Published:Updated:

உலகின் முதல் கார்...

மறுவடிவம் கொடுத்த கோவை மாணவர்கள்!சாதனை / பென்ஸ் பேட்டென்ட் மோட்டார் வேகன்ராகுல் சிவகுரு, ஞா.சுதாகர், படங்கள்: மீ.நிவேதன், த. ஸ்ரீநிவாசன்

பிரீமியம் ஸ்டோரி

லகின் முதல் காரில் இந்தத் தலைமுறையிலும் பயணம் செய்ய முடியுமா? அதைச் சாதித்துக் காட்டி இருக்கிறது கோவை ஜி.டி.டெக்னிக்கல் இன்ஸ்டிட்யூட்.

ஜெர்மனியைச் சேர்ந்த கார்ல் பென்ஸ் என்பவர் கண்டுபிடித்த உலகின் முதல் மோட்டார் கார்தான், ‘பென்ஸ் பேட்டென்ட் மோட்டார் வேகன்.’ இவர், 1879-ம் ஆண்டில் குதிரைகள் பூட்டப்படும் பழைய வண்டியை எடுத்து, அதில் குதிரைகளுக்குப் பதில் முன்பக்கத்தில் சக்கரம் ஒன்றைச் சேர்த்தார். அதில் இவர் வடிவமைத்த 1 சிலிண்டர், 2 ஸ்ட்ரோக் பெட்ரோல் இன்ஜினைப் பொருத்தி, மோட்டார் காராக மாற்றினார். இந்த காரின் பவர் 0.75bhp. இவர் உருவாக்கிய இந்த காருக்கு 1886-ம் ஆண்டு காப்புரிமை பெற்று, அறிமுகம் செய்தார்.

உலகின் முதல் காரான இந்த பேட்டென்ட் மோட்டார்  வேகனின் ஒரே பெரிய குறை, இதில் சிறிது தூரம் மட்டுமே பயணிக்க முடியும் என்பதுதான். இந்தக் குறையை சரிசெய்து, இன்றைய கார்கள் பல்லாயிரம் கி.மீ ஓடுவதற்கு முன்னோடியாக  இருந்தவர், கார்ல் பென்ஸின் மனைவி பெர்த்தா பென்ஸ்.

உலகின் முதல் கார்...
உலகின் முதல் கார்...

ஒருநாள், கராஜில் நின்றிருந்த மோட்டார் வேகனை தனது கணவருக்குத் தெரியாமல், தனது மகன்கள் யூஜன் மற்றும் ரிச்சர்ட் உதவியுடன், தன்னுடைய அம்மா வீட்டுக்கு காரை ஓட்டிச் சென்றார். இதன் மூலம், உலகின் முதல் நெடுந்தூரப் பயணத்தை மோட்டார் காரில் மேற்கொண்டவர் என்ற பெயரைப் பெற்றார் பெர்த்தா பென்ஸ். 194 கி.மீ தூரம் கொண்ட அந்தப் பயணம் அவ்வளவு சுலபமாக இல்லை. இதில், குறைவான கொள்ளளவு கொண்ட எரிபொருள் டேங்க் என்பதால், எரிபொருள் தீர்ந்து நடுவழியில் நின்றவருக்கு உதவ அந்தக் காலத்தில் பெட்ரோல் பங்க்குகள் கிடையாது. சமயோஜிதமாக லிக்ராயின் எனும் திரவத்தை மருந்துக்கடைகளில் வாங்கி நிரப்பினார். பாதி வழியில் பழுதான ரப்பர் பிரேக் ஷூவுக்குப் பதிலாக, லெதரை பிரேக் ஷூவின் மீது சுற்றிவிட்டார். அந்தக் காலத்துப் பெண்கள் பயன்படுத்திய தொப்பிகளில், அழகுக்காக பெரிய ஊசி ஒன்று இருக்கும். அந்த ஊசியைப் பயன்படுத்தி, பெட்ரோல் லைனில் ஏற்பட்ட அடைப்பைச் சரிசெய்தார். இதுபோல் தன் கையில் கிடைத்த விஷயங்களை எல்லாம் பயன்படுத்தி பிரச்னைகளைச் சரி செய்து கொண்டே அம்மா வீட்டை அடைந்தார் பெர்த்தா பென்ஸ். இவரின் 194 கி.மீ பயணம் சரித்திர நிகழ்வாக மாறியது. இவ்வளவு தூரம் சாலையில் பாதுகாப்பாக காரை ஓட்டிக் காட்டியதால், அந்த காரின் திறன் பற்றி பலரும் தெரிந்துகொண்டனர். இதன் பிறகே, பென்ஸ் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டு, பொருளாதார ரீதியிலும் வெற்றி பெற்றது; இன்று உலகப் புகழ் பெற்றுள்ளது.

உலகின் முதல் கார்...

பழைய கார்களின் முக்கியத்துவத்தை அனைவரும் அறிந்துகொள்வதற்கு வசதியாக, பென்ஸ் பேட்டென்ட் மோட்டார் வேகன் காரை, சரியாக 129 ஆண்டுகளுக்குப் பிறகு, அப்படியே நகலெடுத்து மீண்டும் உருவாக்கி சாதனை படைத்திருக்கிறது கோவை ஜி.டி டெக்னிக்கல் இன்ஸ்டிட்யூட். அதோடு தாங்கள் தயாரித்த காரில், கோவையில் இருந்து சென்னைக்குத் தொடர்ச்சியாகப் பயணித்து, 500 கி.மீ தூரத்தை 32 மணி நேரத்தில் கடந்து சாதித்திருக்கிறார்கள்.

‘‘உலகின் முதல் காரை நம் நாட்டில் வடிவமைக்க வேண்டும் என்பது என் தந்தை ஜி.டி நாயுடுவின் நெடுநாளைய கனவு. உலகின் முதல் கார் நிகழ்த்திய அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பயணத்தை நினைவூட்டும் வகையில், பேட்டென்ட் மோட்டார் வேகனில் அதிகபட்ச பயண தூரத்தைக் கடந்திருக்கிறோம். இதற்காக ஜி.டி டெக்னிக்கல் இன்ஸ்டிட்யூட்டைச் சேர்ந்த குழு கடுமையாக உழைத்தது. முதலில் இந்த காரின் 430 பாகங்களுக்கான வரைபடங்களை உருவாக்கியது; அதை உபயோகித்து, அனைத்து பாகங்களையும் தயாரித்து, 7 மாதங்களில் இந்த காரை உருவாக்கிவிட்டோம். பென்ஸ் கார் தயாரிப்பாளரை இந்தியாவுக்கு அழைத்து, இந்த காரைக் காண்பித்துக் கேட்டபோது, ‘அசல் வாகனத்தைவிட இந்த கார் வெகுசிறப்பாக உள்ளது’ என்றார்” என மகிழ்ச்சி பொங்கப் பேசுகிறார் விஞ்ஞானி ஜி.டி.நாயுடுவின் மகன் கோபால். 

உலகின் முதல் கார்...


 
‘‘இதில் உள்ள நீராவி இன்ஜினின் எரிபொருளாக பென்ஸீன் (ஒயிட் பெட்ரோல்) பயன்படுத்தப்பட்டது. பென்ஸீன் நீரை நீராவியாக்கி, அதன் மூலம் இன்ஜின் இயங்கும். காரின் சராசரி வேகம் 20 - - 30 கி.மீ. இரண்டு பேர் உட்காரக்கூடிய லெதர் இருக்கைகள் கொண்ட இந்த காரில், 5 லிட்டர் வரை பென்ஸீன் நிரப்பிக்கொள்ளலாம். ஒரு லிட்டர் பென்ஸீனுக்கு 18 கி.மீ தூரம் வரை செல்ல முடியும்.

கோவையில் இருந்து சென்னைக்குப் பயணிக்க மொத்தம் 100 லிட்டர் நீரும், 50 லிட்டர் பென்ஸீனும் பயன்படுத்தினோம். மொத்தம் 6 ஓட்டுநர்கள். ஒவ்வொரு 30 கி.மீ-க்கும் ஒருமுறை அவர்கள் மாறிக்கொண்டே இருந்தார்கள். தவிர, ஒவ்வொரு மணி நேரத்துக்கும் காரில் உள்ள எரிபொருள், கூலன்ட், ஆயில் அளவுகள் ஆகியவை பரிசோதிக்கப்பட்டு, தேவையென்றால் அவை நிரப்பப்பட்டன. கார்புரேட்டர், திடமான ரப்பர் கொண்ட 3 வீல்கள், 995 சிசி சிங்கிள் சிலிண்டர் இன்ஜின், 7 லிட்டர் கொள்ளளவுகொண்ட ஆயில் சம்ப் என வழக்கமான பாகங்களை இது கொண்டிருந்தாலும், பிரேக், ஸ்டீயரிங், காரை ஸ்டார்ட் செய்யும் விதம் ஆகியவை பழைய கார் போலவே வடிவமைக்கப்பட்டுள்ளது!” என்று பெருமையுடன் சொன்னார் கோபால்.
‘‘ஓட்டுநருக்கு இடதுபக்கம் உள்ள ஒரு லீவரை முன்பக்கம் தள்ளினால்... கார் முன்னோக்கிச் செல்லும். அதையே பின்பக்கம் தள்ளினால்... காரின் வேகம் குறையும். தவிர, ஓட்டுநருக்கு முன்னால் இருக்கும் ஒரு கம்பியில் உள்ள சின்ன சக்கரம் மூலம், காரை நமக்கு வேண்டிய திசையில் திருப்பிக்கொள்ளலாம். காரின் ஃப்ளைவீலை வேகமாகச் சுற்றிவிட்டால், இன்ஜின் ஸ்டார்ட் ஆகும்!” என்று இதைப் பற்றி மேலும் சிலாகித்துப் பேசினார் கோபால்.

கோவையில் இருந்து அக்டோபர் 14-ம் தேதி மாலை 5.00 மணிக்குக் கிளம்பிய இந்த கார், 16-ம் தேதி அதிகாலை 1.45 மணியளவில் சென்னை வந்து சேர்ந்தது. அசாத்தியமான விஷயத்தைச் செய்து காட்டி அசத்திவிட்டது கோவை ஜி.டி டெக்னிக்கல் இன்ஸ்டிட்யூட்!
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு