
கார்களுக்கான 4 வகையான முக்கியமான பிரேக் ஆயில்களைப் பற்றிப் பார்க்கலாம்.
கார்களைப் பொருத்தவரை, சுமார் 2,000 கிலோ எடை கொண்ட வாகனங்களை வெறும் ஒரே காலில், ஒரே பெடலை மிதித்து… இரண்டே நொடியில் நிறுத்துகிறோம். பிரேக்குகள், வாகனத்துக்கு மட்டுமில்லை; நமக்கும் ஆபத்பாந்தவன். அப்படிப்பட்ட பிரேக்குகளுக்கு ஆயில்கள்தான் ஆயுளைக் கூட்டுகின்றன. கார்களுக்கான 4 வகையான முக்கியமான பிரேக் ஆயில்களைப் பற்றிப் பார்க்கலாம்.
DOT 3
தற்போதைய மார்க்கெட்டில் மிகவும் பிரபலமாகப் பயன்படுத்தப்படும் DOT 3, கிளைகோல் என்னும் ரசாயனத்தை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படுகிறது.இந்த பிரேக் ஆயில் நீண்ட காலமாக கார்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பிரேக் ஆயிலுக்கு மிகவும் முக்கியம் கொதிநிலை; அதாவது பாயிலிங் பாயின்ட். பிரேக் ஆயில் எவ்வாறு வெப்பநிலையைத் தாங்குகிறது என்பதை பொருத்துத்தான் அதன் தரம் கணக்கிடப்படுகிறது. DOT 3 பிரேக் ஆயிலின் பாயிலிங் பாயின்ட் சுமார் 205 டிகிரி செல்சியஸ். இது விலை மலிவான பிரேக் ஆயில். அதாவது, பட்ஜெட் கார்களுக்கு இந்த டாட்–3 ஆயில்தான் பயன்படுத்துவார்கள்.
DOT 4
DOT 4 வகை பிரேக் ஆயிலும், கிளைகோல் மூலம் தயாரிக்கப்படுவதுதான். ஆனால், இதன் விலை சற்று அதிகம். இதன் விலைக்கு ஏற்ப இதன் பாயிலிங் பாயின்ட்டும் DOT 3–யைவிட அதிகம். சுமார் 230° செல்சியஸ். இந்தவகை பிரேக் ஆயில், ஓரளவு பெரிய வாகனங்களுக்குப் பயன்படுத்துகிறார்கள். இந்த வகை பிரேக் ஆயில்களில் ஈரப்பதம் உருவானால், இதை மாற்ற வேண்டிய நேரம் என்று அர்த்தம்.


DOT 5
இதுதான், மார்க்கெட்டில் மிகவும் விலை உயர்ந்த பிரேக் ஆயில்களில் ஒன்று. ஏனென்றால், சிலிக்கான் மூலம் தயாரிக்கப்படுவதுதான் இதற்குக் காரணம். இது சுமார் 260 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையைத் தாங்கும் திறன் கொண்டது. கிளைகோல் மூலம் தயாரிக்கப்படும் பிரேக் ஆயில்போல இதில் ஈரப்பதம் உருவாகாது. DOT 5 வகையிலும் பல குறைபாடுகள் இருப்பதாகச் சொல்கிறார்கள். இதில் நுரை உருவாக்கம் எளிதானது. எனவே, அது பிரேக் பிடிக்கும் திறனைக் குறைக்கும். இந்த வகை பிரேக் ஆயில்கள், ப்ரீமியம் கார்கள் மற்றும் பெரிய வாகனங்களில் பயன்படுத்தப்படுகிறது.
DOT 5.1
பிரேக் ஆயில்களில் சிறந்த மற்றும் மிகவும் அதிக வெப்பநிலை கொண்டது DOT 5.1. இது போரேட் எஸ்டர் மற்றும் கிளைகோல் ஈதர் ஆகியவற்றின் கலவையாகக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. DOT 5.1 சுமார் 280° c வெப்பநிலையைத் தாங்கும் திறனை கொண்டது. இந்த பிரேக் ஆயில் ஈரப்பதத்தை உறிஞ்சும் திறனைக் கொண்டுள்ளதால், இதன் செயல்திறன் மிகவும் அதிகம். இது பெரிய, ப்ரீமியம் மற்றும் லக்ஸூரி செக்மென்ட் வாகனங்களில் பயன்படுத்தப்படுகிறது.
மக்களே… பிரேக் பிடிப்பதில் ஏதாவது வித்தியாசம் தெரிந்தால், உடனே மெக்கானிக்கிடம் பிரேக் ஆயில் சரி பார்ப்பது அவசியம். பிரேக் பிடிக்க, பிரேக் ஆயிலு முக்கியம் பிகிலு!