Published:Updated:

கொலை செய்யத் தயங்காத கார் கொள்ளையர்கள்!

ச.ஜெ.ரவி

கொலை செய்யத் தயங்காத கார் கொள்ளையர்கள்!

ச.ஜெ.ரவி

Published:Updated:

வாடகைக்கு அழைத்துச் செல்வதுபோல நடித்து, அப்பாவி கார் டிரைவர்களைக் கொன்று வீசும் கொடூரம், நம் நாட்டில் பரவலாக நடக்கிறது. கோவை மாவட்டம் பொள்ளாச்சியில், 2006, 2007ம் ஆண்டுகளில் இந்த கார் கடத்தல் பூதாகாரமான பிரச்னை. காரைக் கடத்தி விற்பது மட்டும்தான் இவர்களின் நோக்கம். ஆனால் அதற்காக, குலை நடுங்கவைக்கும் கொலைகளையும் அரங்கேற்றியது இந்தக் கும்பல்.

கொலை செய்யத் தயங்காத கார் கொள்ளையர்கள்!

அடுத்தடுத்து கார் டிரைவர்களை கடத்தி கொலைசெய்த சீரியல் கில்லர்களிடம் சிக்கி, மரணத்தின் வாசலைத் தொட்டுத் திரும்பியவர், பொள்ளாச்சியைச் சேர்ந்த கார் டிரைவர் பாலசுப்பிரமணியம். அவரால் மறக்க இயலாத அந்தத் தருணத்தை நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

இப்போ நினைச்சாலும் அந்தச் சம்பவம் என்னை நடுங்க வைக்கும். பொள்ளாச்சியில அப்போ ஆம்னி காரை வாடகைக்கு ஓட்டிக்கிட்டு இருந்தேன். 2006, 2007ல எங்க கார் ஸ்டாண்ட்ல இருந்த ராஜன், வாடகைக்குப் போனவர் காணாமப் போனாரு. அப்புறம், ஜான் தாமஸ்னு இன்னொரு டிரைவரும் வாடகைக்குப் போனவரு திரும்பலை. ரெண்டு பேருக்கும் என்ன ஆச்சுன்னு தெரியலை. போலீஸ் விசாரிச்சுக்கிட்டு இருந்தாங்க.

2007டிசம்பர் மாசம், 'பொள்ளாச்சியில இருந்து பழனிக்குப் போகணும்’னு ஒருத்தர் எங்கிட்ட கார் வாடகைக்குப் பேசினார். 1,100 ரூபாய் வாடகை பேசி, 'காலையில ஏழு மணிக்கு வர்றோம். ரெடியா இருங்க’னு சொல்லிட்டுப் போனார். ரெடியா இருந்தேன்; மூணு பேர் வந்தாங்க; நேரா பழனி போனோம். அங்க, எங்க ஸ்டாண்ட் டிரைவர் ஜான் அந்தோணிசாமியைப் பார்த்தோம். வாடகைக்கு வந்த மூணு பேரும் அந்தோணிசாமிகிட்ட பேசினாங்க.

'உங்களைத்தான் தேடினோம். நீங்க இல்லைன்னதும் இவரைக் கூட்டிட்டு வந்தோம்’னு அந்தோணிசாமிகிட்ட மூணு பேரும் சொன்னாங்க. 'அதனால என்ன, இவரும் நம்ம ஸ்டாண்ட் ஆளுதானே... அவரும் ரெண்டு காசு சம்பாதிக்கட்டும்’னு அந்தோணிசாமி சொன்னார். அங்கிருந்து கிளம்பும்போது அந்தோணிசாமியும் என்கூட கார்ல வந்தார்.

மடத்துக்குளத்துகிட்ட வந்தப்போ, ஸ்பீடு பிரேக்கர் ஒண்ணு வந்ததால, காரை ஸ்லோ பண்ணினேன். ரோட்டுல ஆள் நடமாட்டம் இல்லை. அப்போ என் பக்கத்துல உட்காந்துட்டு இருந்த அந்தோணிசாமி, என்னை திடீர்னு அடிச்சார். பயத்துல காரை நிறுத்தினேன். பின்னாடி இருந்தவங்க, அப்போ என் தலையில அடிச்சாங்க. என்ன நடக்குதுனு எனக்குச் சுத்தமா புரியலை. 'காப்பாத்துங்க’னு சத்தம் போட்டேன். உடனே கை, கால், வாயைக் கட்டி, பின்னாடி டிக்கியில தூக்கிப் போட்டுட்டு, அங்கிருந்து வேகமாகப் போனாங்க.

கொலை செய்யத் தயங்காத கார் கொள்ளையர்கள்!

எதுக்கு என்னைக் கடத்துறாங்கனு ஒண்ணும் புரியலை. வாயைக் கட்டுனதால அவங்ககிட்ட கேட்கவும் முடியலை. அப்போ கார்ல இருந்த ஒருத்தன் அந்தோணிசாமிகிட்ட, 'ராஜன்தாமஸ் கதையை முடிச்ச மாதிரி, இவன் கதையையும் முடிச்சுடு’னு சொன்னான். 'மாமூலா செய்யுற மாதிரி செஞ்சுடலாம்’னு பேசிக்கிட்டாங்க. அப்போதான் ராஜனையும், தாமஸையும் கொலை பண்ணிட்டாங்கனு எனக்குத் தெரிஞ்சது.

என்னையும் சீக்கிரம் கொன்னுடுவாங்கனு தெரிஞ்சப்போ, ரொம்பவே பயந்துட்டேன். என்ன பண்றதுனு தெரியலை. என்னை அந்த இடத்துல கொன்னு புதைச்சுடலாம்னு ஒரு இடத்தைப் பத்திப் பேசிட்டு வந்தாங்க. அது எனக்கு உச்சகட்ட பயத்தைக் கொடுத்துச்சு. அடுத்து என்ன பண்ணலாம்னு யோசிக்கக்கூட முடியலை. அந்தளவுக்கு எனக்குள்ள பயம். என்னை அவங்க அடிச்சதுல முகம், கை கால்கள்ல எல்லாம் பயங்கர காயம். ரத்தம் வழிஞ்சுக்கிட்டே இருந்தது.

அப்போதான் காருக்கு பெட்ரோல் போடப் போனாங்க. மூணு பேரும் பங்க்குக்கு முன்னாடி இறங்கிக்கிட்டாங்க. 'ஏதாவது செஞ்சா, கத்தியில குத்திடுவேன்’னு மிரட்டினார் அந்தோணிசாமி. அவர் மட்டும் காரை ஓட்டிக்கிட்டு பங்க் உள்ளப் போனார்.

எப்படியும் என்னைக் கொல்லப் போறாங்கங்கறது தெரிஞ்சுடுச்சு. இந்த இடத்துல தப்பிச்சாதான் உண்டு. அந்தோணிசாமி கார்ல இருந்து இறங்கினதும், ரொம்ப கஷ்டப்பட்டு காரோட லாக்கைத் திறக்க முயற்சி பண்ணினேன். கதவு திறந்துடுச்சு. அப்படியே பெட்ரோல் பங்க்ல கீழே விழுந்து உருண்டேன். பங்க்ல இருந்தவங்க பதறிட்டாங்க. என்னைக் காப்பாத்த வந்தவங்ககிட்ட, 'இவர் என் சொந்தக்காரர். பைத்தியம் பிடிச்சுடுச்சு. ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டுப் போறேன்’னு சொல்லி, திரும்பவும் கார்ல என்னைத் தூக்கிப் போட முயற்சி செஞ்சார். ஆனா, என்னோட ரத்தக் காயங்களையும், கை கால்களைக் கட்டியிருக்கிறதைப் பார்த்தவங்க நம்பலை. உடனே அந்தோணிசாமி, காரை எடுத்துக்கிட்டு ஓடிட்டார். பிறகு, பங்குல இருந்தவங்க கயிறை அவுத்து விட்டாங்க.

உடனே போலீஸ் ஸ்டேஷன்ல கம்ப்ளைன்ட் கொடுத்தேன். போலீஸ் உடனடியா நாலு பேரைக் கைது செஞ்சு, என் காரை மீட்டுக் கொடுத்தாங்க. போலீஸ் விசாரணையில, ஏற்கெனவே டிரைவர் ராஜனை வாடகைக்குக் கூட்டிட்டுப் போயி, அரவக்குறிச்சிகிட்டயும், தாமஸை பொள்ளாச்சி, கோவில் பாளையத்திலும் கொன்னு புதைச்சது தெரியவந்துச்சு. இதுல 10 பேரை போலீஸ் கைது செஞ்சாங்க.

அந்தோணிசாமி எங்க ஸ்டாண்ட்ல இருந்தவர்; என்கூட நல்லா பழகுன டிரைவர். ஆனா, காசுக்காக கொலைகூட செய்யத் துணிவார்னு எதிர்பார்க்கலை. ராஜன் காணாமப் போனப்பவே, அந்தோணிசாமி மேல சந்தேகப்பட்டு போலீஸ் விசாரிச்சது. 'நான் அந்த ஸ்டாண்ட்லயே இருக்கேன். என்கூட இருக்குற ஆள நான் எப்படிங்க கடத்துவேன்?’னு அப்பாவியா கேட்டார். நாங்களும் அதை நம்பினோம். ஆனா மனுஷன் இப்படி பண்ணிட்டார். அஞ்சு பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், மூணு பேருக்கு ஏழு வருஷம் தண்டனையும் கொடுத்திருக்காங்க!' என்று முடித்தார் பாலசுப்பிரமணியம்.

இப்போது வாடகை கார் தொழிலை கிட்டத்தட்ட விட்டுவிட்ட 61 வயதான பாலசுப்பிரமணியம், அவசியத் தேவையாக இருந்தால் மட்டும், தெரிந்தவர்களுக்கு ஆக்டிங் டிரைவராகச் செல்கிறார்.

படம்: திவிஜய்