Published:Updated:

மாருதி 800 - என் குடும்ப நண்பன்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
மாருதி 800 - என் குடும்ப நண்பன்!
மாருதி 800 - என் குடும்ப நண்பன்!

க்ளாஸிக் கார்: மாருதி 800பி.ஆண்டனிராஜ், படங்கள்: எல்.ராஜேந்திரன்

பிரீமியம் ஸ்டோரி

நெல்லையில் மிகப் பழைமையான மாருதி 800 கார் ஒன்று ஓடிக்கொண்டிருப்பதை, அங்கு வந்தவர்கள் பார்த்திருக்கலாம். அந்த கார், இப்போதும் சாலையில் சத்தமின்றி இயல்பாக இயங்குவதைப் பார்த்ததும், அதன் உரிமையாளரைத் தேடிச் சென்றோம்.

நெல்லை டவுனில் உள்ள சண்முக சிதம்பரம் என்கிற குட்டிதான் அந்த காரின் உரிமையாளர். அவரை அணுகியதும், “வாங்க நம்ம காரிலேயே போய்க்கிட்டுப் பேசலாமே?” என்று காரைக் கிளப்பினார். ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோவின் பள்ளித் தோழர் என்பதாலோ என்னவோ, அவரது பேச்சில் அரசியலும் கலந்தே இருந்தது.

மாருதி 800 - என் குடும்ப நண்பன்!

‘‘முன்னாள் பிரதமர் இந்திராவின் மகன் சஞ்சய் காந்தி, ‘மாருதி என்ற பெயரில் கார் தொழிற்சாலை அமைக்கப்பட்டு, குறைந்த விலையில் கார் வழங்குவதோடு, மக்களுக்கு வேலை வாய்ப்பும் வழங்கப்படும்’ என அறிவித்தார். ஆனால், ஓரிரு ஆண்டுகள் சென்ற பின்னரும் கார் தொழிற்சாலை தொடங்கப்படவில்லை. இதனால், நாடாளுமன்றத்தில் இந்த விவகாரத்தை எதிர்க்கட்சிகள் பூதாகரமாகக் கிளப்பினார்கள்.

அதனால், 1977-ல் ஜப்பானில் இருந்து மாருதி காருக்கான உதிரி பாகங்களை அவசரமாக இறக்குமதி செய்து, காரை அசெம்பிள் செய்து விற்பனைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், அதிகாரப்பூர்வமாக 1983-ல்தான் கார் விற்பனைக்கு வந்தது. அப்போது வந்த காரின் பெரும்பாலான பாகங்கள், ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவை. மாருதி 800 காரை வாங்க, நானும் எனது நண்பர் ஒருவரும் முடிவு செய்தோம் .

மாருதி 800 - என் குடும்ப நண்பன்!

இருவரும் திருநெல்வேலியில் இருந்த ஷோரூமில் காரைப் பார்த்தோம். அப்போது அதன் விலை 35,000 மட்டுமே. முதலில் ஒரு காரை மட்டும் வாங்க முடிவெடுத்து, நான் அந்த காரை வாங்கினேன். இந்த கார், இப்போது உள்ள லக்ஸூரி காருக்கு நிகரான வசதிகளைக்கொண்டது. இதன் மேனுவல் ஸ்டீயரிங், பவர் ஸ்டீரிங் போன்று மிகச் சுலபமாக இருக்கும். காரின் முன் பக்கமும் பின் பக்கமும் மெட்டல் பம்பர்கள் உள்ளன. காரின் பின்பக்கம் பொருட்களை வைப்பதற்கு வசதியாக, கண்ணாடியிலேயே சாவியைப் போட்டுத் திறந்துகொள்ளலாம்.

காரின் பேனட்டைத் திறக்க, முன்பக்கத்திலேயே உள்ள பட்டனை அழுத்தினால், திறந்துகொள்ளும். பக்கவாட்டுக் கண்ணாடி, முகப்பு விளக்கு என எல்லாமே பார்த்துப் பார்த்து செதுக்கப்பட்ட சிற்பம்போல இருக்கும். இந்த கார், எந்தச் சமயத்திலும் நடுவழியில் நின்றது இல்லை. உரிய இடைவெளியில் காரை சர்வீஸ் செய்துவிடுவேன். எனது குடும்பத்தில் உள்ள எல்லோருமே, இந்த காரையும் எங்கள் குடும்ப உறுப்பினர் போலவே கவனிக்கிறார்கள்.

மாருதி 800 - என் குடும்ப நண்பன்!

இதில் ஏ.சி கிடையாது. ப்ளோயரில் காற்று மட்டுமே வரும். காரின் எந்த உதிரி பாகத்தையும் உடைத்துவிடாமல் பாதுகாத்து வருகிறேன். இதில் சுஸூகி இன்ஜின் என்பதால், கார் செல்லும்போது காற்று மாதிரிதான் சத்தம் வருமே தவிர, இன்ஜின் சத்தம் கொஞ்சமும் இருக்காது. கார் வாங்கி 33 ஆண்டுகள் ஆகிவிட்டன. இதுவரை 1,40,000 கி.மீதான் ஓட்டி இருக்கிறேன்.
கடந்த வாரம் சென்னைக்குச் செல்ல வேண்டியிருந்தபோது, இந்த காரிலேயே கிளம்பினேன். எந்தச் சிரமமும் தெரியவில்லை. இப்போதும் இந்த கார் லிட்டருக்கு 18 கி.மீ மைலேஜ் அளிக்கிறது. ‘இந்த காரை விலைக்குக் குடுப்பீர்களா?’ என்று பலர் என்னிடம் கேட்கிறார்கள். பழைய கார்களைச் சேகரிக்கும் ஒருவர் நான்கரை லட்சம் பணத்துடன் வந்து காரை விலைக்குக் கேட்டார். எனக்கு மனசே வரவில்லை. இது எப்போதுமே எனது குடும்ப நண்பன்!”

பழங்கால கார்களைப் பாசத்துடன் பராமரிக்கும் சண்முக சிதம்பரம் என்கிற குட்டி, பாராட்டப்பட வேண்டியவர்தான்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு