பிரீமியம் ஸ்டோரி
‘கண் பார்த்ததைக் கை செய்யும்’ என்றொரு பழமொழி உண்டு. அதாவது, சில பேரை உருவாக்க பெரிசாக மெனக்கெடத் தேவையில்லை.

சட்டென்று குருவை மிஞ்சிய சிஷ்யன் ஆகிவிடுவார்கள். நிவேதா அப்படித்தான். ரேஸிங்கில் ஆர்வம் கொண்ட நிவேதா, அதிக நாள் பயிற்சி எடுக்கவில்லை. ஆனால், இப்போது இரண்டு முறை சாம்பியன். இதற்கான முயற்சியும் அவர் பட்ட அவமானங்களும் அதிகம். இந்தியாவின் முதல் ‘மோட்டோ 2’ ரேஸர் சரத்குமார்தான் நிவேதாவின் கோச். 2018, 2019 நேஷனல் சாம்பியன், நிவேதாதான். இதுபோக டிவிஎஸ் ஒன்மேக் ரேஸ்களிலும் போடியம் ஏறியிருக்கிறார் நிவேதா. போடியம் ஏறிய கப்போடு மோட்டார் விகடனுக்குப் பேட்டியும் கொடுத்ததையெல்லாம் நினைவுகூர்ந்தார்.

நிவேதா
நிவேதா

‘ஓகே.. இப்போ அதுக்கு என்ன?’ என்பவர்கள் கொஞ்சம் பொறுமை காக்கவும். ரேஸர் நிவேதா, இப்போது அடுத்த அவதாரம் எடுத்துவிட்டார். ஆம், இப்போது `Women’s Motorcycle Club of India’ எனும் பைக் க்ளப்பின் நிறுவனர், நிவேதாதான்.

சாதாரணமாக ஒரு பெண் பைக் ஓட்டினாலே ‘ஹே… இங்க பாரேன்’ என வித்தியாசமாகப் பார்க்கும் சமுதாயம் இது. அதுவும் பெண்கள் பைக் டிராவல் போவதெல்லாம் சான்ஸே இல்லை. ஆனால், அதையெல்லாம் தாண்டி தனது பைக்கில் ‘வ்வ்ர்ர்ரூம்’ என ரைடு கிளம்பிப் போவதும், குடும்பத்தினரின் எதிர்ப்பைச் சமாளித்து ரேஸிங்கில் சாம்பியன் ஆனதும், இப்போது ஒரு பைக் க்ளப்பையே உருவாக்கி இருப்பதும்… நிச்சயம் தன்னம்பிக்கை ஸ்டோரிதான்.

‘‘ஓகே, பெண்களுக்குனு பைக் க்ளப்… புதுசாதான் இருக்கு? எப்படி இந்த ஐடியா?’’

‘‘நான் இதுவரைக்கும் நிறைய ரைடு போயிருக்கேன். போகும்போதெல்லாம் நிறைய ரைடர்ஸ் பார்த்திருக்கேன். விசாரிச்சா எல்லாரும் பைக் க்ளப்பினர்கள். ஆனா, பசங்க 20 பேர் இருந்தா, அந்த குரூப்பில் ஒரே ஒரு பொண்ணுதான் இருக்கும். அப்படிப்பட்ட ஒரு பொண்ணாதான் நானும் சில க்ளப்புகள்ல இருந்தேன். பொண்ணுங்களுக்கும் ரைடிங், டிராவல்னு ஆசை இருக்கத்தானே செய்யும். அப்போதான் பொண்ணுங்களுக்கு மட்டும் ஒரு பைக் க்ளப் இருந்தா எப்படி இருக்கும்னு யோசிச்சேன். ரேஸிங் மாதிரிதான் இதிலும் ஆரம்பத்தில் அவ்வளவு டிஸ்கரேஜ்மென்ட். ‘பொண்ணுங்களையெல்லாம் வெச்சு உன்னால மேய்க்க முடியாது; அவங்களுக்கு பைக் ஓட்டத் தெரியாது; அப்படியே இருந்தாலும் வீட்ல பெர்மிஷன் கிடைக்காது; ஈகோ க்ளாஷ் ஆகும்; சும்மா சும்மா சண்டை வந்துக்கிட்டே இருக்கும்’னு வெரைட்டியா கமென்ட்ஸ். இது எல்லாத்தையும் நான் ஃபீட்பேக்காதான் எடுத்துக்கிட்டேன். என்னன்னா, இது சொன்னது எல்லாமே ஆண்கள்தான்.

இது ‘மகளிர் மட்டும்’ பைக் க்ளப்!

நானும் ஒரு பொண்ணுதான். என்னை மாதிரி எத்தனை பொண்ணுங்களுக்கு ரைடிங்கிலும் ரேஸிங்கிலும் ஆர்வம் இருக்குனு யோசிச்சேன். என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாத்தையும் ஒண்ணு சேர்த்தேன். பைக் க்ளப் ஆரம்பிக்கிற ரூல்ஸ்லாம் ஸ்டடி பண்ணி, இப்போ செமையா போய்க்கிட்டிருக்கு! அதுக்காக ஆண்கள் உதவி இல்லாம எதுவும் பண்ண முடியாது. என் ஃப்ரெண்ட்ஸ் வனித், ஹரிஷ், ஓவியன், சந்தோஷ் எல்லாத்துக்கும் தேங்க்ஸ்.’’ என்கிறார் நிவேதா. பெண்கள் சார்பில் பெரிதாக சப்போர்ட் பண்ணியது FMSCI-ல் இருக்கும் அனிதா, சீதா மேடம்தான் என்பதையும் சொன்னார். ‘‘இவங்கதான் எனக்கு இன்ஸ்பிரேஷன்!’’ என்று அடிக்கடி சொல்கிறார்.

இது ‘மகளிர் மட்டும்’ பைக் க்ளப்!

இந்த WMCI, இப்போது ஒன்றரை மாதக் குழந்தை. இந்த க்ளப்பில் உள்ள அனைத்துப் பெண்களுமே ரைடராய்ப் பிறக்கத் தவம் மேற்கொள்பவர்கள்; பைக்கை உயிராய் நேசிப்பவர்கள்; ஆக்ஸிலரேட்டரை ஆசையாய் முறுக்கக் காத்திருப்பவர்கள். இப்படி இந்த ஒரே மாதத்துக்குள் 200 பெண்கள் இந்த க்ளப்பில் உறுப்பினர்கள் என்பதுதான் பெண்களுக்கு ரைடிங் மீதுள்ள ஆர்வத்தைச் சொல்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஒரே மாதத்தில் எப்படி 200 பெண் ரைடர்ஸ்? இதற்குப் பின்னாலும் ஒரு வலி நிறைந்த, தன்னம்பிக்கை கலந்த கதை இருக்கிறது நிவேதாவிடம். நிவேதாவும் ஆரம்பத்தில் சில ஆண்கள் க்ளப்புகளில் உறுப்பினராகத்தான் இருந்திருக்கிறார். சில மாதங்களில் ‘பொண்ணுங்க எங்களுக்கு செட் ஆகாது’ என்று சொல்லி அவர்களே க்ளப்பில் இருந்து எலிமினேட் செய்து அனுப்பி விடுவார்களாம். அந்த அவமானம்தான் இந்த பைக் க்ளப்பை ஆரம்பிக்கத் தூண்டியிருக்கிறது நிவேதாவுக்கு. தன்னைப்போல் வெளியேறிய, ரைடிங்கில் வெறியேறிய பல பெண்களை ஒருங்கிணைத்திருக்கிறார்.

இது ‘மகளிர் மட்டும்’ பைக் க்ளப்!

ஒரு பைக் மெக்கானிக்கின் பைக்கைக் கவனித்திருக்கிறீர்களா? எக்ஸ்ட்ரா கேர் எடுத்து தன் பைக்கை அழகுபடுத்துவார். நிவேதாவோ ரேஸர், இந்த பைக் க்ளப்பில் ரேஸிங் இல்லாமல் இருக்குமா? ரைடிங் + ரேஸிங் – இரண்டுமே இந்த க்ளப்பின் வாவ் ஃபேக்டர்கள். அப்படியென்றால், இந்த க்ளப்பில் சேர, பைக் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டுமா என்றால், அதுவும் இல்லை.

‘‘என் க்ளப்பில் சேர விரும்புற பொண்ணுங்களுக்கு ரைடிங்கில் ஆர்வம் இருந்தா போதும். அவங்களுக்கு பைக் இருக்கணும்னு அவசியம் இல்லை; பைக் ஓட்டத் தெரியணும்னு அவசியம் இல்லை; எங்க க்ளப்போட ரூல்ஸை மதிச்சா மட்டும் போதும்! யார் வேணாலும் இந்த WMCI-ல் ஜாய்ன் பண்ணலாம்!’’ என்கிறார் நிவேதா.

இது ‘மகளிர் மட்டும்’ பைக் க்ளப்!

ஸ்கூட்டி ஓட்டத் தெரியாத பெண்கள்கூட, இந்த ஒரு மாத இடைவெளியில் ரைடிங்கில் எக்ஸ்பெர்ட் ஆகியிருக்கிறார்கள் என்பது இன்னும் பெரிய வாவ்! அதாவது, ரைடிங் மட்டுமில்லை; மோட்டார் ஸ்போர்ட்ஸிலும் கால் பதிக்க பெண்கள் வர வேண்டும் என்பதைச் சொல்லத்தான் இந்த க்ளப் ஆரம்பித்திருக்கிறாராம் நிவேதா.

ரைடிங், ரேஸிங் என்பது மட்டுமில்லை; வழக்கம்போல், சமூக அக்கறையையும் கையிலெடுத்திருக்கிறார் நிவேதா. பெண் குழந்தைகளுக்கான அவேர்னெஸ் சம்பந்தமாக ஒரு சின்ன ராலி போய் வந்திருக்கிறார் நிவேதா. சுதந்திர தினத்தன்றும் WMCI சார்பாக ஒரு ராலி நடந்து முடிந்திருக்கிறது. கோவிட்-19 விழிப்புஉணர்வு ஏற்படுத்தும்விதமாக மாநில வாரியாக, மாவட்ட வாரியாக இந்தியா முழுக்க ராலி நடத்தியிருக்கிறார்.

க்ளப் ஆரம்பிக்கும்போது, கை தூக்கிவிடக்கூட ஆளில்லாமல் தவித்த நிவேதா, இப்போது பல பெண்களுக்குத் தோள் கொடுக்கக் காத்திருக்கிறார். நிவேதாவுக்கு லட்சம் கோடி லைக்ஸ்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு