Published:Updated:

ரோட்ஸ்ட்டர்… க்ரூஸிங் மான்ஸ்ட்டர்!

ரோட்ஸ்ட்டர்
பிரீமியம் ஸ்டோரி
ரோட்ஸ்ட்டர்

க்விக் டிரைவ்: யெஸ்டி ரோட்ஸ்ட்டர்

ரோட்ஸ்ட்டர்… க்ரூஸிங் மான்ஸ்ட்டர்!

க்விக் டிரைவ்: யெஸ்டி ரோட்ஸ்ட்டர்

Published:Updated:
ரோட்ஸ்ட்டர்
பிரீமியம் ஸ்டோரி
ரோட்ஸ்ட்டர்

விலை: சுமார் ரூ.2.31 – 2.39 லட்சம் (சென்னை ஆன்ரோடு)

யெஸ்டி ஷோரூமுக்குப் போய் ‘எதுங்க மலிவான பைக்’ என்றால், ரோட்ஸ்ட்டரைத்தான் காட்டுவார்கள். ஆம், இந்த யெஸ்டி ரோட்ஸ்ட்டர்தான் யெஸ்டியிலேயே விலை மலிவான, என்ட்ரி லெவல் க்ரூஸர் பைக். அதற்காக, மற்ற பைக்குகளுக்கும் இதற்கும் பெரிய விலை வித்தியாசமெல்லாம் இல்லைங்க! Dark, Chrome என இரண்டு வேரியன்ட்களில் வரும் இதன் எக்ஸ் ஷோரூம் விலை 1.98 – 2.06 லட்சம். ஆன்ரோடு விலைக்கு வரும்போது சுமார் 2.31 – 2.39 லட்சம் வரலாம். ராயல் என்ஃபீல்டு மீட்டியார் 350–க்கும், ஹோண்டா ஹைனெஸ்ஸுக்கும் போட்டியாக, செம ஸ்டைலாக, செம காட்டமாக இறங்கியிருக்கிறது யெஸ்டி ரோட்ஸ்ட்டர். நமக்குப் பச்சை - கறுப்பு என டூயல் டோனில் செம ஸ்டைலாக அந்த ரோட்ஸ்ட்டர் ஓட்டக் கிடைத்திருந்தது.

பார்த்தவுடன் ரெட்ரோ ஸ்டைலில், மிக நீளமாக, ஆஜானுபாகுவாக, அழகாக யாரையும் கவரும் டிசைனைக் கொண்டிருக்கிறது யெஸ்டி ரோட்ஸ்ட்டர். மீட்டியாரைப் போட்டியாக எடுத்து டிசைன் செய்தது நன்றாகவே தெரிகிறது. அந்தக் குட்டி விண்ட் ஸ்க்ரீனில் ஆரம்பித்து, இன்ஜின் கார்டு, ட்வின் எக்ஸாஸ்ட் பைப், பின் பக்க கிராப் ரெயில் என எல்லாமே கறுப்பு கலரில் செமத்தியாகவே இருந்தது. அட, பார் எண்ட் மிரர்கள்.. ஸ்டாண்டர்டாகவே வருகிறது போல!

க்ரூஸர் என்பதாலோ என்னவோ, Knuckle Guard கொடுக்கவில்லை. ஹெட்லைட்டைப் பார்த்ததுமே சொல்லிவிடலாம் – ரெட்ரோ ஸ்டைல் என்று. ஹெட்லைட்டைப் போலவேதான் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டரையும் உருண்டை வடிவில் வைத்திருக்கிறார்கள். எல்இடிதான். அதற்கு மேலே கிரில்லும் வைத்துக் கொள்ளலாம். அழகாகவும் இருக்கிறது; மாடர்னாகவும் இருக்கிறது. இந்த ஒற்றைக் குடுவை க்ளஸ்ட்டரில் ட்ரிப், ஆர்பிஎம், ஸ்பீடோ, ஃப்யூல் மீட்டர்கள், கியர் இண்டிகேட்டர், சைடு ஸ்டாண்ட் இண்டிகேட்டர் என எல்லாத் தகவல்களும் எல்சிடியில் மிளிர்கின்றன.

ஒரு விஷயத்தை இதில் கவனித்தோம் – ஸ்பீடோ மீட்டர் KMPH-ல் இல்லாமல் MPH–ல் இருந்தது. இதை ஹேண்டில்பாரில் உள்ள செட்டிங் மெனுவில் போய் மாற்றிக் கொள்ளலாம். நல்லவேளை – இந்த மைல் வேகம், நம் ஊர் ரைடர்களுக்கு எத்தனை கிமீ–ல் போகிறோம் என்கிற குழப்பத்தை ஏற்படுத்தும். ஜாவா போலவே ட்வின் எக்ஸாஸ்ட், இதன் ரெட்ரோ லுக்கை இன்னும் அதிகப்படுத்துகிறது.

அகலமான டயர்கள் வாவ்! அப்பாடா… யெஸ்டியில் கிடைக்கும் ஒரே அலாய் வீல் பைக் இந்த ரோட்ஸ்ட்டர்தான் போல! ட்யூப் டயராக இருக்குமோ என்றும் பயப்படத் தேவையில்லை. மற்ற இரண்டு யெஸ்டி பைக் வாங்குபவர்கள், இதில் கவனமாக இருங்கள். கிண்ணென்ற கட்டுமானம், அதாவது டபுள் கிரேடில் சேஸி என்பதால்… நச்சென்று இருக்கிறது. பெரிய பெட்ரோல் டேங்க்… இதன் கொள்ளளவு 12.5 லிட்டர். வழக்கம்போல், தொடைக்கு அந்த ரப்பர் கிரிப் நன்று. அகலமான டயர்கள்… முன் பக்கம் 18 இன்ச்; பின்னால் 17 இன்ச் இருக்கின்றன.

இந்த க்ரூஸரின் சீட்டிங் பொசிஷன்தான் அருமை. உயர்த்தி வைக்கப்பட்ட நீளமான ஹேண்டில் பாரைப் பிடித்து ஓட்ட ஜாலியாக இருந்தது. இதன் உயரம் 790 மிமீ என்பது சரிதான். ஸ்ப்ளிட் சீட் இல்லை; ஆனால் சீட் பிரிந்திருந்தது. ஓட்டுதலின் நடுவே ரைடர் பின்னால் போகாமலிருக்க, ஒரு டிவைடர் இருந்தது. அதைவிட, கிராப் ரெயிலுக்கு முன்பே சீட்டின் கடைசியில் ஒரு ஹிப் ரெஸ்ட் இருந்தது – பில்லியன் ரைடருக்கு ஜாலிதான்! சில ஹார்டு பிக்–அப்களில் பில்லியன் பயணிகள் பின்பக்கம் உந்தித் தள்ளப்பட மாட்டார்கள். இதன் இன்னொரு போட்டியாளரான ஹைனெஸ்ஸில் இது இல்லை. மீட்டியாரில் இருக்கும் புளூடூத் கனெக்டிவிட்டி, டர்ன்–பை–டர்ன் நேவிகேஷன் சிஸ்டம் போன்றவை டெஸ்டியில் மிஸ்.

இதில் இருப்பது ஜாவாவில் இருக்கும் 334 சிசி, லிக்விட் கூல்டு இன்ஜின். இதன் பவர் 29.7bhp; டார்க் 2.9 kgm. எனக்கு இதன் பிக்–அப் மிகவும் பிடித்திருந்தது. மிட் ரேஞ்சில் இதன் பவர் டெலிவரியும் அருமையாகவே இருந்தது. அதாவது, சிட்டிக்குள் 4–வது மற்றும் 5–வது கியரில் க்ரூஸ் பண்ண நன்றாக இருந்தது. இதன் டாப் எண்டைச் சோதிக்கத்தான் நேரம் போதவில்லை. எப்படியும் 6–வது கியரில் 130 கிமீ–க்கு மேல் பறக்கலாம் என்று நினைக்கிறேன். இதன் ட்வின் எக்ஸாஸ்ட்டில் இருந்து கிளம்பிய சத்தம், ஸ்க்ராம்ப்ளரைவிட அருமையாக இருந்தது. ‘‘என்னா பைக்கு… புதுசா இருக்கு… யெஸ்டினு போட்டிருக்கு… வண்டி மறுபடியும் வரப்போகுதா’’ என்று ஆர்வமாகக் கேட்டார்கள் சில யூத்கள்.

12.5 லிட்டர் பெட்ரோல் டேங்க்... அந்த கிரிப் இதில் இல்லை.
12.5 லிட்டர் பெட்ரோல் டேங்க்... அந்த கிரிப் இதில் இல்லை.
ரோட்ஸ்ட்டர்தான், மற்ற போட்டி பைக்குகளான மீட்டியார், ஹைனெஸ்ஸைவிட பவர் அதிகம்
ரோட்ஸ்ட்டர்தான், மற்ற போட்டி பைக்குகளான மீட்டியார், ஹைனெஸ்ஸைவிட பவர் அதிகம்
யெஸ்டி பைக்குகளிலேயே இதில் மட்டுமே அலாய் வீல்; ட்யூப்லெஸ் டயர்கள் இருக்கின்றன.
யெஸ்டி பைக்குகளிலேயே இதில் மட்டுமே அலாய் வீல்; ட்யூப்லெஸ் டயர்கள் இருக்கின்றன.
ஒற்றைக் குடுவை க்ளஸ்ட்டரில் எல்லாத் தகவல்களும் எல்சிடியில் தெரிகின்றன.
ஒற்றைக் குடுவை க்ளஸ்ட்டரில் எல்லாத் தகவல்களும் எல்சிடியில் தெரிகின்றன.

இந்த க்ரூஸர் செக்மென்ட்டில் அதிக பவரும் டார்க்கும் கொண்டிருப்பது யெஸ்டிதான். ஹைனெஸ்ஸில் சிசி அதிகமாக இருந்தாலும், இதன் பவர் 21.1bhp தான். மீட்டியாரில் இதைவிட பவர் குறைவு – 20.5bhp பவர்தான். மேலும் இரண்டிலும் இருப்பது ஏர்கூல்டு இன்ஜின். மற்ற இரண்டிலும் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ்தான் என்றால், யெஸ்டியில் இருப்பது 6 ஸ்பீடு கியர். ஓட்டுதலைப் பொருத்தவரை யெஸ்டி கெத்து காட்டுகிறது. நிச்சயம் ஓட்டுதலில் கில்லியாக இருப்பது இந்த யெஸ்டி ரோட்ஸ்ட்டர்தான். ஜாவா ஓட்டியவர்களைக் கேட்டால் இதன் ரைடிங் பெர்ஃபாமன்ஸ் தெரியும்.

இந்த மூன்று பைக்குகளின் சஸ்பென்ஷனையும் ஒப்பிட்டால்… மூன்றிலும் இருப்பதுமே டெலிஸ்கோப்பிக் ஃபோர்க் மற்றும் ட்வின் ஷாக் அப்சார்பர்கள். பெரிய ஆஃப்ரோடு பண்ண முடியாது; ஆனால் நகரம் மற்றும் நெடுஞ்சாலைகளில் உள்ள மேடு பள்ளங்களைச் சமாளிக்க ஏதுவான செட்அப். இதன் சஸ்பென்ஷன் டிராவல் 135 மிமீ மற்றும் 100 மிமீ டிராவல்தான். இந்த க்ரூஸருக்கு இது சரிதான்.

ரோட்ஸ்ட்டர்… க்ரூஸிங் மான்ஸ்ட்டர்!


கிரவுண்ட் கிளியரன்ஸிலும் இதுதான் பாஸ் மார்க் வாங்குகிறது. மீட்டியாரிலும் ஹைனெஸ்ஸிலும் 170 மற்றும் 166 மிமீதான்; ஆனால் யெஸ்டியில் இருப்பது 175 மிமீ. இதனால் ஸ்பீடு பிரேக்கர்களைச் சமாளிப்பதிலும் கில்லி யெஸ்டி. இதன் வீல்பேஸ் 1,440 மிமீ. வளைத்து நெளித்து ஓட்ட கொஞ்சம் பழக வேண்டும். இதன் எடையும் 184 கிலோ. ஏபிஎஸ் பிரேக்கிங்கைப் பொருத்தவரை இரண்டு பக்கமும் டிஸ்க் இருக்கின்றன. 320 மற்றும் 240 மிமீ.

இந்த பைக்கை ஓட்டியவரை சில சின்னச் சின்ன குறைகள் தெரிந்தன. இதன் பிளாஸ்டிக் தரம், பெயின்ட் தரம் இன்னும் மேம்படலாம். முக்கியமாக, அந்த சைடு லாக் இன்னும் 90–கள் ஸ்டைலிலேயே பைக்கின் வலதுபுறம் வைத்திருப்பது க்ளாஸிக் என்று ஏற்றுக் கொள்ள முடியாது. இதை இக்னிஷன் கீ ஸ்லாட்டிலேயே வைத்திருக்கலாம். மற்றபடி இதன் மைலேஜ், டாப் ஸ்பீடு போன்ற விவரங்கள் இனி வரும் டெஸ்ட் ரைடில் பார்க்கலாம்.

ஆனால், ஹைனெஸ்ஸுக்கும் மீட்டியாருக் கும் ஒரு நல்ல சுவாரஸ்யமான போட்டி ரோட்ஸ்ட்டர் மூலம் காத்துக் கொண்டிருக்கிறது.

ரோட்ஸ்ட்டர்… க்ரூஸிங் மான்ஸ்ட்டர்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இன்ஜின் : 334 சிசி, லிக்விட் கூல்டு

பவர்: 29.7bhp

டார்க்: 2.9kgm

சீட் உயரம்: 790 மிமீ

வீல்பேஸ்: 1,440 மிமீ

எடை: 184 கிலோ

கி.கிளியரன்ஸ்: 175 மிமீ

சஸ்பென்ஷன் டிராவல்: மு:135/ பி:100மிமீ

பெட்ரோல் டேங்க்: 12.5 லிட்டர்

டயர்: ட்யூப்லெஸ்

வீல்கள்: 18/17 இன்ச் (மு/பி) அலாய்

பிரேக்ஸ்: 320/240மிமீ டிஸ்க்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism