Published:Updated:

“இது பட்ஜெட் லக்ஸூரி கார்!”

MARUTI CIAZக.கவின் பிரியதர்ஷினி, படங்கள்: தே.தீட்ஷித்

கார் வாங்க வேண்டும் என்றால், முதலில் மாருதிக்குத்தான் முன்னுரிமை அளிப்பேன். காரணம், இதற்கு முன்பு மாருதி 800, டிசையர் என இரண்டு கார்களைப் பயன்படுத்தி உள்ளேன். இரண்டும் தலா ஐந்து ஆண்டுகள் என்னுடன் வாழ்ந்தவை. டிசையரை விற்பனை செய்துவிட்டு புதிய கார் வாங்கலாம் என்ற முடிவில் இருந்தபோது, மாருதி தவிர்த்து வேறு பிராண்டுகளையும் பார்க்கலாம் என ரெனோ டஸ்ட்டர், ஹோண்டா மொபிலியோ ஆகிய கார்களைப் பார்த்தேன். டஸ்ட்டரின் இன்டீரியர் டிஸைன் என்னைத் திருப்திப்படுத்தவில்லை; ஹோண்டா மொபிலியோவில் இருக்கைகள் மிக மெலிதாக இருந்தன. எனவே, வேறு காரைப் பார்க்கலாம் எனத் தேடிக் கொண்டிருந்தேன்.

அழகான சியாஸ்

என் பட்ஜெட்டில் அடங்கும் வகையில், லக்ஸூரி காரைப் போன்ற தோற்றத்தில் கார் வாங்க வேண்டும் என்பதுதான் என் திட்டம். கொஞ்சம் காத்திருக்கலாம் என்ற முடிவில் இருந்தபோது, சியாஸ் விளம்பரம் பார்த்தேன். பார்த்ததும் பிடித்து விட்டது. காரணம், பென்ஸ் கார் போன்ற தோற்றத்துடன் இருந்தது சியாஸ். உடனே மாருதி ஷோரூம் சென்றேன்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஷோரூம் அனுபவம்

திருச்சியில் மாருதியின் டீலரான பிஎல்ஏ ஷோரூமுக்குச் சென்றேன். அங்கே போய் சியாஸ் காரின் உள்பக்க டிசனையும், இடவசதியையும் பார்த்ததும் இன்னும் பிடித்துவிட்டது. டெஸ்ட் டிரைவ் செய்து பார்த்தபோது, காரின் சிறப்பம்சங்கள், வசதிகள் அனைத்துமே மன நிறைவைத் தந்தன. உடனே புக் செய்தேன். ஆனால், நான் விரும்பிய மெரூன் கலர் கேட்டேன். கிடைக்க தாமதமாகும் என்றார்கள். அதனால் வெள்ளை வாங்கிவிட்டேன்.

    “இது பட்ஜெட் லக்ஸூரி கார்!”

ப்ளஸ்

மாருதி டிசையரில் பின்னிருக்கைகளில் தாராளமாக உட்கார முடியாது. ஆனால், இதில் பின் சீட்டில் இடம் நல்ல இடவசதி இருக்கிறது. ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா, ரியர் ஏ.சி வென்ட், ஏபிஎஸ் பிரேக் ஆகியவை வசதியான, பாதுகாப்பான பயண அனுபவத்தைத் தருகின்றன. நீண்ட தூரப் பயணங்களில் அலுப்பு தெரியவில்லை.

மைனஸ்

காரின் ஹெட்ரூம் கொஞ்சம் குறைவாக இருப்பதால், தலை இடிக்கிறது. டர்போ லேக் இருப்பதால், ஸ்பீடு பிரேக்கர்களில்... சிக்னல்களில் கொஞ்சம் சிரமமாக இருக்கிறது. டிரைவர் சீட்டில் இருந்து பார்த்தால் சாலை முழுவதுமாகத் தெரியவில்லை. அலாய் வீல்கள் கொண்ட டாப் வேரியன்ட் வாங்கியிருக்கிறேன். ஆனால், ஸ்டெப்னி வீலுக்கு அலாய் வீல் இல்லை. ஸ்டார்ட்/ஸ்டாப் பட்டன் வசதியாக இருந்தாலும், சில சமயம் நான் ஆடியோ சிஸ்டத்துக்குப் பதில் இந்த பட்டனைத் தவறுதலாக அழுத்திவிடுகிறேன். இந்த பட்டன் எனக்குக் குழப்பத்தைத் தருகிறது.

    “இது பட்ஜெட் லக்ஸூரி கார்!”

பெர்ஃபாமென்ஸ்

ஷோரூமில், ‘26 கி.மீ மைலேஜ் தரும்’ என்றார்கள். நெடுஞ்சாலையில் எனக்கு 21.8 கி.மீ வரை மைலேஜ் தருகிறது சியாஸ். அவர்கள் சொன்ன மைலேஜை நெருங்குவது திருப்தி அளிக்கிறது. நகரம், நெடுஞ்சாலை ஆகிய இரண்டிலும் ஓட்டுவதற்கு வசதியாக உள்ளது.

இரண்டு முறை சர்வீஸுக்குக் கொடுத்து வாங்கிவிட்டேன். முதன்முறை காரை ஓட்டியதுபோலவே இப்போதும் இருக்கிறது. எந்த வித்தியாசமும் தெரியவில்லை. கார் ஓட்டும்போது தேவையற்ற அதிர்வுகளோ, இன்ஜினில் இருந்து சத்தமோ இல்லை. இந்த கார் எனக்குத் திருப்தி்யாக இருப்பதால், என் நண்பர்களுக்கும் பரிந்துரைத்துள்ளேன்.