Published:Updated:

ரெடியா இருங்க... யமஹாவில் இருந்து புது பைக்ஸ் வரப்போகுது! Yamaha FZ-X

Yamaha FZ-X SPY Photo
Yamaha FZ-X SPY Photo

யமஹாவின் டிவி விளம்பரப் படப்பிடிப்பில்தான் இந்த FZ-X பைக்கின் படம் கசிந்துள்ளது. அதுவும் Camouflage தோற்றத்தில் இல்லாமல், நேரடியாகவே காட்சி தந்துள்ளது FZ-X

இந்த மாதம் பைக்குகளின் புதுவரவு சீஸன் போல! போன மாதம் பஜாஜ், ராயல் என்ஃபீல்டு நிறுவனங்களின் ஸ்பை ஷாட்கள் சிக்கின. இப்போது லேட்டஸ்ட்டாக யமஹா நிறுவனத்தின் FZ-X பைக் படம் ஒன்று கிடைத்துள்ளது.

பொதுவாக, சினிமா ஹீரோக்களின் படப்படிப்புகள் நடக்கும்போது, சில முக்கியமான ஷாட்கள் லீக் ஆகும். அதுபோல், யமஹாவின் டிவி விளம்பரப் படப்பிடிப்பில்தான் இந்த FZ-X பைக்கின் படம் கசிந்துள்ளது. அதுவும் Camouflage தோற்றத்தில் இல்லாமல், நேரடியாகவே காட்சி தந்துள்ளது FZ-X.

யமஹாவில் இருந்து XSR பைக்தான் முதலில் வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், FZ-X பைக் சிக்கியுள்ளதுதான் இப்போதைய பெரிய ஆச்சரியம். XSR–க்கு முன்பு ஸ்பை ஷாட்டில் சிக்கிவிட்ட FZ-X பைக்கில் என்ன ஸ்பெஷல்?!

Yamaha FZ-X SPY Photo
Yamaha FZ-X SPY Photo

இந்தியாவின் ரெட்ரோ பைக்குகளுக்குத்தான் மார்க்கெட் அதிகம் என்பதைப் புரிந்து கொண்டிருக்கிறது யமஹா. அதனால் ஸ்போர்ட்டி மாடலுக்கு நோ சொல்லிவிட்டு, ரெட்ரோ ஸ்டைலுக்குத் தாவியிருக்கிறது. இந்த FZ-X பைக் வழக்கமான ஸ்போர்ட்டி டிசைனில் பல்க்கியாக இல்லாமல், வட்ட வடிவ ஹெட்லைட், அதனைச் சுற்றி அலுமினிய க்ரோம் பிராக்கெட்டுகளுடன் இருக்கிறது. மேலே சிம்பிளான ஒற்றை பாக்ஸ் டிஜிட்டல் டயல் நிச்சயம் ரெட்ரோ ஸ்டைல்தான். இதன் பல்க்கியான பெட்ரோல் டேங்க், கண்ணீர்த் துளி வடிவ டிசைனாம். 13 லிட்டர் கொள்ளளவு இருக்கலாம். டேங்க்குக்குக் கீழே பூமராங் வடிவத்தில் ரேடியேட்டர் கிரில் கொடுத்திருக்கிறார்கள். பின்பக்கம் எக்ஸாஸ்ட், கொஞ்சம் மாடர்னாகவே தூக்கி வைத்துப் பொருத்தப்பட்டிருக்கிறது.

ஸ்ப்ளிட் சீட்கள் இல்லை; அதற்குப் பதிலாக சிங்கள் சீட்டையே கொஞ்சம் தட்டையாக, அதேசமயம் நீளமாகக் கொடுத்திருக்கிறார்கள். பொதுவாக, FZ பைக்கில், உயர்த்தி வைக்கப்பட்ட பில்லியன் சீட்டில் டபுள்ஸ் அடிப்பது கொஞ்சம் சிரமமாக இருக்கும். இந்த பைக்கின் ஃப்ளாட் சீட், அந்தக் குறையைச் சரி செய்யும். இதன் ஃபுட் பெக்குள் வழக்கமான FZ பைக்போல பின்னோக்கி இருக்காது. கொஞ்சம் முன்னோக்கி தினசரி கம்யூட்டிங்குக்கு வசதியாக வைத்திருக்கிறார்கள். எனவே, சிட்டி ரைடிங்குக்கு வசதியாக இருக்கலாம்.

யமஹாவின் டிவி விளம்பரப் படப்பிடிப்பில் FZ-X
யமஹாவின் டிவி விளம்பரப் படப்பிடிப்பில் FZ-X
Photos: Surya Dagar

ஓடிக் கொண்டிருக்கும் FZ-Fi பைக்குக்கும் FZ-X பைக்குக்கும் தோற்றத்தில் மட்டுமில்லை; நீள/அகலங்களிலும் வித்தியாசப்படுத்தி இருக்கிறார்கள். FZ பைக்கைவிட FZ-X–ன் நீளம் 30 மிமீ அதிகம். அகலத்தில் 5 மிமீ–யும், உயரத்தில் 35 மிமீ–யும் அதிகமாக டிசைன் செய்திருக்கிறார்கள். FZ-Fi-ன் அளவுகள். 2,020/785/1,115 மிமீ. இதுவே FZ-Fi-ன் அளவுகள் (1,990/780/1,080மிமீ) ஆனால், இதன் வீல்பேஸ் அதே 1,330 மிமீதான் என்பதால், நிலைத்தன்மை அதேபோல்தான் இருக்கலாம்.

ஸ்கூப் நியூஸ்: பைக் பிரியர்களுக்குக் கூடுதலாக ஒரு செய்தி – யமஹாவின் அடுத்த ரெட்ரோ பைக்கான XSR பைக்கும் யமஹா தொழிற்சாலையில் டிசைன் செய்யப்பட்டு வருகிறது என்று தகவல். இது MT பைக்கில் இருக்கும் 125 சிசி இன்ஜினைக் கொண்டு வரலாம் என்கிறார்கள். அதாவது, 150 சிசி–க்கு FZ-X. 125 சிசிக்கு XSR.
வட்ட வடிவ ஹெட்லைட், அதனைச் சுற்றி அலுமினிய க்ரோம் பிராக்கெட்டுகளுடன் இருந்தது
வட்ட வடிவ ஹெட்லைட், அதனைச் சுற்றி அலுமினிய க்ரோம் பிராக்கெட்டுகளுடன் இருந்தது

இன்ஜின் விவரங்களைப் பொருத்தவரை FZ-Fi-V3–ல் காணப்படும் அதே 149 சிசி, ஏர் கூல்டு இன்ஜின்தான் இந்த FZ-X பைக்கிலும் இருக்கும். பவர்/டார்க் போன்ற அம்சங்களும் அதேதான் என்கிறார்கள். (12.4bhp@7,500rpm) கியர்பாக்ஸாவது 6 ஸ்பீடு கொடுத்திருக்கலாம். FZ சீரிஸில் இருக்கும் அதே 5 ஸ்பீடு கியர்பாக்ஸ்தான் இருக்கிறது. ஏபிஎஸ்–ஸும் சிங்கிள் சேனல்தான். சஸ்பென்ஷன் மற்றும் பிரேக்ஸ் போன்றவையும் FZ சீரிஸ்தான். அதாவது, பாடி வொர்க்கைத் தவிர மற்ற எல்லாமே அப்படியே FZ–Fi தான்.

வழக்கமாக யமஹா பைக்குகளில் விலைதான் பர்ஸைப் பதம் பார்க்கும். ஸ்டாண்டர்டு FZ பைக்கைவிட FZ-X-ன் விலையையும் சுமார் 5,000 – 10,000 ரூபாய் வரை அதிகமாக பொசிஷன் செய்ய இருக்கிறது யமஹா. அநேகமாக, FZ-X-ன் ஆன்ரோடு விலை 1.50 லட்சம் வரலாம். இந்த ஜூன் 2021–ல் தமிழ்நாட்டு ஷோரூம்களில் இந்த ரெட்ரோ FZ-X பைக்கை எதிர்பார்க்கலாம்.

Photos: Surya.Dagar

அடுத்த கட்டுரைக்கு