Published:Updated:

மோட்டார் நியூஸ்

அப்-டு-டேட் செய்திகளுக்கு...motor.vikatan.com

பிரீமியம் ஸ்டோரி
மோட்டார் நியூஸ்

புதிய செவர்லே பீட் அறிமுகம்!

இந்த ஆண்டு இறுதியில் விற்பனைக்கு வரவிருக்கும் புதிய பீட்டின் ஃபர்ஸ்ட் லுக் படம் இது. வெளிநாடுகளில் ‘ஸ்பார்க்’ என்ற பெயரில் நான்காவது தலைமுறை மாடல் இருக்க, இந்தியாவில் மூன்றாவது தலைமுறை மாடல்தான் வருகிறது. ஆனால், இந்த காரை முற்றிலுமாக மேம்படுத்தியிருப்பதாக செவர்லே தெரிவித்துள்ளது. அது காரின் டிஸைனைப் பார்க்கும்போதே தெரிகிறது. செவர்லே கார்களின் டிரேட் மார்க்கான க்ரோம் ஸ்பிளிட் கிரில் இருந்தாலும், மேல்பகுதி சிறிதாகவும்; கீழ்ப்பகுதி பெரிதாகவும் இருக்கிறது. உப்பலான வீல் ஆர்ச் மற்றும் ஸ்மூத்தான பாடி லைன்கள் காரணமாக, பக்கவாட்டுத் தோற்றம் கட்டுமஸ்தாகத் தெரிகிறது. காரின் கேபினில் புதிய இரட்டை வண்ண டேஷ்போர்டு - 7 இன்ச் டச் ஸ்கிரீனைக் கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இடம்பிடித்துள்ளன. 1.0 லிட்டர் டீசல் இன்ஜினில் மாற்றங்கள் இல்லாவிட்டாலும், வெளிநாடுகளில் விற்பனை செய்யப்படும் பீட் (ஸ்பார்க்) காரில் இருக்கும் புதிய 1.4 லிட்டர் எக்கோடெக் இன்ஜினின் 3 சிலிண்டர் வெர்ஷனை இதில் எதிர்பார்க்கலாம். இந்தியாவில் தற்போது விற்பனையில் இருக்கும் பீட், ஹேட்ச்பேக் வடிவத்தில் மட்டும் கிடைக்கிறது. புதிதாக வரவிருக்கும் பீட், ‘பீட் ஆக்டிவ்’ எனும் க்ராஸ்ஓவர் ஹேட்ச்பேக் மற்றும் ‘பீட் Essentia’ என்று மேலும் இரு வடிவங்களில் கிடைக்க இருக்கிறது.

மோட்டார் நியூஸ்

டாடாவின் க்ராஸ் ஓவர் டியாகோ ஆக்டிவ்!

டாடாவின் சமீபத்திய அறிமுகமான டியாகோவின், ஆக்ஸசரீஸ் வெர்ஷனான ஆக்டிவ் (Aktiv) மாடலுக்கு அதிகப்படியான வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால் உற்சாகமடைந்துள்ள டாடா, இந்த காரை சின்ன அளவில் தயாரிக்க முன்வந்துள்ளது. இனிவரும் காலங்களில் ஏற்படும் டிமாண்டைப் பொறுத்து, உற்பத்தி அளவை அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளது. க்ராஸ்ஓவர் போன்ற தோற்றத்தைக் கொண்டிருக்கிறது டியாகோ ஆக்டிவ்.

மேட் பிளாக் நிறத்தில் முன்பக்க பம்பர், ஸ்கஃப் பிளேட் போன்ற தோற்றத்துக்காக ஒரு மெட்டாலிக் பட்டை, காரின் பக்கவாட்டுப் பகுதியில் ரன்னிங் பிளேட் போன்ற தோற்றத்துக்காக இருபக்கமும் மெட்டாலிக் பட்டை, பின்புற பம்ப்பரில் ஒரு மெட்டாலிக் பட்டை, ரூஃப் ரெயில் - இவை எல்லாமே டியாகோ ஆக்டிவ் ஒரு க்ராஸ்ஓவர் என்பதைச் சொல்கிறது. கதவுகளின் கீழ்ப்பகுதியில் இருக்கும் ஸ்டிக்கர்கள், கறுப்பு நிற ரியர் வியூ மிரர்கள் மற்றும் அலாய் வீல்கள் ஆகியவை காரின் டிஸைனுடன் பொருந்துகின்றன. இப்போது கிடைக்கும் டியாகோவில்  இந்த அனைத்து ஆக்ஸசரீஸ்களையும் பொருத்துவதற்கு 30,000 ரூபாய் ஆகும். ஆனால், இந்தியாவின் விலை குறைவான க்ராஸ்ஓவர் தோற்றத்தைக்கொண்ட காராக டியாகோ ஆக்டிவ் திகழ்கிறது. இந்த காரை டெல்லி ஆட்டோ எக்ஸ்போ மற்றும் ஜெனிவா மோட்டார் ஷோவில் டாடா காட்சிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. டியாகோவின் புக்கிங் எண்ணிக்கையும் 20,000-த்தை தாண்டிவிட்டதாக டாடா கூறியுள்ளது.

மோட்டார் நியூஸ்

டெஸ்ட்டிங் செய்து நிறுத்தப்பட்ட செவர்லே ஸ்பின்!

இந்தியாவில் என்ஜாய், டவேரா என இரு எம்பிவிகளை செவர்லே விற்பனை செய்து வருகிறது. அவை போதுமான இடவசதியைக் கொண்டிருந்தாலும், டல்லான டிஸைன் மற்றும் கேபின் வடிவமைப்பு, குறைவான இன்ஜின் பவர் என பல மைனஸ்கள் இருந்ததால், பெரிய அளவில் சோபிக்கவில்லை. எனவே மாருதி சுஸூகி எர்டிகா, ஹோண்டா மொபிலியோ, ரெனோ லாஜி ஆகிய புதிய கார்களுக்குப் போட்டியாக, ஸ்பின் எம்பிவியைக் களமிறக்கும் முடிவில் இருந்த செவர்லே, அதனை டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தியது. மாடர்ன் ஸ்டைல், நல்ல இடவசதியுடன் கூடிய தரமான இன்டீரியர், ஃபியட்டின் 1.3 லிட்டர் மல்ட்டிஜெட் டீசல் இன்ஜின் என நிகழ்காலத்திற்கு ஏற்ப கார் வடிவமைக்கப்பட்டிருந்தது. இந்த காரின் டெஸ்ட்டிங் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதை உறுதிபடுத்தும் விதமாக, இதன் ஸ்பை படங்களை எடுத்து நமக்கு அனுப்பியுள்ளார், மோட்டார் விகடன் வாசகர் அஜய் ரமணன். இந்நிலையில் ஸ்பின் எம்பிவியை இந்தியாவில் அறிமுகப்படுத்தும் திட்டம் இல்லை என செவர்லே அறிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

மோட்டார் நியூஸ்

பாதுகாப்பு டெஸ்ட்டில் பாஸ் ஆன சியாஸும் எர்டிகாவும்!

கார்களின் பாதுகாப்பைப் பரிசோதனை செய்து ரேட்டிங் அளிக்கும் ASEAN NCAP அமைப்பு, கடந்த ஏப்ரல் மாதத்தில் தாய்லாந்தில் தயாரிக்கப்பட்டு, ஆசிய சந்தையில் விற்பனை செய்யப்படும் மாருதி சுஸூகியின் சியாஸ் மற்றும் எர்டிகா கார்களை க்ராஷ் டெஸ்ட் செய்தது. சியாஸ் மற்றும் எர்டிகாவில் 2 காற்றுப் பைகள் மற்றும் சீட் பெல்ட் ரிமைண்டர் இருந்ததால், Adult Occupant Protection (AOP)-ல், சியாஸும் எர்டிகாவும் தலா 4 ஸ்டார் ரேட்டிங்கைப் பெற்றன. இரண்டிலும் எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல் இல்லாத காரணத்தால், 5 ஸ்டார் ரேட்டிங்கைப் பெறவில்லை. மேலும் Child Occupant Protection (COP)-ல், இரண்டு கார்களும் 2 ஸ்டார் ரேட்டிங்கைப் பெற்றன. COP-ல் குறைவான ரேட்டிங்கையே பெற்றிருந்தாலும், Side Impact டெஸ்ட்டில் இரண்டும் பாஸ் செய்துவிட்டன. இந்தியாவில் விற்பனை செய்யப்படும் இந்த கார்களின் பாதுகாப்புக்காக 2 காற்றுப் பைகள், ஏபிஎஸ், சீட் பெல்ட் ரிமைண்டர்  ஆகிய சாதனங்கள் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

பெட்ரோல் கார்களுக்கு நார்வேயில் தடை!

டெல்லியில் 2000 சிசிக்கும் அதிகமான டீசல் கார்களுக்குத் தடை விதித்துள்ளது உச்சநீதி மன்றம். ‘அப்படிச் செய்தால் இந்தியாவில் வாகன உற்பத்தியில் அந்நிய முதலீடு குறைந்துவிடுமோ’ என்று அஞ்சுகிறது அரசு. நாட்டின் சுற்றுச்சூழலைக் காப்பதற்கு நாம் இப்படி விவாதித்துக் கொண்டிருக்கும் நிலையில், 2025-ம் ஆண்டு முதல் பெட்ரோல் போன்ற எரிபொருள்கள் மூலம் இயங்கும் எல்லா கார்களுக்கும் தடை என அசுரப் பாய்ச்ச்சலை நிகழ்த்தியிருக்கிறது நார்வே அரசு.

மோட்டார் நியூஸ்

எலெக்ட்ரிக் வெரிட்டோ!

பெட்ரோல், டீசல் இன்ஜின் ஆப்ஷனுடன் கிடைக்கும் மஹிந்திராவின் ஒரே செடான் கார் மாடலான வெரிட்டோ, தற்போது எலெக்ட்ரிக் பவருடன் களமிறங்கியிருக்கிறது. இந்த காரை 2012 - 2014 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் மஹிந்திரா காட்சிப்படுத்தியது. வழக்கமான வெரிட்டோவுடன் ஒப்பிடும்போது, காரின் வெளிப்புறத்தில் வித்தியாசமான பேட்ஜிங் - கிராஃபிக்ஸ் மற்றும் Low Rolling Resistance டயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன. காரின் உட்புறத்தில் டிஜிட்டல் ஸ்பீடோமீட்டர் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. இப்போது ரேவா e2o மற்றும் e-verito என இரண்டு எலெக்ட்ரிக் கார்களை மஹிந்திரா, இந்தியாவில் விற்பனை செய்வது குறிப்பிடத்தக்கது.

மோட்டார் நியூஸ்

3.2 விநாடிகளில் 100 கிமீ வேகம்!  அதிவேக ஆடி R8

படம்: குமரகுருபரன்

ஜெர்மனியைச் சேர்ந்த ஆடி நிறுவனம், தனது பவர்ஃபுல்லான, வேகமான காரான R8 V10 ப்ளஸ்ஸை தமிழகத்தில் அறிமுகப்படுத்தியது. இதில் இருக்கும் 10 சிலிண்டர்களைக் கொண்ட 5.2 FSI Quattro இன்ஜின், 610bhp பவரை வெளிப்படுத்துகிறது. எனவே 0 - 100கிமீ வேகத்தை வெறும் 3.2 விநாடிகளிலேயே எட்டிவிடும் R8 V10 ப்ளஸ், அதிகபட்சமாக 330 கிமீ வரை செல்கிறது. காரின் கட்டுமானத்தில் அலுமினியம் மற்றும் கார்பன் ஃபைபர் பயன்படுத்தப்பட்டுள்ளதால், பழைய R8 காரைவிட புதிய கார் 50 கிலோ எடை குறைவாக இருக்கிறது. R8 V10 ப்ளஸ்ஸின் சென்னை எக்ஸ் ஷோரூம் விலை ஜஸ்ட் 2.6 கோடி!

மோட்டார் நியூஸ்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு