Published:Updated:

யுரே கார்

கண்டுபிடி கண்டுபிடிடா..

மு.கார்த்திகேயன்  க.தனசேகரன் 

 ##~##

ளிமைதான் எப்போதும் புதிய முயற்சிகளுக்கு ஊக்க சக்தியாக விளங்கும். அப்படித்தான் மிக சாதாரணமாக இருந்தன மாணவர்கள் உருவாக்கிய புதிய கண்டுபிடிப்புகள். ஆனால், அனைத்தும் பயனுள்ளவை என்பதுதான் முக்கியமான விஷயம். ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள கொங்கு பொறியியல் கல்லூரியில், சமீபத்தில் நடந்த கண்காட்சியில்தான் இந்த அணிவகுப்பு. மாணவர்களின் சொந்தக் கற்பனையில் உருவான வாகன வகைகளைக் காட்சிக்கு வைத்திருந்தார்கள். மாற்றுத் திறனாளிகளான கை இழந்தவர்கள், கால்களைப் பயன்படுத்தி ஓட்டும் வாகனம் முதல் பைக்கை எளிதாக சென்டர் ஸ்டான்ட் போடும் டெக்னிக் வரை பல தயாரிப்புகளைச் செய்திருந்தனர். கண்காட்சியில் நம்மைக் கவர்ந்த அம்சங்கள் இவை... 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

சென்டர் ஸ்டாண்ட்

ஆக்ஸிலரேட்டர் மூலமாக மிக எளிதில் பைக்கை சென்டர் ஸ்டான்ட் போடும் வசதியைச் செய்திருந்தது ஒரு மாணவர் குழு. இதைப் பற்றி தீனதயாளனிடம் பேசியபோது, ''வழக்கமான சென்டர் ஸ்டாண்டில் சின்ன மாற்றங்கள்தான் செய்தோம். அதாவது, ஏற்கெனவே இருந்த ஸ்டாண்டை அகற்றி, அதையே 180 டிகிரிக்குத் திருப்பி, அதன் அளவைக் குறைத்து, எதிர்ப்புறமாகப் பொருத்தினோம். இப்போது ஸ்டாண்டை அழுத்தி லேசாக ஆக்ஸிலரேட்டர் கொடுத்தால் போதும், சென்டர் ஸ்டான்ட் தானாகவே விழுந்துவிடும். இதற்கு வெறும் 300 ருபாய்தான் செலவு செய்தோம்!'' என்றவர், யமஹா எஃப்.ஸீ பைக்கை அதேபோல் ஸ்டாண்ட் போட்டுக் காட்டினார்! 

யுரே கார்

மாற்றுத் திறனாளிகளுக்கு...

''மற்றவர்களைப் போல வெளியிடங்களுக்குச் சென்று வர மாற்றுத் திறனாளிகளுக்கு, வாகனம் அத்தியாவசிமான ஒன்று. கால்கள் இழந்தவர்களுக்கு மூன்று சக்கர வாகனம் ஏற்கனவே புழக்கத்தில் இருக்கிறது. ஆனால், கைகளை இழந்தவர்களுக்கு எந்த வாகனமும் இல்லை. அவர்களுக்காக இதை உருவாக்கினோம். இந்த வாகனத்தை கால்கள் மூலமாகவே இயக்கலாம்'' என்றார்கள். கால்களைக் கொண்டே பிரேக் மற்றும் ஆக்ஸிலரேட்டரை இயக்கிய விஜய் கார்த்திகேயன், இந்த வாகனத்தை நமக்கு கால்களால் ஓட்டியும் காட்டினார். இதை உருவாக்க பன்னிரண்டாயிரம் ரூபாய் செலவானதாம்! 

ஆட்டோமேட்டிக் லிஃப்டர்

''இரவு நேரத்தில் அல்லது மலைச் சாலையில் கார் பஞ்சராகிவிட்டால், ஜாக்கி பொருத்தி ஸ்டெப்னி டயர் மாற்றுவது சிரமம். அந்தச் சமயம் மெக்கானிக்கை நம்பிக்கொண்டு இருக்கத் தேவையில்லை'' என்கிறார் புராஜக்ட் லீடரான பிரேம். மேலும், ''இந்த சிஸ்டத்தில் கம்ப்ரஸர் மற்றும் சொலினாய்டை நுமேட்டிக் (Pneumatic) சிலிண்டர் மூலம் பின் சக்கரங்களை உயர்த்தலாம், இதற்குத் தனியாக கம்ப்ரஸர் பொருத்த வேண்டும் என்றில்லை. ஏ.ஸி கம்ப்ரஸரே போதுமானது. இந்த சிஸ்டத்தை காரிலேயே பொருத்தி வைத்துக் கொள்ளலாம்'' என்கிறார் பிரேம். 

யுரே கார்

எமர்ஜென்ஸி ஜெனரேட்டர்

''திடீர் மின் வெட்டு... அவசரமாக சின்ன அளவாவது மின்சாரம் தேவையா? கவலையே படாதீர்கள். பைக் இருந்தால் போதும்'' என்றார் பிரனேஷ். யுபிஎஸ், ஜெனரேட்டர் என 15,000 ருபாய் வரை செலவழிக்க வேண்டியது இல்லை. டயனமோ ஒன்றை வைத்து, பெல்ட் மூலமாக பைக் சக்கரத்தை இணைத்துள்ளோம். தற்போது பைக்கை ஸ்டார்ட் செய்து நான்காவது கியரில் செட் செய்து விட்டால், டயனமோ மூலமாக மின்சாரத்தை எடுத்து விளக்குகளை எரிய வைக்கலாம்'' என்று ஆச்சரியப்படுத்தினார் பிரனேஷ். 

சேஃப்டி விண்டோஸ் சிஸ்டம்

''ஏ.ஸி மூலம் ஏற்படும் விபத்துகளைத் தடுக்கவே இந்த சிஸ்டத்தை சென்ஸார் மூலம் உருவாக்கியிருக்கிறோம்'' என்றனர் இரண்டாம் ஆண்டு மாணவர்கள். ''அதாவது, சென்ஸார் மூலம் காருக்குள் இருக்கும் வெப்பத்தையும், வெளியே இருக்கும் வெப்பத்தையும் கணக்கிட்டு, அதற்கேற்ப விண்டோஸ் ஆட்டோ மேட்டிக்காகத் திறக்கும் அல்லது மூடிக் கொள்ளும்'' என்றனர்.

வாகனத் திருட்டைத் தடுக்க 'வீல் அரெஸ்டர்,’ வாகனத்தை 'நோ பார்க்கிங்’ ஏரியாவில் நிறுத்தினால் ஓட்டுனர்களுக்கு எச்சரிக்கை தரும் அலாரம், 'சீட் பெல்ட்’ அணிந்தால் மட்டுமே காரை ஸ்டார்ட் செய்ய முடியும் என்பது போன்ற பல ஆக்கங்களை பயனுள்ள வகையில் தந்திருந்தார்கள் இந்த வருங்காலப் பொறியாளர்கள்!