Published:Updated:

ஆட்டோ எக்ஸ்போ 2016

ஆட்டோ எக்ஸ்போ 2016
பிரீமியம் ஸ்டோரி
ஆட்டோ எக்ஸ்போ 2016

விறுவிறு ட்ரெய்லர்! - 70 அறிமுகங்கள்கார்/பைக்ஸ் முன்னோட்டம் தொகுப்பு: ராகுல் சிவகுரு

ஆட்டோ எக்ஸ்போ 2016

விறுவிறு ட்ரெய்லர்! - 70 அறிமுகங்கள்கார்/பைக்ஸ் முன்னோட்டம் தொகுப்பு: ராகுல் சிவகுரு

Published:Updated:
ஆட்டோ எக்ஸ்போ 2016
பிரீமியம் ஸ்டோரி
ஆட்டோ எக்ஸ்போ 2016
ஆட்டோ எக்ஸ்போ 2016

ஆடி

அதிகமான லக்ஸூரி கார்களை இந்தியாவில் விற்பனை செய்யும் நிறுவனம் என்ற பெருமையை மெர்சிடீஸ் பென்ஸிடம் இழந்துவிட்ட ஆடி, அந்தப் பெயரை மீட்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறது. அதற்கான முதல்படிதான், புதிய ஆடி A4. தற்போது விற்பனையில் இருக்கும் காரைவிட எடை குறைவாகவும், அளவில் பெரிதாகவும், கூடுதல் சிறப்பம்சங்களுடனும், அதிக பவரை வெளிப்படுத்தும் இன்ஜின்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட சஸ்பென்ஷன் என முழு பலத்துடன் அறிமுகமாக இருக்கிறது ஆடி A4. தவிர, 2-வது ஜெனரேஷன் R8 சூப்பர் காரும் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் ரசிகர்களைக் கவரும்.

ஆட்டோ எக்ஸ்போ 2016

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘வேகமான ஆடி’ என்ற அடைமொழிக்காக, லேமான்ஸ் கார்களின் தொழில்நுட்பங்களை இதில் பயன்படுத்தியிருக்கிறது. இதற்கு காரின் ஷார்ப் டிஸைன் மற்றும் அலுமினியம் - கார்பன் ஃபைபர்
ரீ-இன்ஃபோர்ஸ்டு ஃப்ளாஸ்டிக் கலந்த ஃப்ரேம் ஆகியவை சிறந்த உதாரணம். மேலும், R8 காரில் லம்போகினியின் 5.2 லிட்டர் V10  இன்ஜின் மற்றும் ஆடியின் QUATTRO 4 வீல் டிரைவ் சிஸ்டம் இடம்பெற்றுள்ளன. ஆடியின் வருங்கால கார்கள் எப்படி இருக்கும் என்பதை, PROLOGUE கான்செப்ட் மூலமாக நாம் தெரிந்துகொள்ளலாம். இரட்டைக் கதவுகளுடன் உயரம் குறைவான கூபே வடிவில் இருக்கும் இது, தொழில்நுட்பம் மற்றும் இன்ஜின் பவரில் புதிய உச்சத்தை எட்டிப் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிஎம்டபிள்யூ

ஆட்டோ எக்ஸ்போ 2016

இதுவரை கார் ஆர்வலர்களுக்கான கார்களை மட்டுமே தயாரித்து வந்த பிஎம்டபிள்யூ, விற்பனையை அதிகரிக்கும் நோக்கத்தில் சொகுசு மற்றும் லக்ஸூரிக்கு முக்கியத்துவம் கொடுக்க முடிவெடுத்துள்ளது. முற்றிலும் புதிய X1 காரின் ஸ்டைலிங், தற்போது விற்பனையில் இருக்கும் காரைப்போல டல்லாக இல்லாமல், ஸ்போர்ட்டியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஃப்ரன்ட் வீல் டிரைவ் சிஸ்டம் காரணமாக, காரின் கேபினில் இடவசதி கூடியிருக்கிறது. ஆனால், 189bhp பவரை வெளிப்படுத்தும் 2.0 லிட்டர் டீசல் இன்ஜின் - 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் - X டிரைவ் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் ஆகியவற்றில் பெரிய மாற்றங்கள் இல்லாதது கார் ஆர்வலர்களுக்குப் பிடிக்காமல் போகலாம். அந்தக் குறையை பிஎம்டபிள்யூ அதிக சிறப்பம்சங்கள் மற்றும் லாங் வீல்பேஸ் ஆப்ஷன் வழியாக ஈடுகட்டும் என எதிர்பார்க்கலாம். மெர்சிடீஸ் பென்ஸ் S-க்ளாஸ் காருடன் போட்டியிடும் வகையில், தனது புதிய 7 சீரிஸ் காரைக் களமிறக்குகிறது. டிஸைன் உங்களை ஈர்க்காவிட்டாலும், 261bhp பவரை வெளிப்படுத்தும் 3.0 லிட்டர் V6 டீசல் மற்றும் 444bhp பவரை வெளிப்படுத்தும் 4.4 லிட்டர் V8 பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்கள் கட்டாயம் பரவசப்படுத்தும். இன்டீரியர், சிறப்பம்சங்கள், ஓட்டுதல் தரம் ஆகியவை வேறு லெவலில் இருக்கும் என்கிறது பிஎம்டபிள்யூ. தவிர, மேம்படுத்தப்பட்ட 3 சீரிஸ் காரில், புதிய தோற்றத்தில் முன்பக்க மற்றும் பின்பக்க பம்பர்கள், எல்ஈடி ஹெட்லைட் - டெயில்லைட், அதிக சிறப்பம்சங்கள் என போதுமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

செவர்லே

ட்ரெயில்பிளேஸர் எஸ்யுவியால்  விழித்தெழுந்த செவர்லே, 2020 ஆண்டு வரைக்குமான தனது திட்டத்தை முடிவுசெய்துவிட்டது. முற்றிலும் புதிய பீட் டிஸைனை அடிப்படையாகக்கொண்ட க்ராஸ்ஓவர் ஹேட்ச்பேக் மற்றும் காம்பேக்ட் எஸ்யுவி ஆகியவற்றால், தனது டிஸைன் பலத்தை எக்ஸ்போவில் காட்சிப்படுத்த உள்ளது. தவிர, ஸ்பின் எம்பிவி மற்றும் பெர்ஃபாமென்ஸ் பிரியர்களுக்காக, அமெரிக்காவின் ஃபேவரிட் கமாரோ - கார்வெட் ஸ்போர்ட்ஸ் கார்களும் ஆட்டோ எக்ஸ்போவை அதகளப்படுத்தும்.

ஃபோர்டு

எக்கோஸ்போர்ட் காருக்குப் பின்பு சைலன்ட் மோடுக்குச் சென்ற ஃபோர்டு, முற்றிலும் புதிய ஃபிகோ, எண்டேவர், ஆஸ்பயர் செடான் கார்களைக் களமிறக்கி, மீண்டும் ஃபுல் பார்முக்கு வந்துள்ளது.
ஆனந்த அதிர்ச்சியாக, உலகெங்கும் புகழ்பெற்ற மஸ்டாங் ஸ்போர்ட்ஸ் காரின் 6-வது ஜெனரேஷனை, எக்ஸ்போவில் அறிமுகம் செய்கிறது ஃபோர்டு. 435bhp பவரை வெளிப்படுத்தும் 5.0 லிட்டர் V8 இன்ஜினுடன் விற்பனைக்கு வரவிருக்கிறது மஸ்டாங்.

ஆட்டோ எக்ஸ்போ 2016

ஹோண்டா

அனைத்து செக்மென்ட்டிலும் ஒரு கார் மாடலையாவது வைத்திருக்கும் ஹோண்டா, தற்போது, பரபரப்பான காம்பேக்ட் எஸ்யுவி பிரிவில் BR-V காரைக் களமிறக்குகிறது. பிரியோ, அமேஸ், மொபிலியோ கார்கள் தயாராகும் அதே ஃப்ளாட்பார்மில் தயாராக இருக்கும் இந்த காம்பேக்ட் எஸ்யுவி, மொபிலியோவில் இருக்கும் அதே இன்ஜின்களுடன் விற்பனைக்கு வரவிருக்கிறது. தவிர, எஸ்யுவி போலத் தோற்றமளிப்பதற்காக அதிகம் மெனக்கெட்டுள்ளது ஹோண்டா. மேற்கூறிய கார்களில் மிகப் பெரிய குறையாக இருந்த இன்டீரியர், புதிய காரில் சரிசெய்யப்பட்டுள்ளது. இதன் போட்டியாளர்களான ரெனோ டஸ்ட்டர் மற்றும் ஹூண்டாய் க்ரெட்டாவில் இல்லாத சிறப்பம்சமான 3-வது வரிசை இருக்கைகள், BR-V-யில் இருப்பது சாதகமாகப் பார்க்கப்படுகிறது.

தவிர, பெட்ரோல்-ஹைபிரிட் இன்ஜின் ஆப்ஷனுடன் மீண்டு வரவிருக்கிறது அக்கார்டு. இது, இறக்குமதி செய்து விற்கப்பட இருப்பதால், புதிய அக்கார்டு விலை போட்டியாளர்களைவிட அதிகமாகவே இருக்கும். இந்தியாவில் தயாரிக்கப்படும் டொயோட்டா கேம்ரி ஹைபிரிட் காரைப்போல வரிச்சலுகைகளைப் பெற,  அரசின் FAME திட்டத்தில் இணையவிருக்கிறது அக்கார்டு ஹைபிரிட்.

ஹூண்டாய்

கடந்த ஆண்டு அறிமுகமான க்ரெட்டா அமோகமாக வெற்றியடைந்துள்ளது. இதற்கு காரின் மாதக்கணக்கான வெயிட்டிங் பீரியடே சாட்சி. இந்த வெற்றியைத் தக்கவைக்கும் நோக்கில், எக்கோஸ்போர்ட்டுடன் போட்டியிடும் வகையில், 4 மீட்டர் நீளத்துக்குள் எஸ்யுவி கான்செப்ட்டை ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கிறது ஹூண்டாய். க்ரெட்டாவுக்குக் கீழே பொசிஷன் செய்யப்பட உள்ள இந்த கார், ஹூண்டாயின் விற்பனையை கணிசமாக அதிகரிக்க உதவும்.

மேலும், டூஸான் எஸ்யுவி மீண்டும் அறிமுகமாக இருக்கிறது. க்ரெட்டா மற்றும் சான்டா ஃபீ கார்களுக்கு இடையே இருக்கும் இடைவெளியை இந்த கார் நிரப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. டீசல் கார்களுக்கு இருக்கும் வரவேற்பால், 114bhp மற்றும் 182bhp பவரை வெளிப்படுத்தும் 1.7 லிட்டர் மற்றும் 2.0 லிட்டர் டீசல் இன்ஜினுடன் கார் விற்பனைக்கு வரவிருக்கிறது.

ஜாகுவார்

புதிதாகத் தயாரித்துள்ள கார்களில், INGENIUM சீரிஸ் இன்ஜின்களைப் பொருத்த இருக்கிறது ஜாகுவார். ஆடி A4, பென்ஸ் C-க்ளாஸ், பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் ஆகிய மூன்று ஜெர்மன் கார்களையும் தனி ஒருவனாக எதிர்கொள்ள இருக்கிறது முற்றிலும் புதிய XE. அலுமினியம் சேஸியைக்கொண்டிருக்கும் இந்த கார், 197bhp மற்றும் 237bhp பவரை வெளிப்படுத்தும் 2.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் - 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கூட்டணியுடன் விற்பனைக்கு வரவிருக்கிறது. இது இந்தியாவிலேயே தயாராக இருப்பதால், காரின் விலை 38 லட்சம் என்ற அளவில் பலரை ஈர்க்கும் என எதிர்பார்க்கலாம்.

 அலுமினியம் சேஸியில் தயாரான 2-வது ஜெனரேஷன் XF காரும் ஆட்டோ எக்ஸ்போவின் இன்னொரு அட்ராக்‌ஷன். இதில் 161bhp - 375bhp பவரை அளிக்கும் 2.0 லிட்டர் - 3.0 லிட்டர் பெட்ரோல், டீசல் இன்ஜின்கள் பயன்படுத்தப்பட உள்ளன. முற்றிலும் புதிய ஃப்ளாட்பார்மில் தயாரிக்கப்படுவதால், அதிக இடவசதி மற்றும் சிறப்பம்சங்கள், டிஸைன் என பலவிதத்திலும் இவை முன்னேறியிருக்கின்றன.

தவிர, ஜாகுவார் வரலாற்றில் முதன்முறையாக F-PACE எனும் எஸ்யுவியை வடிவமைத்துள்ளார்கள். என்னதான் இது எஸ்யுவி என்றாலும், ஷார்ப்பான டிஸைன் மற்றும் லக்ஸூரியான கேபின் ஆகியவற்றுடன் F-TYPE ஸ்போர்ட்ஸ் காரைப்போன்ற கையாளுமையை வழங்கும் என்கிறது ஜாகுவார்.
 
ஜீப்

இறுதியாக, உண்மையான ஜீப் இந்தியாவுக்கு வந்தே விட்டது. ஆம்... ரேங்க்ளர், கிராண்ட் செரோக்கி, கிராண்ட் செரோக்கி SRT எனும் மூன்று கார்கள் களமிறக்கப் பட இருக்கின்றன. உத்தேசமாக 40 லட்ச ரூபாயில் விற்பனைக்கு வரவிருக்கும் ரேங்க்ளர் அன்லிமிடெட், பெயருக்கு ஏற்ப அதிகரிக்கப்பட்ட ஆஃப் ரோடிங் திறன் மற்றும் நீளத்துடன் வரவிருக்கிறது. ஆஃப் ரோடிங்குக்குத் தேவையான தொழில்நுட்பங்களுடன் லக்ஸூரியான எஸ்யுவி வேண்டுபவர்களை, கிராண்ட் செரோக்கி திருப்திப்படுத்தும். இதில் 237bhp பவரை வெளிப்படுத்தும் 3.0 லிட்டர் V6 டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. பெர்ஃபாமென்ஸ் பிரியர்களுக்காக, உத்தேசமாக 1.5 கோடி ரூபாயில் அறிமுகமாக இருக்கும் ஸ்போர்ட்டியான கிராண்ட் செரோக்கி SRT காரில், 475bhp பவரை வெளிப்படுத்தும் தனித்துவமான 6.4 லிட்டர் HEMI V8 இன்ஜின் இடம்பிடித்துள்ளது சிறப்பு.

ஆட்டோ எக்ஸ்போ 2016

மஹிந்திரா

டெல்லியில் 2,000 சிசிக்கும் மேற்பட்ட டீசல் கார்களை விற்பனை செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளதால், தற்போது அதிக மைலேஜைத் தரக்கூடிய சின்ன பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின்களைத் தயாரிக்க உள்ளது மஹிந்திரா. தனது முதல் காம்பேக்ட் எஸ்யுவியான குவான்ட்டோவின் தோற்றம் மற்றும் மெக்கானிக்கல் விஷயங்களில் கணிசமான அளவில் மாற்றங்களைச் செய்து, மறுஅறிமுகம் செய்ய உள்ளது. இதனுடன் முற்றிலும் புதிய 1.5 லிட்டர் டீசல் இன்ஜினுடன் ஸாங்யாங் டிவோலி எஸ்யுவி மற்றும் ரெக்ஸ்ட்டன் எஸ்யுவியின் தோற்றத்தில் சில மாறுதல்கள் செய்யப்பட்ட ஃபேஸ்லிஃப்ட் மாடலையும் ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்துகிறது மஹிந்திரா.

மாருதி சுஸூகி

பெலினோ, எஸ்-க்ராஸ் என இரு புதிய கார்கள், பல்வேறு லிமிடேட் எடிஷன்கள், AMT பொருத்தப்பட்ட கார்கள், முற்றிலும் புதிய டீசல் இன்ஜின் என 2015-ம் ஆண்டு, மாருதிக்கு பிஸியானதாகவே இருந்தது. அதே பரபரப்போடு ஆட்டோ எக்ஸ்போவில் இக்னிஸ் கான்செப்ட் மற்றும் விட்டாரா பிரெஸ்ஸா எனும் காம்பேக்ட் எஸ்யுவியைக் காட்சிப்படுத்துகிறது மாருதி சுஸூகி.

இவற்றில் இக்னிஸ் கான்செப்ட், ரெனோ க்விட்டைப் போன்ற காம்பேக்ட் க்ராஸ்ஓவர் கார். அகலமான க்ரில், அகலமான வீல் ஆர்ச்சுகள், 18 இன்ச் வீல்கள் இதனை உறுதிபடுத்துகின்றன. இதில், 1.2 லிட்டர் டூயல்ஜெட் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. சென்டர் கன்ஸோலில் உள்ள டச் ஸ்கிரீன், ரெட்ரோ ஸ்டைலில் ஏ.சி கன்ட்ரோல்கள், டூயல் டோன் ஃபினிஷ் என வித்தியாசமாக இருக்கிறது.

4 மீட்டர் நீளத்துக்குள் இருக்கும் காம்பேக்ட் எஸ்யுவிகளான ஃபோர்டு எக்கோஸ்போர்ட் மற்றும் மஹிந்திரா TUV3OO காருடன் போட்டியிடுகிறது விட்டாரா ப்ரெஸ்ஸா. பல்வேறு மாருதி கார்களில் காணப்படும் அதே 1.2 லிட்டர் மற்றும் 1.4 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் மற்றும் 1.3 லிட்டர் டீசல் இன்ஜின்களுடன் இது விற்பனைக்கு வரவிருக்கிறது.

சமீபத்தில் வெளியான பெலினோ ஹேட்ச்பேக்கின் ஸ்போர்ட்டியான வடிவம்தான், பெலினோ RS கான்செப்ட். அதற்கேற்ப காரின் டிஸைனில் சில மாறுதல்களைச் செய்துள்ளது மாருதி. முக்கியமான மாற்றமாக, சுஸூகி புதிதாக வடிவமைத்துள்ள DITC பூஸ்ட்டர்ஜெட் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது, ஃபோர்டின் எக்கோபூஸ்ட் இன்ஜினைப் போலவே 1.0 லிட்டர் 3 சிலிண்டர் கொள்ளளவைக்கொண்டது.

ஆட்டோ எக்ஸ்போ 2016

மெர்சிடீஸ் பென்ஸ்

கடந்த ஆண்டு மட்டும் 15 கார்களை இந்தியாவில் களமிறக்கி, புதிய வரலாறு படைத்தது மெர்சிடீஸ் பென்ஸ். GLE450 AMG காரை அறிமுகப்படுத்தி 2016-ம் ஆண்டை அட்டகாசமாகத் துவங்கியுள்ள பென்ஸ், பிஎம்டபிள்யூ X3 மற்றும் ஆடி Q5 காருடன் போட்டியிடும் GLC க்ராஸ்ஓவர் காரை ஆட்டோ எக்ஸ்போவில் களம் இறக்குகிறது. இது, C-க்ளாஸ் காரை அடிப்படையாகக்கொண்டு தயாரிக்கப்பட உள்ளது. லக்ஸூரியான இன்டீரியர், கூடுதல் உயரம் மற்றும் இடவசதி, 168bhp அளிக்கும் 220d மற்றும் 201bhp கொடுக்கும் 250d என இரு வேரியன்ட்டுகள், புதிய 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் என பல அம்சங்களை இதில் காண முடிகிறது. 44 ஆண்டுகளுக்குப் பிறகு, S-க்ளாஸ் காரின் கன்வெர்ட்டிபிள் மாடல் வெளிவந்துள்ளது. காரின் நீளம் 5 மீட்டருக்கும் அதிகம் என்பதால், இதில் இருக்கும் மென்மையான ரூஃப் டாப்தான் உலகிலேயே நீளமான ரூஃப் டாப் என்கிறது பென்ஸ். மற்றபடி கூபே மற்றும் கன்வெர்ட்டிபிள் கார்களுக்கான டிஸைனில் ஈர்க்கிறது S-க்ளாஸ்.

ரெனோ

விலை மற்றும் டிஸைனில் சொல்லி அடித்தது க்விட். இந்த வெற்றிக் களிப்பில், AMT கியர்பாக்ஸையும் அதில் சேர்க்க முடிவெடுத்திருக்கிறது ரெனோ. தவிர, தனது காம்பேக்ட் எஸ்யுவியான டஸ்ட்டரிலும் AMT கியர்பாக்ஸைப் பொருத்த உள்ள ரெனோ, அதன் டிஸைன் மற்றும் இன்டீரியரில் சில மாறுதல்களைச் செய்து, காரை ஃப்ரெஷ்ஷாகக் காட்டும் முடிவில் உள்ளது. க்ரெட்டா ஆட்டோமேட்டிக் காரைவிட குறைவான விலையில் இதனை அறிமுகப்படுத்த இருக்கிறது ரெனோ.

டொயோட்டா

புதிய இனோவாவை ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகப்படுத்த இருக்கிறது டொயோட்டா. FAME திட்டம் காரணமாக, ஹைபிரிட் கார்கள் மீண்டும் இந்தியச் சந்தையில் வலம் வரத் துவங்கியுள்ளன. அந்த ட்ரெண்டை இந்தியாவில் துவங்கிவைத்த ப்ரையஸ், புதிய அவதாரத்தில் வரவிருக்கிறது. TNGA ஃப்ளாட்ஃபார்மில் தயாராகியுள்ள இந்த கார், பழைய காரைவிட எடை குறைவாகவும், ஓட்டுவதற்குச் சிறப்பாகவும் இருக்கும் என்கிறது டொயோட்டா.
 
நிஸான் - டட்ஸன்

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, ஹைபிரிட் கார் வடிவத்தில் மீண்டு வந்திருக்கிறது எக்ஸ்-ட்ரெயில். இதில் 179bhp பவரை வெளிப்படுத்தும் 2.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் - எலெக்ட்ரிக் மோட்டார் கூட்டணி இடம்பெற்றுள்ளன. எலெக்ட்ரிக் ஆன் டிமாண்ட் 4 வீல் டிரைவ் சிஸ்டம் இதனுடன் இணைக்கப்பட்டுள்ளது. தற்போதைய மாடர்ன் நிஸான் கார்களைப் போலவே இருக்கிறது இதன் டிஸைன். இந்த கார் முழுவதுமாக இறக்குமதி செய்யப்பட்டு விற்கப்பட இருப்பதால், விலை அதிகமாகவே இருக்கும்.

ஆட்டோ எக்ஸ்போ 2016

GODZILLA என்று செல்லமாகக் குறிப்பிடப்படும் GT-R ஸ்போர்ட்ஸ் காரில், 542bhp பவர் மற்றும் 63.53kgm டார்க்கை வெளிப்படுத்தும் இரட்டை டர்போ சார்ஜர்களைக்கொண்ட 3.8 லிட்டர் V6 இன்ஜின் பயன்பாட்டில் உள்ளது. வேகப்போட்டியில் இதைவிட விலை அதிகமான ஃபெராரி மற்றும் லம்போகினி கார்களைப் பின்னுக்குத் தள்ளியப் பெருமை இந்த நிஸான் காரையே சேரும். இதன் விலை 2 கோடி ரூபாயைத் தாண்டுகிறது. டட்ஸனைப் பொறுத்தமட்டில், கோ-க்ராஸ் கான்செப்ட் கார் ஒன்றை மட்டும் காட்சிக்கு வைக்கிறது.

டாடா மோட்டார்ஸ்

இந்திய கார் சந்தையில், தான் இழந்த இடத்தை மீட்டெடுக்க 2020 ஆண்டு வரை ஆண்டுக்கு இரு புதிய கார்களை அறிமுகப்படுத்தும் முடிவில் இருக்கிறது டாடா. 2016-ம் ஆண்டை ஸீகா ஹேட்ச்பேக் வழியாகத் துவங்க இருக்கும் டாடா, விரைவில் ஹெக்ஸா காரைக் களமிறக்குகிறது. இதன் அடிப்படை வடிவம் ஆரியாவை நினைவுப்படுத்தினாலும், க்ராஸ்ஓவர் போன்ற டிஸைன், முற்றிலுமாக மேம்படுத்தப்பட்ட 2.2 லிட்டர் டீசல் இன்ஜின் (154bhp பவர் மற்றும் 40.8kgm டார்க்), அதிகப்படியான தொழில்நுட்பம் மற்றும் சிறப்பம்சங்கள் என இதன் போட்டியாளர்களான மஹிந்திரா XUV5OO மற்றும் டொயோட்டா இனோவா ஆகிய கார்களை அசுர பலத்தோடு எதிர்கொள்ள இருக்கிறது ஹெக்ஸா.
 
அடுத்தபடியாக, நெக்ஸான் எனும் காம்பேக்ட் எஸ்யுவியை அறிமுகப்படுத்த இருக்கிறது டாடா, ஜெஸ்ட் மற்றும் போல்ட் தயாராகும் அதே X1 ஃப்ளாட்ஃபார்மில் இதைத் தயாரிக்க உள்ளது. இதனை ரேஞ்ச்ரோவர் இவோக் காரைப்போல வடிவமைத்திருக்கும் டாடா, 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் புதிய 1.5 லிட்டர் டீசல் இன்ஜின்களுடன் இந்த காரை விற்பனைக்குக் கொண்டுவரும். போட்டியாளர்களிடம் இருந்து தனித்துத் தெரிவதற்காக, 7 இருக்கைகள் இதில் இருக்கும்.

ஸீகாவை அடிப்படையாகக்கொண்டு காம்பேக்ட் செடான் ஒன்றை டாடா வெளியிடுகிறது. ஹோண்டா அமேஸ் மற்றும் மாருதி சுஸூகி டிசையர் கார்களுக்குப் போட்டியாக, 3 சிலிண்டர் இன்ஜின்கள் கொண்ட இந்த காம்பேக்ட் செடான் களம் காண உள்ளது. இதனுடன் ஸீகா ஹேட்ச்பேக்கின் க்ராஸ்ஓவர் மாடலையும் நாம் எதிர்பார்க்கலாம்.

இந்திய கார் தயாரிப்பாளரிடமிருந்து ஹாட் ஹேட்ச்பேக் என்பது கனவாக இருந்த நிலையில், அதனை போல்ட் ஸ்போர்ட் மூலமாக நிறைவேற்றியிருக்கிறது டாடா. இதிலுள்ள 1.2 லிட்டர் REVOTRON இன்ஜின், 120bhp பவர் மற்றும் 17.33kgm டார்க்கை வெளிப்படுத்தும் வகையில் ட்யூன் செய்யப்பட்டுள்ளது. மொத்தத்தில் ஃபியட் புன்ட்டோ ஈவோ அபார்த் மற்றும் ஃபோக்ஸ்வாகன் போலோ GT கார்களுக்கு ஒரு இந்தியப் போட்டி உருவாகிவிட்டது.

ஆட்டோ எக்ஸ்போ 2016

ஃபோக்ஸ்வாகன்

2016-ம் ஆண்டை, போலோவை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள காம்பேக்ட் செடான் காரான ஏமியோ (AMEO) உடன் துவங்குகிறது ஃபோக்ஸ்வாகன். இதனைத் தயாரிப்பதற்காக அதிக நேரத்தை எடுத்துக் கொண்ட ஃபோக்ஸ்வாகன், டிக்கியை சரியான முறையில் ஹேட்ச்பேக் டிஸைனோடு இணைத்திருக்கும் என எதிர்பார்க்கலாம். போலோவில் இருக்கும் அதே இன்ஜின் ஆப்ஷன் மற்றும் சிறப்பம்சங்களுடன் விற்பனைக்கு வர இருக்கும் AMEO, போட்டியாளர்களை விட அதிக விலையைக்கொண்டிருந்தாலும், அதனை நியாயப்படுத்தும் வகையில் மற்ற ஃபோக்ஸ்வாகன் தயாரிப்புகளைப் போலவே இந்த காம்பேக்ட் செடானின் கேபின் தரம் மற்றும் கட்டுமானத் தரம் இருக்கும் என நம்பலாம்.

முற்றிலும் புதிய பஸாத் GTE காரை ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்துகிறது ஃபோக்ஸ்வாகன். பழைய காருடன் ஒப்பிடும்போது, தொழில்நுட்பம் மற்றும் சிறப்பம்சங்களில் புதிய உயரத்தை எட்டியிருக்கும் இந்த கார், 154bhp பவரை வெளிப்படுத்தும் 1.4 லிட்டர் TSI இன்ஜின் - 60bhp பவரை வெளிப்படுத்தும் எலெக்ட்ரிக் மோட்டார் கூட்டணியுடன் களம் காண்கிறது. இந்த ஹைபிரிட் காம்பினேஷனில் காரைப் பயன்படுத்தினால், 1,000 கி.மீ தூரம் வரை செல்லலாம் என்கிறது ஃபோக்ஸ்வாகன்.

ஆட்டோ எக்ஸ்போ 2016
ஆட்டோ எக்ஸ்போ 2016

தவிர, எடை குறைவான கார்களைத் தயாரிக்கும் திறன் படைத்த MQB ஃப்ளாட்ஃபார்மில், 2-வது ஜெனரேஷன் டீகன் எஸ்யுவி வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஷார்ப்பான டிஸைன், பவர்ஃபுல் 2.0 லிட்டர் டீசல் இன்ஜினுடன் (148bhp) விற்பனைக்கு வருகிறது.

அபார்த் புன்ட்டோவை வீழ்த்தும் வகையில், 189bhp பவரை வெளிப்படுத்தும் 1.8 லிட்டர் TSI பெட்ரோல் இன்ஜினுடன் அதிரடியாக வெளிவருகிறது போலோ GTI. ஆனால், காரின் விலை புன்ட்டோவைவிட அதிகமாக இருக்கும்.

DSK பெனெல்லி

மிலன் மோட்டார் ஷோவில் கலக்கிய கையோடு, டெல்லி ஆட்டோ எக்ஸ்போவை எதிர்கொள்கிறது இத்தாலி பெனெல்லி. கவாஸாகி நின்ஜா 300 மற்றும் யமஹா R3 பைக்குகளுடன் போட்டியிடும் வகையில், TNT 300 பைக்கை அடிப்படையாகக்கொண்டு தயாரித்துள்ள டொர்னாடோ 302 எனும் ஃபுல் பேரிங் பைக்குடன், TNT 400 நேக்கட் ஸ்ட்ரீட் பைக்கைக் காட்சிக்கு வைக்கிறது பெனெல்லி.
ஸ்க்ராம்ப்ளர் வகை பைக்குகள் தற்போது பிரபலமடைந்து வருவதால், டுகாட்டி மற்றும் ட்ரையம்ப் நிறுவனங்களைத் தொடர்ந்து, லியொன்சினோ எனும் 500சிசி பைக்கையும் எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கிறது. இது, 2016-ம் ஆண்டு பிற்பகுதியில் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கலாம். தவிர, ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் பைக்குக்குப் போட்டியாக, TRK 502 என்ற அட்வென்ச்சர் டூரர் பைக்கை, 230 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் மற்றும் 500 சிசி இன்ஜினுடன் காட்சிப்படுத்துகிறது பெனெல்லி. தற்போது விற்பனையில் இருக்கும் 600i மற்றும் 600 GT பைக்குகளின் மேம்படுத்தப்பட்ட மாடல்களையும் பெனெல்லி காட்சிபடுத்தும் எனத் தெரிகிறது.

ஹோண்டா இந்தியா

புத்தாண்டை NAVI என்ற புதிய ஸ்கூட்டரின் டீஸரோடு துவங்கிய ஹோண்டா, அதை ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்துகிறது. தவிர, லிக்விட் கூல்டு, ஃப்யூல் இன்ஜெக்‌ஷன் சிஸ்டம் பொருத்தப்பட்ட 150சிசி இன்ஜினுடன் PCX 150 எனும் ஸ்கூட்டரையும் ஹோண்டா காட்சிப்படுத்த இருக்கிறது. இது, 2016-ம் ஆண்டு இறுதியில் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கலாம்.  தற்போது விற்பனையில் இருக்கும் ஸ்கூட்டர்களைவிட இதன் விலை சற்று அதிகமாகவே இருக்கும். ‘Go Anywhere’ என்ற கோட்பாட்டின்படி வடிவமைக்கப்பட்டுள்ள CRF-1000L ஆப்பிரிக்கா ட்வின் அட்வென்ச்சர் டூரர் பைக்கையும் இந்த எக்ஸ்போவில் பார்க்க முடியும். டக்கார் ராலியில் புகழ்பெற்ற இந்த பைக்கில், இரட்டை கிளட்ச் அமைப்பைக்கொண்ட ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

ஆட்டோ எக்ஸ்போ 2016

மஹிந்திரா

GEN ZE 2.0 என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் சிறப்பு என்னவென்றால்...எதிர்காலத்திற்கான டிஸைன், அலுமினியம் சேஸி, 7 இன்ச் டச் ஸ்கிரீனில் இன்ஸ்ட்ரூமென்ட் டயல்கள் என தொழில்நுட்பரீதியாக ஈர்க்கும் விஷயங்கள் அதிகம். இதிலுள்ள 1.6 KWH Li-Ion பேட்டரியை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால், 50 கி.மீ தூரம் வரை செல்ல முடியும். இது, எப்போது தயாராகி விற்பனைக்கு வரும் என்பது உறுதிசெய்யவில்லை.

தவிர, மஹிந்திராவின் ஐரோப்பிய சென்டரில் வடிவமைக்கப்பட்ட MGP30 மோட்டோ 3 ரேஸிங் பைக்கும் முக்கியமானது. இந்த பைக் மூலமாக புஜோ மோட்டோ 3 ரேஸிங்கில் பங்கேற்க இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும், கஸ்ட்டோ 125சிசி ஸ்கூட்டரை மஹிந்திரா விற்பனைக்கு அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கலாம்.

சுஸூகி இந்தியா

ஹயபூஸா மற்றும் GSX-R1000 போன்ற தனது பவர்ஃபுல் ஸ்போர்ட்ஸ் பைக்குகளைத் தவிர, மேம்படுத்தப்பட்ட ஜிக்ஸர் 155 மற்றும் ஜிக்ஸர் SF ஆகியவற்றோடு, ஜிக்ஸர் 250சிசி பைக்கையும் சுஸூகி காட்சிப்படுத்துகிறது.

டிவிஎஸ்

முதன்முதலாகத் தயாரித்த பைக்கான 110சிசி விக்டர் பைக்கை, புதிய வடிவம் மற்றும் இன்ஜின் தொழில்நுட்பத்துடன் காட்சிப்படுத்துகிறது டிவிஎஸ். அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த அப்பாச்சி 200சிசி பைக்கில், முதன்முறையாக லிக்விட் கூல்டு இன்ஜினை அறிமுகப்படுத்துகிறது டிவிஎஸ். எதிர்காலத்தில் தான் தயாரிக்க உள்ள பைக்குகள் அல்லது கான்செப்ட் உடன், பிஎம்டபிள்யூ கூட்டணியுடன் தயாரான G310R பைக்கை காட்சிக்கு வைக்கிறது டிவிஎஸ்.

ஆட்டோ எக்ஸ்போ 2016

ட்ரையம்ப்

டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில், 2016-ம் ஆண்டுக்கான புதிய ரக போனவில், ஸ்பீடு ட்ரிபிள் S, ஸ்பீடு ட்ரிபிள் R பைக்குகளை ட்ரையம்ப் காட்சிக்கு வைக்கிறது. 1200 சிசி இன்ஜினுடன் போனவில் வருவது சிறப்பு. ஸ்ட்ரீட் ட்வின் பைக்கில் பேரலல் ட்வின் 900சிசி இன்ஜினுடன் அறிமுகமாக இருக்கிறது. பழைய பைக்கைவிட பவர் குறைந்திருந்தாலும், டார்க்கில் முன்னேற்றம் தெரிகிறது. இதனுடன் ட்ராக்‌ஷன் கன்ட்ரோல் சிஸ்டம், ஸ்லிப் கிளட்ச், ஆஃப் செய்யக்கூடிய ஏபிஎஸ், இன்ஜின் இம்மொபலைஸர், யுஎஸ்பி என பைக் தொழில்நுட்பரீதியாக மேம்படுத்தப்பட்டுள்ளது. ரெட்ரோ ஸ்டைலில் வடிவமைக்கப்பட்ட T120 மற்றும் ஸ்போர்ட்டியான T120 BLACK பைக்கில் 8 வால்வு, பேரலல் ட்வின் 1200சிசி இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. த்ரில் விரும்பிகளுக்கான த்ரக்ஸ்ட்டன் மற்றும் த்ரக்ஸ்ட்டன்R பைக்கில் ஸ்பெஷலாக ட்யூன் செய்யப்பட்ட 8 வால்வு, பேரலல் ட்வின் 1200சிசி இன்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதிக பவர் மற்றும் டார்க்கை வெளிப்படுத்தும் லிட்டர் க்ளாஸ் பைக்கான ஸ்பீடு ட்ரிபிள் சீரிஸ் பைக்கின் ஸ்டைல் மற்றும் சிறப்பம்சங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளதால், ஹாட்டான பேக்கேஜாக மாறியுள்ளது. தவிர ராக்கெட்-III, டைகர் ரக பைக்குகள், க்ரூஸர் ரக பைக்குகள் என தனது முழு பலத்தையும் இந்த எக்ஸ்போவில் காட்ட இருக்கிறது ட்ரையம்ப்.

UM:

அமெரிக்காவைச் சேர்ந்த UM நிறுவனம் இந்தியாவில் கால்பதிக்க இருக்கிறது. முதற்கட்டமாக தான் அறிமுகப்படுத்த இருக்கும் ரெனிகாடே கமாண்டோ மற்றும் ரெனிகாடே ஸ்போர்ட் S பைக்குகளை டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கிறது UM நிறுவனம். இவற்றில் கமாண்டோ பைக்கில் ஏர் கூல்டு 223சிசி இன்ஜின் இடம்பிடித்துள்ள நிலையில், ஸ்போர்ட் S பைக்கில் சக்தி வாய்ந்த 279சிசி லிக்விட் கூல்டு இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது, 6 ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.

யமஹா 

R3 பைக் வழியாக தனது ரேஸிங் DNA-வை எடுத்துக்காட்டிய யமஹா, அந்த பைக்கை அடிப்படையாகக்கொண்டு தயாரித்துள்ள MT-03 நேக்கட் ஸ்ட்ரீட் பைக் மற்றும் பிரபலமான  R15 பைக்கின் V3.0 மாடலை யமஹா டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்த இருக்கிறது. ரேஸ் டிராக்குக்கு என ஸ்பெஷலாக வடிவமைக்கப்பட்ட R1-M பைக்கையும் யமஹா காட்சிக்கு வைக்கிறது.