இந்தப் பயிலரங்கத்துக்கு நாங்கள் எதிர்பார்த்தது 9-ம் வகுப்பில் இருந்து 12-ம் வகுப்புவரை படிக்கும் மாணவ மாணவிகளைத்தான். ஆனால், கார் டிசைனிங் மீது அதீத ஆர்வம் கொண்ட நான்காம் வகுப்பு படிக்கும் மாணவர்கள்கூட, ஆர்வத்துடன் இந்தப் பயிலரங்கத்தில் கலந்து கொண்டார்கள்.
`கல்வி, படிப்பு, பள்ளிக்கூடம் என்பதெல்லாம் ஒரு கொண்டாட்டமாக இருந்தால் எப்படி இருக்கும்?’ என்பதற்கு ஓர் உதாரணமாக நடைபெற்றது கார் டிசைன் பற்றி மோட்டார் விகடனும் ஆயா அகாடமியும் இணைந்து நடத்திய இரண்டு நாள் பயிலரங்கம். சென்னை அண்ணா சலையில் உள்ள மோட்டார் விகடன் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தப் பயிலரங்கத்தில் கலந்து கொள்ள தஞ்சாவூர், தூத்துக்குடி, திருநெல்வேலி, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, பெங்களூரு போன்ற தொலைதூர ஊர்களில் இருந்தெல்லாம் தங்கள் பெற்றோர்களை அழைத்துக் கொண்டு பள்ளி மாணவ மாணவிகள் வந்திருந்தார்கள். இந்தப் பயிலரங்கத்துக்கு நாங்கள் எதிர்பார்த்தது 9-ம் வகுப்பில் இருந்து 12-ம் வகுப்புவரை படிக்கும் மாணவ மாணவிகளைத்தான். ஆனால், கார் டிசைனிங் மீது அதீத ஆர்வம் கொண்ட நான்காம் வகுப்பு படிக்கும் மாணவர்கள்கூட, ``எங்களின் கார் டிசைனிங் பற்றிய ஆர்வம் யாருக்கும் சளைத்ததல்ல!’ என்று சொல்லி எங்களோடு உரிமையோடு சண்டை போட்டு இந்தப் பயிலரங்கத்தில் கலந்து கொண்டார்கள்.
``இந்தப் பயிலரங்கத்தை நடத்தும் அசோக் லேலாண்ட் நிறுவனத்தின் டிசைன் துறைத் தலைவரான சத்தியசீலனை எங்களுக்கு நன்கு தெரியும். அவர் மோட்டார் விகடனுக்காக ஏற்கெனவே நடத்திய ஒரு சில ஆன்லைன் பயிலரங்குகளின் காணொளியை நாங்கள் பார்த்திருக்கிறோம். IIT, IISc, Indian Institute of Design, Ahamedabad போன்ற புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் கார் டிசைனிங் பற்றி வகுப்புகள் எடுப்பவர் என்றாலும், கார் டிசைனை ஒரு சுவாரஸ்யமான கதையைப்போல, எளிய மொழிநடையில் சிறுவர்களுக்குச் சொல்லக்கூடியவர் அவர். ஆகையால் வயது வரம்பைத் தளர்த்தி ஒன்பதாம் வகுப்புக்குக் கீழே படிக்கும் எங்கள் பிள்ளைகளுக்கும் இந்தப் பயிலரங்கத்தில் அனுமதி வேண்டும்!’’ என்று பெற்றோர்களும் பிடிவாதம் பிடித்து தங்கள் பிள்ளைகளை இந்த இரண்டு நாள் பயிலரங்கத்துக்கு அழைத்து வந்தார்கள்.
உள்ளூர் காரிலிருந்து வெளிநாட்டு கார்கள் வரை பல Brand மற்றும் மாடல் கார்களைப் பற்றி யூடியூபில் தெரிந்து கொண்ட தகவல்களை எல்லாம் மாணவர்கள் ஆவலோடு சொல்ல... அந்தக் கார்கள் எப்படி வடிவமைக்கப்பட்டன என்பதை காணொளியின் வழியாக சத்தியசீலன் திரையில் காட்டி மாணவர்களை ஒரு புதிய உலகத்துக்கு அழைத்துச் சென்றார். இப்போது மாணவர்கள் அனைவருக்கும் தாங்களும் இதுபோல ஒரு காரை டிசைன் செய்ய வேண்டும் என்று சொல்ல... சத்தியசீலனோடு வந்திருந்த அவர் சகாக்களான ஆறு கார் டிசைனர்கள், மாணவர்களுக்கு ஏராளமான பக்கங்களைக் கொண்ட அழகான அகலமான Car Sketch Guide மற்றும் தொழில்முறை டிசைனர்கள் பயன்படுத்தும் ஜெர்மன் நாட்டின் Schneider Luna Pencil மற்றும் பால் பென் ஆகியவற்றை வழங்கினார்கள். இதில் கவனிக்க வேண்டிய அம்சம் என்னவென்றால், இந்தப் பயிலரங்கத்தில் மாணவர்கள் யாருக்கும் Eraser வழங்கப்படவில்லை. அவர்கள் அதைப் பயன்படுத்துவதற்கான தேவையும் உருவாகவில்லை.
ஒரு கார் டிசைனருக்குப் பொறியியல் அறிவு எந்த அளவுக்கு முக்கியமோ, அதே அளவுக்கு, கற்பனாசக்தியும், மனக்கண்ணில் பார்ப்பதை காகிதத்திலோ கணினியிலோ வரையும் ஆற்றலும் முக்கியம். அந்த ஆற்றல் சிறுவயதில் எல்லோருக்கும் இயற்கையாகவே இருக்கும். அதைச் சரியான வழியில் ஒருங்கிணைத்து மடை மாற்றும் வேலையைச் செய்தாலே போதும் குழந்தைகளுக்குள்ளே இருக்கும் ஓவியன் வெளியே வந்துவிடுவான். அதனால், முதலில் நேர்கோடுகள், வட்டங்கள் மற்றும் அரைவட்டக் கோடுகள் ஆகியவற்றைத் தங்குதடை இல்லாமல் வரைய, அதாவது uninterupted flow of lines வரைய மாணவர்கள் பயிற்சி எடுத்தார்கள்.
அதன்பிறகு Two Dimensional Perspective, Three Dimensional Perspective, Golden Ratio... என ஓவியக்கலைக்கான அடிப்படைகளை மாணவர்கள் தெரிந்து கொண்டார்கள். அதன்பிறகு காரின் வீல்களை எப்படி ஆறே ஸ்டெப்பில் கச்சிதமாக வரைவது என்று தெரிந்துகொண்டு வரைந்து பார்த்தார்கள். அதன்பின் இது போன்ற பல Ruleகளைப் பயன்படுத்தி ஒரு காரை வெவ்வேறு கோணங்களில் வரைந்து பார்த்தார்கள்.
அமெரிக்க கார் கம்பெனியான ஃபோர்டின் தலையெழுத்தையே மாற்றி அமைத்த கார் BRANCO. அந்தக் காரின் ஓவியம் ஒரு பக்கத்தில் இருக்க, அதன் மீது இருந்த Tracing Paper -ல் மாணவர்கள் அந்தக் காரை முதலில் வரைந்து பழகினார்கள். பிறகு அந்த Tracing பேப்பருக்கு மேலே இருந்த இன்னொரு Tracing பேப்பரில் அதை வரைய... இப்படி நான்கு ஐந்து டிரேசிங் பேப்பரில் வரைந்த பிறகு அவர்கள் எந்த ஒரு உதவியும் இல்லாமல் தாங்களாகவே வரைய ஆரம்பித்தார்கள். அப்படி வரையும்போதே, Roof Line, Waist line, Character Line, A Pillar, B Pillar, C Pillar என்று கார் டிசைனிங்கோடு சம்பந்தப்பட்ட கலைச் சொற்களையும் தானாகவே கற்றுக் கொண்டார்கள்.
கார் டிசைனிங்கின்போது கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டிய ஏரோடைனமிக்ஸ், பயன்படுத்தும் உலோகங்களின் எடை மற்றும் தன்மை போன்றவற்றின் முக்கியத்துவமும் அவர்களுக்குப் புரிய ஆரம்பித்தது.
இப்படி இரண்டு நாட்கள் நடைபெற்ற பயிலரங்கத்தின் இறுதிக் கட்டத்தை அடைந்தபோது, மாணவர்களுக்கு 20 நிமிடத்தில் எட்டு கார் ஸ்கெட்ச்சஸ் வரைய வேண்டும் என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதை மாணவர்கள் அனைவரும் அனாயாசமாகச் செய்தார்கள் என்றாலும் கற்பனைத் திறமை, கலா ரசனை, அடிப்படை இலக்கணம் ஆகிய எல்லாவற்றையும் சரிவிகிதத்தில் கலந்து ஒன்பது டிசைன்களை உருவாக்கிய தேஜஸ் என்ற ஒன்பது வயதுச் சிறுவன் அனைவரது பாராட்டையும் அள்ளினான்.

தேஜஸ் மட்டுமல்ல... இந்தப் பயிலரங்கத்தில் கலந்து கொண்ட அத்தனை மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும், சத்தியசீலனைச் சூழ்ந்துகொண்டு மேற்கொண்டு கார் டிசைன் பற்றி எங்கே படிப்பது, எந்த வயதில் படிப்பது, அதுவரை கார் டிசைன் பற்றிய ஆர்வம் தணியாமல் எப்படிப் பார்த்துக் கொள்வது என்று கேள்விக்கணைகளைத் தொடுக்க, சத்தியசீலன் விளக்கமாகப் பதில் கூறினார்.
உலகளாவிய புகழ், மனநிறைவு, நினைத்துப் பார்க்க முடியாத ஊதியம் என அனைத்தையும் சாத்தியப்படுத்தும் கார் டிசைன் படிப்பும், கற்பனைத் திறனும்!