Published:Updated:

குளிர்... மழை... ராலி...

மாருதி சுஸுகி பேக்வாட்டர் ராலி ச.ஜெ.ரவி, படங்கள்: கே.கார்த்திகேயன்

பிரீமியம் ஸ்டோரி
குளிர்... மழை... ராலி...

க்கமான ராலி போட்டிகளுடன் இந்த ஆண்டு, ‘சூப்பர் லீக் TSD சாம்பியன்ஷிப்’ எனும் பெயரில் இந்தியாவின் 6 இடங்களில் ராலியை நடத்தி வருகிறது மாருதி சுஸூகி மோட்டார் ஸ்போர்ட்ஸ்.
இந்த சாம்பியன்ஷிப்பின் முதல் ராலி, உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏப்ரலில் நடந்தது. இரண்டாவது ராலி ‘டெக்கான் ராலி’ என்ற பெயரில் கடந்த மே மாதம் ‘புனே to கோவா’ நடந்து முடிந்தது. இதன் தொடர்ச்சியாக, மூன்றாவது ராலி ‘பேக் வாட்டர் ராலி’ என்ற பெயரில் நீலகிரி மாவட்டம் ஊட்டியில் துவங்கி, கேரள மாநிலம் கொச்சினில் நிறைவுபெற்றது. இந்த ராலியில் பார்வையாளர்களாகப் பங்கேற்றோம்.

கடந்த ஜூன் 17-ம் தேதி காலை ஊட்டியில் துவங்கவிருந்த ராலிக்கு முந்தைய தினமே ஏற்பாடுகள் துவங்கின. ராலியில் பங்கேற்கும் வாகனங்கள் முன்கூட்டியே ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. டிரைவர்களுடனான கலந்துரையாடலில், ராலி விதிமுறைகளை விளக்கி, டிரைவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கமும் அளித்தனர். 16-ம் தேதி மாலை சம்பிரதாய நிகழ்வாக ராலியின் துவக்க விழா, ஊட்டி ஜெம் பார்க் ஹோட்டலில் நடந்தது.

குளிர்... மழை... ராலி...

வழக்கமாக TSD ராலி என்றால், அது நேவிகேட்டருக்கு முக்கியத்துவம் கொண்டதாகத்தான் இருக்கும். சரியான வழியில், சரியான நேரத்தில், இலக்கை அடையும் நேரத்தை, தூரத்தை கணக்கிட்டுச் சொல்வது நேவிகேட்டரின் வேலைதான். எனவே, டிரைவருக்குப் பெரிய அழுத்தம் இருக்காது. இதற்காகவே இந்த முறை, டெஸ்ட் எனும் போட்டியையும் ராலியில் சேர்த்திருந்தனர். டிரைவரின் திறமையைக் கணக்கிடும் வகையில் இந்த டெஸ்ட் அமைந்திருந்தது.

17-ம் தேதி அதிகாலை. ஊட்டி மலை முழுக்க பனி படர்ந்திருக்க, கடுமையான குளிர் வாட்டிக்கொண்டிருந்த நேரம்... ராலியில் பங்கேற்க டிரைவர்கள், நேவிகேட்டர்கள் என 58 பேர் தயாராக இருந்தனர். சரியாக காலை 6 மணிக்குப் போட்டி ஆரம்பமானது. ஆல்ட்டோவில் துவங்கி ஸ்விஃப்ட், பிரெஸ்ஸா, பெலினோ, மஹிந்திரா தார், எக்ஸ்யுவி 500 உள்ளிட்ட 29 கார்கள் அணிவகுத்திருந்தன.

குளிர்... மழை... ராலி...
குளிர்... மழை... ராலி...
குளிர்... மழை... ராலி...

இரண்டு நிமிடங்கள் வித்தியாசத்தில் கார்கள் ஒவ்வொன்றாகப் பயணத்தைத் துவங்கின. எந்த வழியில் பயணிக்க வேண்டும்; எவ்வளவு கி.மீ வேகத்தில் செல்ல வேண்டும் என்ற கையேடு, நேவிகேட்டரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. வழியில் நேரத்தை, தூரத்தைக் கணக்கிட டைம் கன்ட்ரோலர்கள் இருப்பார்கள். இவர்கள் வரும் நேரத்தையும், வந்த வேகத்தையும் கணக்கிட்டுக்கொள்வார்கள். அந்த இடத்தைக் குறிப்பிட்ட நேரத்தில்தான் கடக்க வேண்டும். முன்கூட்டியோ, தாமதமாகவோ சென்றால், பெனால்டி கிடைக்கும்.  தாமதமாகச் செல்வதைவிட முன்கூட்டியே சென்றால், பெனால்ட்டி அதிகம். அதாவது, பயண நேரத்தைக் கூடுதலாகக் கணக்கிடுவதுதான் பெனாலிட்டி.

வழக்கமான ராலியைவிட ஜில்லென்ற த்ரில்லுடன் துவங்கியது போட்டி. மக்கள் நடமாட்டம் மிகுந்த சாலைகளில்தான் போட்டி நடந்தது என்றாலும், சாலைகள் இப்படித்தான் இருக்கும் எனச் சொல்ல முடியாது. போக்குவரத்து மிகுந்த சாலை, மண் சாலை, சரளைக் கல் சாலை என எப்படி வேண்டுமானாலும் இருக்கும். நேரத்தையும், வேகத்தையும் கூடுதலாகவும் எடுத்துக்கொள்ளக் கூடாது. அதேநேரம் குறைந்துவிடவும் கூடாது. இப்படி ரேஸைவிட ராலி ஏகப்பட்ட சுவாரஸ்யங்களைத் தாங்கி இருந்தது.

குளிர்... மழை... ராலி...
குளிர்... மழை... ராலி...

ஊட்டி ஜெம் பார்க் ஓட்டலில் துவங்கி சேரிங் கிராஸ், தொட்டபெட்டா, மைனாலா, லவ் டேல், சோலூர், கல்லட்டி, கவரட்டி, புதுமண்ட் என ஊட்டியைச் சுற்றி மலைப் பாதையில் சுற்றினர் ராலி வீரர்கள். எல்லாமே  மலைச் சாலைகள்! டைம் கன்ட்ரோலர்கள் இடையில் நின்று சரியான வேகத்தில், சரியான நேரத்தில், சரியான பாதையில் வீரர்கள் வருகிறார்களா என்பதைச் சோதித்துக்கொண்டிருந்தனர். இயற்கை எழில் சூழ்ந்த மலைப் பாதையில் நேரம், வேகத்தை அளவிட்டுப் பயணித்தன கார்கள். இவர்களோடு மார்ஷல்கள், மீட்பு வாகனம், மருத்துவக் குழு, பத்திரிகையாளர்களும் ராலியைப் பின்தொடர்ந்தனர். ராலி துவங்கிய சில மணி நேரத்தில் லவ்டேல் பகுதியில் சென்றபோது, மஹிந்திரா XUV5OO ஒரு மலைச் சரிவில் சிறிய பள்ளத்தில் சரிந்தது. டிரைவரும், நேவிகேட்டரும் காயமின்றி தப்பினர்.

மறுநாள் 18-ம் தேதி அதிகாலை அடுத்த கட்டப் பயணத்துக்குத் தயாராகினர் ராலி வீரர்கள். ஊட்டியில் துவங்கி கேரளாவை நோக்கிப் புறப்பட்டது படை. காலை 6 மணிக்குத் துவங்கி மாலை 4.30 மணிக்குள் கொச்சின் கோ-கார்ட் ஸ்பீட் வே டிராக்கை அடைய வேண்டும். வழி நெடுகிலும் டைம் கன்ட்ரோலர்கள் நேரத்தையும், வேகத்தையும் கணக்கிட்டுக்கொண்டே வந்தனர். குறிப்பிட்ட வேகத்தில் நிதானமாக பாதையைச் சரிபார்த்து இயக்கிக் கொண்டு வந்தவர்கள். பெரும்பாலும் 5 மணியைக் கடந்த பின்னரே கொச்சினை வந்தடைந்தனர்.

குளிர்... மழை... ராலி...

அடுத்த டெஸ்ட், கொச்சினில் உள்ள ஸ்பீட் வே கோ கார்ட் டிராக்கில் நடந்தது. வளைந்து நெளிந்து காணப்பட்ட கோ கார்ட் டிராக்கில் 4 லேப்களைக் கடக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட, சீறிப் பாய்ந்தன கார்கள். அதோடு நிறைவு பெற்றது ராலி. மறுநாள் ராலியில் வெற்றியாளர் அறிவிப்பு, பரிசளிப்பு விழா நடந்தது. இரண்டு நாட்கள் எடுத்த பாயின்ட்களின் மொத்தக் கணக்கீட்டின் அடிப்படையில் வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டனர். சாம்பியன் குழு, நான்-சாம்பியன் குரூப் (அமெச்சூர்), நான்-சாம்பியன் (எக்ஸ்பெர்ட்) என மூன்று பிரிவுகளில் பரிசுகள் அறிவிக்கப்பட்டன.

சாம்பியன் குழு பிரிவில் மாருதி ஸ்விஃப்ட் காரில் பங்கேற்ற சுபீர் ராய், நீரவ் மேக்தா ஜோடி முதல் இடத்தை வென்றது. சதீஷ் கோபாலகிருஷ்ணன் - சவேரா சென் ஜோடி (மாருதி விட்டாரா) இரண்டாம் இடத்தையும், ஜக்மீத் ஜில் - நீரவ் மேத்தா  (பிரெஸ்ஸா) மூன்றாம் இடத்தையும் பிடித்தனர்.

ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் போட்டியில் கடைசியில் இருந்த சுபீர் ராய் - நீரவ் மேத்தா ஜோடி, பேக் வாட்டர் ராலியில் வென்றதன் மூலம் நான்காம் இடத்துக்கு முன்னேறியுள்ளது. “இதைப்போலவே அடுத்தடுத்த ரவுண்ட்களில் வென்று முன்னேறுவோம்!” என்றார் சுபீர் ராய்.

உத்தரகாண்ட், டெக்கான், பேக்வாட்டர் என மூன்று ராலிக்களின் ஒட்டுமொத்த ஸ்கோர்களின் அடிப்படையில் கார்த்திக் மாருதி - சங்கர் ஆனந்த் குழுவினர் தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளனர். இரண்டாம் இடத்தில் ஜக்மீத் ஜில் - சந்திரன் சென் ஜோடியும், 3-ம் இடத்தில் சச்சின் சிங் - பிரகாஷ் ஜோடியும் உள்ளது. அடுத்த ராலி ஜூலை 14-ம் தேதி துவங்குகிறது. காத்திருப்போம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு