Published:Updated:

60 கார்கள்... 30 பைக்குகள்... ஊட்டியில் திருவிழா!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
60 கார்கள்... 30 பைக்குகள்... ஊட்டியில் திருவிழா!
60 கார்கள்... 30 பைக்குகள்... ஊட்டியில் திருவிழா!

கண்காட்சி: வின்டேஜ் கார்/பைக் ச.ஜெ.ரவி, படங்கள்: தி.விஜய்

பிரீமியம் ஸ்டோரி
60 கார்கள்... 30 பைக்குகள்... ஊட்டியில் திருவிழா!

ன்னதான் புதிது புதிதாக அல்ட்ரா மாடர்ன் டிஸைன்களுடன் கார்கள் வெளிவந்து கொண்டிருந்தாலும், பழசுக்கு எப்போதுமே தனி மவுசுதான். இதை நீங்கள் ஊட்டியில் நடக்கும் வின்டேஜ் கார் கண்காட்சியில் பார்க்கலாம்.

‘‘இந்த ஆண்டு 11-வது தடவையாக நடக்கும் ஊட்டி வின்டேஜ் கார்களின் அணிவகுப்புக்கு உங்களை அன்புடன் அழைக்கிறோம்’’ என்ற அழைப்பைப் பார்த்துவிட்டு, ஊட்டிக்கு உடனடியாக மலை ஏறினோம்.

தமிழகம் மட்டுமல்லாது கேரளா, கர்நாடகா உள்ளிட்ட தென்னிந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வின்டேஜ் கார் ரசிகர்கள், தங்களின் கார்களுடன் பங்கேற்றிருந்தனர். கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு பல அபூர்வமான கார்களுடன் ஊட்டி YMCA மைதானத்தில் வின்டேஜ் கார் கண்காட்சியை ஏற்பாடு செய்திருந்தது, நீலகிரி வின்டேஜ் மற்றும் கிளாஸிக் கார் அசோஷியேஷன் (NiViKKA).
‘இந்த டிஸைன் செமையா இருக்குல்ல... இங்க பாரேன்... வீல் ஃபுல்லா மரத்தாலேயே பண்ணியிருக்காங்க!’ என்று புது மாடல் கார்களைப் பார்ப்பதுபோல் ஆங்காங்கே ஆச்சரியங்களில் விழி உயர்த்தியபடி உலா வந்தனர் வின்டேஜ் பிரியர்கள். வின்டேஜ் ஆர்வலர்களை மட்டுமல்ல; யாராக இருந்தாலும் அவர்களைச் சட்டென தன் பக்கம் திரும்ப வைப்பதுதான் வின்டேஜ் கார்களின் ஸ்பெஷல்.

1920-களில் துவங்கி 1970-கள் வரை பெரும் வரவேற்பைப் பெற்ற அபூர்வமான பல கார்கள், இந்தக் கண்காட்சியில் இடம்பெற்றிருந்தன. அணிவகுப்பில் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது டாட்ஜ் பிரதர்ஸ் கேரவேன்தான். வாகனத்தின் மேற்கூரையின் மேல் தண்ணீர் தொட்டி, உள்ளே கழிவறை என படுக்கை வசதி கொண்ட இந்த கேரவேன், 1930-ம் ஆண்டு அமெரிக்காவில் வடிவமைக்கப்பட்டது. மயிலாடுதுறை தர்மாபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான இந்த கேரவேனை, நீலகிரி வின்டேஜ் கார் கிளப் தலைவர் ரஜினிகாந்த் பராமரித்து வருகிறார். இது காண்பவர்களைப் பெரிதும் கவர்ந்தது.

அடுத்து பார்வையாளர்களைத் தன் வசப்படுத்தியது, 1928 மாடலைச் சேர்ந்த ஸ்டுடிபேக்கர் எர்ஸ்கின் கார். இந்த காரின் சக்கரங்கள் மரத்தால் ஆனவை என்பது இதன் சிறப்பு. 1929 மாடல் காரான மோரீஸ் ராயல் மெயில் கார், லண்டன் தபால்துறையில் பயன்படுத்தப்பட்டது. மக்கள் காரின் வரலாறை ஆர்வத்துடன் கேட்டறிந்தனர்.

60 கார்கள்... 30 பைக்குகள்... ஊட்டியில் திருவிழா!

1956 மாடல் பிளைமவுத் சப்-அர்பன், நீளமான சொகுசு கார். பின்புறம் படுத்து உறங்கும் நீண்ட சீட்களைக் கொண்டதாக இந்த கார் இருக்கிறது. இன்றைய சொகுசு காரின் தோற்றத்தோடு, கம்பீரமாகக் காட்சியளித்த பிளைமவுத் சப்-அர்பனும் பார்வையாளர்களைத் தன் பக்கம் ஈர்த்தது. இவை தவிர, ஆஸ்டின் 7 (1933), இத்தாலியன் ஃபியட் ஸ்பைடர் போன்ற பல அரிய கார்களுடன், வின்டேஜ் மற்றும் கிளாஸிக் பைக்குகளும் இந்த கண்காட்சியில் பங்கேற்றன.

நீலகிரி வின்டேஜ் மற்றும் கிளாஸிக் கார்கள் கிளப் தலைவர் ரஜினிகாந்திடம் பேசினோம். “11-வது ஆண்டாக இந்தக் கண்காட்சி நடக்கிறது. இந்தக் கண்காட்சியில் 60 கார்களும், 36 பைக்குகளும் இடம்பெற்றுள்ளன. பல்வேறு மாநிலங்களில் இருந்து மிக அரிய கார்களோடு இந்தக் கண்காட்சியில் பலர் பங்கேற்று இருக்கிறார்கள். புதிய உறுப்பினர்கள் இந்த ஆண்டில் கலந்துகொண்டுள்ளதால் இந்த நிகழ்வு, உறுப்பினர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. வின்டேஜ் கார்களின் பிரியர்களும் அதிகளவில் வந்து பங்கேற்றார்கள்’’ என்றார்.

60 கார்கள்... 30 பைக்குகள்... ஊட்டியில் திருவிழா!

பழைமையின் தனித்துவத்தைப் பறை சாற்றக் காட்சிப்படுத்தப்பட்ட இந்த கார் அணிவகுப்பில், சிறந்த கார்களை வைத்திருந்த உரிமையாளர்களுக்குப் பரிசுகளும் வழங்கி கவுரவப்படுத்தினர். கோடையில் நீலகிரியில் மலர்க் கண்காட்சி, பழங்கள், காய்கறிகள் கண்காட்சி போன்றவை நடத்தப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் வின்டேஜ் கார்களின் கண்காட்சியும் சேர்ந்துவிட்டது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு