Published:Updated:

சிட்டி டிரைவுக்கு டிக் அடிக்கலாம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
சிட்டி டிரைவுக்கு டிக் அடிக்கலாம்!
சிட்டி டிரைவுக்கு டிக் அடிக்கலாம்!

ரீடர்ஸ் ரெவ்யூ: ஃபோர்டு ஃபிகோ ஆஸ்பயர் (டீசல்)ஞா.சுதாகர், படங்கள்: த.நிவாசன்

சிட்டி டிரைவுக்கு டிக் அடிக்கலாம்!

பிசினஸ் தொடர்பாக, அடிக்கடி நீண்ட தூரப் பயணங்கள் செல்வேன்.அதனால், காரில்தான் பல நாட்கள் வாழ்கிறேன். எனவே, காரைத் தேர்வு செய்வதில் மிகக் கவனமாக இருப்பேன். முதலில் வெர்னா, i20, இயான் என மூன்று ஹூண்டாய் கார்கள் வைத்திருந்தேன். பின்பு, ஃபோர்டு எக்கோஸ்போர்ட் வாங்கினேன்.

ஏன் ஃபிகோ ஆஸ்பயர்?

எக்கோஸ்போர்ட் நன்றாக இருந்தாலும்கூட, அது நீண்ட தூரப் பயணங்களுக்கு மட்டுமே ஏற்றதாக இருக்கிறது. சிட்டி டிராஃபிக்கில் அதை என்னால் எளிதாகக் கையாள முடியவில்லை. ஆகவே, நகரத்துக்குள் வசதியாகச் சென்று வர செடான் செக்மென்ட்டில் ஒரு காரைத் தேடிக் கொண்டிருந்தேன். அப்போதுதான் ஆஸ்பயர் புதிதாக அறிமுகமானது. ஆஸ்டன் மார்ட்டின் டிஸைன் என்பதால், பார்த்ததுமே பிடித்துவிட்டது. டெஸ்ட் டிரைவ் செய்து பார்த்தேன். டிரைவிங் அனுபவம் நன்றாக இருந்தது. இதுதான் எனக்கு ஏற்றதாக இருக்கும் என முடிவு செய்து, உடனே இரண்டு ஆஸ்பயர் கார்கள் வாங்க முடிவு செய்தேன்.

சிட்டி டிரைவுக்கு டிக் அடிக்கலாம்!

ஷோரூம் அனுபவம்

கோவை, மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள ராஜ் ஃபோர்டு ஷோரூமுக்குச் சென்றேன். முதலில் கார் பற்றி நன்கு எடுத்துச் சொன்னார்கள். பிறகு டெஸ்ட் டிரைவ் செய்த பின்பு உடனே புக் செய்துவிட்டேன். 20 நாட்களில் சொன்னதுபோலவே டெலிவரி செய்தார்கள். காரை அறிமுகம் செய்வதில் இருந்து, டெலிவரி மற்றும் சர்வீஸ் வரையிலுமே எனக்கு முழுத் திருப்தி.

 எப்படி இருக்கிறது ஃபிகோ ஆஸ்பயர்?

நகரத்துக்குள் ஓட்டுவதற்கு எளிதாக இருக்க வேண்டும் என்பதுதான் என் எதிர்பார்ப்பு. அதனை முழுமையாகப் பூர்த்தி செய்கிறது ஆஸ்பயர்.  டிரைவிங் சீட் பொசிஷனில் இருந்து, கையாளுமை வரையிலும் ஓட்டுநருக்கு மிக எளிதாக இருக்கிறது. நெடுஞ்சாலையில் குறைந்தபட்சம் 23 கி.மீ வரை மைலேஜ் கிடைக்கிறது. அதோடு, இதன் பராமரிப்புச் செலவும் மிகக் குறைவு. ஆரம்பம் முதல் டாப் எண்ட் வரை பவர் டெலிவரி நன்றாக இருக்கிறது. டீசல் இன்ஜின்தான் என்றாலும், சின்ன அதிர்வுகளைத் தவிர வேறு எந்தச் சத்தமும் உள்ளே கேட்பது இல்லை. ஐந்து பேர் வரை வசதியாக அமரும் வகையில் இடவசதி இருக்கிறது. குறிப்பாக, நீண்ட தூரப் பயணங்களில்கூட களைப்போ, அசௌகரியமோ தெரியாத அளவு இருக்கைகளும், சஸ்பென்ஷனும் பார்த்துக்கொள்கின்றன.

எக்கோஸ்போர்ட்டில் இருக்கும் அதே டேஷ்போர்டுதான் இதிலும் இருக்கிறது. இதன் கடைசி வேரியன்டில்கூட, இரண்டு காற்றுப் பைகள் இருப்பதால், பாதுகாப்புக்கு கியாரன்டி தருகிறது ஃபோர்டு. ரியர் ஏ.சி வென்ட் இல்லாவிட்டாலும்கூட, கார் முழுவதும் கூலிங் நன்றாக இருக்கிறது.

ப்ளஸ்

99bhp பவர் தரும் இன்ஜின் பெர்ஃபாமென்ஸ் மற்றும் மைலேஜ் சூப்பர். ஐந்து பேர் வரை தாராளமாக அமரும் அளவுக்கு இடவசதி. அதிலும் பின் பக்கம் லெக் ரூம் வசதியாக இருக்கிறது. 174 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் இருப்பதால், மேடு பள்ளங்களை நினைத்துப் பயப்படத் தேவை இல்லை. 359 லிட்டர் பூட் ஸ்பேஸ் அதிக பொருட்களை எடுத்துச் செல்ல வசதியாக இருக்கிறது. போனை லாக் செய்யும் ‘போன் டாக்’ (Phone Dock) வசதி, கூகுள் மேப் பார்த்துக்கொண்டேகூட கார் ஓட்டும் வசதியைத் தருகிறது. கார் முழுக்க கூலிங் தருகிறது பவர்ஃபுல் ஏ.சி. 2  காற்றுப் பைகள் இருப்பதால், பாதுகாப்புக்கும் உத்தரவாதம். நகரத்திற்குள் டிராஃபிக்கிலும் சுலபமாக ஓட்டும் வகையில், கையாளுமை எளிதாக இருக்கிறது. க்ளோவ் பாக்ஸில் பொருட்களை வைக்க நிறைய இடம் இருக்கிறது.

சிட்டி டிரைவுக்கு டிக் அடிக்கலாம்!

மைனஸ்

மற்ற செடான் கார்களுடன் ஒப்பிடும்போது ரியர்வியூ கேமரா, பார்க்கிங் சென்ஸார், டச் ஸ்கிரீன் என முக்கியமான அம்சங்கள் அத்தனையும் மிஸ்ஸிங். கொஞ்சம் போரடிக்கும் காரின் வெளிப்புற டிசைனை மாற்றலாம். குழந்தைகளின் பாதுகாப்புக்குத் தேவையான சைல்டு லாக் வசதி இதில் இல்லை. ஹெட்லைட்ஸ் பவர் மிகவும் குறைவாக இருக்கிறது. நெடுஞ்சாலையில் பயணம் செய்யும்போது, இது பெரிய குறையாகத் தெரிகிறது.  காரின் முன் சீட்டில் லைட் இருக்கிறது; ஆனால் பின்சீட்டில்  லைட் இல்லை என்பதால், புத்தகம் படிப்பது போன்ற விஷயங்களைச் செய்ய முடியவில்லை.

சிட்டி டிரைவுக்கு டிக் அடிக்கலாம்!

என் தீர்ப்பு

10 லட்ச ரூபாய்க்குள் குடும்பத்துடன் பயணிக்க பவர்ஃபுல் செடான் கார்களைத் தேடுபவர்களுக்கு, ஆஸ்பயர் நல்ல சாய்ஸ். சிட்டி டிரைவ் செய்பவர்கள் நிச்சயம் இதனை டிக் அடிக்கலாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு