Published:Updated:

வின்டேஜ் ஃபியட் காதலர்களின் மெரினா புரட்சி!

வின்டேஜ் ஃபியட் காதலர்களின் மெரினா புரட்சி!

இந்த 1963 ஃபியட் சூப்பர் செலெக்ட் மாடல் என் தாத்தா முதன்முதலா வாங்கின கார். நாலு தலைமுறையா எங்க குடும்பத்துல இருக்கு. தாத்தாவால பராமரிக்க முடியலைனு விற்க முயன்றப்போ அப்பா இந்தக் காரைக் கொடுக்க மனசில்லாம தாத்தாகிட்ட இருந்து மறைச்சிவெச்சிருந்தார். `பண்ணையாரும் பத்மினியும்' படம் பார்த்த அப்புறம், எனக்கும் இந்த கார் மேல ஆசை கூடிடுச்சு.

வின்டேஜ் ஃபியட் காதலர்களின் மெரினா புரட்சி!

இந்த 1963 ஃபியட் சூப்பர் செலெக்ட் மாடல் என் தாத்தா முதன்முதலா வாங்கின கார். நாலு தலைமுறையா எங்க குடும்பத்துல இருக்கு. தாத்தாவால பராமரிக்க முடியலைனு விற்க முயன்றப்போ அப்பா இந்தக் காரைக் கொடுக்க மனசில்லாம தாத்தாகிட்ட இருந்து மறைச்சிவெச்சிருந்தார். `பண்ணையாரும் பத்மினியும்' படம் பார்த்த அப்புறம், எனக்கும் இந்த கார் மேல ஆசை கூடிடுச்சு.

Published:Updated:
வின்டேஜ் ஃபியட் காதலர்களின் மெரினா புரட்சி!

வின்டேஜ் கார்களைப் பொறுத்தவரை, அந்தக் காருக்கும் அதை வைத்திருப்பவருக்கும் எப்போதுமே ஒரு தொடர்பு இருக்கும். அது ஓர் அழகான காதலாக இருக்கும். காதல் கதைகளைக் கேட்பதென்றால் தனித்த  ஓர் உற்சாகம் சிலிர்த்துவிடும்தானே! அப்படி ஓர் உற்சாகத்தில் போட்டோகிராஃபர் நண்பரை அழைத்துக்கொண்டு மெரினா லைட் ஹவுஸ் அருகே ஆஜரானோம்.

ஃபேஸ்புக்கில் பார்த்ததுபோலவே கலர் கலராக, புது கார் போல வந்து நின்றன பழைமையின் சின்னங்கள். Fiat Classic Car Club (Fc4)-ன் மீட்டிங் நடந்துகொண்டிருந்தது. க்ளப்பின் ஒருங்கிணைப்பாளர் சன்ஜித் சுதிரிடம் பேச்சுக்கொடுத்தோம்.

``1960-ல் என் தாத்தா பட்டுலாஸ் சாலையில் ஒரு கார் மெக்கானிக் ஷாப் வெச்சிருந்தார். இப்போ பார்க்கவே முடியாத `பல வின்டேஜ் கார்களைச் சரிப்படுத்திக் கொடுத்திருக்கோம்'னு அப்பா சொல்வார். சர்வீஸ் செஞ்சுட்டு கார்ல லாங் டிரைவ் போன கதைகள் நிறைய சொல்வார். அப்பவே எனக்கு கார்களைப் பிடிக்க ஆரம்பிச்சுடுச்சு. நான் என்னோட முதல் வின்டேஜ் கார் வாங்க தேடினப்போதான் எனக்கு இந்த 1964 ஃபியட் 1100 சூப்பர் செலெக்ட் கிடைச்சது" எனத் தன் கறுப்பு நிற காரைப் பார்த்துப் பெருமிதமாக ஒரு புன்னகை துளிர்த்தார். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஃபியட் 1100 காரில் மொத்தம் ஐந்து மாடல்கள் வந்தன. அதில் 1961-ம் ஆண்டு வெளிவந்ததுதான் சூப்பர் செலெக்ட். இந்தியாவில் ஃபியட் தயாரித்த கடைசிக் கார் அது. அடுத்து வந்த 1100D மாடல் கார்களை ப்ரீமியர் நிறுவனம்தான் இந்தியாவில் அசெம்பிள் செய்தது. ``இன்னிக்கு எங்க க்ளப்போட முதலாம் ஆண்டு விழா. கிழக்குக் கடற்கரைச் சாலையில குட்டி டிரைவ் ஒண்ணு கிளம்பப்போறோம் வர்றீங்களா" எனக் கேட்டவருடன் உற்சாகமாகக் கிளம்பினோம்.

40-60 கி.மீ வேகத்தில் நிதானமாகச் சென்றுகொண்டிருந்தோம். `ஃபியட் கார் க்ளப்பில் சேரவேண்டும்' என்று வின்டேஜ் க்ளப் கதவைத் தட்டியதையும், சென்னையில் இருந்த ஒரே வின்டேஜ் க்ளப் கலைந்து சென்ற கதையையும் சொன்னார் சன்ஜித்.

``சென்னையில ஃபியட் கார் க்ளப்பே இல்லைனு தெரிஞ்சதும், இன்டர்நெட்ல என்ன மாதிரி ஃபியட் க்ளாசிக் கார் யாரெல்லாம் வெச்சியிருக்காங்கனு தேடினேன். அதுல கிடைச்சவர்தான் மனு பிரசாத். அப்படியே பேசி, ஒரு நாள் எங்க காரோடு மெரினா பீச்சுல மீட் பண்ணலாம்னு முடிவுசெஞ்சோம். அப்படி ஆரம்பிச்சதுதான் இந்த மீட்டிங் கலாசாரம். இப்போ எல்லா மாசமும் ரெண்டாவது ஞாயிறு எங்க க்ளப் மீட்டிங் மெரினாவுல நடக்கும். இங்கிருந்து எழும்பூர் போய் பிரேக்ஃபாஸ்ட் முடிச்சுக்கிட்டுக் கிளம்புவோம்" என்று க்ளப் ஆரம்பித்த கதையைச் சொன்னார்.

இந்த க்ளப்பில் இருப்பதிலேயே பழைமையான கார் என்றால், அது ஜெய்குமார் என்பவரின் 1954 ஃபியட் 1100 மில்லிசென்டோ. ஃபியட் 1100 கார்களில் முதலில் வந்தது மில்லிசென்டோதான். பிறகு, எலீகென்ட், செலெக்ட், சூப்பர் செலெக்ட், 1100D என வெளிவந்தது.

 ``இந்த 1963 ஃபியட் சூப்பர் செலெக்ட் மாடல் என் தாத்தா முதன்முதலா வாங்கின கார். நாலு தலைமுறையா எங்க குடும்பத்துல இருக்கு. தாத்தாவால பராமரிக்க முடியலைனு விற்க முயன்றப்போ அப்பா இந்த காரைக் கொடுக்க மனசில்லாம தாத்தாகிட்ட இருந்து மறைச்சிவெச்சிருந்தார். `பண்ணையாரும் பத்மினியும்' படம் பார்த்த அப்புறம், எனக்கும் இந்தக் கார் மேல ஆசை கூடிடுச்சு. ரீஸ்டோர் பண்ணி என் தாத்தாகிட்ட தரப்போ அவ்வளவு சந்தோஷம். இப்போ, இது என் கார். ஒவ்வொரு முறை வெளியே எடுக்கும்போதும் இந்த காரைப் பார்த்துப் பேசாத, படம் பிடிக்காத ஆள்களே கிடையாது" என்றார் ஜான் வெஸ்லி.  

LED ஹெட்லைட், பனி விளக்குகள், சிவப்பு-பீஜ் டூயல் டோன் பெயின்ட் என, பார்க்கவே க்ளாசிக் கேங்ஸ்டர் படங்களில் வரும் சின்ன கார்போல இருந்த 1996 மாடல் ப்ரீமியம் பத்மினி S1 காருக்குச் சென்றோம். ஒரிஜினல் மாறாமல் கொஞ்சம் மாடர்ன் டச் கொடுத்திருந்தார் ஷிவ். இவர் ஒரு ஃபியட் ப்ரியர். 1100 டிலைட்-டில்தான் கார் ஓட்டவே கற்றுக்கொண்டாராம்.

``இதுவரைக்கும் 11 ஃபியட் கார் வாங்கியிருக்கேன். 1957, ஃபியட் எலீகன்ட் வாங்கி நானே என் கையால ரிஸ்டோர் பண்ணிட்டிருக்கேன்.  இவங்கள மெரினாவுல பார்த்துப் பேசினேன். என் ஃபியட் ரெடியாக நிறைய உதவி செஞ்சாங்க. இந்த க்ளப் எனக்கு ரொம்பவே பிடிச்சிப்போனதால 1996 பத்மினி S1 கார் ஒண்ணு வாங்கி FC4-ல் உறுப்பினராகிட்டேன். என் கனவு எலீகன்ட் இன்னும் கொஞ்ச நாள்ல ரெடியாகிடும்" என்று தனது அனுபவத்தைக் கூறினார் ஷிவ். FC4 க்ளப்பில் இப்போது 22 பதிவுசெய்யப்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். ப்ரீமியர் பத்மினி வரை வந்த எல்லா ஃபியட் கார்களையும் இந்தக் க்ளப்பில் பதிவுசெய்யலாம். முக்கியமான ஒரு குறிப்பு, இப்படி உங்கள் கார்களை வின்டேஜ் க்ளப்பில் பதிவுசெய்வதால், third party insurance ப்ரீமியம் 50 சதவிகிதம் வரை குறையும் என்பதை நினைவில்கொள்ளுங்கள்.

மோரிஸ், ஆஸ்டன், மெட்ரோ, அம்பாஸடர், வில்லிஸ் எனப் பல கார்கள் 19-ம் நூற்றாண்டில் கிட்டத்தட்ட ஒரே காலகட்டத்தில் வந்தவை. தமிழகத்தில் உள்ள எல்லா வின்டேஜ் கார் கிளப்பிலும் ஃபியட் 1100 மற்றும் ப்ரீமியம் பத்மினியைப் பார்க்கலாம். 19-ம் நூற்றாண்டு வரை தனவான்களின் வாகனமாக இருந்த கார்கள், 1950 முதல் 1990 வரை பொறுமையாக சாமானியர்களிடம் வர ஆரம்பித்தன. அதுதான் அந்தக் குறிப்பிட்ட காலகட்டத்தில் வளர்ந்த பலரையும் கார்களை விரும்பவைத்தது. அப்போதைய குழந்தைகளுக்கு ஃபேமிலி கார்கள்மேல் மோகத்தை ஏற்படுத்தியது. இந்த ப்ரியத்தின் அடையாளம்தான் இப்போது இந்த கார்கள் அனைத்துமே வின்டேஜ் எனும் பெயரைச் சுமந்துகொண்டிருக்கிறது. 

அந்தக் காலகட்டங்களில் குடும்பத்தில் ஒன்றாகப் பெயர்வைத்துப் பார்த்துப் பார்த்துப் பயன்படுத்திய கார்கள் அவை. எலெக்ட்ரானிக், ஏசி என எதுவுமே இல்லையென்றாலும், அந்தக் கார்கள்மீது இன்னும் காதல் உள்ளதை உணர முடிகிறது. ஒவ்வொரு காரும் ஒரு கதையை, ஓர் அனுபவத்தை, ஒரு வாழ்க்கை பதிவை ஏந்தி வருகிறது. பழைய கார்கள் எல்லாமே காலத்தில் நிலைத்து நின்றுவிடாது. ஒரு கார் வாங்குவதற்கான வாழ்நாள் உழைப்பு, கார் மூலம் கிடைத்த சந்தோஷமான சோகமான, திகில் நிறைந்த தருணங்கள், நம் வாழ்நாள் நினைவுகள் எல்லாவற்றையும் ஏந்தி, அதை அடுத்த தலைமுறைக்குக் கடத்தும்போது மட்டுமே அந்தக் கார்கள் பல ஆண்டுகள் வாழும். அது வின்டேஜ் கார்களாக மாறும். இந்த வின்டேஜ் கார்களை வைத்திருப்பவர்களுக்குள் எப்போதுமே அழகான ஒரு காதல் இருக்கும். உயிரற்ற பொருள்களையும் நேசிக்கும் அளவு காதல். இந்தக் காதலின் வீரியம் குறையவே குறையாது. வீட்டுக்கு வந்து முதல் வேலையாக நானும் பல வார அழுக்கு படிந்த என் பைக்கைப் பளபளப்பாக்கினேன். எனக்கும் காதல் வந்தது!

படங்கள்:  உதயா எஸ் வசந்த்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism