Published:Updated:

பெர்ஃபாமென்ஸ் ஓகே... ப்ராக்டிக்கல் பயன்பாடு?

ஏரோக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
ஏரோக்ஸ்

யமஹாவின் பெர்ஃபாமன்ஸ் மேக்ஸி ஸ்கூட்டர் ஏரோக்ஸ்

ஏரோக்ஸ்
ஏரோக்ஸ்
ஏரோக்ஸ்
ஏரோக்ஸ்
ஏரோக்ஸ்
ஏரோக்ஸ்

ஸ்கூட்டர் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என சில இலக்கணங்களைத் தாண்டி உருவாகி இருக்கிறது யமஹா ஏரோக்ஸ் 155. இந்த மேக்ஸி ஸ்கூட்டரை எடுத்துக் கொண்டு பெட்ரோல் பங்க்கில் எரிபொருள் நிரப்பும்போதே இது தெரிந்துவிட்டது. ``மச்சி... இந்த ஸ்கூட்டருக்கு பெட்ரோல் டேங்க எங்க இருக்குனு பாரேன்’’ என்று பங்க் ஊழியர்களில் ஆரம்பித்து, `இது பைக்கா ஸ்கூட்டரா அண்ணே’ என்று சாலையில் போகும் கம்யூட்டர்கள் வரை மேக்ஸிமம் பாஸிட்டிவ் ரெஸ்பான்ஸ் வந்ததிலேயே இந்த மேக்ஸி ஸ்கூட்டரின் வித்தியாச இலக்கணம் புரிந்து விட்டது.

டிசைன்:

ஸ்கூட்டர்னா `ஃப்ளோர்போர்டு ஃப்ளாட்டா இருக்கணும், ஃபேமிலிமேன்/உமன் ஓட்டுற மாதிரி இருக்கணும்’ என்பதை எல்லாம் உடைத்துவிட்டு, புதிய ஃப்ரெஷ் டிசைனுடன் இருக்கிறது ஏரோக்ஸ். சீட்டுக்கும் ஸ்டீயரிங்குக்கும் இடையே ஒரு சின்ன இன்டர்செக்ஷன் இருக்கிறது. இது ஸ்கூட்டரின் ப்ராக்டிக்காலிட்டியைப் பாதிக்கும் என்றாலும், இது ஒரு புதிய முயற்சியை நாம் வரவேற்றுத்தான் ஆக வேண்டும். LED ஹெட்லைட்டில் ஆரம்பித்து பின்பக்கம் வரை செம ஷார்ப்.

பெரிய டயர்கள், மற்ற ஸ்கூட்டர்களுடன் ஒப்பிடும்போது கொஞ்சம் பல்க்கியான எக்ஸாஸ்ட் சிஸ்டம், பின்பக்கம் ட்வின் ஷாக் அப்சார்பர்ஸ் என ஸ்போர்ட்டி. 126 கிலோ எடை கொண்ட ஏரோக்ஸை ரோட்டில் ஓட்டிச் செல்லும்போது, கொஞ்சம் பெரிய பைக்கை ஓட்டும் உணர்வு நமக்கும் இருக்கிறது; பார்ப்பவர்களுக்கும் இருக்கிறது.

ஆச்சரியமாகப் பார்க்கப்படுவது முன் பக்கம் இருக்கும் அந்த ஃப்யூல் டேங்க்தான். பெட்ரோல் நிரப்பும்போது, ஸ்கூட்டரில் இருந்து கீழே இறங்க வேண்டிய அவசியம் இல்லை. இது கொஞ்சம் ஃப்ளாட்டாக இருந்திருந்தால், அதனையும் பொருட்கள் வைக்கப் பயன்படுத்தியிருக்கலாம். ப்ச்! பில்லியனில் உட்காருபவர்களுக்கான ஃபுட்பெக்ஸ்கள் சரியாகப் பொருத்தப் படாமல் இருக்கிறது. சீட்டின் நடுவில் ஒரு சின்ன ஸ்டெப் இருக்கிறது. இது ஸ்கூட்டரை ஓட்டுபவருக்குக் கொஞ்சம் சொகுசைக் கொடுக்கும். ஆனால், கொஞ்சம் உயரமானவர் இந்த ஸ்கூட்டரை ஓட்டினால், பின்னால் நகர்ந்து அமர முடியாதபடி இந்த ஸ்டெப் தடுக்கும்.

ஏரோக்ஸின் சீட்டுக்கு அடியில் 24.5 லிட்டர் இடவசதியைக் கொடுத்திருக்கிறது யமஹா. ஒரு பெரிய ஹெல்மட்டை சீட்டுக்கு அடியில் வைக்க முடிகிறது. இது கொஞ்சம் சிறப்பான விஷயம். ஆனால், இந்த பெர்ஃபாமன்ஸ் ஸ்கூட்டருக்கு 5.5 லிட்டர் டேங்க் ஃப்யூல் டேங்க் போதுமா யமஹா?

வசதிகள்:

ஒரு பெரிய இன்ஜினுடன் ப்ரீமியம் ஸ்கூட்டராக இருக்கும் ஏரோக்ஸில், அதற்கேற்ற வகையில் வசதிகளும் இருக்க வேண்டியது அவசியம். இதற்கு, சூப்பர் என்று சொல்ல முடியவில்லை; ஓகே என்று சொல்லும் வகையில்தான் இருக்கிறது. ஹெட்லைட் மற்றும் டெயில் லைட் LED சூப்பர். இரவு நேரங்களில் பளிச்சென இருக்கிறது. இண்டிகேட்டர்களும் வேண்டுமானால் 1,500 ரூபாய் கூடுதலாகக் கொடுத்து எல்இடியாக மாற்றிக் கொள்ளலாம். முழுவதும் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் சிறப்பு. ட்ரிப் மீட்டர், ஃப்யூல் பயன்பாடு மற்றும் டேக்கோமீட்டர் ஆகியவற்றை நாம் பார்த்துக் கொள்ளலாம்.

புளூடூத் கனெக்டிவிட்டி இருக்கிறது என்றாலும், ஸ்க்ரீனிலேயே நேவிகேஷனோ அல்லது மியூசிக் கன்ட்ரோலோ செய்ய முடியாது. கால் மற்றும் எஸ்எம்எஸ் அலெர்ட்கள் வேண்டுமானால் வரும். ஆனால், கடைசியாக ஸ்கூட்டரை நிறுத்திய இடத்தை மொபைலின் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது. சாவித் துவாரத்தின் அருகில் ஃப்யூல் கேப் மற்றும் சீட்டுக்கான பட்டன்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இதோடு ஆட்டோமேட்டிக் ஸ்டார்ட் /ஸ்டாப் வசதியும் இருக்கிறது. இதனை வேண்டும் என்றால் நாம் ஆஃப் செய்தும் வைத்துக் கொள்ளலாம். இது ஆனில் இருக்கும்போது, சிக்னலில் 2, 3 நொடிகள் நின்றால் ஸ்கூட்டர் தானாகவே ஆஃப் ஆகி விடுகிறது. ஆக்ஸிலரேட்டரைக் கொஞ்சம் திருகினால் மீண்டும் பைக் ஆன் ஆகி விடுகிறது. DC சார்ஜிங் போர்ட், சைடு ஸ்டாண்டு கட் ஆஃப் வசதிகள் இருக்கின்றன.

வெளிநாடுகளில் விற்பனை செய்யப்படும் ஏரோக்ஸில் கீலெஸ் வசதி இருக்கிறது. ஆனால், இந்தியாவில் அந்த ஆப்ஷன் கொடுக்கப்படவில்லை. மேலும், மற்ற நாடுகளில் ப்ரீலோடு அட்ஜஸ்டபிள் கேஸ் சார்ஜ்டு ஷாக் அப்ஸார்பர்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இந்தியாவில் அட்ஜஸ்ட் செய்ய முடியாத ஷாக்ஸ்தான். கேஸ் சார்ஜ்டு வேண்டும் என்றால், கூடுதலாக 17,000 ரூபாய் செலவழிக்க வேண்டும்.

இன்ஜின் மற்றும் பெர்ஃபாமன்ஸ்:

இந்த இடத்தில்தான் இது ஏன் ஒரு ஒர்த்தான ஸ்கூட்டர் என நமக்குக் கூறுகிறது ஏரோக்ஸ். R15-யில் இருக்கும் 155 சிசி இன்ஜினை அடிப்படையாகக் கொண்ட இன்ஜினைத்தான் இந்த ஏரோக்ஸில் பயன்படுத்தியிருக்கிறது யமஹா. இதில் 4 வால்வுகள் கொண்ட, 155சிசி லிக்விட் கூல்டு இன்ஜின் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்து ஓட்டும் போது 100 கிமீ-ல் கூட எந்தவித உறுத்தலும் இல்லாத அளவுக்கு ஸ்மூத்தாக இருக்கிறது இன்ஜின். 90 - 95 கிமீ வேகத்தில் நெடுஞ்சாலைகளில் என்னால் அழகாக க்ரூஸ் செய்து பறக்க முடிந்தது. 90 கிமீ வேகத்தில் செல்லும்போதுகூட, ஓவர்டேக் செய்யவேண்டும் என்றாலும், அதற்கான வேகத்தையும் உடனடியாகக் கொடுக்கிறது ஏரோக்ஸ். அதிகபட்சமாக 115 கிமீ ஸ்பீடு வரை செல்ல முடிந்தது இந்த ஏரோக்ஸில்.

சிட்டிக்குள் எப்படி இருக்கிறது ஏரோக்ஸ் என்று கேட்கிறீர்களா? சிட்டிக்குள்ளும் உரிய துடிப்புடன் விரைவைக் காட்டுகிறது ஏரோக்ஸ். நல்ல ரீஃபைன் செய்யப்பட்ட இன்ஜின்; த்ராட்டில் ரெஸ்பான்ஸும் அருமை.

வேகமாகத்தான் ஓட்டுவேன் என்றால் மைலேஜை எதிர்பார்க்க முடியாது. 40 கிமீ குறைவாகவே கிடைக்கும். ஆனால், சரியான வேகத்தில் சிறப்பான கையாளுமையோடு 50 கிமீ மைலேஜைத் தாராளமாகப் பெற முடியும். இன்ஜின் ஸ்டார்ட்/ஸ்டாப் நல்ல உறுதுணை. மற்றபடி, ஸ்கூட்டரின் ஸ்போர்ட்டி தன்மைக்கு ஏற்ற வகையில் எக்ஸாஸ்ட் பீட்டும் ஸ்போர்ட்டியாக இருந்திருக்கலாமோ?

வாங்கலாமா?

இப்படியான டிசைனுடன் ஒரு பெர்ஃபாமன்ஸ் ஸ்கூட்டரைத் தைரியமாக இந்தியாவில் வெளியிட்டிருக்கிறது யமஹா. 1.29 லட்சம் ரூபாய் எக்ஸ்-ஷோரூம் விலையுடன் இருந்தாலும், அதற்கான நியாயம் சேர்க்கிறது ஏரோக்ஸ். ஸ்கூட்டர் வேணும், ஸ்போர்ட்டியா வேணும், பெர்ஃபாமன்ஸ் சூப்பரா இருக்கணும் என்பவர்களுக்குக் கண்டிப்பாக ஓராக்ஸ் பிடிக்கும். பெர்ஃபாமன்ஸை டீலில் விட்டுவிட்டு, பிராக்டிக்காலிட்டிக்காக ஸ்கூட்டரை விரும்புபவர்களை ஏரோக்ஸ் வசீகரிப்பது கொஞ்சம் சிரமம்தான். இந்தியாவில் பெரும்பாலான ஸ்கூட்டர்கள் ப்ராக்டிக்காலிட்டிகாகத்தான் வாங்கப்படுகின்றன. அப்படியான ஒரு சந்தையில் ஏரோக்ஸ் எப்படியான வரவேற்பைப் பெறப் போகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.

ரைடிங் பொசிஷன் ஸ்போர்ட்டி...
ரைடிங் பொசிஷன் ஸ்போர்ட்டி...
எல்இடி ெஹட்லைட்ஸ் பளீர்...
எல்இடி ெஹட்லைட்ஸ் பளீர்...
சீட் மற்றும் ஃப்யூல் கேப் திறக்க பட்டன்கள்...
சீட் மற்றும் ஃப்யூல் கேப் திறக்க பட்டன்கள்...

இன்ஜின்: லிக்விட் கூல்டு, 4 ஸ்ட்ரோக்

டிஸ்ப்ளேஸ்மென்ட்: 155சிசி

பவர்: 15bhp

டார்க்: 1.39kgm

பின்பக்க பிரேக்; 130மிமீ டிரம்

முன்பக்க பிரேக்: 230மிமீ டிஸ்க்

புளூடூத் கனெக்டிவிட்டி: உண்டு

ஏபிஎஸ்: சிங்கிள் சேனல்

ஃப்யூல் டேங்க்: 5.5 லிட்டர்

முன்பக்க டயர்: 110/80-14

பின்பக்க டயர்: 140/70-14