நான் தற்போது மாருதி சுஸூகியின் டிசையர் காரைப் பயன்படுத்தி வருகிறேன். அது பழையதாகிவிட்டதால், தற்போது புதிதாக கார் வாங்க முடிவெடுத்துள்ளேன். எனது பட்ஜெட் 10-12 லட்ச ரூபாய். நான் வாங்க விரும்பும் கார் காம்பேக்ட் எஸ்யூவியாக இருக்க வேண்டும்; அதில் மாதத்துக்கு 2,000 - 2,500 கி.மீ வரை பயணிப்பேன் என்பதால், அது அதிக மைலேஜ், குறைவான பராமரிப்புச் செலவுகள், சிறப்பான ரீ-சேல் மதிப்பு ஆகியவற்றைக் கொண்டிருக்க வேண்டும். மாருதி சுஸூகி ஏப்ரல் 2020 முதலாக டீசல் கார்களை விற்பனை செய்யாது என்பதால், விட்டாரா பிரெஸ்ஸாவை வாங்குவது நல்ல சாய்ஸாக இருக்குமா? எனக்கான தெளிவான பதிலை எதிர்பார்க்கிறேன்.
- எஸ்.பாலசுப்ரமணியம், பொள்ளாச்சி.

ஏப்ரல் 2020 முதலாக, `டீசல் இன்ஜின் பொருத்தப்பட்ட வாகனங்களை விற்பனை செய்வதில்லை' என்ற முடிவுக்கு மாருதி சுஸூகி வந்துவிட்டது தெரிந்ததே. எனவே, தற்போதைய சூழலில், 5 வருடம்/1 லட்சம் கி.மீ வாரன்ட்டியை அந்த நிறுவனம் வழங்கிவருகிறது. எனவே, இது உங்களுக்கு மனநிறைவைத் தந்தால், தள்ளுபடிகளுடன் கிடைக்கக்கூடிய விட்டாரா பிரெஸ்ஸாவைத் தேர்வு செய்யலாம். நீங்கள் ஏற்கெனவே காம்பேக்ட் செடான் வைத்திருப்பதால், காம்பேக்ட் எஸ்யூவிகளுக்குச் செல்வது நல்ல முடிவாகவே இருக்கும். உங்கள் பட்ஜெட்டில் நெக்ஸான், விட்டாரா பிரெஸ்ஸா, வென்யூ, எக்கோஸ்போர்ட், XUV 3OO ஆகிய கார்களின் டீசல் மிட் வேரியன்ட் மாடல்களில் ஒன்றை வாங்க முடியும். இதில் லேட்டஸ்ட் கார்களான வென்யூ மற்றும் XUV 3OO, எதிர்பார்த்தபடியே அதிக வசதிகளைக் கொண்டிருக்கின்றன. குறைவான பராமரிப்புச் செலவு - அதிக மைலேஜ் - நல்ல ரீசேல் மதிப்பு ஆகியவற்றை, பழைய மாடல்களான எக்கோஸ்போர்ட்/விட்டாரா பிரெஸ்ஸா கொண்டிருக்கின்றன. கொடுக்கும் பணத்துக்கு ஏற்ற காராக இருக்கும் நெக்ஸான், விரைவில் எலெக்ட்ரிக் அவதாரத்தில் வரவிருக்கிறது. விட்டாரா பிரெஸ்ஸாவின் ஃபேஸ்லிஃப்ட் மாடலைக் கொண்டுவரும் முடிவில் இருக்கும் மாருதி சுஸூகி, அதில் டீசல் இன்ஜின் ஆப்ஷனை வழங்காது என்றே தெரிகிறது. இதற்கான மாற்றாக, SHVS தொழில்நுட்பம் உடனான பெரிய 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் இடம்பெறும்.
இனோவா க்ரிஸ்டா வாங்கத் தீர்மானித்திருக்கிறேன். ஆனால், தற்போதைய BS-4 மாடலை வாங்குவதா அல்லது BS-6 வெர்ஷனை வாங்கலாமா என்பதில் குழப்பம் இருக்கிறது. BS-4 மாடலில் BS-6 டீசலைப் பயன்படுத்தினால், பின்னாளில் ஏதேனும் பிரச்னை வருமா?
- எல்.சபரி, இமெயில்.

நீங்கள் குறிப்பிட்டபடி, BS-6 டீசல் BS-4 காரில் பயன்படுத்தும்போது சிற்சில இடர்ப்பாடுகள் வரலாம் என்றாலும் (BS-6 டீசலில் Sulphur-ன் அளவு, BS-4 டீசலைவிட மிகக் குறைவு), அது உடனடியாக மிகப்பெரிய தாக்கத்தை இன்ஜினில் ஏற்படுத்தாது எனச் சொல்லலாம். எனவே, ஒருவேளை கார் உங்களுக்கு உடனடித் தேவையாக இருந்தால், தற்போது கொஞ்சம் தள்ளுபடிகளுடன் விற்பனை செய்யப்படும் இனோவா க்ரிஸ்டாவின் BS-4 மாடலை வாங்கிக்கொள்ளலாம். இல்லையென்றால், முன்பைவிடக் குறைவான சுற்றுச்சூழல் மாசைத் தரக்கூடிய இந்த எம்பிவியின் BS-6 மாடலைப் பரிசீலிக்கலாம் (குறைவான NOX & PM வெளிப்பாடு). ஆனால், இது முன்பைவிட அதிக விலையில் வெளிவரும் (சுமார் 1-1.5 லட்ச ரூபாய்) என்பதை நினைவில் கொள்ளவும். மாடலின் உற்பத்தி ஆண்டும் மாறுவதால், காரின் ரீ-சேல் மதிப்பிலும் அதற்கேற்ப மாற்றம் இருக்கும்.
கடந்த 15 ஆண்டுகளாக, பஜாஜின் பல்ஸர் பைக்கை ஓட்டி வருகிறேன். சிறிய வயதிலிருந்தே ஜாவா என்றால் கொள்ளை ஆசை. இதனாலேயோ என்னவோ, தற்போது மீண்டும் வெளிவந்திருக்கும் ஜாவா பைக் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. என்னிடமிருக்கும் இரு கார்களைத் (டாடா ஜெஸ்ட், ஹிந்துஸ்தான் அம்பாஸடர்) தினசரிப் பயன்படுத்துவேன். எனவே, வார இறுதி நாள்களில் செல்லக்கூடிய நெடுஞ்சாலைப் பயணங்களுக்கு இந்த பைக் ஏற்றதாக இருக்குமா? ராயல் என்ஃபீல்டைவிட அதிக விலையில் வந்திருக்கும் ஜாவா எப்படி இருக்கிறது?
- சீனிவாசன், ஒட்டன்சத்திரம்.

உங்கள் தேவைகளை வைத்துப் பார்க்கும்போது, நீங்கள் குறிப்பிட்டிருக்கும் ஜாவா பைக் நல்ல சாய்ஸாகவே தெரிகிறது. தற்போது விற்பனையில் இருக்கும் RE க்ளாஸிக் 350 பைக்கைவிட இது தொழில்நுட்பம், பர்ஃபாமன்ஸ், ஓட்டுதல் அனுபவம், வசதிகள், ஒட்டுமொத்தத் தரம் ஆகியவற்றில் உயர்ந்து நிற்கிறது. அந்த பைக் போலவே, இதையும் 5,000 ரூபாய் மட்டுமே கொடுத்து புக் செய்ய முடியும்; ஆனால், ராயல் என்ஃபீல்டுடன் ஒப்பிடும்போது, ஜாவாவின் ரீ-சேல் மதிப்பு, சேல்ஸ் & சர்வீஸ் நெட்வொர்க் ஆகியவற்றில் இன்னும் முன்னேற்றம் தேவைப்படுகிறது. தவிர இந்த பைக்கின் வெயிட்டிங் பீரியடும் அதிகம் (5 - 8 மாதங்கள்). எனவே, பெனெல்லி சமீபத்தில் அறிமுகப்படுத்தியிருக்கும் இம்பீரியல் 400 பைக்கையும்கூட நீங்கள் பரிசீலிக்கலாம்.
எனது உயரம் 6.4 அடி. எனக்கு எந்த பைக் சரியாக இருக்கும்? அதிக உயரத்தைக் கொண்ட ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் எனக்குப் பிடித்திருக்கிறது. எனக்கு வேறு ஏதேனும் ஆப்ஷன்கள் இருக்கின்றனவா?
- ஜெ. சந்தோஷ் குமார், இமெயில்.

உங்கள் உருவ அமைப்புக்கு, நீங்கள் குறிப்பிட்ட ஹிமாலயன் பொருத்தமான பைக்காக இருக்கும் எனத் தோன்றுகிறது. அதிக சஸ்பென்ஷன் டிராவல் மற்றும் பெரிய டயர்கள் காரணமாக, இந்த ராயல் என்ஃபீல்டு பைக்கின் உயரம் வழக்கமான பைக்குகளைவிட அதிகம். இருப்பினும் இந்த ADV பைக்கை ஒருமுறை டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்கவும். இதைவிட அதிக விலையில் கிடைக்கக்கூடிய பிஎம்டபிள்யூவின் G310GS பைக்கைக் கூட நீங்கள் பரிசீலிக்கலாம். ஒருவேளை இந்த இரு பைக்குகளைவிடக் குறைவான பட்ஜெட்டில் பைக் வேண்டும் என்றால், பஜாஜ் அவென்ஜர் க்ரூஸ்/பல்ஸர் 220F பைக்குகளைப் பார்க்கலாம்.