Published:Updated:

மஹிந்திரா இந்த ஆண்டு களமிறக்கும் கார்கள் என்னென்ன?!

மஹிந்திரா இந்த ஆண்டு களமிறக்கும் கார்கள் என்னென்ன?!
மஹிந்திரா இந்த ஆண்டு களமிறக்கும் கார்கள் என்னென்ன?!

மஹிந்திரா இந்த ஆண்டு களமிறக்கும் கார்கள் என்னென்ன?!

`2018 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ'வில், புதிய எலெக்ட்ரிக் வாகனங்களைக் காட்சிப்படுத்திய மஹிந்திரா நிறுவனம், XUV 5OO எஸ்யூவியின் பேஸ்லிஃப்ட் மாடலை இன்று அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்நிலையில், முற்றிலும் நான்கு புதிய மாடல்களை, இந்த ஆண்டில் களமிறக்கும் முடிவில் இந்த நிறுவனம் இருப்பதாகத் தகவல்கள் வந்துள்ளன. அவை என்னென்ன கார்கள் என்பதைப்  பார்ப்போம்.

 மஹிந்திரா U 321 எம்பிவி

மாருதி சுஸூகி எர்டிகா மற்றும் டொயோட்டா இனோவா க்ரிஸ்டா ஆகிய கார்களுக்குப் போட்டியாக, முற்றிலும் புதிய எம்பிவியை, இந்த ஆண்டில் விற்பனைக்குக் கொண்டுவர உள்ளது மஹிந்திரா. கடந்த ஒன்றரை ஆண்டுகாலமாக தீவிரமான டெஸ்ட்டிங்கில் இருக்கும் இந்த காரின் ஸ்பை படங்களைப் பார்க்கும்போது, எர்டிகாவைவிட இது அளவில் பெரிதாக இருக்கும் எனத் தெரிகிறது. கேபினைப் பொறுத்தவரை, டூயல் டோன் டேஷ்போர்டு, பெரிய டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி சிஸ்டம், அதிக இடவசதியுடன்கூடிய மூன்று வரிசை இருக்கைகள் என பிராக்டிக்கலாக இருக்கிறது. ஸாங்யாங் உடன் இணைந்து, தான் தயாரிக்கும் புதிய 1.6 லிட்டர் டீசல் இன்ஜின் (120bhp, 30kgm) - 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் கூட்டணியை, 16 இன்ச் அலாய் வீல்களைக்கொண்ட இந்த எம்பிவியில் பொருத்தும் முடிவில் இந்த நிறுவனம் உள்ளது. மேலும் XUV5OO, KUV 5OO ஆகிய கார்களுக்கு அடுத்தபடியாக, மோனோகாக் சேஸி அமைப்பைக்கொண்ட மூன்றாவது மஹிந்திரா தயாரிப்பு இதுதான்!

மஹிந்திரா TUV 300 ப்ளஸ்

பெயருக்கு ஏற்றபடியே, இது TUV 3OO காரின் XL வெர்ஷன்தான். இதுவும் கடந்த ஒன்றரை ஆண்டுகாலமாக தீவிரமாக டெஸ்ட்டிங்கிலிருந்தது தெரிந்ததே. ஸ்பை படங்களைப் பார்க்கும்போது, நான்கு மீட்டர் நீளத்துக்குட்பட்ட  TUV 3OO-விட  TUV 3OO ப்ளஸ் காரின் டிசைன் பேலன்ஸ்ட்டாக இருக்கிறது. ஏனெனில், c-பில்லர் வரை TUV 3OOதான் என்றாலும், D-பில்லரிலிருந்து மாற்றம் ஆரம்பமாகிறது. அதாவது டெயில் லைட், டெயில் கேட், மூன்றாவது வரிசை பெஞ்ச் சீட், பின்பக்க பம்பர் ஆகியவை இதற்கான உதாரணங்கள். ஜூன் மாதத்தில் வெளிவரப்போகும் இந்த எம்பிவியில் இருப்பது, 120bhp பவர் மற்றும் 28kgm டார்க்கை வெளிப்படுத்தும் 1.99 லிட்டர் mHawk டர்போ டீசல் இன்ஜின். இது டெல்லியில் விற்பனை செய்யப்படும் ஸ்கார்ப்பியோ மற்றும் XUV 5OO கார்களில் இருக்கும் அதே இன்ஜின்தான்! TUV 3OO ப்ளஸ் காரின் சென்னை ஆன் ரோடு விலை, 11.55 லட்சம் ரூபாயாக இருக்கும் எனத் தெரியவந்துள்ளது.

மஹிந்திரா S201 காம்பேக்ட் எஸ்யூவி

ஸாங்யாங் டிவோலியை அடிப்படையாகக்கொண்டு, இரண்டு கார்களை மஹிந்திரா நிறுவனம் வடிவமைத்திருக்கிறது. கடந்த சில மாதங்களாக இவை இரண்டும் டெஸ்ட்டிங்கில் இருக்கின்றன. ஒன்று 4 மீட்டருக்குட்பட்ட காம்பேக்ட் எஸ்யூவியாகவும், மற்றொன்று 4 மீட்டருக்கும் அதிகமான மிட் சைஸ் எஸ்யூவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டின் பிற்பாதியில், காம்பேக்ட் எஸ்யூவியை முதலில் அறிமுகப்படுத்தும் திட்டத்தில் உள்ளது. இதுவும் TUV 3OO ப்ளஸ் காரின் டிசைன் ஃபார்முலாவைப் பின்பற்றியிருப்பதை, ஸ்பை படங்களைப் பார்க்கும்போது புரிந்துகொள்ள முடிகிறது. 

அதாவது C-பில்லர் வரை இரண்டு எஸ்யூவிகளுக்கும் ஒரே பாடி பேனல்கள் மற்றும் மோனோகாக் சேஸிதான் இருக்கும். D-பில்லரைப் பொறுத்தவரை, காம்பேக்ட் எஸ்யூவியில் வித்தியாசமான டெயில் கேட், டெயில் லைட் மற்றும் பின்பக்க பம்பர் இருக்கும். இதுவே மிட் சைஸ் எஸ்யூவி என்றால், அது 200மிமீ கூடுதல் நீளத்தைக்கொண்டிருக்கும் என்பதால், பின்பகுதி முற்றிலும் வேறு மாதிரி இருக்கும். இதில் தனது வழக்கமான 1.5 லிட்டர் டீசல் இன்ஜினுடன், புதிய 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜினை, மஹிந்திரா நிறுவனம் பயன்படுத்தும் என நம்பப்படுகிறது. 

மஹிந்திரா XUV 7OO பிரிமீயம் எஸ்யூவி

உலகச் சந்தைகளில் ஏற்கெனவே அறிமுகமாகிவிட்டாலும், இரண்டாம் தலைமுறை ஸாங்யாங் ரெக்ஸ்ட்டன் எஸ்யூவியை இந்தியாவில் டெஸ்ட் செய்துவந்தது மஹிந்திரா. `2018 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ'வில் ஆச்சர்ய அதிசயமாக, டிசைன் மாறுதல்களுடன் புதிய ரெக்ஸ்ட்டனை இந்த நிறுவனம் காட்சிப்படுத்தியது. மேலும், நம் ஊர் சாலைகளுக்கு ஏற்ப காரின் கிரவுண்ட் க்ளியரன்ஸ் மற்றும் சஸ்பென்ஷனிலும் மாற்றங்கள் செய்திருப்பதாகத் தகவல்கள் வந்துள்ளன. இதில் பொருத்தப்பட்டுள்ள 2.2 லிட்டர் டீசல் இன்ஜின் - 7 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கூட்டணி, 187bhp பவர் மற்றும் 42kgm டார்க்கை வெளிப்படுத்துகிறது. 

2WD மற்றும் 4WD ஆப்ஷனுடன் வரும் இந்த எஸ்யூவியை, இந்தியாவில் உள்ள தனது தொழிற்சாலையில் அசெம்பிள் செய்ய உள்ளது மஹிந்திரா. இதனால் டொயோட்டா பார்ச்சூனரைவிட எப்படியும் 5 லட்சம் ரூபாயாவது இதன் விலை குறைவாக இருக்கும் என நம்பலாம். இதன் வெளிப்பாடாக, யுட்டிலிட்டி வாகனப் பிரிவில் மாருதி சுஸூகியிடம் தான் இழந்த இடத்தை இந்த நிறுவனம் மீட்டெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த கட்டுரைக்கு