான்ஸ்ஃபார்மர் பொருத்தியுள்ளேன். பேட்டரி சார்ஜ் இல்லையென்றாலும் ஸ்டார்ட் ஆகும்
சாவி துவாரம் கீழே!
சாவி துவாரம் கீழே!
சில பாகங்கள் குஜராத்தில் இருந்து வரவழைத்தது.
சில பாகங்கள் குஜராத்தில் இருந்து வரவழைத்தது.

இதைத் திரும்ப அசெம்பிள் பண்ணினா என்னனு தோணுச்சு. முதல்ல இன்ஜின்ல கை வெச்சேன். நம்பகமான மெக்கானிக்கிட்ட ஒப்படைச்சேன். லாங் டிரைவ் பிடிக்கும் என்பதால், எனக்கு பேட்டரி நல்ல லைஃப் இருக்கணும்னு அதைக் கொஞ்சம் மாற்றி அமைத்தேன். உள்ளுக்குள் ஹெட்லைட், பிரேக் டிரம்னு ஸ்பேர் பார்ட்ஸ் எல்லாமே புதுசா மாத்தினேன். சென்னையிலேயே கிடைச்சது. ரொம்பவும் அலைய வைக்கலை. எல்லாமே மாத்திட்டேன். அனலாக் மீட்டர் மட்டும் குஜராத்தில் வாங்கினேன். இங்கிலாந்து மேக் என்பதால், ‘மைல்ஸ் பெர் ஹவர்’தான் காட்டும். இதெல்லாம் இதோட ஒரிஜினாலிட்டி. இந்த மாதிரி வண்டிங்கள்ல பேட்டரி இருந்தால்தான் ஸ்டார்ட் ஆகும். நான் என் நண்பரிடம் சொல்லி டிரான்ஸ்ஃபார்மர் ஒன்று எக்ஸ்ட்ராவாக ஃபிட் பண்ணினேன். இது கொஞ்சம் பவரைச் சேமிச்சு வெச்சுக்கும். பேட்டரியில் எனெர்ஜி இல்லாத நேரத்தில், இது மூலமா ஸ்டார்ட் செஞ்சுக்கலாம்.

மத்தபடி புல்லட்டின் அவுட்லுக்கில் மட்டும் கை வைக்கலை! அதனுடைய பாரம்பரியமான அந்தக் கம்பீரமான தோற்றம்தான் அதோட ப்ளஸ்ஸே! இப்போ எனக்கு எந்தச் சிக்கலும் இல்லை. என் சொல்படி கேட்கிறாள் என் காதலி! இப்போ ரஜினி, கமல், விஜய்னு எந்த செலிபிரிட்டி கூப்பிட்டாலும் காம்பஸில்தான் என் பயணம்!’’ என்றார் தீரன்.

புல்லட் பார்க்கும்போதே ஓட்ட வேண்டும்போல் ஆசையாக இருந்தது. அப்படி ஒரு பராமரிப்பு. ஆக்ஸிலரேட்டர் திருகினால்.. ‘டப் டுப் டப் டுப்’ என அதன் பாரம்பரியம் தெரிந்தது. பழைய புல்லட் என்பதால், FC–க்கு அப்ளை ஆகியிருக்க வேண்டுமே? சரிதான்; இந்த அக்டோபரில்தான் FC எடுத்திருந்தார் தீரன்.

‘‘இதுக்குலாம் FC கிடைக்காதுனுதான் நினைச்சேன். ஆனா ஈஸியா வேலை முடிஞ்சிடுச்சு. ஏஜென்ட் மூலமாதான் போனேன். 3,000 ரூபாய் ஆனது. பொதுவா, பழைய வண்டிங்களுக்கு 20 வருஷம் ஆகிவிட்டது என்றாலே, வயசாகிவிடும். அதற்குப் பிறகு செலவு வைக்குது என்று புலம்புவார்கள். ஆனால், இந்த மாடல் புல்லட்களைப் பொருத்தவரை விஷயம் சொல்கிறேன். இதற்கு ஸ்பேர் பார்ட்ஸ்களுக்கு என்று நான் அலையவே இல்லை. அதேபோல், இந்த பைக்கின் பல பாகங்களை நீங்கள் பட்டறையில் கொடுத்தே ரெடி செய்யலாம். இன்ஜின் பிஸ்டனை நானேதான் ரெடி செய்து மெக்கானிக் உதவியோட அசெம்பிள் செஞ்சேன். பெரிதாகச் செலவும் இல்லை. வண்டியும் சீறுது. 2,000 கிமீ–க்கு ஒரு தடவை இன்ஜின் ஆயில் ஊத்தினா போதும். BS-6 வண்டிங்கள்லாம் என் கேம்பஸ் கூடப் போட்டி போட முடியாது!

இப்போகூட மழைக் காலம் வந்துச்சு. என் பைக் எந்த ஏரியாவிலும் நிக்கலை. வெள்ளத்திலும் உடனே ஸ்டார்ட் ஆகிடுச்சு! அடிக்கடி லாங் ரைடு போவேன். மெதுவாதான் போய்ச் சேருவேன். காரணம், என் பைக்கில் 80 கிமீ–க்கு மேல் போக முடியாது. ஆனா, அதை நான் ரசிச்சுத்தான் ஓட்டுவேன். ஏபிஎஸ் இல்லேன்னாலும், ஸ்கிட் ஆனது இல்லை. பைக்கோட நம்ம எடையை பேலன்ஸ் பண்ணத் தெரிஞ்சிக்கிட்டா… ஏபிஎஸ்லாம் வேஸ்ட் பாஸ். மற்றபடி என் பைக்கில் மைனஸ்னு பார்த்தா… பெருசா எதுவும் சொல்லத் தெரியலை.

வின்டேஜ் பைக்னாலே சிக்கல்தான்னு நினைக்கிறவங்களுக்கு ஒரு சின்ன டிப்ஸ் சொல்றேன். கொஞ்சமா அடிப்படை மெக்கானிக்கல் ஒர்க் மட்டும் தெரிஞ்சு வெச்சுக்கிட்டீங்கன்னா போதும்.. கஞ்சத்தனம் இல்லாத நல்ல பராமரிப்பு… நல்ல நம்பிக்கையான மெக்கானிக்… இது இருந்தா போதும்… எந்த இடத்திலும் உங்கள் பைக் உங்களைக் கைவிடாது. ஏன்னா, நீங்க பைக்கைத் தேர்ந்தெடுக்கலை; உங்க பைக்தான் உங்களைத் தேர்ந்தெடுக்குது!’’ என்று தத்துவம் சொல்லிவிட்டு, தனது பெரிய தாடி தடவிச் சிரித்தார் தீரன்.

என்ஃபீல்டு கேம்பஸ்
என்ஃபீல்டு கேம்பஸ்