Published:Updated:

பக்கா பட்ஜட் கார் !

DATSUN GO + ரீடர்ஸ் ரெவ்யூபா.சிதம்பர பிரியா, படம்: ஆ.நல்லசிவன்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

நான் மொபைல் போன் டிஸ்ட்ரிப்யூட்டராக இருக்கிறேன். தொழில் விஷயமாக அடிக்கடி வெளியூர் போக வேண்டியிருக்கும். இதற்கு முன்பு ஃபோர்டு ஐகான், ஹூண்டாய் சான்ட்ரோ, டாடா விஸ்டா ஆகிய கார்களைப் பார்த்து வைத்திருந்தேன். கடைசியாக வைத்திருந்த டாடா விஸ்டாவை மாற்றலாம் என்று  முடிவெடுத்து, காம்பேக்டான, நமக்கேற்ற வசதி கொண்ட, பட்ஜெட்டுக்குள் அடங்கிய நல்ல காரைத் தேடிக்கொண்டிருந்தேன். ஓரளவு இடவசதியுடன் பூட் ஸ்பேஸும், அதைத் தேவைக்கேற்ப குழந்தைகள் இருக்கையாக மாற்றிக்கொள்ளும் வசதியும் இருந்தால், இன்னும் நன்றாக இருக்கும்; மேலும், குடும்பத்துடன் பயணிக்கவும் ஏற்றதாக இருக்க வேண்டும் என்பது எனது தேவையாக இருந்தது. அந்தச் சமயத்தில்தான் டட்ஸன் கோ மற்றும் கோ ப்ளஸ் கார்களின் விளம்பரம் பார்த்தேன். இந்த கார்களை நேரில் பார்க்கலாம் என முடிவெடுத்தேன். 
 
ஷோரூம் அனுபவம்

திருநெல்வேலியில் ஜீவன் நிஸான் ஷோரூம் சென்று, டட்ஸன் கார்களைப் பார்த்தேன். கோ மாடலைவிட கோ ப்ளஸ் மாடல் என்னை ஈர்த்தது. நல்ல தோற்றம், காம்பேக்ட் சைஸ், தாராளமான இடவசதி எனப் பார்த்ததும் பிடித்துப் போனது. அதாவது, நான் எதிர்பார்த்த அத்தனை விஷயங்களும் இருந்தன.

பக்கா பட்ஜட் கார் !

டெஸ்ட் டிரைவுக்காக கோ ப்ளஸ் வீட்டுக்கு வந்தது. இதற்கு முன்பு எல்லாவிதமான மாடல் கார்களையும் ஓட்டியுள்ளேன். ஆனால், இந்த காரை ஓட்டிப் பார்த்தபோது, மிகவும் உற்சாகமான அனுபவத்தைத் தந்தது. எனவே, இதுதான் எனக்கான கார் என்ற முடிவுக்கு வந்தேன். காரைப் பதிவு செய்த ஒரே மாதத்தில், சொன்னதுபோல டெலிவரி தந்தனர்.

எப்படி இருக்கிறது டட்ஸன் கோ +?

துல்லியமான பவர் ஸ்டீயரிங், பிடித்து ஓட்டுவதற்கு வசதியாகவும், ரெஸ்பான்ஸிவ் ஆகவும் இருக்கிறது. இதன் பெட்ரோல் இன்ஜின் 110 கி.மீ வேகத்தில் பயணித்தாலும் சத்தம் போடாமல், ஓட்டுவதற்கு எளிமையாகவும் ஸ்மூத்தாகவும் இயங்குகிறது. கார் கொஞ்சம் நீளமாக இருக்கிறதே, குறுகிய இடங்களில் திருப்ப முடியுமா என்ற சந்தேகம், கார்  வாங்கிய சில நாட்களிலேயே நிவர்த்தியாகிவி்ட்டது. ரிவர்ஸ் எடுக்க, பார்க்கிங் செய்ய என எனக்கு எந்தச் சிரமத்தையும் இந்த கார் தரவில்லை. என் ஓட்டுதல் முறைக்கு நகருக்குள் லிட்டருக்கு 16 முதல் 17 கி.மீ, நெடுஞ்சாலையில் 19 முதல் 20 கி.மீ வரை மைலேஜ் அளிக்கிறது. இது எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது.

பக்கா பட்ஜட் கார் !

பிடித்தது

இதில் எனக்குப் பிடித்ததே இடவசதிதான். 7 இருக்கைகள்கொண்ட இதன் சிறப்பான உள்கட்டமைப்பு, ஸ்மூத்தான கியர் ஷிப்ஃடிங், கூடுதல் கிரவுண்ட் கிளியரன்ஸ், சைல்டு லாக், சென்டர் லாக், திறன் வாய்ந்த ஏ.சி, ஹாலோஜன் ஹெட்லைட்ஸ் என சிறப்பாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக குழந்தைகளுக்கான கடைசி இருக்கைகளை மடித்தால், 347 லிட்டர் அளவு பூட் ஸ்பேஸ் இடவசதி கிடைக்கிறது. மோசமான சாலைகளிலும் சஸ்பென்ஷன் சிறப்பாக வேலை செய்வதால், பயணம் வசதியாக இருக்கிறது.

பிடிக்காதது

முழுமையான ஆடியோ சிஸ்டம் இல்லை. ஏர்பேக், ஏபிஎஸ் போன்ற பாதுகாப்பு அம்சங்கள் இல்லை. ஹார்ன் சத்தம் மிகக் குறைவு. டயர் சைஸ் கொஞ்சம் பெரிதாக இருந்திருந்தால், இன்னும் ரோடு க்ரிப் நன்றாக இருந்திருக்கும். பிக்அப் போதுமானதாக இல்லை. இன்னும் சக்தி வாய்ந்த இன்ஜினாக இருந்திருந்தால், செம ஸ்மூத் காராகி இருக்கும் கோ ப்ளஸ்.

பக்கா பட்ஜட் கார் !

என் தீர்ப்பு

அருமையான இடவசதி, சிறந்த கட்டமைப்பு, சிம்பிள் லுக்கில் இருக்கும் எங்கள் குடும்ப காரில், இதுவரை 5,600 கி.மீ தூரம் வரை பயணம் செய்திருக்கிறோம். எந்த இடையூறும், சலனமும் இல்லாமல் வசதியான பயண அனுபவத்தைத் தந்திருக்கிறது கோ ப்ளஸ். குடும்பத்துக்கு ஏற்ற, பக்காவான பட்ஜெட் கார்!
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு